2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கைநழுவுமா வரலாற்று வாய்ப்பு?

கே. சஞ்சயன்   / 2017 ஜூலை 10 , பி.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அரசியலமைப்பு அல்லது தற்போதைய அரசியலமைப்பில் நியாயமான திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவது சாத்தியமானதா என்ற கேள்வி இந்தத் தருணத்தில் மேலோங்கத் தொடங்கியுள்ளது.  

புதிய அரசியலமைப்புத் தொடர்பான இடைக்கால அறிக்கை ஒன்றை, அரசியலமைப்புப் பேரவையின் வழிநடத்தல் குழு வெளியிடத் தயாராகவுள்ள நிலையில் தான், இந்தக் கேள்வியும் எழுந்திருக்கிறது.  

அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், உறுதியான நம்பிக்கையை வெளியிட்டிருந்தார்.  

அதேவேளை, அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம், தமிழ் மக்களுக்கு அரைகுறை அரசியல் தீர்வு ஒன்றைத் திணிக்கவே, வடக்கு மாகாணசபையில் குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டதாக, மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியிருந்தார்.  

இன்னொரு பக்கத்தில், உள்ளூராட்சித் தேர்தலை நடத்தும் வரையில், வழிநடத்தல் குழுவில் இருந்து, தமது தரப்பு பிரதிநிதிகள் வெளியேறுவதாகக் கூட்டு எதிரணியைக் கட்டுப்படுத்தும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.  

அஸ்கிரிய பீடத்தின் சங்கசபாவில், புதிய அரசியலமைப்புத் தேவையில்லை என்றும், புதிய அரசியலமைப்புக்கான முயற்சிகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.  

அதற்குப் பின்னர், முன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்கர்கள் மற்றும் சங்க சபாக்களின் கூட்டத்தில், அரசியலமைப்புத் திருத்தமோ, புதிய அரசியலமைப்போ நாட்டுக்குத் தேவையில்லை என்று அழுத்தமான முடிவை எடுத்துள்ளனர்.  

இப்படியானதொரு நம்பிக்கைகளும் அவநம்பிக்கைகளும் முட்டி மோதுகின்ற சூழலில்தான், அரசியலமைப்பு மாற்றத்தின் எதிர்காலம் பற்றிய கேள்விகள் எழுந்துள்ளன.  
அரசியலமைப்புப் பேரவை இன்னமும், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதா அல்லது பழைய அரசியலமைப்பில் திருத்தங்களைக் கொண்டு வருவதா என்று முடிவு செய்யவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் கூறியிருந்தார்.  

புதிய அரசியலமைப்பா? பழையதிலேயே திருத்தம் செய்வதா என்று கூடத் தீர்மானிக்கப்படாத நிலையில்தான், அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான, இடைக்கால அறிக்கையை வெளியிடப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.  

இந்த இடைக்கால அறிக்கையில் மக்களின் கருத்துகளை அறிந்து கொள்வதற்காகவே என்றும், மக்களின் கருத்துகளை அறிந்த பின்னரே, அரசியலமைப்பு வரைவை உருவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.  

அரசியலமைப்பு மாற்றத்தை- குறிப்பாக தமிழ் மக்களுடன் உரிமைகளையும் அதிகாரங்களையும் பகர்ந்து கொள்ளக் கூடிய அரசியலமைப்பு ஒன்றின் உருவாக்கத்தை சர்வதேச சமூகம் விரும்புகிறது.  

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரும் சரி, சர்வதேச உரிமை அமைப்புகள், மேற்குலக நாடுகள் எல்லாமே இந்த விடயத்தில் அரசாங்கத்துக்கு அவ்வப்போது அழுத்தங்களைக் கொடுத்து வந்திருக்கின்றன.  

அரசியலமைப்பு ரீதியாக உரிமைகள் உறுதிப்படுத்தப்படுவதே, தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக மாத்திரமன்றி, நிலையான அமைதியையும் ஏற்படுத்தும் என்பது அவர்களின் கணிப்பு.  

ஆனால், புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், அரசியலமைப்பு மாற்றத்துக்கான நகர்வுகள் ஆரம்பிக்கப்பட்டு, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகப்போகின்ற நிலையில், இது ஆமை வேகத்தில்தான் முன்னகர்ந்திருக்கிறது.  

அரசியலமைப்பு மாற்றம் என்பது அவசர கதியில் மேற்கொள்ளப்பட முடியாதது., சிக்கலான விவகாரங்களைப் பொறுமையாகக் கையாள்வதன் மூலமே, அரசியமைப்பு மாற்றத்தைச் சுலபமாக்கும் என்றும், பிரச்சினைகளைத் தீர்க்கும் என்றும், கொழும்பில் நடந்த கருத்தரங்கில், தென்னாபிரிக்காவின் முன்னாள் பிரதி பிரதம நீதியரசர் டிக்ஹால் மெசநிகே கூறியிருந்தார்.  

தென்னாபிரிக்காவில் அனைவரும் எற்றுக்கொள்ளக் கூடிய அரசியலமைப்பை உருவாக்குவதில் இருந்த தடைகள், அதை எதிர்கொண்ட விதம், சிக்கல்களை சமாளித்துத் தீர்வு எட்டிய முறைகளை அவர் இந்தக் கருத்தரங்கில் விரிவாக எடுத்துக் கூறியிருந்தார்.  

அதுபோல, இங்கும் அரசியலமைப்பு மாற்றத்தை அவசர கதியில் முன்னெடுப்பது, சரியானதா என்ற கேள்விகள் இருக்கத்தான் செய்கின்றன.   

ஆனால், இங்குள்ள மற்றொரு நிலைமைகளையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. தற்போதுள்ள அரசியல் சூழலைத் தக்கவைத்துக் கொள்ளல் என்பது அதில் முக்கியமானது.  
அரசியலமைப்பு மாற்ற முயற்சிகளில் பெரியளவில் நம்பிக்கை ஏற்பட்டமைக்கு, எப்போதும் கீரியும் பாம்புமாக இருந்து வந்த, ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து, கூட்டு அரசாங்கம் ஒன்றை அமைத்துக் கொண்டதே முக்கிய காரணம்.  

இரண்டு கட்சிகளும் கடந்த காலத்தில் ஒன்றை ஒன்று குற்றம்சாட்டி் தீர்வுத் திட்டங்கள், ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்படக் காரணமாக இருந்தவை.   

இரண்டு பிரதான கட்சிகளும் ஒருமித்து நின்றால்தான், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று பொதுவாகச் சொல்லப்படுவது வழக்கம். இப்போதும் அதே நிலைதான் உள்ளது.  

இரண்டு கட்சிகளும் இணைந்து முயற்சித்தால்தான், பிரச்சினையைத் தீர்க்கலாம் என்று ஒரு பேச்சுக்காக எல்லோரும் கூறியது போலவே, 2015ஆம் ஆண்டு ஓர் அரசியல் அற்புதம், வரலாற்று நிகழ்வு கொழும்பில் அரங்கேறியது.  

இரண்டு கட்சிகளும் இணைந்து, ஆட்சியை அமைத்துக் கொண்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக மாறியது. இந்த வரலாற்று அபூர்வத்தில் இருந்துதான், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்ற நம்பிக்கை கட்டமைக்கப்பட்டது.  

ஆனால், அதிசயங்களுக்கோ, அபூர்வ நிகழ்வுகளுக்கோ ஆயுள் அதிகமில்லை. அதனால்தான், அவை அற்புதமாகப் பார்க்கப்படுபவை.   

அதுபோலத்தான், தற்போது ஆட்சியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைத்துள்ள கூட்டு அரசாங்கம், எந்தளவு காலத்துக்கு நிலைத்திருக்கும் என்பது முக்கியமான கேள்வியாக இருக்கிறது.  

மேல் இருந்து கீழ் வரை, இரண்டு கட்சிகளுக்கும் இடையில் முரண்பாடுகள் முற்றியிருக்கின்றன. இத்தனைக்கும் மத்தியில் அங்காங்கே சில இடங்களில் பசை போட்டு ஒட்ட வைத்திருக்கிறார்கள்.  

இந்த ஒட்டுத் தானாகவே கழன்று போகும் என்றாலும், இதை இழுத்துப் பிரித்தெடுப்பதற்கும் அணிகள் முயற்சிக்கின்றன.  

இத்தகைய நிலையில், அரசியலமைப்பு மாற்றம் விரைவான ஒன்றாக அவசர கதியில் நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்றாகவே மாறி வருகிறது.  

ஏனென்றால், இதுபோன்ற இன்னொரு சந்தர்ப்பம் இனிமேல் கிடைக்குமா என்பது சந்தேகம். இதை அரசியலாளர்களும் சரி, ஆய்வாளர்களும் சரி, வரலாற்றாசிரியர்களும் சரி எல்லோருமே ஒப்புக்கொள்கிறார்கள்.  

தற்போதைய அரசியலமைப்பு மாற்ற முயற்சிகளின் மீது நம்பிக்கை கொள்ளாத தீவிர, தமிழ்த் தேசியவாத சக்திகளும் சரி, சிங்களப் பேரினவாத சக்திகளும் சரி, இரண்டு பிரதான கட்சிகளின் இணைவின் மூலமே ஒரு தீர்வு சாத்தியம் என்பதை மறுக்கத் தயாராக இல்லை.  

பிரிவினைக்கு அப்பாற்பட்ட ஒரு நியாயமான அரசியல் தீர்வை எட்டுவதற்கு, எல்லா இனங்களும் இணைந்து தயாரிக்கின்ற- எல்லா மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நிலை ஏற்பட வேண்டும். அது இரண்டு பிரதான கட்சிகளின் இணைவில்தான் சாத்தியமாகும்.  

தற்போது கிடைத்துள்ள அந்த அரியவாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதில் காட்டப்படும் முனைப்பும் உறுதிப்பாடும் தான், அரசியலமைப்பு மாற்றம் ஒன்று சாத்தியப்படுமா என்பதை தீர்மானிக்கப் போகிறது.  

அரசியலமைப்பு மாற்றம் தமிழ் மக்களின் முழுமையான அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் இருக்குமா? சிங்கள மக்கள் அதற்கு இணங்கத் தயாராக இருப்பார்களா என்பதில் எல்லாம், நிறையவே சந்தேகங்கள் இருக்கின்றன.  

பெரும்பாலும் அத்தகையதொரு நிலை சாத்தியப்படும் போலத் தென்படவேயில்லை.  
ஆனாலும், அரசியலமைப்பு மாற்றம் ஒன்றின் ஊடாக, இப்போதுள்ளதை விட ஒரு முன்னேற்றகரமான நிலைமைக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்படக் கூடும். எனினும், அதைத் தமிழ் மக்கள் தமக்கான தீர்வாக ஏற்பார்கள் என்று நம்ப முடியவில்லை.  

அதேவேளை, கிடைத்துள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுகின்ற விடயத்தில், தமிழ் மக்களும் சிங்கள மக்களும் எவ்வாறு நடந்து கொள்ளப் போகிறார்கள் என்பதே முக்கியமான கேள்வியாகும்.  

அரசியலமைப்பு மாற்றம் தமிழர்களுக்கு மாத்திரமன்றி சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கூடத் தேவைப்படுகிறது. எனவே, இந்த வாய்ப்பை அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை இருப்பதை மறுப்பதற்கில்லை.   

ஆனாலும், மற்றொரு பக்கத்தில் அரசியலமைப்பு மாற்ற முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையைப் போட்டு, குழப்பங்களை விளைவிக்கும் தரப்புகளும் தம்மை வலுப்படுத்தத் தொடங்கியிருக்கின்றன.  

எல்லாத் தரப்புகளுமே தாம் மக்களுக்காகவே இவ்வாறு செயற்படுவதாக காட்டிக் கொள்கின்றன என்பதையும் மறந்து விடக் கூடாது.  

இருந்தாலும், மக்களுக்கான ஓர் அரசியல் அமைப்பாக புதிய அல்லது திருத்தப்பட்ட அரசியலமைப்பு உருவாகுமா என்பது சந்தேகமாகவே உள்ளது.  

ஏனென்றால், அரசியலமைப்பு மாற்ற முயற்சிகளை இழுத்து விழுந்துவதற்கான முயற்சிகளும் முனைப்புகளும் கூர்மை பெற்று வருகின்றன.  

இந்தநிலையில், யார் மீது யார் பழியைப் போட்டுத் தப்பிக்கலாம் என்றே, பெரும்பாலானவர்கள் நினைப்பதாகத் தெரிகிறது.  

வரலாற்று வாய்ப்பு ஒன்றின் விளிம்பு நிலையில், இலங்கை நிற்கின்ற நிலையில், அரசியலமைப்பு மாற்றத்துக்கு எதிரான அணிகள் பலம்பெற்று வருகின்ற சூழலில், தேர்தல்களில் அரசியலமைப்பு மாற்றத்துக்காக மக்கள் அளித்த ஆணை எவ்வாறு நிறைவேற்றப்படப் போகிறது? பொறுத்திருந்து பார்க்கலாம். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X