2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கிழக்கு அரசியல், பல்கலைக்கழக காதல்?

Editorial   / 2018 செப்டெம்பர் 27 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அதிரன்

பல்கலைக்கழகத்தில் கற்கும் காலத்தில், ஒரு பெண்ணுடன், பல பெண்களுடன் பழகுவோம். அந்தப்பெண்களைத்தான் வாழ்நாள் துணையாக தொடருவோம் என்றில்லை.  இதேபோலத்தான், இன்றைய கால அரசியல் கட்சிகளின் இணைவும் தேர்தல் கூட்டுகளும் ஆட்சிக் கூட்டுகளுமா என்ற கேள்விக்குப் பதில் தேடத்தான் வேண்டும்.

வாக்குறுதிகளை நம்பி, போராட்டங்களை நடத்துவதும் கைவிடுவதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. நல்லாட்சி அரசாங்கம் வருவதற்கு முன்னர், கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொண்டதா என்ற கேள்வி எல்லோருடைய மனங்களிலும் வரத் தொடங்கியிருக்கிறது. 

இந்நிலையில் தான் மாகாண சபைத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், ஆட்சிக்கலைப்பு, புதிய ஆட்சி என்ற கோர்வையான விடயங்கள் இருந்து கொண்டிருக்கின்றன.

யாரைக் கேட்டாலும் அரசியல், அதிகாரம், இருப்பு என்பவற்றைப் பற்றியதாகவே அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் நடந்து கொண்டிக்கையில், தமிழ்க் கட்சிகள் அனைத்தும் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், ஒரு பொதுச் சின்னத்தில், தேர்தலில் களமிறங்கி, தமிழ் மக்களின் அதியுச்ச வாக்குகளைப் பெற்று, மாகாண சபையில் அதிகூடிய தமிழர் பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்காகப் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்று சேர்ந்து, கிழக்கு மாகாணத்தில் போட்டியிடவேண்டும் என்று, கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

கிழக்கின், மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டு, திருகோணமலை, அம்பாறை என்று பரந்து செயற்பட ஆரம்பித்திருக்கும் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் அனைத்துக் கட்சிகளுடனான சந்திப்பொன்று கடந்த மாதத்தில் நடைபெற்றிருந்தது.

இக்கலந்துரையாடலில் அறிவிக்கப்பட்ட கட்சிகளில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தவிர்ந்த இலங்கைத் தமிழசுக் கட்சி, டெலோ, புளொட், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ், ஈ.பி.டி.பி, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி போன்ற கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் செயற்பாடு, அதன் குறிக்கோள், தீர்மானங்கள் என்பன கட்சிப் பிரதிநிதிகளுக்குத் தெளிவுபடுத்தப்பட்டன. ஒவ்வொரு கட்சிப் பிரதிநிதிகளினதும் கருத்துப் பரிமாறல்கள் நடைபெற்று, இறுதியில் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை தயாரித்து, அதன் பிரகாரம் கட்சிகளின் நிலைப்பாடுகளை இனங்கண்டு, இறுதி முடிவுக்கு வருவது என்று தீர்மானிக்கப்பட்டது.

முரண்பாடுகளுக்குள்ளும் உடன்பாடு காணும் முயற்சியாகக் கொள்கைகள், கோட்பாடுகள், சித்தாந்தங்கள், கருத்தியல்கள், கட்சிகள், சின்னங்கள் எல்லாமே மக்களுக்காகத்தான் என்ற அடிப்படையில், கட்சித்தலைவர்களுக்கு அத்தகைய மனப்பக்குவம் ஏற்பட வேண்டும் என்பதாகவே அனைத்துமே நடந்து கொண்டிருக்கின்றன.

கிழக்குமாகாணத்தில் இன்று நிலவும் அரசியல் களநிலைவரத்தின் அடிப்படையில், தமிழ், சிங்கள, முஸ்லிம் ஆகிய மூன்று இனங்களுமே விகிதாசாரத்தில் ஒரே அளவுகளில் இருக்கின்ற நிலைமை காணப்படுகிறது. 

