2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘கறுப்பு ஜூலை’யிலிருந்து பாடம் படிக்காத தமிழர்களும் சிங்களவர்களும்

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2018 ஜூலை 25 , மு.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைச் சமூகம் வரலாற்றிலிருந்து பாடம் படிக்காத சமூகம் என்பதற்கு, இந்நாட்டு இனப் பிரச்சினையே சிறந்த உதாரணமாகும்.   

பாடம் படிக்காதவர்கள் என, நாட்டின் குறிப்பிட்டதொரு சமூகத்தைக் குறிப்பிட முடியாது. ஏறத்தாழ, சகல இன மக்களும் இந்த நிலையிலேயே தான் இருக்கிறார்கள்.   

நேற்று, (ஜூலை 24) இலங்கை வரலாற்றில் கறைபடிந்த ஒரு சம்பவம் இடம் பெற்று, 35 வருடங்கள் பூர்த்தியாகி விட்டன. அது, ‘கறுப்பு ஜூலை’ எனப் பொதுவாக அழைக்கப்படும், 1983 ஆம் ஆண்டு இனக் கலவரமாகும். 

சுமார் ஒரு வார காலமாக இடம்பெற்ற வன்செயல்க் கொடுமைகளுக்கு, அதன் சூத்திரதாரிகள் மட்டுமன்றி, முழு நாடும் இன்றுவரை விலை கொடுத்து வருகிறது. இனிமேலும் விலை கொடுக்கக் காத்திருக்கிறது. காரணம் வரலாற்றிலிருந்து பாடம் படிக்காமையே ஆகும்.   

அன்று இடம்பெற்ற, அந்தக் கொடுமையின் பயங்கரத்தை, போரின் இறுதிக் கட்டத்தில், முள்ளிவாய்க்காலில் சிக்குண்டவர்கள் தவிர்ந்த, தமிழ்ச் சமூகத்தின் இளம் தலைமுறையினர் அறிந்திருக்கவோ, உணரவோ வாய்ப்பில்லை.   

பொதுவாகச் சிங்கள, முஸ்லிம் இளம் தலைமுறையினர் அந்தப் பயங்கரத்தை உணர மாட்டார்கள். ஏனெனில், அவர்கள் அது போன்றதொரு நிலைமையை, புத்தகங்களிலும் பத்திரிகைகளிலும் வாசித்திருந்தாலும் அவர்களுக்கு அந்த அனுபவம் இல்லை.   

எனினும், 2013 ஆம் ஆண்டு பேருவளை, அளுத்கம பகுதிகளிலும் கடந்த பெப்ரவரி மாதம், கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களின் போது, அப்பகுதிகளில் முஸ்லிம்கள், ஓரளவுக்கு அந்தப் பயங்கரத்தை உணர்ந்திருப்பார்கள்.  

அது ஒரு பயங்கரமான காட்சி. வவுனியாவுக்குத் தெற்கே, சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில், அங்காங்கே சிறு தொகுதிகளாக வாழும் தமிழ் மக்கள், முற்றுகையிடப்பட்டுத் தாக்கப்படும் ஒரு நிலைமைக்குள் தள்ளப்பட்டார்கள்.   

சுமார் ஐந்து நாட்களாக, நாட்டில், அரசாங்கம் ஒன்று இல்லாத, அராஜக நிலைமை காணப்பட்டது. தப்பிச் செல்ல இடமோ, உதவி கேட்க நண்பர்களோ, பாதுகாப்பைக் கேட்க அரசாங்கப் படைகளோ இல்லை.   
காடையர்கள் தம்மைத் தாக்க வரும் வரை, வீட்டிலோ, கடையிலோ அல்லது வாகனத்திலோ பதுங்கியிருந்து, “உயிரைப் பாதுகாத்துக் கொடு” என்று, இறைவனை மன்றாடுவதைத் தவிர, அன்று தமிழ் மக்களுக்கு வேறு வழியிருக்கவில்லை.  

பெரும்பாலான சிங்கள மக்கள், தீவைத்தல், தாக்குதல், கொலை செய்தல், கொள்ளையடித்தல் போன்ற அடாவடித் தனங்களில் ஈடுபடாவிட்டாலும், தம்மைச் சூழ இருந்த, எந்தச் சிங்களவரை நம்புவது, எந்தச் சிங்களவரைக் கண்டு பயப்படுவது என்று தெரியாமல் தமிழ் மக்கள் திகைத்து நின்றனர்.   

கொலை, குறிப்பாகத் தீவைத்தல், கொள்ளையடித்தல் ஆகிய சம்பவங்கள், பொலிஸார், பாதுகாப்புப் படையினர் முன்னிலையிலேயே இடம்பெற்றன. இறுதியில் தீ வைத்தது, கொலை செய்தது போதும் என, அரசாங்கமே நினைத்ததோ என்னவோ, ஐந்து நாள்களுக்குப் பின்னர், பாதுகாப்புத் துறையினர் கலகத்தை அடக்க முற்பட்டனர். அப்போது, நடக்கக் கூடியதும் கூடாததும் நடந்து முடிந்துவிட்டிருந்தன.  
இந்தச் சம்பவம், யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் புலிகளால் 13 இராணுவத்தினரைக் கண்ணிவெடி வெடிக்கவைத்துக் கொன்றதன் விளைவு என்றே, பொதுவாகக் கூறப்படுகிறது. அது உடனடிக் காரணம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், அதற்கு முன்னர், சிங்கள மக்களினதும் தமிழ் மக்களினதும் மனதில் விஷத்தை ஊட்டும் சம்பவங்கள் பல நடந்து இருந்தன.   

1977 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் ஜே.ஆர் ஜெயவர்தனவின் தலைமையில், ஐக்கிய தேசியக் கட்சி வரலாற்றில் எந்தவொரு கட்சியும் பெறாத வகையில், ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்துடன் பதவிக்கு வந்தது.  

 அத்தோடு, நாட்டில் அரசியல் கலவரங்கள் இடம்பெற்று, முன்னைய அரசாங்கத்தின் உறுப்புக் கட்சிகளான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சம சமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்களின் வீடுகள் தாக்கப்பட்டன. இந்தக் கலவரங்கள், ஏதோ சில காரணங்களால், ஓரிரு வாரங்களில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறையாக மாறி, நாடு முழுவதிலும் பரவின.   

அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராகவிருந்த அ. அமிர்தலிங்கம், இதை எதிர்த்து, நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார். இதையடுத்து, அப்போதைய ஐ.தே.க அரசாங்கத்தின் தலைவர்கள், த.வி.கூ தலைவர்களைக் கடுமையாக விமர்சித்துப் பேசி வந்தனர்.   

அவர்களுக்கு அதற்காகப் போதிய காரணங்கள் இருந்தன. ஏனெனில், அதற்கு முந்திய ஆண்டில் தான், வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்காகத் தனி நாட்டை உருவாக்க வேண்டும் என்ற ‘வட்டுக்கோட்டை தீர்மானம்’ நிறைவேற்றப்பட்டு இருந்தது.  

தீர்மானம் நிறைவேற்றப்படும் போது, தனித் தமிழ் நாடொன்று வேண்டும் என்றதோர் அபிப்பிராயம், தமிழ் மக்களிடையே இருக்கவில்லை என்பதை அக்காலத் தமிழ்ப் பத்திரிகைகளை ஆராயும் போது, மிகத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.   

அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் போதுதான், சர்ச்சை கிளப்பியது. ஏனெனில், கூட்டணியினர் தமிழீழத்துக்காகத் தான், அத்தேர்தலின் போது, மக்களிடம் ஆணையை கேட்டனர். தேர்தல் மேடைகளில் ஆற்றப்பட்ட அந்த உரைகள் தான், தெற்கில் தமிழர் விரோத உணர்வுகளை, ஒரு போதுமில்லாத அளவுக்குத் தூண்டின. இந்த நிலையில் தான், தேர்தல் வன்செயல்கள், இனக்கலவரமாக உருமாற்றம் பெற்றன.  

அந்தநிலையில், அந்தச் சம்பவங்களைப் பற்றி, நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அப்போதைய பிரதமர் ஜே.ஆர். ஜெயவர்தன, தமிழ்த் தலைவர்களைப் பார்த்து “போர் என்றால் போர்; சமாதானம் என்றால் சமாதானம்” என, நாகரிகமற்ற முறையில் சவால்விடுத்தார். அது, கலவரங்களைத் தணிப்பதற்குப் பதிலாக, மேலும் பரவவே காரணமாகியது.   

அதையடுத்து, 1981 ஆம் ஆண்டு மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல்கள் நடைபெற்றன. அப்போதுதான், யாழ்ப்பாணப் பொது நூலகம், தெற்கிலிருந்து சென்ற காடையர்களால் எரிக்கப்பட்டது.   

அத்தோடு, வடக்கில் ஆயுதக் குழுக்களுக்கும் படையினருக்கும் இடையே மோதல்கள் இடம்பெற்றதோடு, ஏதோ ஒரு காரணத்தால், அந்த மோதல்கள் தணியும் போது, மலையகமெங்கும் குறிப்பாக இரத்தினபுரி மாவட்டத்தில், தமிழ் மக்களுக்கு எதிராகக் காடையர்களின் தாக்குதல்கள் இடம்பெறலாயின.   

இது, ஜே.ஆரின் காலத்தில் இடம்பெற்ற இரண்டாவது இனக் கலவரமாகும். பொதுவாக, இவை இனக் கலவரங்களாகக் குறிப்பிடப்பட்டாலும் உண்மையிலேயே தமிழர்களைச் சில சிங்களக் காடையர் குழுக்கள், தாக்கியமையே நடைமுறையில் காணக்கூடியதாக இருந்தது.   

இது போன்ற​தொரு பின்னணியில் தான், 1983 ஆம் ஆண்டு ‘இனக் கலவரம்’ இடம்பெற்றது. அதற்கு முந்திய சில மாதங்களில் வௌிவந்த ஊடகங்களைப் பரிசீலித்தால், திருநெல்வேலிச் சம்பவப் பின்னணி மட்டுமல்லாது, ஊடகங்களும் இந்தக் ‘கலவரத்துக்கு’ எந்தளவு காரணமாகி இருந்தன என்பதை உணர முடிகிறது.   

அந்தச் சம்பவத்துக்கு முன்னைய நாட்களில், சில சிங்களப் பத்திரிகைகள், மிக மோசமான முறையில் இந்திய விரோதத்தையும் தமிழ் விரோதத்தையும் கக்கியதை அவதானிக்க முடிகிறது. அதேவேளை, தமிழ் ஊடகங்கள், பிரிவினைவாதத்தை மிகச் சாதுரியமாகவும் சூட்சுமமாகவும் ஊக்குவிப்பதையும் காணக்கூடியதாக இருந்தது.   

கறுப்பு ஜூலையின் மூலமும் அதற்குப் பின்னரான பயங்கரப் போர்க் கால அனுபவங்கள் மூலமும் பெற்ற பாடங்களை, ஊடகங்கள் இன்னமும் உணரவில்லை என்பதை, தற்போதைய ஊடகங்களைப் பார்க்கும் போது தெளிவாகிறது.   

இன்னமும் சிங்களப் பத்திரிகைகள், பேரினவாதத்தை மூடி மறைப்பதையும் பல காரணங்களைக் காட்டி ஊக்குவிப்பதையும் அவதானிக்கக் கூடியதாக இருப்பதோடு, சிறுபான்மை மக்களின் உரிமைகளை முற்றாகப் புறக்கணித்தும் ஏளனம் செய்துமே, செய்திகளையும் ஏனைய ஆக்கங்களையும் வெளியிடுகின்றன.  

அதேவேளை, தமிழர்களின் உரிமைகளை வலியுறுத்தும் போர்வையில் சில தமிழ் ஊடகங்கள், வட பகுதி அரசியல்வாதிகளின்  பிரிவினைவாத அல்லது பிரிவினைவாத அமைப்புகளுக்குச் சாதகமான கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன.   

தமிழ் அரசியல்வாதிகள், தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடுவதை எவரும் குறைகூற முடியாது. அது அவர்களது உரிமை மட்டுமல்லாது கடமையும் கூட.   

ஆனால், இலங்கைக்கு வடக்கே, இந்தியா இருக்கும் வரை, இலங்கையில் தனித் தமிழ் நாடு என்பது சாத்தியமில்லை. இலங்கைத் தமிழர்களுக்குத் தனியாக வாழும் உரிமை இருக்கிறதா இல்லையா என்ற கேள்வியைப் பிராந்திய பூகோள அரசியல் நிலைமை செல்லுபடியற்றதாக்கி உள்ளது. ஏனெனில், இலங்கையில் பிரிவினைக்கு, இந்தியா ஒரு போதும் இடமளிப்பதில்லை.   

1988 ஆம் ஆண்டே, இந்தியா இந்தக் கொள்கையைப் பகிரங்கமாகவே தெரிவித்துவிட்டது. அந்த ஆண்டு பாகிஸ்தானில், இஸ்லாமாபாத் நகரில் நடைபெற்ற சார்க் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட அப்போதைய இந்திய வெளிவிவகாரச் செயலாளர் எஸ். கே. சிங், அதை அங்கிருந்த ஊடகவியலாளர்களிடம் கூறினார்.   

தமிழீழ விடுதலை புலிகள், அந்தப் பாரதூரமான அரசியல் செய்தியை, பொருட்படுத்தவில்லை; புரிந்து கொள்ளவில்லை.   

எனவே தான், தமிழீழ விடுதலைப் புலிகள், உலகம் வியக்கும் வகையிலான தியாகங்களைச் செய்தும், அவர்களது போராட்டம் பெரும் அழிவோடு தோல்வியடைந்தது.   

இந்தப் பூகோள அரசியல் நிலைமை மாறாதிருக்கப் பிரிவினையை மீண்டும் ஊக்குவிப்பதானது, சம்பந்தப்பட்டவர்கள் வரலாற்றிலிருந்து பாடம் கற்கவில்லை என்பதையே காட்டுகிறது.   

ஆனால், புலிகளின் ஆலோசகராக இருந்த கலாநிதி அன்டன் பாலசிங்கம், இந்த நிலைமையை உணர்ந்து இருந்தார் போலும். 2002 ஆம் ஆண்டு, ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையே, சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அதே ஆண்டு நவம்பர்- டிசெம்பர் மாதங்களில், நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையின் மூன்றாம் சுற்றின் போது, ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அமைப்புக்குள்ளான தீர்வொன்றைக் காண, பாலசிங்கத்தின் தலைமையிலான புலிகளின் குழு இணங்கியது. 

ஆனால், பின்னர் புலிகளின் தலைவர் பிரபாகரன் அந்த இணக்கத்தை நிராகரித்தார்.  
2003 ஆம் ஆண்டு, புலிகளின் நீதிமன்றத் தொகுதியொன்று கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது. அந்த நிகழ்வின் போது உரையாற்றிய பாலசிங்கம், “1995 ஆம் ஆண்டு, சந்திரிகா குமாரதுங்க முன்வைத்த ‘பக்கேஜ்’ ஐ (அப்போது பொதுவாக தீர்வுத் திட்டம் ‘பக்கேஜ்’  என்றே அழைக்கப்பட்டது) புலிகள் ஏற்று இருக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார். 

இவை தமிழர்களால், அதாவது புலிகளால் நழுவவிடப்பட்ட பெறுமதியான இரண்டு சந்தர்ப்பங்களாகும்.   
சிங்களத் தலைவர்களின் நிலைமையும் இதுவே. பிரிவினை மூலமும் அதிகாரப் பரவலாக்கல் மூலமும் தமிழர்கள் சமமாக வாழும் உரிமையையே கேட்கிறார்கள். உலகில் பல நாடுகளில் நடைமுறையில் உள்ள, இலங்கையிலும் 1987 ஆம் ஆண்டு முதல் ஓரளவுக்கு நடைமுறையிலுள்ள அதிகாரப் பரவலாக்கலைப் பயங்கர பூதமாக்கியவர்கள் சிங்கள அரசியல்வாதிகளே.   

எவ்வாறு சில தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள், சிங்களப் ‘பேயை’ தமது மக்களுக்குக் காட்டி, தமது சமூகத்தின் மத்தியில் அரசியலை நடாத்தி வருகிறார்களோ, அதேபோல், சில சிங்கள அரசியல்வாதிகளும் தமிழ், முஸ்லிம் ‘பேயை’ சிங்கள மக்களுக்குக் காட்டி, சிங்கள மக்கள் மத்தியில் அரசியல் நடாத்துகிறார்கள்.  

அதன் காரணமாக, சிறுபான்மை மக்களின், குறிப்பாக தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இது பிரிவினையை ஊக்குவித்து, அரசியல் இலாபம் தேடும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு சாதகமாகி விடுகிறது.   

எனவே, தமிழ்ச் சமூகம், சிறிது சிறிதாகவேனும் தற்போது, பிரிவினையை நோக்கி நகர்வதை அவதானிக்க முடிகிறது. புலிகள் மீண்டும் வர வேண்டும் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலாவின் உரைக்குக் கிடைத்த, பகிரங்க வரவேற்பு அதையே காட்டுகிறது.   

எனவே தான், ‘கறுப்பு ஜூலை’ இலங்கை மக்களுக்குப் பாடம் கற்றுக் கொடுப்பதில் தோல்வியடைந்துள்ளது என்கிறோம்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .