2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

“கூப்பிட்டாத்தான் வரும்”: குரங்குகளுக்கு உணவளிக்கும் ‘காருண்யப் பெண்’

Johnsan Bastiampillai   / 2021 பெப்ரவரி 17 , பி.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எச்.எம்.எம். பர்ஸான்

“ஒன்றுடன் ஒன்று முட்டிக் கொள்ளாமல், ஒவ்வொரு குரங்காக வந்து உணவை எடுத்துச் செல்வது, என்னை வியப்புக்குள்ளாக்கியது. சில குரங்குகள், தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருக்கும். நான், உணவைக் காட்டி அழைக்கின்ற போது, ஒவ்வொன்றாக வந்து, உணவைப் பெற்றுச் செல்லும். அத்துடன், குரங்குகள் அவதிப்பட்டும் அச்சப்பட்டுக்கொண்டும் உணவைப் பெற்றுக் கொள்ளாது. அதனால், உணவு வழங்குவது, எனக்குச் சிரமமில்லை” என்கிறார், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரதம முகாமைத்துவ உதவியாளராகப் பணியாற்றிவரும் தங்கமலர்.

மட்டக்களப்பு, கோரகல்லிமடு பிரதேசத்தில் வசித்து வரும் இவர், கடமை முடிந்து வீட்டுக்கு செல்லும்போது, கும்புறுமூலை சந்திப் பகுதியில் காணப்படும் குரங்குகளுக்கு உணவு வழங்கி வருகிறார்.

சுமார் ஒன்பது மாதங்களாக, கும்புறுமூலை சந்தியில் காணப்படும் குரங்குகளுக்கு பிஸ்கட் வழங்குவதாகவும், தான் மோட்டார் சைக்கிளை அவ்விடத்தில் நிறுத்தும் போது, குரங்குகள் தன்னை, எட்டத்தில் சூழ்ந்து கொள்வதாகவும் தங்கமலர் தெரிவிக்கிறார்.

இவ்வாறு குரங்குகளுக்கு உணவு வழங்கி, தனது மாதாந்தச் சம்பளத்தில் கணிசமான பணத்தை, இவர் தொடர்ந்து செலவு செய்து வருகிறார். “குரங்குகளுக்கு தினந்தோறும் உணவளிப்பது, மனதுக்கு ஆறுதலையும் அமைதியையும் தருகிறது. அதற்காக, நாளாந்தம் 200 ரூபாய் வரை ஒதுக்கிவைத்துக் கொள்வேன்” என்கிறார் மிகத்தௌிவாகவும் திருப்தியுடனும்! 

“நாம் ஒரு நாளைக்கு எவ்வளவெல்லாம் செலவு செய்கிறோம்? மிருகங்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை நாம் வழங்க வேண்டும்.  இப்போது குரங்குகள் உட்பட்ட மிருகங்களைப் பொறுத்தவரையில், அவற்றுக்கு முறையான உணவுகள் கிடைப்பதில்லை. மனிதன் அவற்றின் இயற்கையான வாழ்விடங்களை அழித்துக்கொண்டு வருகின்றான். அத்துடன், மனிதர்கள் பயன்படுத்திய, எஞ்சிய எச்சில் உணவுகளையே உட்கொள்கின்றன. மிருகங்கள் உட்கொள்ள முடியாத வகையான உணவுகளையே, மனிதன் வீதிகளில் வீசுகின்றான். நான் குரங்குகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை வழங்குகிற போது, அது எனது மனதுக்கு ஒருவகையான ஆறுதலையும் ஆத்மதிருப்தியையும் தருகின்றது” என உவகையுடன் கூறினார்.

“நான் குரங்குகளுக்கு உணவு வழங்குகின்ற போது, அவை எனக்குப் பெரிதும் ஒத்துழைப்புகளைத் தருகின்றன. ஒன்றுடன் ஒன்று முட்டி மோதிக் கொள்ளாமல், ஒவ்வொரு குரங்காக வந்து, உணவைப் பெற்றுச் செல்வது, என்னை வியப்புக்குள்ளாக்கியது. சில குரங்குகள், தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருக்கும். நான் உணவைக் காட்டி அழைக்கின்ற போது, அவை ஒவ்வொன்றாக வந்து, உணவைப் பெற்றுச் செல்லும். அத்துடன், குரங்குகள் அவதிப்பட்டோ, அச்சப்பட்டுக்கொண்டோ உணவைப் பெற்றுக் கொள்ள முயற்சி செய்யமாட்டா! அதனால், எனக்கு உணவு வழங்குவது சிரமமில்லை” என்கின்றார்.

தன்னுடைய இத்தகைய ஆரோக்கியமான பொழுதுபோக்குக் குறித்து தங்கமலர் மேலும் தெரிவித்ததாவது; “முன்னைய காலத்தில், காட்டு மிருகங்கள், மக்கள் குடியிருப்புகளுக்குள் வருவது குறைவு. இப்போது, மனிதர் காடுகளை அழிக்கின்ற போது, அவற்றுக்கான  உணவுகள் இல்லாமையால், காட்டு மிருகங்கள், மக்கள் குடியிருப்புகளுக்குள் வருகின்றன. அதனால்தான் குரங்குகளும் உணவு தேடி, வீதிகளுக்கு வருகின்றன. உணவுக்காக வரும் குரங்குகள், எனக்குத் தொல்லை கொடுப்பதில்லை. ஒவ்வொரு குரங்காக வந்து, எனது மோட்டார் சைக்கிளில் அமர்ந்து கொள்ளும்; பின்னர், நான் வழங்கும் உணவைப் பெற்றுக் கொள்ளும். பொதுவாக குரங்குகள், வழக்கமான உணவுகளை உட்கொள்ளும். பிஸ்கட் போன்ற உணவுகளை அது உட்கொள்வது அரிது. அதனால்தான் குரங்குகளுக்கு நான் பிஸ்கட்களை வழங்கி வருகிறேன்”.

“பசி என்ற உணர்வு எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது. இவை மிருகங்கள்தானே என்று ஒதுக்கித் தள்ளிவைக்காமல், அவற்றுக்கும்  மனிதர்கள், ஆரோக்கியமான உணவுகளை வழங்க முன்வரவேண்டும்.  எனது வீட்டுக்கு வரும் பறவைகளுக்குக் கூட, உணவு வழங்கி வருகிறேன். விசேடமாகக் காகங்கள் எங்கள் வீட்டுக்கு அதிகம் வருகின்றன. அவற்றுக்கும் தினந்தோறும் உணவு வழங்குவேன்.என்னைக் கண்டவுடன் காகங்களும் கூட்டமாகக் கூடிவிடும். எங்களிடமிருந்து அவை எதிர்பார்ப்பது, தங்களது பசியைப் போக்குவதற்கான உணவை மட்டுமே! அவற்றின் எதிர்பார்ப்பை முடிந்தளவு நிறைவு செய்கிறேன்”. 

“வீதிகளில் பயணிக்கின்ற போது, பல கால்நடைகளைக் காண்கின்றோம். அவை உண்ண உணவின்றி, மாடுகள் உட்பட பொலித்தீன் பைகளை, உணவாக உண்பதைக் காணும்போது, மனம் வேதனையடைகிறது. இவ்வாறான வாய் பேசாத ஜீவன்களுக்கு, தங்களால் முடிந்தவற்றை உணவாகக் கொடுத்து, மனிதர்கள் உதவவேண்டும் என்பதே எனது பேரவா!” எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .