2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

காந்திகளுக்குச் சோதனைக் காலம்?

Gopikrishna Kanagalingam   / 2017 ஓகஸ்ட் 10 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அரசியலில், தவிர்க்கப்பட முடியாத ஓர் அங்கமாக, நேரு - காந்தி அரசியல் வரலாறு காணப்படுகிறது. காந்தி என்ற பெயரைக் கேட்டதும், மகாத்மா காந்தி தான் ஞாபகத்துக்கு வந்தாலும், இந்தக் காந்திகளும், சிறிதளவுக்கும் குறைவான தாக்கத்தைக் கொண்டிருக்கவில்லை.   

தற்போதைய நேரு - காந்தி பரம்பரையின் மூத்தவராக, மோதிலால் நேரு காணப்படுகிறார். இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் அங்கமாக இருந்தவர். காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்தவர். இவர் வழியில் போராடிய ஜவஹர்லால் நேரு, அதே காங்கிரஸின் தலைவராக இருந்ததோடு மாத்திரமல்லாது, பின்னர் சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமராகவும் மாறினார். இவரைத் தொடர்ந்து தான், நேரு - காந்தி பரம்பரைக்கு, உயர்மட்டக் கௌரவம் கிடைக்க ஆரம்பித்தது.   

ஜவஹர்லால் நேருவின் மகள் இந்திரா நேரு தான், பெரோஷ் காந்தியை மணமுடித்து, நேரு - காந்தி என்ற பரம்பரையை ஆரம்பித்து வைத்தார். அவர்களின் மகன் ராஜிவ் காந்தி, சோனியா மெய்னோவை மணமுடித்து, ராகுல் காந்தி பிறந்தார்.   

காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவராக சோனியா காந்தியும், துணைத் தலைவராக ராகுல் காந்தியும் காணப்படுகின்றனர்.   

காங்கிரஸ் கட்சியின் அண்மைக்கால வரலாற்றில், நரசிம் ராவ், சித்தாராம் கேஸ்ரி போன்ற ஒரு சில “வெளிப்புற” தலைவர்கள் இருந்தாலும், நேரு - காந்தி பரம்பரையினரே, அதிக ஆதிக்கத்தைச் செலுத்தி வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.   

தற்போதுள்ள தலைவர் சோனியா காந்திக்குப் பிறகு, அடுத்த தலைவராக ராகுல் காந்தி வருவாரா என்பது கேள்வியாக இல்லாமல், எப்போது வருவார் என்பதே கேள்வியாக இருக்கிறது. அந்தளவுக்கு, இந்தப் பரம்பரையின் அரசியல் தொடர்ச்சி, உறுதிப்படுத்தப்பட்டதாகவே காணப்படுகிறது.   

இது, காந்தி என்கிற பரம்பரைக்கு ஆரோக்கியமானதாகக் காணப்பட்டாலும், காங்கிரஸுக்கும் அதேபோல் இந்திய ஜனநாயகத்துக்கும் எந்தளவுக்கு ஆரோக்கியமானது என்பதே, தற்போதுள்ள கேள்வியாக இருக்கிறது.   

எதற்காக இந்தக் கேள்விகள் திடீரென எழுப்பப்படுகின்றன என்ற சந்தேகம் ஏற்படலாம். இந்திய அரசியலை ஓரளவு அவதானித்து வருபவர்கள், அண்மையில் இடம்பெற்ற, குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலை அவதானித்திருக்கலாம். ஆளும், பாரதிய ஜனதா கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளரான வெங்கய்யா நாயுடு வெற்றிபெற்று, நாட்டின் குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.   

நாட்டின் கீழவையில் முழுமையான ஆதிக்கத்தைச் செலுத்தும் பா.ஜ.க, தற்போது குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் ஆகிய பதவிகளையும் பெற்றுக் கொண்டுள்ளது. உண்மையில், பா.ஜ.கவின் வரலாற்றிலேயே, குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் ஆகிய 3 பதவிகளையும் ஒரே நேரத்தில் கொண்டிருப்பது, இது தான் முதற்தடவையாகும். இவற்றைத் தவிர, பல தசாப்தங்களுக்குப் பின்னர், மேலவையில், தனிப்பெரும் கட்சியாக, பா.ஜ.க மாறியுள்ளது. 

இன்னமும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறாத போதிலும், அக்கட்சியின் இந்த அடைவு, இன்னமும் முக்கியமானதான ஒன்றாக மாறியுள்ளது.   

இவையெல்லாவற்றுக்கும் மேலதிகமாக, இவ்வாண்டில் நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தல்களில், பா.ஜ.கவின் ஆதிக்கம் அதிகரிப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. உத்தரப் பிரதேசத்திலும் உத்தரகாண்டிலும், அதிரடியான வெற்றிகளை, அக்கட்சி பெற்றுக் கொண்டது. மணிப்பூர், கோவா ஆகியவற்றில், தேர்தல் மூலமாக அறுதிப் பெரும்பான்மையைப் பெறாத போதிலும், ஏனைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, ஆட்சியமைத்துக் கொண்டது. இந்த 2 மாநிலங்களிலும், தனிப்பெரும் கட்சியாக, காங்கிரஸ் கட்சியே, அதிக ஆசனங்களைக் கொண்டிருந்தது.   

தவிர, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், பீஹாரில் மேற்கொண்டு வந்த ஆட்சியும் பிளவுபெற்று, தற்போது பா.ஜ.க கூட்டணிக்கு, அந்த ஆட்சி வந்துள்ளது. இவ்வாறு, இவ்வாண்டில் பா.ஜ.க பெற்ற வெற்றிகளைப் பார்க்கும் போது, அசைக்க முடியாத நிலைமைக்கு அக்கட்சி மாறி வருகின்றமையைப் பார்க்கக் கூடியதாக உள்ளது.   

மறுபக்கமாக, பா.ஜ.கவின் முன்னேற்றம் என்று அவற்றைக் குறிப்பிட்டாலும் கூட, காங்கிரஸின் செயற்றிறனற்ற தன்மை என்றும் கூட, இவற்றைக் குறிப்பிடலாம். இரண்டு மாநிலங்களில், தனிப்பெரும் கட்சியாக இருந்துகொண்டு, அவற்றை எதிரணிக்குத் தாரை வார்ப்பதென்பது, பலவீனத்தின் அறிகுறியே ஆகும்.   

இவையெல்லாம், பொருத்தமான, பலமான தலைமைத்துவம் இல்லாத நிலைமையையும், தூரநோக்குச் சிந்தனையற்ற தன்மையையும் காட்டுகிறது. தலைவர் என்ற வகையில், சோனியா காந்தி மீது தான் பார்வை காணப்பட வேண்டும் என்ற போதிலும், அநேகமான கவனம், துணைத் தலைவர் ராகுல் காந்தி மீது தான் ஏற்பட்டுள்ளது.   

சோனியா காந்திக்கு, அண்மைக்காலத்தில் காணப்படும் உடல் உபாதைகள் காரணமாக, கட்சிப் பணிகளில் அவர் முழுமையாக ஈடுபடாத நிலை காணப்படுகிறது. இந்த நேரங்களில், கட்சியின் தலைவர் போன்று, முழு அதிகாரத்துடன் செயற்படுபவர், ராகுல் காந்தி தான். அத்தோடு, அடுத்த தலைவராக அவரே எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரிடமிருந்து தலைமைத்துவம் எதிர்பார்க்கப்படுகிறது.   

2014ஆம் ஆண்டு இடம்பெற்ற கீழவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு வெறுமனே 44 ஆசனங்களே கிடைத்தன. அதன் வரலாற்றில், அக்கட்சி பெற்றுக் கொண்ட மிகக்குறைவான ஆசனங்கள் ஆகும். இந்தத் தேர்தலை, காங்கிரஸ் சார்பில், ராகுல் காந்தியே வழிநடத்தியிருந்தார்.   

இந்தத் தேர்தலுக்கு முன்பே, காங்கிரஸில் காணப்படும் தலைமைத்துவக் குழப்பமென்பது, தெளிவாக எடுத்துக் கூறப்பட்டுத் தான் இருந்தது. எனினும், இந்தத் தேர்தலே, அதை வெளிப்படையாக எடுத்துக் காட்டியிருந்தது.   

ஆனால், இந்தத் தேர்தல் தோல்வியாக இருக்கலாம், இல்லாவிடின் அதன் பிறகு வந்த தொடர்ச்சியான தோல்விகளாக இருக்கலாம், அவற்றிலிருந்து, எந்தவிதப் பாடங்களையும் கற்றுக் கொள்வதற்கு, காங்கிரஸ் தவறிவிட்டது என்பதைத் தான் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.   

எனவே தான், நேரு - காந்தி பரம்பரையைத் தாண்டி, காங்கிரஸ் கட்சி செல்ல வேண்டுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அந்தக் குடும்பம் தான், கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறது என்று ஒரு தரப்பினர் குறிப்பிடுகின்றனர். மறுபக்கமாக, கட்சியின் தயவில் குடும்பம் இருக்கிறதே தவிர, குடும்பத்தின் தயவில் கட்சி இல்லை என்று சிலர் குறிப்பிடுகின்றனர். ஆனால், இந்தத் தரப்பினரில் அநேகமானவர்கள், ராகுல் காந்தியின் தலைமைத்துவத்தைக் கேள்விக்குட்படுத்துகின்றனர். அப்படியாயின் என்னதான் வழி?   

ராகுல் காந்திக்கு மாற்றான தலைமைத்துவமாக, ராகுல் காந்தியின் தங்கை பிரியங்கா காந்தி, பலரால் கருதப்படுகிறார். ராகுல் காந்தியை விட, அதிக தலைமைத்துவப் பண்புகளைக் கொண்டவராகவும், உறுதியாக முடிவெடுப்பவராகவும் அவர் கருதப்படுகிறார். ஆனால், அவரது கணவர் றொபேர்ட் வட்ராவின் சொத்துகள் தொடர்பாகவும் அவரது ஏனைய விடயங்கள் தொடர்பாகவும், அதிகளவு சர்ச்சை காணப்படுகிறது. எனவே, பிரியங்கா காந்தி, தலைமைத்துவத்துக்குக் கொண்டுவரப்பட்டால், அவரது கணவர் மீது காணப்படுகின்ற சந்தேகங்கள் காரணமாக, கட்சிக்கே பாதிப்பு ஏற்படுமெனக் கருதப்படுகிறது. அதேபோல், இதுவரை காலமும், முக்கியமான, வெளிப்படையான கட்சிப் பணிகளை, பிரியங்கா காந்தி ஏற்றிருக்கவில்லை.

எனவே, அவரது வெளிப்படையான, முழுநேர அரசியல் பிரவேசமென்பது, இன்னமும் சாத்தியப்படாத ஒன்றாகவே காணப்படுகிறது.   

எனவேதான், காங்கிரஸ் கட்சியினதும் நேரு - காந்தி பரம்பரையினதும் எதிர்காலம் குறித்து அச்சங்கள் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.   

சரி, காங்கிரஸ் என்பது ஒரு கட்சி தான், அதைப் பற்றி எதற்காக அதிக கவனம் என்ற கேள்வி எழலாம். ஒரு கட்சி தான், ஆனால், சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளில், ஏறத்தாழ 50 ஆண்டுகள் ஆட்சிபுரிந்த கட்சி அது. எல்லாவற்றையும் விட முக்கியமாக, தற்போதைய பா.ஜ.க ஆட்சிக்கான பொருத்தமான, பலமான எதிர்க்கட்சியொன்று தேவைப்படுகிறது.   
நாட்டின் 29 மாநிலங்களில் 18 மாநிலங்களில், பா.ஜ.கவும் அதன் தோழமைக் கட்சிகளும் ஆட்சி புரிகின்றன. எதிர்வரும் காலங்களில், இது அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், கீழவை என, அனைத்திலும் அக்கட்சி தான் காணப்படுகிறது.

 மேலவையில் மாத்திரம், இன்னமும் அறுதிப் பெரும்பான்மையைக் கைப்பற்றவில்லை. அச்சபை மாத்திரமே, பிரதமர் மோடியின் அரசியல் நிகழ்ச்சிநிரலில் காணப்படும் சந்தேகத்துக்குரிய விடயங்களை எதிர்ப்பதற்கான ஒரேயொரு சபையாகக் காணப்படுகிறது. ஆனால், குடியரசுத் துணைத் தலைவரே, மேலவையின் தலைவர் என்ற வகையிலும், அண்மையில் மேலவையில் அடைந்துள்ள மேலதிக ஆசனங்களின் அடிப்படையிலும், அச்சபையிலும் பிரதமர் மோடியின் ஆட்சிக்குப் பலம் அதிகரித்து வருகிறது.   

ஒரே கட்சியிடம், இத்தனை ஆட்சிகளும் அதிகாரங்களும் காணப்படுவது, ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமான ஒன்று கிடையாது. எனவே தான், காங்கிரஸ் தலைமைப்பீடத்தில், உறுதியான ஒரு நிலைமை ஏற்பட்டு, பலமான எதிர்க்கட்சியாக அது உருவாவது, இந்தியாவின் எதிர்காலத்துக்கு அத்தியாவசியமானது.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .