2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கோட்டாவும் முஸ்லிம்களும்

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2018 ஜூன் 13 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறிது காலத்துக்குப் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அணியினர், முஸ்லிம்களைக் கவர முற்பட்டிருப்பதைக் காணமுடிகிறது.   

ஒருவகையில் அவர்கள், முஸ்லிம்களைக் கவர முற்படுவதை விட, சில முஸ்லிம் அமைப்புகள், அவர்களின் கவனத்தை ஈர்த்துக்கொள்ள முற்படுவதாகவும் ராஜபக்‌ஷர்கள், அந்தச் சந்தர்ப்பங்களை நன்றாகப் பயன்படுத்திக் கொள்வதாகவும், சிலர் இந்த நிலைமையை விவரிக்கலாம்.   அதற்கு முக்கிய காரணம், கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதியன்று நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது, உத்தியோகப் பற்றற்ற முறையில் மஹிந்த தலைமை தாங்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெற்ற வெற்றியாகும். 

அந்தத் தேர்தலின் போது, நாட்டிலுள்ள 341 உள்ளூராட்சிமன்றங்களில் 340க்குத் தேர்தல் நடைபெற்றது. அவற்றில் சுமார் 230 மன்றங்களில், பொதுஜன பெரமுனவே முதலிடத்துக்கு வந்தது.  

அதேவேளை, அரசாங்கத்தின் பிரதான கட்சியாக இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, அத்தேர்தலின் போது படுதோல்வி அடைந்ததென்றே கூற வேண்டும். மஹிந்தவின் கட்சி, வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு வெளியே உள்ள 17 மாவட்டங்களிலும், பெரும்பாலான சபைகளில் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டது. ஐ.தே.க, வெறும் 41 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தையே கைப்பற்றிக்கொண்டது.   

ஐ.தே.கவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு  ஆகிய கட்சிகள், நாடளாவிய ரீதியில் பெற்ற வாக்குகளும் ஆசனங்களும், மஹிந்த அணியினர் பெற்ற வாக்குகளையும் ஆசனங்களையும் விடக் கூடுதலாக இருந்தன. இருந்த போதிலும், ஒவ்வொரு கட்சியும் அதிகாரத்தைக் கைப்பற்றிய சபைகளின் எண்ணிக்கையைப் பார்த்தே, அக்கட்சிகள் வெற்றி பெற்றனவா அல்லது தோல்வி அடைந்தனவா என்பதை மக்கள் தீர்மானிக்கின்றனர்.  

எனவே, பொதுஜன பெரமுன, எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெறலாமென்றே பலரும் இப்போது கருதுகின்றனர். 

அதன் பிரகாரம், சில முஸ்லிம் அமைப்புகள், இப்போதே ராஜபக்‌ஷர்களை வளைத்துப் போட்டுக் கொள்வது நல்லதென நினைக்கின்றன போலும். இதில், நேர்மையான நோக்கமும் இருக்கலாம். சிலவேளை சந்தர்ப்பவாதமும் இருக்கலாம்.   

அதாவது, தமது சமூகத்தின் நாளை பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, முஸ்லிம்கள் மீதான ராஜபக்‌ஷர்களின் கோபத்தைத் தணிப்பதற்காகச் சிலர் அவர்களைத் ‘தாஜா’ பண்ணுவதாகவும் இருக்கலாம். 

சிலர், சமூகத்தைக் காரணம் காட்டி, ராஜபக்‌ஷர்களிடம் அரசியல் மற்றும் பொருளாதாரச் சன்மானம் பெறுவதற்காகவும் இவ்வாறு சமூகத்தின் பெயரால் அவர்களை நெருங்குகின்றவர்களாகவும் இருக்கலாம்.  

இந்த நிலையில்தான், இந்த ரமழான் மாதத்தில், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரும் மஹிந்தவின் இளைய சகோதரருமான கோட்டாபய ராஜபக்‌ஷ, ஒன்றிரண்டு இப்தார் நிகழ்ச்சிகளில் பிரதம அதிதியாக அழைக்கப்பட்டார். அவரும், அச்சந்தர்ப்பங்களை அதிஉச்ச அடைவுகளைப் பெறும் வகையில் பயன்படுத்திக் கொண்டு, முஸ்லிம்களைக் கவரும் வகையில் உரையாற்றியுள்ளார்.  

மஹிந்த அழைக்கப்படாது, கோட்டாபய ஏன் இந்த நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப்ட்டார் என்று, எவரும் கேட்பதில்லை. ஏனென்றால், பலருக்கு அதை ஊகித்துக்கொள்ள முடியும். கோட்டா சிலவேளை, நாளைய ஜனாதிபதியாகப் பதவி ஏற்கலாமென்ற நிலை உருவாகி இருப்பதே, அதற்குக் காரணமாகும்.   

முதலில், ஜனாதிபதித் தேர்தல் வருமா அல்லது பொதுத் தேர்தல் வருமா என்பதை இப்போதே எதிர்வுகூற முடியாத நிலை நாட்டில் இருக்கிறது. 

முதலில் பொதுத் தேர்தல் நடைபெற்றால், மஹிந்த தலைமையிலான அவரது அணியினர், பொதுஜன பெரமுன என்ற பெயரிலோ அல்லது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைக் கைப்பற்றிக் கொண்டு அதன் பெயரிலோ போட்டியிடுவர்.  

 அதில் அவர்கள் வெற்றி பெற்றால், விலை கொடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் ‘கொள்வனவு’ செய்து, மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைத் தேடிக்கொண்டு, மீண்டும் அரசமைப்பை மாற்றி, மஹிந்தவையே அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட வைக்கலாம்.  

முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றால், மஹிந்தவால் அதில் போட்டியிட முடியாது. ஏனெனில், 19ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் படி, ஒருவர் இரண்டு முறை மட்டுமே ஜனாதிபதியாகலாம். மஹிந்த இரண்டு முறை ஜனாதிபதியாகி விட்டார்.   

இவ்வாறான நிலைமையில், மஹிந்த அணியினர் கோட்டாவை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தலாம். அதற்காகக் கோட்டா, தற்போது ‘எலிய’ (வெளிச்சம்) என்ற பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கி, நாடெங்கிலும் கூட்டங்களை நடத்திவருகிறார்.   

அத்தோடு, நாட்டின் புத்திஜீவிகளைக் கவர்வதற்காக ‘வியத் மக’ (அறிவாளிகளின் வழி) என்ற தொனிப்பொருளில் கூட்டங்களை நடத்துகிறார். அதன்மூலம் அவர், தாம் நாட்டை வழிநடத்தக்கூடிய, அறிவாற்றல் உள்ளவரெனக் காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார்.  

கடந்த மாதம், கொழும்பு ‘சங்கிறிலா’ ஹோட்டலில் நடைபெற்ற ‘வியத் மக’ கூட்டம், மிகவும் வெற்றிகரமானதெனக் கூறப்படுகிறது. அந்தக் கூட்டத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான முன்நிபந்தனைகளை விவரித்து, கோட்டா உரையாற்றினார்.   

ஊழலற்ற நிலைமையும் ஜனநாயகமும் என்ற இரண்டு முன்நிபந்தனைகளை, அவர் அந்தக் கூட்டத்தின் போது வலியுறுத்தியிருந்தார். ஆனாலும், அவரது சகோதரரின் கடந்த ஆட்சிக்காலத்தின் போது, அவர் உப ஜனாதிபதியைப் போல் செயற்பட்ட விதத்தில், நாட்டில் மிகவும் குறைவாக இருந்தவை மேற்குறிப்பிட்ட இரண்டு முன்நிபந்தனைகளும் ஆகும்.    

எனினும், கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகளால், சிங்கள மக்கள் உந்தப்பட்டுள்ள நிலையிலும் தற்போதைய அரசாங்கத்தின் இரு பிரதான கட்சிகளும் சண்டையிட்டுக் கொண்டு இருக்கும் நிலையிலும், அவரது அரசியல் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகமாகவே தென்படுகின்றன.   

எனவே தான், சில முஸ்லிம் அமைப்புகள், அவரை அணுக முற்பட்டுள்ளன. அதைத் தவிர, முஸ்லிம்கள் அவரை அணுக எவ்விதக் காரணமும் இல்லை. 

கடந்த ஆட்சிக் காலத்தில், முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட போது, அவர் எங்கே இருந்தார்? என்ன செய்தார் என்பதெல்லாம், எவரும் அறியாத விடயம் அல்ல.  

அதேவேளை, ராஜபக்‌ஷ்களுக்கும் குறிப்பாக கோட்டாபயவுக்கும், முஸ்லிம்களின் உதவி தேவையாக இருக்கிறது. ஏனென்றால், ஜனாதிபதித் தேர்தலின் போது, நாடளாவிய ரீதியில் வாக்கெடுப்பு நடத்தப்படுவதால், நாட்டில் சுமார் 10 சதவீதமாக வாழும் முஸ்லிம்களின் வாக்குகள், மிகவும் பெறுமதி வாய்ந்தவையாக இருக்கின்றன.   

2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல், போர் முடிவடைந்த உடனேயே நடத்தப்பட்டதாகும். அந்தப் போர் வெற்றியின் காரணமாக, அந்தத் தேர்தலின் போது, மஹிந்த ராஜபக்‌ஷ பெற்ற, சிங்கள மக்களின் வாக்குகளை மட்டும் கணக்கிலெடுத்தாலும் அவர் வெற்றி பெற்றிருப்பார்.   

எனவே, அக்காலத்தில் ஜாதிக்க ஹெல உருமய கட்சியின் தலைவர் சம்பிக்க ரணவக்க, “இனிமேல் சிறுபான்மைத் தலைவர்கள், தமது வாக்குகளை ஏலத்தில் விடமுடியாது” என்றார். 

அதாவது, இனிச் சிங்களத் தலைர்கள், சிறுபான்மை மக்களின் வாக்குகளின்றியே ஆட்சிக்கு வரலாம்; இனிச் சிறுபான்மை மக்களை, மதிக்கத் தேவையில்லை என்ற கருத்தில் அமைந்ததாகும்.   

ஆனால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலேயே சிறுபான்மை மக்கள், குறிப்பாக முஸ்லிம்கள், “அந்தக் கருத்து பிழையானது” என்பதை நிரூபித்தனர். அதை மஹிந்தவே, பலமுறை ஏற்றுக்கொண்டுள்ளார்.  

 2016ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், ஜப்பானுக்கு விஜயம் செய்த மஹிந்த ராஜபக்‌ஷ, ‘ஜப்பான் டைம்ஸ்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றின் போது, முஸ்லிம்கள் தமக்கு வாக்களிக்காததாலேயே  தாம் ஜனாதிபதிப் பதவியை இழந்ததாகக் கூறியிருந்தார்.   

அதே ஆண்டு ஒக்டோபர் மாதம், அவர் தமக்கு ஆதரவான முஸ்லிம்களின் கூட்டமொன்றில் உரையாற்றும் போதும், இதேகருத்தை வெளியிட்டு இருந்தார். முஸ்லிம்கள், ராஜபக்‌ஷர்களையும் ராஜபக்‌ஷர்கள் முஸ்லிம்களையும் கவர முயற்சிப்பதன் பின்னணி இதுவே.  

அந்த வகையில், பேருவளை பகுதியில் கோட்டாபயவைப் பிரதம அதிதியாக அழைத்து, முஸ்லிம்களால் கடந்த மாதம் நடத்தப்பட்ட இப்தார் நிகழ்சி ஒன்றில், பெருந்திரளான முஸ்லிம்கள் சமுகமளித்திருந்தனர். அவர் அங்கு, ஜனாதிபதி ஒருவரைப் போல், வெகு விமரிசையாக வரவேற்கப்பட்டார்.   

கூட்டத்தில் உரையாற்றிய கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்காலத்தில் அவர்கள் அமைக்கும் ஆட்சியில், முஸ்லிம்கள் பாதுகாப்பாக வாழலாமெனக் கூறினார். 

நாம் முன்னர் கூறிய 2016ஆம் ஆண்டிலும், முஸ்லிம் ஆதரவாளர்களுடனான கூட்டத்தில் உரையாற்றும் போது, மஹிந்தவும் இதே உத்தரவாதத்தை வழங்கியிருந்தார்.  

அவர்கள் ஏன் அவ்வாறானதோர் உத்தரவாதத்தை வழங்க வேண்டும்? பொதுவாக, முஸ்லிம்கள் இந்த நாட்டில் எப்போதும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்கிறார்கள் என்பதை, அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதுதான் அதன் அர்த்தமா? அல்லது அவர்களது ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றவை, இனி வரப்போகும் அவர்களது ஆட்சியில் இடம்பெறாது என்ற உத்தரவாதத்தை வழங்குவதற்காகவா அவர்கள் அவ்வாறு கூறுகிறார்கள்?  

இந்நாட்டில் ,எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும், நாடு ஆமை வேகத்திலேயே அபிவிருத்தி அடையும் என்பதற்கு, சுதந்திரத்துக்குப் பின்னர், கடந்த சுமார் 70 ஆண்டுகால வரலாறு சான்றுபகர்கிறது.   

கோடிக் கணக்கான மக்களின் பணத்தை, அரசியல்வாதிகள் கொள்ளையடிப்பதை எந்தவோர் அரசாங்கமும் நிறுத்தப்போவதில்லை என்பதும், இப்போது தெளிவாகிவிட்டது.   

இனப் பிரச்சினையைத் தீர்க்கவும் எந்தவொரு பிரதான கட்சிக்கும் தேவையில்லை என்பதும் தெளிவான விடயமாகும். 

ஆகவே, மஹிந்த ஆண்டாலென்ன, கோட்டா ஆண்டாலென்ன, மைத்திரி ஆண்டாலென்ன, ரணில் ஆண்டாலென்ன என்ற நிலை உருவாகி இருக்கிறது.   

அடிக்கடி குண்டர்கள் வந்து தம்மைத் தாக்காதிருந்தால் போதுமானது என்று நினைக்கும் நிலைக்கு, மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.  

அந்த உத்தரவாதத்தை, கோட்டாபயவால் வழங்க முடியுமென்றால், முஸ்லிம்கள் அவரை ஆதரிக்கத் தான் வேண்டும். ஏனெனில், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளான இனவாதம், சர்வாதிகாரம் மற்றும் ஊழல் தொடர்பானவற்றை ஒதுக்கித் தள்ளினால், அவர் எடுத்த காரியத்தைத் திறமையாகச் செய்யக் கூடியவர்.  

போரின் போதும் கொழும்பு நகரை அழகுபடுத்துவதிலும்? அவர் அதை நிரூபித்துக் காட்டினார். ஆனால், இந்த நாட்டில் சகல இன மக்களும் அச்சமின்றி வாழக்கூடிய சூழலை உருவாக்குவேனென்ற உத்தரவாதத்தை, வாயளவிலன்றி செயலளவில் அவரால் வழங்க முடியுமா?  அவ்வாறான உத்தரவாதத்தை வழங்குவதாக இருந்தால், அவர் முதலாவதாக, மக்கள் அறிந்த உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். 

தமது சகோதரனின் ஆட்சிக் காலத்தில், சிறுபான்மை மக்கள், இனவாதிகளின் பல்வேறுபட்ட இம்சைகளால் பாதிக்கப்பட்டார்கள் என்பதையும் அந்த நிலைமையைச் சீர்செய்ய, அந்த அரசாங்கத்துக்கு எவ்விதத் தேவையும் இருக்கவில்லை என்பதையும், இப்போதாவது உணர்வாரா?   

தாமும் முக்கியஸ்தராக இருந்த தமது சகோதரரின் ஆட்சிக் காலத்தைப் பற்றி, முஸ்லிம்கள் மத்தியில் தவறான அபிப்பிராயம் உருவாக்கப்பட்டு இருந்ததாலேயே, அந்த ஆட்சி கவிழ்க்கப்பட்டதென, அவர் கூறுகிறார். அந்த ஆட்சியின் இறுதி மூன்றாண்டுகளாக, முஸ்லிம்கள் தமக்கு எதிரானப் பொய்ப் பிரசாரங்கள் காரணமாகவும் பகிரங்க மிரட்டல்கள் காரணமாகவும், எந்த நேரம் குண்டர்கள் தமது உயிரைப் பறித்துவிடுவார்களோ, வீடுகளை எரித்து விடுவார்களோ, சொத்துகளைக் கொள்ளையடித்துச் செல்வார்களோ என்று கடும் பதற்றத்தில் வாழ்ந்தது தவறான அபிப்பிராயத்தால் அல்ல.   

2013ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், அதாவது முஸ்லிம் விரோதப் பிரசாரங்கள் ஆரம்பிக்கப்பட்ட சில மாதங்களில், பொது பல சேனா அமைப்பின் பயிற்சி நிலையம் ஒன்றைக் காலியில் திறந்து வைக்கச்சென்ற கோட்டாபய, “சில விடயங்களை உரத்துக் கூறவும் தான் வேண்டும்” என்று கூறிய போது, அது, அவ்வமைப்பின் மிரட்டல்களை நியாயப்படுத்துவதாகவே முஸ்லிம்கள் உணர்ந்தனர்.  

 தம்மைப் பாதுகாக்க, அரசாங்கம் முன்வரப் போவதில்லை என்ற கருத்து, அக்காலத்தில் முஸ்லிம்கள் மத்தியில் எவ்வாறு உருவாகியிருந்தது என்பதை, மஹிந்தவும் கோட்டாபயவும் நேர்மையாகச் சிந்திக்க வேண்டும்.  

முஸ்லிம்கள், ஐ.தே.கவுக்குத் தான் வாக்களிக்க வேண்டுமென்று கூறுவதற்கு, ஐ.தே.கவிடம் எந்தவொரு சிறப்பம்சமும் இல்லை. 

அதேபோல், தமது பாதுகாப்புக்கும் தமது சமயத்தின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் இல்லை என்ற உத்தரவாதம் இருந்தால், முஸ்லிம்கள் ராஜபக்‌ஷர்களுக்கு வாக்களிக்கவும் எந்தவொரு தடையும் இல்லை.  
எனவே, முஸ்லிம் அமைப்புகளினதும் கட்சிகளினதும் தலைவர்களை வென்றெடுப்பதற்குப் பதிலாக, சாதாரண முஸ்லிம் வாக்காளர்களை வென்றெடுப்பது எவ்வாறு என்பதைத் தான் ராஜபக்‌ஷகள் சிந்திக்க வேண்டும்.   

ஏனெனில், 2014ஆம் ஆண்டில், முஸ்லிம் தலைவர்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, சாதாரண முஸ்லிம் வாக்காளர்கள் தான் முதலில் மஹிந்தவின் ஆட்சியைக் கவிழ்க்க முடிவெடுத்தார்கள். அந்த மக்களின் சிந்தனைகள், இன்னமும் மாறவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .