2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

ஒரு நாடு, ஒரு தேசம்

என்.கே. அஷோக்பரன்   / 2019 ஜனவரி 07 , மு.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 177)

‘தேசிய அரசாங்கத்தை’ உருவாக்குதல்  

மீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி பயன்படுத்தும் முக்கியமான சொற்றொடர்கள், “இலங்கை என்பது ஒரு நாடு; இலங்கை என்பது ஒரு தேசம்; நாம் அனைவரும் இலங்கையர்கள்” என்பதாகும்.   

இதைவிடவும் பரவலாக, இலங்கை என்பது காலங்காலமாக ஒரு நாடு, ஒரு தேசம், ஓர் இறைமையாவே தொடர்ந்து இருந்து வருகிறது போன்ற கருத்துகள், தொடர்ந்தும் சிலரால் முன்வைக்கப்பட்டு வருவதையும் எம்மால் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.   

ஆகவே, இவற்றைச் செவிமடுக்கும் போது, இலங்கை என்பது இன்றுள்ளதைப் போலவே, தீவு முழுவதையும் உள்ளடக்கிய ஒரு ‘தேசிய அரசாக’வே எப்போதும் இருந்துள்ளது என்ற விம்பம், தவிர்க்க முடியாது உருவாகிவிடுகிறது. ஆனால், வரலாற்று, மானுடவியல் ஆய்வுகள் இந்தக் கருத்துக்கு வலுச்சேர்ப்பதாக இல்லை.   

தெற்காசியாவின் ‘பெரியண்ணன்’ ஆக இன்று, இந்தியா இருக்கிறது. இந்தியா என்பது ஒரு நாடாகவும் இந்தியா என்பது ஒரு தேசமாகவும் முன்னிறுத்தப்படுகிறது.   

ஆனால், வரலாற்று ரீதியில் பார்த்தால், இன்றைய ‘இந்தியா’ என்பதே, பிரித்தானிய கொலனித்துவத்தின் உருவாக்கம்தான். இந்திய உபகண்டம், அதாவது பாரத கண்டம் ஒரு நாடாக, அதைவிட ஒரு தேசமாக இருந்ததில்லை.   

பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் தான், அதன் பெரும்பாலான பகுதிகள், பிரித்தானிய முடியின் கீழ், அதாவது ஓர் இறைமையின் கீழ் கொண்டுவரப்பட்டன. அந்தக் காலத்திலும் அது ஒரு தேசமாக இருந்தது என்று சொல்லமுடியாது. எவ்வாறு பிரெஞ்சுப் புரட்சியைத் தொடர்ந்து, பிரான்ஸ் என்ற ‘தேசிய அரசு’ கட்டியெழுப்பப்பட்டதோ, அதுபோலவே, இந்தியாவின் சுதந்திரத்தைத் தொடர்ந்து, இந்தியா என்ற ‘தேசிய அரசு’ கட்டியெழுப்பப்பட்டது.   

சர்தார் வல்லபாய் படேல், இராணுவக் கரம் கொண்டு ஒட்டுமொத்த இந்தியாவை ஒன்றிணைத்த வரலாறு மறக்கப்பட முடியாதது. இவ்வாறு வலிந்துருவான இந்திய ‘தேசிய அரசு’ என்ற செயற்கை உருவாக்கத்தின் விளைவாக, ஏற்பட்ட பெரும்பிரச்சினைகளில் குறிப்பிடத்தக்க ஒன்றுதான், இந்தியாவில் இன்றுவரை தொடரும் காஷ்மீர் பிரச்சினை.   

இது காஷ்மீரில் மட்டுமல்ல, பஞ்சாப், வடகிழக்கு இந்தியா என, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இந்தப் பிரச்சினைகள் உண்டு. இந்திய ஒற்றைத் தேசிய அடையாளத்துக்கு எதிரான சவால்கள் இவை. இதற்குத் தமிழகம் கூட விதிவிலக்கல்ல.   

இந்தியாவைப் போலவே, இன்றுள்ள இலங்கை என்ற ‘தேசிய அரசு’ம் பிரித்தானிய கொலனித்துவத்தின் உருவாக்கம். இலங்கைத் தீவில் மேற்கத்தேய கொலனியாதிக்கம் போர்த்துக்கேயருடன் ஆரம்பமானது.   

போர்த்துக்கேயர் வந்தபோதும் சரி, அதன்பின்னர் ஒல்லாந்தர் வந்தபோதும் சரி, அதன்பின்னர் பிரித்தானியர் வந்தபோதும் சரி, இலங்கை என்பது இன்று உள்ளதைப்போல, ஒற்றையாட்சி அரசாங்கமாகவோ, அதாவது ஓர் இறைமைக்கு முற்றிலும் உட்பட்ட அரசாகவோ, இலங்கை மக்கள் அனைவரும் ஒரு தேசமாகவோ இருக்கவில்லை என்பதுதான் வரலாற்று, மானுடவியல் ஆய்வுகள் சுட்டி நிற்கும் உண்மையாகும்.   

பிரித்தானியர் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இலங்கையின் கரையோரத்தைக் கைப்பற்றி, பின்னர் 1815இல் ஒப்பந்தம் போட்டு, கண்டி இராச்சியத்தையும் கைப்பற்றியபோதும், 1833 வரை அவற்றை வெவ்வேறாகவே ஆட்சி செய்துவந்தனர். 1833இல் கோல்ப்றூக்-கமரன் சீர்திருத்தங்களைத் தொடர்ந்துதான் கரையோரப் பகுதிகளும் கண்டி இராச்சியமும் ஒன்றிணைக்கப்பட்டன.   

இந்த ஒருங்கிணைப்புக்குப் பரிந்துரைத்த கோல்ப்றூக்-கமரன் குழுவானது, ‘இலங்கையிலுள்ள பல்வேறு மக்கள் குழுக்களிடையேயும் ஒருமித்த தன்மையை ஏற்படுத்துவதற்காகவே, இந்தப் பரிந்துரை செய்யப்படுகிறது’ எனக் குறிப்பிட்டது. மக்களிடையே, இத்தகைய ஒருமித்த தன்மையை ஏற்படுத்துதல் என்பது, ‘தேசிய-அரசு’க் கட்டமைப்பில் முக்கியமானதாகும்.  

பிரான்ஸில் ‘தேசிய அரசு’ உருவாக்கப்பட்டபோது, மக்களிடையே ஒருமித்த தன்மையை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமையை இங்கு அடிக்கோடிட்டு நோக்கலாம். இதைத் தொடர்ந்து, பிரித்தானிய கொலனித்துவ ஆட்சியின் போது, ஆங்கில வழிக்கல்வி, பிரித்தானிய உயர்கல்வி பெற்ற உயர் குழாமைச் சார்ந்த இலங்கையின் சுதேசியத் தலைவர்கள், மேற்கத்தேய கல்வியினதும், பிரெஞ்சுப் புரட்சியின் தாக்கத்தால், பிரபலமான ‘தேசிய அரசு’ சார்ந்த அரசியல் சிந்தனைகளின் தாக்கத்தாலும், ‘தேசிய அரசு’ என்ற அமைப்பின் மேல் ஆர்வம் கொண்டார்கள்.   

இந்தப் புள்ளியிலிருந்து, இலங்கை என்ற தீவை முற்றிலும் உள்ளடக்கிய ‘சிலோன்’ (இலங்கை) என்ற ஓர் அரசையும் ‘சிலோனீஸ்’ (இலங்கையர்) என்ற ஒரு தேச அடையாளத்தையும் கொண்ட ‘தேசிய அரசைக்’ கட்டமைக்கும் வகையிலேயே அவர்களது செயற்பாடுகள் இருந்தன.  

‘சிலோனீஸ்’ தேசமும் இன, மத தேசியவாதமும்   

உயர் குழாமினர் இடையே, ‘தேசிய அரசு’ என்ற சித்தாந்தம் ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தாலும், ‘ஓர் அரசு, ஒரு தேசம்’ என்ற ‘தேசிய அரசு’ச் சித்தாந்தம் என்பது, இலங்கையின் சாதாரண மக்களைப் பொறுத்தவரையில், அந்நியமானதொன்றாகவே இருந்தது என்பது தான் உண்மை.   

இதைப்பற்றி, தன்னுடைய ‘இலங்கையின் தேசியமும், அரசியல் முன்னேற்றங்களும்’ என்ற நூலில் கருத்துரைக்கும் சேர். ஐவர் ஜென்னிங்ஸ், ‘‘சிலோனீஸ்’ என்று எவரும் இருக்கவில்லை. பறங்கியர் இருந்தார்கள்; தாழ்நாட்டு மற்றும் கண்டிச் சிங்களவர், தமிழர், இந்தியர், சோனகர், மலாயர் ஆகியோர் இருந்தார்கள். இவர்கள் எவ்வகையிலும் அரசியற்குழுக்கள் அல்ல; இவர்கள் சமூகக் குழுக்களும் அல்ல; ஏனெனில், சிங்களவர்களும் தமிழர்களும் பல்வேறு சாதிகளின் சேர்க்கைதான். சோனகர்களையும் மலாயர்களையும் ஒன்றிணைத்தது இஸ்லாம்தான். ஆகவே, ‘சிலோனீஸ்’ என்ற மக்கள் கூட்ட அடையாளம் என்பது, இந்த நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஓர் அடையாளம்தான் என்று சொன்னால், அது மிகைப்படுத்தலல்ல’ என்று குறிப்பிடுகிறார்.   

இலங்கையைப் பற்றி புரிந்துகொள்வதற்கு, இலங்கை மக்கள் பற்றிய இந்த அவதானம் மிக முக்கியமானது.   

ஆகவே, ‘இலங்கை தேசம்’ என்ற கட்டுமானம், பிரித்தானிய கொலனித்துவத்துக்குப் பின்னரான, இலங்கையின் சுதேசிய உயர்குழாம் தலைவர்களால் முன்னெடுக்கப்பட்டதொன்றாகவே காணப்படுகிறது. மறுபுறத்தில், 19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியிலும், இன-மத தேசியவாதத்தின் எழுச்சியையும் காணக்கூடியதாக இருக்கிறது.   

பிரித்தானிய கொலனித்துவக்கால, இன-மத தேசியவாத எழுச்சியைப் பற்றிப் பேசும்போது, இரண்டு பெயர்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. முதலாவது, அநகாரிக தர்மபால. மற்றையவர், ஆறுமுக நாவலர். 

19ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில், சிங்கள-பௌத்த மறுமலர்ச்சியையும் சிங்கள-பௌத்த இன-மத தேசியவாத எழுச்சித் தீயையும் பற்றவைத்தவர் அநகாரிக தர்மபால ஆவார்.   

அநகாரிக தர்மபால முன்னெடுத்த, சிங்கள-பௌத்த மறுமலர்ச்சியை, ‘புரட்டஸ்தாந்து பௌத்த’ எழுச்சி என்று, கணநாத் ஒபேசேகர, றிச்சட் கொம்பறிச் ஆகியோர் எழுதிய, ‘இலங்கையில் பௌத்தம்’ பற்றிய மானுடவியல் ஆய்வு நூலில் குறிப்பிடுகிறார்கள்.   

அநகாரிக தர்மபாலவின் இந்தச் சிங்கள-பௌத்த மறுமலர்ச்சிதான், இன்றைய சிங்கள-பௌத்த இன மத தேசியவாதத்தின் ஆரம்பப்புள்ளி எனலாம்.   

அநகாரிக தர்மபாலவின் சமகாலத்தவராகவும் சைவத் தமிழ் மறுமலர்ச்சியின் பிதாமகராகவும் ஆறுமுகநாவலரைப் பலரும் குறிப்பிட்டாலும், அநகாரிக தர்மபாலவுக்கும் ஆறுமுகநாவலருக்கும் அடிப்படை வேறுபாடுகள் நிறையவே உண்டு.   

ஆறுமுகநாவலரின் சுதேசிய மறுமலர்ச்சியானது, ‘யாழ் சைவத் தமிழ் வேளாள’ என்ற, பிரதேச மத இன சாதிய அடிப்படையிலான எழுச்சியாக அமைந்ததே அன்றி, சிங்கள பௌத்த தேசியவாதத்தைப் போல, அரசியல் ரீதியிலான, தமிழ்த் தேசியவாதத்துக்கு அடிப்படையாக அமையவில்லை என்று, டக்மா ஹெல்மன் இராஜநாயகம், தனது ஆய்வில் குறிப்பிடுவது ஏற்றுக்கொள்ளத்தக்க கருத்தாகவே இருக்கிறது.   

அநகாரிக தர்மபாலவினதும், ஆறுமுகநாவலரினதும் செயற்பாடுகள் அடிப்படையில், கிறிஸ்தவ மிஷனரி எதிர்ப்பு, சுதேசிய மத எழுச்சி என்ற அடிப்படைகளில் ஒன்றிணைந்திருந்தாலும், அநகாரிக தர்மபாலவின் புரட்டஸ்தாந்து பௌத்த எழுச்சி, சிங்கள பௌத்த தேசியவாதத்துக்கு அடிப்படையாக இருந்ததைப் போல, ஆறுமுகநாவலரின் சுதேசிய எழுச்சி, தமிழ்த் தேசியவாதத்துக்கு அடிப்படையாக அமைந்தது என்று கூறமுடியாது.  

அது, பிராந்திய, சாதியச் சாயங்கொண்ட தமிழ்ச் சைவ மறுமலர்ச்சிக்கே வழிவகுத்ததன்றி, அதைத் தாண்டி, சிங்கள பௌத்த தேசியவாதத்தை உருவாக்கியதில், அநகாரிக தர்மபாலவின் செயற்பாடுகளுக்கு உள்ளது போன்ற அரசியல் முக்கியத்துவம், தமிழ்த் தேசியவாதத்தைக் கட்டியெழுப்புவதில் ஆறுமுகநாவலரின் செயற்பாடுகளுக்கு இல்லை என்பதே நிதர்சனம்.   

கொலனித்துவக் காலத்துக்கு முன்னர், இலங்கைத் தீவானது, நவீன அரசு, தேச சித்தாந்தங்களின்படியான ஒற்றைத் தேசமாகவோ, ஒற்றை அரசாகவோ கட்டமைக்கப்பட்டிராத பல்வேறு அடிப்படைகளில், சிறு குழுக்களாக ஒன்றிணைந்திருந்த மக்கள் கூட்டத்தையே கொண்டிருந்தது.   

அதிலும் குறிப்பாக, சிங்கள மக்கள், தமிழ் மக்கள் என்று, இன்று அடையாளப்படுத்தப்படுவோர், சாதி அடிப்படையிலான மக்கள் கூட்டங்களாகவே இணைந்திருந்தனர் என்பது சில மானுடவியல் ஆய்வாளர்களின் கருத்தாகும். பொதுவாக, சமகாலத்தில் சிங்களம், சிங்களவர்கள், சிங்கள தேசம் போன்ற சொற்பிரயோகங்களையும் இவை அனைத்தும் பல்லாயிரம் ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டது என்ற கருத்துகளையும் அடிக்கடி, குறிப்பாகப் பேரினவாத அரசியல் மேடைகளில் கேட்கக்கூடியதாக உள்ளது.   

ஆனால், அநகாரிக தர்மபாலவுக்கு முன்னரான ‘சிங்கள அடையாளம்’ நவீன கால இனம், தேசம் ஆகிய சித்தாந்தங்களுள் பொருந்தக் கூடிய அடையளம் அல்ல என்பதுதான் லெஸ்லி குணவர்த்தன, ஜோன் டி றொஜேர்ஸ், ஸ்ரான்லி ஜெயராஜா தம்பையா உள்ளிட்ட மானுடவியல் ஆய்வாளர்களின் கருத்தாகும்.   
வரலாற்றுக் காலத்தில் சிங்களவர்கள் என்று விளிக்கப்பட்டவர்களுக்கும், இன்று சிங்கள தேசமாகக் கருதப்படுபவர்களும் ஒரு கூட்டம் அல்ல என்பதுதான் அவர்களது நிலைப்பாடு.   

அநாகரிக தர்மபாலவுக்குப் பின்னரான சிங்கள தேசம் என்பது, ‘சிங்கள பௌத்த’ தேசமாகவே கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், அதற்கு முன்பு சிங்களமும் பௌத்தமும் அவ்வாறு ஒன்றித்திருந்ததொன்றல்ல என்று வரலாற்றாய்வாளர் கே.எம். டி சில்வா சுட்டிக் காட்டுகிறார்.   

ஆரம்பகாலங்களில், எல்லாச் சிங்களவர்களும் பௌத்தர்கள் அல்ல; அதேவேளை, பல தமிழ் பௌத்தர்களும் இருந்தார்கள் என்பது கே.எம். டி சில்வாவின் கருத்தாகும்.   

இலங்கையைப் பொறுத்தவரையில், பிரித்தானிய கொலனித்துவக் காலத்தில், இலங்கையை ‘சிலோனீஸ்’ என்ற ஒரு தேசத்தைக் கொண்ட ‘தேசிய அரசாக’ கட்டமைக்கப்படக்கூடிய வாய்ப்புகள் நிறையவே இருந்தன. பெரும்பாலான உயர் குழாம் தலைவர்களும் அதையே விரும்பி இருந்தார்கள்.   

ஆனால், அந்த உயர் குழாம் தலைவர்களின் நிலைப்பாட்டுக்கும் நாட்டு மக்களின் யதார்த்தத்துக்கும் நிறையவே இடைவெளி இருந்தது. அந்த இடைவௌியும் மறுபுறத்தில் ஏற்பட்ட பேரினவாத இன மத தேசியவாத எழுச்சியும்தான் ‘இலங்கையர்’ என்ற ஒற்றைத் தேசிய அரசுக்குப் பதிலாக, ஒரு பெரும்பான்மை இன, மத தேசத்தையும் அந்தப் பெரும்பான்மை இன மத தேச மேலாதிக்கத்தின் விளைவாக, அதற்கு எதிரான சிறுபான்மை இன மத தேசம், தேசியத்தின் எழுச்சியையும் உருவாக்கியது.   

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .