2024 மார்ச் 28, வியாழக்கிழமை

எமக்காக தோழர் சண்முகதாசன் விட்டுச் சென்றவை

Editorial   / 2018 பெப்ரவரி 08 , பி.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

- பேராசிரியர் சி. சிவசேகரம்

தோழர் நா. சண்முகதாசனின் மறைவுக்குப் பிறகு, இன்றுடன் சரியாக 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. அவர், இலங்கை இடதுசாரி இயக்கத்துக்குப் பல முனைகளிலும் மிகுந்த அர்ப்பணிப்புடன் தொண்டாற்றியவர்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேரத் தொண்டராகி, அவர் தொடங்கிய மும்முரமான அரசியல் வாழ்க்கைப் பயணத்தின் முடிவுவரை, கொள்கையை விட்டுக்கொடுக்காத பெருமைக்குரியவராக, பிரகாசமாக வரலாற்றில் அவர் அடையாளப்படுத்தப்படுகிறார். தான் பொறுப்பேற்ற பணி எதுவாயினும், அதனை முழுமையான ஈடுபாட்டுடன் அதன் முடிவுவரையும் கொண்டு செல்லும் மனவுறுதி காரணமாகவே அவர், நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் இடதுசாரி இயக்கத்தின், மிக நேர்மையான ஒரு தலைவராகவும் வர்க்க சமரசத்துக்கு இடம்கொடுக்காத ஒரு போராளியாகவும், தனக்கெனத் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார். 

லங்கா சமசமாஜக் கட்சியின் ட்ரொட்ஸ்கியவாதத்துக்கு எதிராக, தத்துவார்த்தத் தளத்தில் தோழர் சண்முகதாசன் ஆற்றிய பங்கு பெரியது. அது போன்றே ஜோசப் ஸ்டாலினை நிராகரித்து, திரிபுவாதப்பாதை முன்னெடுக்கப்பட்டபோது, அந்தத் துரோகத்தை முழுமூச்சுடன் எதிர்த்தவர்களுள், அவர் முக்கியமானவர். 

சோவியத் ஒன்றியத்தில் குருஷேவ் தலைமை மார்க்சிய - லெனினிசத்துக்கும் மக்கள் புரட்சிப் பாதைக்கும் ஆப்புவைக்க எடுத்த முயற்சிகளை, மறு கேள்வி இல்லாது நமது நாட்டின் கம்யூனிஸ்ட் தலைவர்கள் எனப்பட்ட திரிபுவாதிகள் ஏற்றதன் தொடர் விளைவாக, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்குள், 1963ஆம் ஆண்டில் பிளவு ஏற்பட்டது. அப்போது மார்க்சிய - லெனினிசத்தினதும் புரட்சிகரப் பாதையினதும் முதன்மைப் போராளியாகவும் தத்துவார்த்த வழிகாட்டியாகவும் சண்முகதாசன் நின்று போராடியமை, மார்க்சிய - லெனினிசவாதிகளைக் கொண்ட கட்சிப்பிரிவு திரிபுவாதிகளுக்கும் அவர்களது சந்தர்ப்பவாதக் கூட்டாளிகளுக்கும், ஈடு கொடுத்துநிற்க உரமூட்டியது. 

1963ஆம் ஆண்டளவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் உலகளாவிய முறையில் ஏற்பட்ட பிளவின்போது, இந்தியாவில் ஏற்பட்ட பிளவைப்போலன்றி, இலங்கையில் ஏற்பட்ட பிளவு, அரசியற் தெளிவுமிக்கதொன்றாக நிகழ்ந்தது. அதன் விளைவாகவே, தெற்காசியாவில் மார்க்சிய - லெனினிச சிந்தனைக்கும் போராட்டப் பாதைக்கும் ஆதாரமாக நின்ற அதிமுக்கியமான சக்தியாக, இலங்கையின் மார்க்சிய- லெனினிசக் கட்சி, தன்னை அடையாளப்படுத்த முடிந்தது. இதில் தோழர் சண்முகதாசனின்அரசியல், தொழிற்சங்க மற்றும் தத்துவார்த்த பிரசாரப் பணிகளின் பங்கு மகத்தானது.

இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட பிளவின் உண்மையான அரசியல் தன்மையை, தோழர் சண்முகதாசன், தெளிவாகவே விளங்கியிருந்தார். பிரிவுண்ட இரு பகுதியினரதும் தலைமைகள், திரிபுவாதத் தன்மை கொண்டவையாக இருந்ததையும் அங்கு தத்துவார்த்த மட்டத்தில் ஆழமான விவாதமொன்று நடவாததையும் பற்றி, 1970ஆம் ஆண்டில் அவரைச் சந்தித்தபோது அவர் எனக்கு விளக்கிக் கூறியதோடு, நக்சல்பாரி போராட்டத்தையொட்டி வளர்ச்சி பெற்ற காரணத்தால், நக்சலைட்டுகள் என்று அழைக்கப்பட்ட இந்திய மார்க்சிய - லெனினிசவாதிகள், 1969ஆம் ஆண்டளவில் “சீனாவின் தலைவர் எமது தலைவர்” என்று எழுப்பிய கோஷம், அவர்களைப் பலவீனப்படுத்தும் அன்று அவர் அவர்களை எச்சரித்தமை பற்றியும், என்னிடம் குறிப்பிட்டார். அந்தத் தவறை அவர்கள் உணர்ந்துகொள்வதற்கு, மேலும் ஓரிரு ஆண்டுகள் எடுத்தன. 

மாஓ சேதுங் சிந்தனை என்றால் என்ன, சீனாவின் மகத்தான கலாசாரப் புரட்சியின் முக்கியத்துவம் என்ன என்பன பற்றிய சண்முகதாசனின் விளக்கங்களும் -- குறிப்பாக கலாசாரப் புரட்சி பற்றிய அவரது நூலும் -- 1970களில் உலகின் மார்க்சிய - லெனினிசக் கம்யூனிஸ்டுகளின் கவனத்தை மிகவும் ஈர்த்தவையாகும். 

தோழர் மாஓ சேதுங் இறந்த பின்பு, சீனாவின் அரசியல் போக்குப் பற்றி சண்முகதாசன் விடுத்த எச்சரிக்கைகள், அடிப்படையில் சரியானவையும் தீர்க்கதரிசனமானவையுமாகும். தோழர் மாஓ சேதுங் இறப்பதற்கு முன்னரே, சீரழிவின் விதைகள் தூவப்பட்டுவிட்டதை அவர் அறிந்திருந்தார். 

அது போன்றே, 1966ஆம் ஆண்டில் திரிபுவாதிகளும் சமசமாஜிகளும், டட்லி - செல்வா உடன்படிக்கையை எதிர்த்து, கொழும்பில் நடத்தப்பட்ட ஊர்வலத்தில் சென்றதைப் பற்றி தோழர் சண்முகதாசன் முன்வைத்த கடுமையான விமர்சனமும், மக்கள் விடுதலை முன்னணி ( ஜே. வி. பி) 
என்பது எந்த வகையிலும் மார்க்சியப் பண்பற்ற, பேரினவாத சக்தியொன்று என்பதை 1970ஆம் ஆண்டளவிலேயே அவர் அடையாளம் காட்டியதும், மார்க்சிய - லெனினிசத்தில் அவரது சிந்தனையின் தெளிவையும் ஆழத்தையும் நமக்கு அடையாளம் காட்டுவன. 

தமிழ்த் தேசியவாதத் தலைமைத்துவம், 1976ஆம் ஆண்டில் தமிழீழக் கோரிக்கையை முன்வைத்த சந்தர்ப்பவாத நோக்கத்தை அம்பலப்படுத்துவதில், சண்முகதாசனினதும் மார்க்சிய - லெனினிசவாதிகளினதும் பங்கு முக்கியமானது. அவருக்கும் அன்றைய உடுவில் தொகுதியின் தமிழரசுக் கட்சி எம்.பியான வி. தர்மலிங்கத்துக்கும் இடையில், சுன்னாகம் சந்தை மைதானத்தில் நடந்த விவாதத்தின் மூலம், தமிழரசுக் கட்சியினதும் அதன் மறுவடிவமான தமிழர் விடுதலைக் கூட்டணியினதும் அரசியல் வறுமை வெளியானது. தமிழ்த் தேசியவாதிகளின் இந்தத் துரோகத்தைத் தமிழ் மக்கள் முற்றாக உணர்ந்துகொள்வதற்கு, மேலும் சில ஆண்டுகளாயின. 

1983ஆம் ஆண்டுக்குப் பிறகு பேரினவாத ஒடுக்குமுறையின் உக்கிரம், தமிழர் விடுதலைப் போராட்டத்தை அவசியமாக்கிய சூழலில் தோழர் சண்முகதாசன், அந்த விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை ஆதரிக்கத் தவறவில்லை. இதற்கும் தமிழ்த் தேசியவாதத்துக்குள் சங்கமமான சில இடதுசாரிகளின் தடுமாறல்களுக்கும் இடையில், மிகுந்த வேறுபாடு உண்டு என்பதை இங்கு வலியுறுத்த வேண்டும். 

தோழர் சண்முகதாசன், என்றென்றுமே ஒரு முழுமையான சர்வதேசியவாதி. தேசிய இனவிடுதலை பற்றி அவர் வைத்திருந்த கண்ணோட்டம், மனித சமத்துவம், ஒடுக்குமுறைக்கு எதிரான மக்கள் எழுச்சிகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவு என்ற அடிப்படையிலேயே அமைந்ததாகும். எனவே சாதியத்துக்கு எதிரான போராட்டத்துக்கு அவரது பங்களிப்பை அறிந்த எவருக்கும், தமிழ் மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டத்துக்கு அவரது ஆதரவை விளங்கிக்கொள்வதில் சிரமம் இருக்காது. 

தோழர் சண்முகதாசன், தவறுகளுக்கு அப்பாற்பட்டவரல்லர். எந்தவொரு தனிமனிதரும் போன்று அவரும் தவறுகளைச் செய்தவர்தான். சில தவறுகள், கட்சியினதும் மார்க்சிய - லெனினிச இயக்கத்துக்கும் வளர்ச்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தவும் செய்தன. ஆனால், அவற்றின் சுமையை ஒரு தனிமனிதர் மீது ஏற்றமுடியாது. ஓர் இயக்கத்தின் தலைமைத் தோழர் செய்கிற தவறில், அவரது சக தலைமைத் தோழர்களுக்கும் பங்குண்டு. எனவே, காலம் கடந்து செய்யப்படுகிற விமர்சனங்கள் யாவும், சுயவிமர்சனங்களாகவும் அமைய வேண்டும். 

மார்க்சிய - லெனினிச இயக்கத்தினதும் 1963ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டு வேகமாக வளர்ந்த சீனச் சார்பு கம்யூனிஸ்ட் கட்சியினதும் சரிவுகளுக்கும் பிளவுகளுக்கும், அகக் காரணங்களும் புறக் காரணங்களும் உள்ளன. 

புறக் காரணங்களுள், பேரினவாதத்தினதும் அதையொட்டிக் குறுகிய தேசியவாதத்தினதும் பங்கு முக்கியமானது. அதுவே இன்னமும் தென்னிலங்கையில் இடதுசாரி இயக்கத்தின் முடக்கத்துக்குக் காரணமாக இருக்கிறது. மூன்று பேரினவாத சக்திகளே, இன்று தெற்கின் அரசியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதன் பின்னணியிலேயே தமிழ் மக்கள் மத்தியில் மார்க்சிய- லெனினிசவாதிகள் தங்களை நிலைநிறுத்தவேண்டியிருக்கிறது. எனவே இடதுசாரிகள் முன்னுள்ள பணி பாரியது. 

தோழர் சண்முகதாசனின் பங்களிப்புகளில் பயன்மிக்கனவும் பெரியனவுமான அவரது மார்க்சிய - லெனினிசப் போராட்ட அரசியல் கொள்கையும் நடைமுறையும் மார்க்சிய - லெனினிசம் - மாஓ சேதுங் சிந்தனை பற்றிய வழிகாட்டலும், நமக்கு இன்று மிகவும் உதவக்கூடியன.

சரியான தத்துவார்த்த வழிகாட்டல் இல்லாமல் ஒரு கட்சியாலோ, ஓர் இயக்கத்தாலோ ஓர் அடி தானும் முன்னோக்கி வைக்கமுடியாது. ஒன்றுபடுத்தக்கூடிய சக்திகளை ஒன்றுபடுத்தவும் எதிரியாகிய ஏகாதிபத்திய - மேலாதிக்க சக்திகளையும் அவர்களுக்கு உடந்தையான உள்நாட்டுப் பிற்போக்குச் சக்திகளையும் தனிமைப்படுத்தவும் வேண்டிய கடமை முதன்மையானது. இதையும் சரியான தத்துவார்த்த வழிகாட்டல் ஒன்றின் மூலமே முன்னெடுக்கமுடியும். 

1960களில் இருந்து தனது இறுதி நாட்கள்வரை தோழர் சண்முகதாசன், மார்க்சிய - லெனினிசத்துக்கு வழங்கிய பங்களிப்பை முழுமையாகப் பயன்படுத்துவது, அவருக்கு நாம் செலுத்தும் ஒரு நன்றிக்கடன் மாத்திரமல்ல, நமது மக்களுக்குச் செய்யக் கடமைப்பட்டுள்ள முக்கியமான ஒரு காரியமுமாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X