இந்தநிலையில், தமிழர்கள் மாத்திரம் தமக்கு அதிகாரம் தேவை என்று சொல்வதும், முஸ்லிம்கள் தங்களுக்குத்தான் என்று கூறுவதும், எந்தவகையில் நியாயம் என்பது ஒரு சில புத்திஜீவிகளது கருத்தாக இருக்கிறது. இதற்கு வேறு கணக்குகளும் இருக்கின்றன. அவை பற்றிப் பின்னர் பார்க்கலாம்.

கிழக்குத் தமிழர்கள் தங்கள் அடையாளத்தையும் இருப்பையும் தக்கவைத்துப் பேணிப்பாதுகாத்து வளர்த்தெடுக்க வேண்டுமாயின் தனிநபர்,கருத்தியல்  முரண்பாடுகளுக்கு அப்பால், அரசியல் ரீதியாக, ஒரே குடையின் கீழ், ஒரே அணியாகத் திரள வேண்டிய தேவைப்பாடு உள்ளது என்பது கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் நிலைப்பாடாகும். 

இருந்தாலும், ஆரம்ப காலந்தொட்டே பல்வேறு முரண்பாடுகளுக்குள்ளே பயணங்களை மேற்கொண்டு வந்திருக்கின்ற தமிழ்க் கட்சிகள், ஏற்படப்போகும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எந்த வகையில் எதிர் கொள்ளும் என்பதே இப்போதைய கேள்வி.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் மாகாணசபைத் தேர்தலில், தமிழர்கள் சார்பில் கிழக்கில் அதிஉச்சபட்ச ஆசனங்களைப் பெற்றுக்கொள்வதன் மூலம், மாகாணத்தின் அதிகாரத்தை, முதலமைச்சினைத் தமிழர்கள் பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதுதான் அந்த இலக்கு.

அந்த வகையில், அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரு பொதுச்சின்னத்தின் கீழ் ஒரே அணியாகச் செயற்படவேண்டும் என்ற கிழக்குத்தமிழர் ஒன்றியத்தின் கோரிக்கைக்கு, கடந்த வாரத்தில், அனுப்பி வைக்கப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கான பதிலே முடிவைச் சொல்லவிருக்கிறது.

தமிழ் அரசியல் கட்சிகளுடனும் தனித்தனியே சந்தித்து, அக்கட்சிகளின் நிலைப்பாடுகளை அறிந்து, அதன் பின்னர் பொதுக் கூட்டங்களை நடத்தி, அனைத்துக் கட்சிகளையும் ஒன்று சேர அழைத்துச் சந்தித்து, இப்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று வரை வந்திருக்கின்ற கிழக்குத் தமிழர் ஒன்றியம், அண்மையில் வடக்கு, கிழக்கின் பிரதான தமிழ் அரசியல் கட்சியாக இருக்கின்ற தமிழரசுக் கட்சி ( தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) 2008ஆம் ஆண்டு, முதல் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடாமைபோன்று, நடைபெறப்போகும் மாகாணசபைத் தேர்தலிலும், கிழக்கில் போட்டியிடாது ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்று, ஒரு வேண்டுகோளையும் முன்வைத்திருந்தது.

கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் இந்த வேண்டுகோள், அரசியல் வட்டாரங்களில் ஒரு பெரும் சலசலப்பையும் குழப்பத்தையும் உருவாக்கி இருக்கிறதாக உணரப்படுகிறது. 

கிழக்கில் இந்தக் கட்சிகளின் ஒருமைப்பாட்டை சாத்தியமாக்கும் நடவடிக்கையில் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து செயற்பட வேண்டும் என்றாலும் இந்தக் குழப்பம் எவ்வாறு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தாக்கம் செலுத்தும் என்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பொறுத்தவரையில், புதிய கட்சியாகப் பதிவு செய்வதில் உள்ள குழப்பம், வேட்பு மனுப்பட்டியல் தயாரிப்பில் பெயர்ப் பட்டியலிடல், கையொப்பமிடல், அதன் அதிகாரம், புதிய தேர்தல் முறையின் அடிப்படையில் தெரிவு முறை அடிப்படைக்கான பட்டியல் தெரிவு, அனுமதியளித்தல், பிரதிநிதிகளை நியமித்தல் எனப் பல்வேறு விடயங்களுக்குப் பதில் கிடைத்தாக வேண்டும்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி நிலைகளில், வடக்கு, கிழக்கு இணைந்த தாயகக் கோட்பாடு, கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற மீள்குடியேற்ற புனர்நிர்மாணப் பிரச்சினைகளைத் தீர்த்தல், அபிவிருத்திக் கட்டுமானங்கள், கல்வித் தாராதரத்தை அதிகரித்தல், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புதல், இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளை அழைத்துவருதல் எனப் பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக அறியமுடிகிறது.

அத்தோடு, கிழக்கு மாகாணத்திலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று வாழ்ந்துவரும் மூன்று இலட்சம் தமிழர்களையும் உள்ளடக்கிய வாக்களிப்பு முறையின் தேவை, இதில் பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறான பல்வேறு விடயங்களுடன் உடன்பட்டு முடிவுக்கு வரும் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்ததாக கட்சி ஏற்படுத்தப்படுவதுடன்,  அந்தக் கட்சி  புதியதொரு சின்னத்தின் அடிப்படையில் செயற்படுவதும் தேர்தலில் போட்டியிடுவதும்தான் இப்போதைய முடிவாக இருக்கிறது.

தமிழ் அரசியல் கட்சிகளின் வரலாற்றில் அமரர் ஜி.ஜி.பொன்னம்பலம், 1944 இல் ஆரம்பித்த அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ்; அதன் சின்னம் சைக்கிள். அக்கட்சியிலிருந்து பிரிந்துவந்த அமரர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் 1949 இல் இலங்கைத் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தார். அதன் சின்னம் தான் வீடு. இச் சின்னத்தில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நான்கு கட்சிகளை இணைத்துத் தேர்தல்களில் போட்டியிட்டது. 

தமிழ் மக்களின் ஐக்கியம் கருதியும் அரசியல் தேவை கருதியும் இரண்டு கட்சிகளும் இணைந்து தமிழர் விடுதலைக்கூட்டணி, 1976 இல்  உருவாக்கப்பட்டது.  இந்த அரசியல் கூட்டமைப்பின் பொதுச்சின்னமாக உதயசூரியன் கொண்டுவரப்பட்டது.

எஸ். ஜே. வி. செல்வநாயகம், ஜி. ஜி. பொன்னம்பலம் ஆகியோர் தமது கட்சிகளில் கடைப்பிடித்த கொள்கைகளைக் கைவிட்டு புதிய கட்சிக்கும் சின்னத்துக்கும் உடன்பட்டனர். அதுபோன்று கிழக்கில் ஒரு கட்சியும் சின்னமும் உருவாவதில் என்ன தவறு என்பதே கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் கேள்வியாக இருக்கிறது.

கிழக்கு மாகாணத்தின் அரசியல் களநிலையைக் கருத்தில் கொண்டு, சமகால அரசியல் தேவைகருதி தத்தம் அரசியல் கட்சிகளையும் கருத்தியல் முரண்பாடுகளையும் கட்சிகளுக்கு இடையேயுள்ள தனிநபர் முரண்பாடுகளையும் ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு, அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும் முன்வரவேண்டும்.

என்றாலும், ஒரு புதிய கட்சியைப் பதிவதும் அதற்கான சின்னத்தை உருவாக்குவதும் ஒழுங்குவிதிகள் கட்டுப்பாடுகளை கொண்டிழுப்பதும் சிறியதொரு விடயமல்ல என்பதுதான் இப்போதைய தொங்கு நிலை.

இலக்கினை அடைவதற்கு கிழக்கு மாகாண தமிழர்கள் அனைவரும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றிணைவார்களா, இணைந்து செயற்படுவார்களா, பின்னர் பல்கலைக்கழகக் கல்விக்கால வாழ்க்கை போன்றுதான் நடைபெறப் போகிறதா என்பதுதான் காத்திருப்புக்கானது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .