2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கண்டுகொள்ளப்படாத மக்கள் கூட்டம்

மொஹமட் பாதுஷா   / 2019 பெப்ரவரி 08 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘வெளியே வந்து பாருங்கள்... போதும் போதும் என்று சொல்லுகின்ற நம்மில் பலருக்கு, அளவுக்கு அதிகமாகவே வசதிகள் கிடைக்கப் பெற்றிருப்பதைக் காண்பீர்கள்’ என்று வெளிநாட்டுக் கவிஞர் ஒருவர் எழுதினார்.   

உண்மைதான்! நாட்டில் பெரிய பெரிய விவகாரங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்ற நாம், சமகாலத்தில், உண்பதற்கு ஒருவேளை உணவும் அடிப்படை வசதிகளும் இன்றி, அன்றாட வாழ்க்கையைக் கூட, வாழ்வதற்கு வழிதெரியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் கணிசமான மக்கள் கூட்டம் நம்மிடையே இருக்கின்றார்கள் என்பதை, மறந்து விடுகின்றோம். அவர்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதற்காக, இன்றைய, நேற்றைய அரசாங்கங்கள் எதுவும் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.   

வீதியால் போகின்ற போது, வீதிச் சமிக்ஞை சந்திகளில், தெருமுனைகளில், சனக் கூட்டத்துக்குள் நம்மிடம் கையேந்துகின்ற பெண்கள், வயோதிபர்கள், குடும்பஸ்தர்களைத் தினமும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.   

‘பசிக்கின்றது ஏதாவது தாருங்கள்’ என்று நமக்குப் பின்னே வருகின்ற சின்னஞ் சிறார்களின் குரல்கள், இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இயந்திரமயமான வாழ்வும் ‘நமக்கு ஏனிந்த வேலை’ என்கின்ற எண்ணமும் அந்த மக்களைப் பற்றிக் கவலை கொள்ளாமல்ச் செய்து விடுகின்றன.   

நாட்டில் பொதுவாகவே, பல தேசிய முக்கியத்துவமிக்க விடயங்கள், எப்போதுமே பேசுபொருளாக இருந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக, இனப்பிரச்சினைக்கான தீர்வு, புதிய அரசமைப்பு, சட்டவாக்கங்கள், பெரும் ஊழல்கள், கொலைகள், கொலைக் குற்றச்சாட்டுகள், தேர்தல், ஆட்சி மாற்றம் போன்ற எத்தனையோ விடயங்களைப் பற்றிக் கருத்துகள் பரிமாற்றம் செய்யப்படுகின்றன.  பல அபிவிருத்தி வேலைத் திட்டங்கள், ஆட்சியதிகாரத்துக்காகப் பெருந்தொகை பொதுப் பணமும் செலவிடப்படுகின்றது.   

ஆனால், இலங்கையில் இலட்சக்கணக்கான மக்கள் இன்னும் வறுமையில் வாடிக் கொண்டிருக்கின்றார்கள். புள்ளிவிவரங்களுக்குள் உள்ளடங்காத இன்னும் எத்தனையோ பேர், வாழ வழியின்றித் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.   

நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்திருப்பதாகவும் தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் ஊடாக, அரசாங்கம் பிரசித்தப்படுத்திக் கொண்டிருக்கின்ற சமகாலத்திலேயே, எந்த வருமானமும் இன்றி, அடிப்படை வசதிகள் இன்றி, வாழவும் தெரியாமல் மாழவும் முடியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் ஏழை மக்கள் பற்றிக் கவனிக்க வேண்டியுள்ளது.   

அதற்காக, மேற்குறிப்பிட்ட தேசிய மட்ட விவகாரங்கள் எல்லாம் நமக்கு அவசியமில்லை என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. மாறாக, உண்பதற்கு உணவும் அடிப்படை வசதிகளும் இருக்கின்ற மனிதன்தான் இனப்பிரச்சினைத் தீர்வு, அரசமைப்பு, தேர்தல், தேசியப் பிரச்சினைகள் பற்றிச் சிந்திப்பான். தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் அடுத்த வேளை உணவு என்ன, எங்கே போவது, யாரிடம் இரந்து கேட்பது என நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு தாய்க்கும் தகப்பனுக்கும் அமெரிக்காவில் யார் ஆட்சி செய்தால் என்ன, இலங்கையில் யார் ஆட்சிக்கு வந்தாலென்ன அவன் எதைப் பற்றியுமே சிந்திக்க மாட்டான்.   

அதாவது, வயிறு நிரம்புகின்ற பிரஜைதான், நாட்டின் நடப்பு நிலைவரங்களைப் பற்றிச் சிந்திக்கின்ற மனோநிலையைப் பெறுவான். எனவே, ‘போதும் போதும்’ என்று சொல்லி, சிலபோதுகளில் அளவுக்கு அதிகமாகவே அனுபவித்துக் கொண்டிருக்கின்ற மக்கள் கூட்டத்தாராகிய நடுத்தர, மேல் நடுத்தர, மேற்தட்டு மக்களே, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்ற மக்கள் குறித்துச் சிந்திக்க வேண்டிய தார்மீகக் கடமையைக் கொண்டிருக்கிறார்கள்.   

எல்லா நாடுகளையும் போல, இலங்கையிலும் கூட, பெரும்பகுதி செல்வம் என்பது அரசியல்வாதிகள், வர்த்தகப் புள்ளிகள் உள்ளடங்கலான மேற்தட்டு, உயர் நடுத்தர வர்க்கத்தினர் இடையேதான் குவிந்து காணப்படுகின்றது. நாட்டின் மொத்த வருமானத்தில், ஏழைகள், கீழ்நடுத்தர மக்களுக்குச் சென்று சேர்கின்ற தொகை என்பது மிகக் குறைவாகும். சொற்ப அளவான மக்களுக்கு அதிக வருமானமும் அதிகமான மக்களுக்கு சொற்ப வருமானமும் கிடைக்கின்ற சமமற்ற தன்மை என்பது, உலகப் பொது ஒழுங்காகும்.   

இலங்கையில் தனிநபர் வருமானமும் உள்நாட்டு உற்பத்தியும் அதிகரித்திருக்கின்றது என்று அரசாங்கமும் மத்தியவங்கியும் சொல்வதை மறுப்பதற்கில்லை.   

புள்ளிவிவரத் திணைக்களத்தை மேற்கோள்காட்டும் மத்திய வங்கியின் தரவுகளின் படி, 2010ஆம் ஆண்டில் இருந்த தனிநபர் வருமானம், 2,808 அமெரிக்க டொலர்களாகும். இது, 2017ஆம் ஆண்டு 3,800 டொலரைத் தாண்டி விட்டது. இப்போது அண்ணளவான தனிநபர் வருமானம் 4,000 அமெரிக்க டொலர் எனத் தரவுகள் குறிப்பிடுகின்றன.   

இன்று நடைமுறையிலுள்ள நாணயமாற்று விகிதத்தின்படி பார்த்தால், இலங்கையின் தனிநபர் வருமானம் என்பது ஏழு இலட்சங்களாகும். அப்படியாயின், மாத வருமானம் 58,000 ரூபாய்க்கு அதிகமாக இருக்கும். இது எத்தனை பேருக்கு கிடைக்கின்றது என்பது சிந்தனைக்குரியது.   

உண்மையில், தனிநபர் வருமானம் சுமார் 4,000 அமெரிக்க டொலர் எனக் கூறப்படுவது ஒரு சராசரியான மட்டமாகும். அதன்படி, 4,000 அமெரிக்க டொலருக்கு அதிக தனிநபர் வருமானம் பெறுவோரும் அதேபோல் அதைவிடக் குறைவாக வருமானம் உழைப்போரும் இருக்கின்றனர் என்பதே இதன் உள்ளர்த்தமாகும்.   

ஆனாலும், இலங்கையில் பட்டதாரி தகுதியுடன் இருக்கின்ற இலட்சக்கணக்கான அரசாங்க ஊழியர்களின் மாதச் சம்பளம் கூட, 58 ஆயிரத்தை விடக் குறைவாகும். பதவிநிலை உத்தியோகத்தர்கள், மேலதிகாரிகளே அவ்வளவு சம்பளத்தைப் பெறுகின்றனர். அவர்களில் பலருக்கு, நடுத்தர வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதில் பொருட்களின் விலை அதிகரிப்பும் ஆடம்பரச் செலவுகளும் பெரும் சிக்கலைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றன. இந்த இலட்சணத்தில், ஏழைகளின் நிலைமை எவ்வாறிருக்கும் என்று நினைக்கவே முடியாதுள்ளது.   

வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கின்ற இலங்கையர் (அது பற்றிய முக்கிய தரவுகள் இப் பத்திக்கு அருகில் குறிப்பிடப்பட்டுள்ளன) ஒரு முஸ்லிமாக, தமிழராக, சிங்களவராக யாராக இருப்பினும், அவரது மாத வருமானம் இலங்கையின் தனிநபர் வருமானக் குறிகாட்டி சொல்வது போல், ஏழு இலட்சமாக இல்லை என்பதே கசப்பான நிதர்சனமாகும்.   

நிரந்தர வருமானம் இல்லாத ஏழைக் குடும்ப‍ங்களின் தலைவர்கள், தலைவிகள் இதைவிடக் குறைவாகவே உழைக்கின்றனர். நாள்சம்பளத் தொழிலாளர்கள் 2,000 ரூபாய்க்கும் குறைவான சம்பளத்தைப் பெறுகின்றனர். இருந்தபோதிலும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, அவர்களுக்கு அது ‘யானைப்பசிக்கு சோளப் பொரியாகவே’ அமைந்து விடுகின்றது.   

4,000 அ. டொலர் பெறுவோருக்கு ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்ற போது, 400 அ.டொலரும் வருமானமுமில்லாத மக்களின் வாழ்வு எப்படியிருக்கும் என்று விவரிக்கத் தேவையில்லை.   
இலங்கையில் வறுமையைக் குறைப்பதற்கு அரசாங்கங்களும் பொறுப்புவாய்ந்த நிறுவனங்களும் பாரிய பங்களிப்பைச் செய்திருப்பதையும் அது சிறப்பான வெற்றியைத் தந்துள்ளதையும் இவ்விடத்தில் குறிப்பிட்டாக வேண்டும்.   

அந்தவகையில், இலங்கையின் வறுமை 4.1 சதவீதமாகக் கணிசமாகக் குறைவடைந்துள்ளது மகிழ்ச்சியே. அத்துடன், 2020ஆம் ஆண்டில், தனிநபர் வருமானத்தை 4,350 அமெரிக்க டொலராக அதிகரிக்க மத்திய வங்கி திட்டமிடும் அளவுக்கு, மக்களின் வருமானம் அதிகரிக்கச் செய்யப்பட்டிருப்பதும் பாராட்டப்பட வேண்டியதே.   

ஆனால், இலங்கையில் தனிநபர் வருமானம் அதிகரித்த காலங்களில், பொருட்களின் விலையில் பன்மடங்கு அதிகரிப்பு ஏற்பட்டு, மக்களின் கொள்வனவுச் சக்தி குறைவடைந்திருக்கின்றது என்பதும், தனிநபர் வருமான அதிகரிப்புகள் கணிசமான ஏழை மக்களின் வாழ்க்கைக்கான வாழ்வாதாரத்தை (வருமானத்தை) அதிகரிக்கச் செய்யவில்லை என்பதும், அடிக்கடி உணரப்படும் விடயங்களாகும். இதுதான் இங்கு கரிசனைக்கு உரியதாகின்றது.   

இலங்கையில் பொதுவான அடிப்படையில், தனிநபர் வருமானம் கணிசமாக அதிகரித்திருக்கின்றது என்பதையும் வறுமை குறைவடைந்திருக்கின்றது என்பதையும் வறிய குடும்பங்களின் எண்ணிக்கை குறைவடைந்திருக்கின்றது என்பதையும் மறுத்துரைக்கவில்லை.   

இருப்பினும், இந்தத் திட்டங்கள் சென்றடையாத மக்கள் கூட்டமும் இருக்கின்றார்கள் என்பதையும் புள்ளிவிவரத் தரவுகளுக்குள் உள்ளடங்காத ஏழைகளும் இருக்கின்றார்கள் என்பதையும் இன்னும் இந்த வறுமையொழிப்பு முழுமைத்துவம் பெறவில்லை என்பதையுமே சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.   

மத்திய வங்கி வெளியிட்ட இலங்கையின் பொருளாதார, சமூகப் புள்ளிவிவரத் தொகுப்பின் பிரகாரம், இலங்கையில் எல்லா இனங்களுக்கு மத்தியிலும் வறுமை இருக்கின்றது. பெருந்தோட்டத்தில் ஒப்பீட்டளவில் வறியவர்கள் அதிகம் என்றாலும், நகரம், கிராமம் மற்றும் பெருந்தோட்டங்களில் காணப்படும் வறுமை சதவீதத்துக்கு இடையில் பெரிய வித்தியாசங்கள் இல்லை.   

வறுமை குறைவடைந்துள்ளதாகத் தரவுகள் கூறுகின்ற போதும், நாம் எத்தனையோ பிச்சைக் காரர்களை, வாழ நாதியற்றவர்களை இப்போதும் காண்கின்றோம்.   

உண்பதற்கு உணவற்ற குடும்பங்களை, பெண் பிள்ளைகளைக் கரைசேர்க்க உதவி தேடித் திரியும் தாய்மார்களை, மருந்து வாங்குவதற்குக் கூடப் பணமில்லாத தந்தைமார்களை, அணிய ஆடையில்லாத சிறார்களை ஒவ்வொரு நாளும் கடந்து செல்கின்றோம். ஆனால் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை.   

எனவே, வறுமை ஒழிப்பு என்பது, அர்த்தபுஷ்டியுள்ளதாக இருக்க வேண்டும். தேசிய அளவிலான விவகாரங்களில் காட்டுகின்ற அதே முக்கியத்துவத்தை, ஏழை மக்கள் விடயத்தில் காட்டுவதும், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய விதத்தில் வாழ்வாதாரத்தை வழங்கி, அவர்களது வாழ்நிலையை உயர்த்துவதும் அரசாங்கத்தினதும் வல்லமையுள்ள ஏனைய மக்களினதும் தார்மீக பொறுப்பாகும்.   

இலங்கையில் வறுமை: முக்கிய குறிப்புகள்

இலங்கையில் வறுமை ஒழிப்புத் திட்டம், கோட்பாட்டு அடிப்படையில் வெற்றி அளித்துள்ளதாகவே கூறலாம். ஆனாலும், இன்னும் இத்திட்டங்கள் எல்லாம், சென்றடையாத இலட்சக்கணக்கான மக்கள் இருக்கின்றார்கள் என்பதற்கும், பொது விலைமட்டத்தின் அதிகரிப்பும் வாழ்க்கைச் செலவும் கீழ் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரையும் ஒருவித செயற்கைத் தனமான வறுமையை நோக்கி நகர்த்த முனைகின்றது என்பதற்கு நாமே வாழும் அத்தாட்சிகளாகின்றோம்.    

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட இலங்கைப் பொருளாதார சமூகப் புள்ளிவிவரங்கள் (2017) தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், நாட்டில் 1995ஆம் ஆண்டு 28.8 சதவீதமாகக் காணப்பட்ட வறுமையானது, 2013இல் 6.7 சதவீதத்துக்குக் குறைந்துள்ளது.   
2016ஆம் ஆண்டில் இது 4.1 சதவீதமாகக் குறைக்கப்பட்டு, மிதமான விதத்தில் பேணப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.   

அதேநேரம், தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது. 2019ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் 4,000 அமெரிக்க டொலரை அடைய முடியும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளதுடன், 2020ஆம் ஆண்டு இலங்கையர் ஒருவரின் சராசரி தனிநபர் வருமானத்தை 4,350 அ.டொலராக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.   

ஆனால், இதன் பலாபலன்கள் ஏழைகளைச் சென்றடையுமா என்பது நிச்சயமற்றதாகவே இருக்கின்றது.   

• மேற்படி அறிக்கையின் படி, நாட்டில் 4.1 சதவீதம் வறுமை என்றால் எட்டு இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் வீடுகளில் வறுமை குடிகொண்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டிருக்கின்றது. (நிஜத்தில் இது இன்னும் அதிகமாகவே இருக்கும்)   

• பெருந்தோட்டத்துறையில் அதிக வறுமை இருப்பதாகத் தெரிகின்றது. அதற்கடுத்த இடங்களைக் கிராமிய,  நகர்ப்புற ஏழைகள் பெறுகின்றனர்.   

• ஊவா, கிழக்கு மாகாணங்களில் (10 சதவீதத்துக்கும்) அதிக வறுமை காணப்படுகின்றது.   

• மாவட்ட அடிப்படையில் முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் 19 சதவீதத்துக்கும் அதிகமான வறுமை என்று அறிக்கை இடப்பட்டுள்ளது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .