2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கோட்டா ஒரு ஹிட்லரா?

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2018 ஜூலை 04 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

“ஹிட்லர் ஒருவராக மாறியேனும் இந்த நாட்டைக் கட்டியெழுப்புங்கள்” என்று அஸ்கிரிய பௌத்த பீடத்தின் அனுநாயக்க தேரர் வெண்டருவே உபாலி தேரர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவைப் பார்த்துக் கூறிய ஒரு கருத்து, இப்போது சிங்கள பௌத்த சமூகத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.   

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பலர், அந்தக் கூற்றை விமர்சித்து இருக்கும் நிலையில், சில கடும் போக்குவாத சிங்களத் தலைவர்கள், அதை நியாயப்படுத்தியும் அதற்குப் புதிய கருத்துகளைக் கற்பித்தும் வருகிறார்கள்.   

எவ்வாறாயினும், நாட்டில் பெரும்பான்மையான பௌத்தர்கள், உயர்வாக மதிக்கும் ஒரு தேரர், கோட்டாபய போன்ற ஒருவருக்கு, இவ்வாறானதோர் உபதேசத்தை வழங்குவது, மிகவும் பாரதூரமான விடயமாகும்.   

கோட்டாபய ராஜபக்‌ஷ, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது, மஹிந்த அணியின் சார்பில் போட்டியிடப் போகிறார் என்றதொரு கருத்து பரவியிருக்காவிட்டால், தேரரின் இந்தக் கூற்றை எவரும் கொஞ்சமேனும் பொருட்படுத்தியிருக்க மாட்டார்கள். அதுவும் எவரோ, எங்கோ கூறிய சாதாரண கூற்றாக, சிலவேளை அது ஊடகங்களினதும் கவனத்தை ஈர்க்காது போயிருக்கலாம்.   

அது மட்டுமல்ல, கோட்டாபய, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போகிறார் என்ற நிலைப்பாட்டில் தேரரும் இல்லாதிருந்தால், அவரும் அவ்வாறானதோர் உபதேசத்தை, முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு வழங்கியிருக்க மாட்டார்.   

‘ஹிட்லராக மாறி, இராணுவப் பலத்தாலாவது, இந்த நாட்டைக் கட்டியெழுப்புங்கள்’ என்றே தேரர் கூறியிருந்தார். கோட்டாபய ராஜபக்‌ஷவின் 69 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, மிரிஹானையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற வைபவமொன்றின் போதே, தேரர் இந்த உபதேசத்தை வழங்கியதாக, ஊடகங்கள் கூறின.   

ஆனால் தேரர், தாமாகவே முதன் முதலில் அந்தக் கருத்தை முன்வைப்பதைப் போல், அதைக் கூறவில்லை. மற்றவர்கள் கோட்டாபயவுக்கு எதிராகச் சுமத்தும் ஒரு குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே, அவர் அதைக் கூறியிருந்தார்.  

“அவர்கள் உங்களை ஒரு ஹிட்லராக வர்ணிக்கிறார்கள். ஒரு ஹிட்லராக மாறி, இராணுவ பலத்தைப் பாவித்தாவது, இந்த நாட்டைக் கட்டி எழுப்புங்கள்” என்றே அனுநாயக்க தேரர் கூறியிருந்தார்.   

அதையடுத்து, நாட்டில் பலரும் அவ்வளவு அறிந்தவராக இருந்திராத தேரரின் பெயர், சர்வதேச ரீதியில் செய்திகளில் அடிபடத் தொடங்கியது. நாட்டில் உயர் பதவிகளில் உள்ளவர்களும், அவரது கூற்றைக் கடுமையாகக் கண்டித்தனர்.   

அந்த உரை நிகழ்த்தப்பட்டு, ஓரிரு நாட்களில் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேரரை விமர்சித்துக் கருத்து வெளியிட்டு இருந்தார். “பௌத்த மதகுருமார்களை உயர்வாக மதிப்பதாகவும் அதேவேளை மூத்த பௌத்த மதகுரு ஒருவர், சர்வாதிகாரத்தை இவ்வாறு அங்கிகரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் கூறியிருந்தார். சர்வாதிகார ஆட்சியின் விளைவுகளையும் அவர் விளக்கியிருந்தார்.   

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றும் போது, பௌத்த சமயமும் ஹிட்லரின் ஆட்சியும் ஒத்துப் போகும் போக்குகள் அல்லவென்றும், “ஒரு பௌத்தர் மற்றொருவரைப் பார்த்து ஹிட்லராகவோ அல்லது பொல்பொட்டாகவோ இடி அமீனாகவோ மாறுங்கள் என்று உபதேசம் செய்ய முடியாது” என்றும் கூறினார். அவ்வாறானதோர் உபதேசம், புத்தரின் போதனைகளுக்கு முரணாகின்றது என்றும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.   

மஹிந்த அணியின் முக்கிய புத்திஜீவியும் அரசியல் விமர்சகரும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் இலங்கைத் தூதுவராக இருந்து, மனித உரிமை மீறல் தொடர்பாக, ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை விமர்சிக்கப்பட்ட போது, இலங்கை சார்பாக வாதாடி வந்தவருமான கலாநிதி தயான் ஜயதிலக்கவும் தேரரின் இக்கருத்தை விமர்சித்து, சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் கருத்து வெளியிட்டு வருகிறார்.   

“இஸ்‌ரேலுக்கு எதிராகவும் பலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் பேசியதால், கோட்டாவின் தூண்டுதலால், ஐ.நாவின் இலங்கைத் தூதுவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டேன்” என, இதற்கு முன்னர் கலாநிதி ஜயதிலக்க பலமுறை கூறியிருக்கிறார்.   

எனவே, ஜயதிலக்கவின் விமர்சனம், கோட்டாவின் மீதான கோபத்தின் வெளிப்பாடாக இருக்கலாம். 
ஆனால், கோட்டா தொடர்பில், மஹிந்த அணியில் இருக்கும் வேறுபட்ட கருத்துகளையும் இது காட்டுகிறது.  

கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக வருவதை, இந்த நாட்டில் சிறுபான்மை மக்களில் பெரும்பாலானவர்கள் விரும்ப மாட்டார்கள். 

அந்த நிலையில், கோட்டாவுக்கான சர்வதேச மற்றும் தேசிய ஆதரவின் அளவை அறிந்து கொள்ளவும் இந்தக் கூற்று ஓரளவு உதவியது.   

மஹிந்த அணியில் பலர், இந்த விடயத்தால் கோட்டாவுக்கு எற்படும் அவப் பெயரிலிருந்து அவரை பாதுகாக்க முன்வரவில்லை. வாசுதேவ நாணயக்கார, ஏற்கெனவே கோட்டா ஜனாதிபதியாவதை எதிர்த்து, ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டு வருகிறார்.   

மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன, “கோட்டா ஜனாதிபதியாக வேண்டும் என்று ஒன்றிணைந்த எதிரணி எவ்வித முடிவையும் எடுக்கவில்லை” என்கிறார்.   

இந்த நிலையில், சர்வதேச ரீதியில் தேரரின் கூற்றுக்குக் கிடைத்த வரவேற்பும் கருத்திற் கொள்ளத் தக்கதாகும். 

ஹிட்லரின் நாடான ஜேர்மனியின் இலங்கையிலுள்ள தூதுவர் ஜோன் ரோட், “கோட்டா ஹிட்லராக வேண்டும்” என்ற தேரரின் கருத்து ஆத்திரமூட்டக் கூடியது என்று கூறியிருந்தார்.   

ஏற்கெனவே, கோட்டா ஜனாதிபதியாவதை மேற்குலகம் வரவேற்காது என, அண்மைக் காலம் வரை, இலங்கையில் அமெரிக்கத் தூதுவராகவிருந்த அத்துல் கேஷாப், மஹிந்த ராஜபக்‌ஷவிடம் கூறியிதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன.   

இந்தநிலையில், தேரரின் கூற்று, கோட்டாவுக்கு மேலும் மேற்குலகில் பாதகமான நிலைமையை ஏற்படுத்தும் எனச் சில வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்கள் கூறியிருந்தன. மஹிந்த அணியை ஆதரிக்கும் ‘தி ஐலன்ட் ’பத்திரிகையும் அந்தச் செய்திகளை முன்பக்கத் தலைப்புச் செய்தியாகப் பிரசுரித்து இருந்தது.   

கோட்டாபய மேற்குலகில் ஒரு சர்வாதிகாரியாக அல்லது கடும்போக்கு நிர்வாகியாக, மக்கள் கருதுவதற்கு காரணம் இல்லாமல் இல்லை. அவர் பாதுகாப்புச் செயலாளராகச் செயற்படும் காலத்தில் தான், தென்பகுதியில் கட்டுநாயக்கவிலும் சிலாபத்திலும் ரத்துபஸ்வலயிலும் ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.   

இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் எவரும் பயங்கரவாதிகள் அல்ல; அவர்கள் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.   

அவர் பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்திலேயே, லசந்த விக்கிரமதுங்க. கீத் நொயார், போத்தல ஜயந்த, உபாலி தென்னகோன் போன்ற மூத்த ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர். சிரஸ, உதயன் போன்ற ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டன.

 வடக்கில் சரணடைந்த நூற்றுக் கணக்கானவர்கள், காணாமல் போனார்கள். ‘கிறீஸ் பேய்’ என்ற பெயரில் ஒரு கும்பல், தமிழ், முஸ்லிம் பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.   

இந்தச் சம்பவங்களுக்கும் கோட்டாவுக்கும் தொடர்பு இருப்பதாக, இதுவரை நிரூபிக்கப்படவில்லை தான். ஆயினும், அவர் பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருந்த காலத்தில் இடம் பெற்ற இச்சம்பவங்களுக்கு, அவர் குறிப்பாகவும் ஜனாதிபதி, முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் பொதுவாகவும் தார்மிக பொறுப்பபை ஏற்றே ஆக வேண்டும்.   

இச்சம்பவங்களின் போது, அவர் நடந்து கொண்ட விதம் காரணமாகவே, அவர் சர்வாதிகாரி என்றதொரு பொது அபிப்பிராயம், நாட்டில் உருவாகியிருக்கிறது.   

“ஹிட்லராக மாறி, நாட்டைக் கட்டியெழுப்புங்கள்” என்று உபாலி தேரர், கோட்டாவுக்குக் கூறிய போது, அக்கூற்றை விமர்சித்தவர்களும் ஒன்றும் தூய ஜனநாயகவாதிகள் அல்லர்.   

சிலர், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் அடாவடித்தனங்கள் இடம்பெற்ற போதும், ஜனாதிபதி, சட்டத்தை மதியாது நடந்து கொண்ட போதும், அந்த அரசாங்கத்தைப் பாதுகாத்து பேசியவர்களாவர்.   

இந்த நாட்டில், வடக்கிலும் தெற்கிலும் வீதிகளில் மக்கள் கொல்லப்பட்ட போதும், சடலங்கள் ஆறுகளிலும் களப்புகளிலும் மிதந்த போதும், அந்தந்த அரசாங்கங்களைப் பாதுகாத்துப் பேசி, அவற்றுக்கு ஆதரவு வழங்கியவர்களாவர்.  

ஆனால், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை அடுத்து, இப்போது மஹிந்தவின் புதிய கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆட்சிக்கு வரும் போல் தெரிகிறது. 

கோட்டாபயவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போகிறார் என்ற செய்தி அடிபடுகிறது.   

கோட்டாபயவும் ‘எலிய’ (வெளிச்சம்) என்ற பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கியிருக்கிறார். ‘வியத் மக’ (கல்விமான்களின் வழி) என்ற பெயரில் கருத்தரங்குகளை நடத்தி வருகிறார். அரசியல் எதிர்ப்பார்ப்புகள் இல்லாவிட்டால், இலட்சக் கணக்கில் செலவழித்து அவர், இவ்வாறு செய்வதில் அர்த்தம் இல்லை.   

பொதுஜன பெரமுன, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்ற போதிலும், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவது, மஹிந்த அணியினருக்கு இலேசான விடயமல்ல.  

 ஏனெனில், ஏனைய தேர்தல்களைப் போலன்றி, ஜனாதிபதித் தேர்தலில் விகிதாசார முறை சரியான முறையில் அமுலாகிறது. 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது, 49 இலட்சம் வாக்குகளைப் பெற்ற பொதுஜன பெரமுன, 230க்கு மேற்பட்ட சபைகளில் முதலிடத்துக்கு வரும் போது, 36 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி, வெறும் 41 சபைகளிலேயே முதலிடத்துக்கு வந்தது. விகிதாசாரப்படி ஐ.தே.க 170 சபைகளில் முதலிடத்துக்கு வந்திருக்க வேண்டும்.   

அதேபோல், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது, ஆளும் கூட்டணியில் உள்ள இரண்டு கட்சிகளும், பொதுஜன பெரமுனவை விட வாக்குகளைப் பெற்றன. 

எனினும், பொதுஜன பெரமுன 231 சபைகளைக் கைப்பற்றும் போது, அக் கட்சிகள் 51 சபைகளையே கைப்பற்றின.   

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வாக்குகளையும் கணக்கிலெடுத்தால், பொதுஜன பெரமுனவுக்கு எதரான வாக்குகளின் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கின்றன. எனவே, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் முடிவை வைத்து, ஜனாதிபதித் தேர்தலின் முடிவைத் தீர்மானிக்க முடியாது.   

மஹிந்த அணியை ஆதரிக்கும் வாக்காளர்களை விட, அவரை எதிர்க்கும் வாக்காளர்கள் நாட்டில் அதிகமாக இருந்த போதிலும், மஹிந்த அணிக்கு எதிரானவர்கள் 2015 ஆம் ஆண்டில் போல், ஜனாதிபதித் தேர்தலின் போது, ஓரணியில் நின்று போட்டியிட்டால் மட்டுமே, மஹிந்த அணியின் வேட்பாளரைத் தோல்வியுறச் செய்யலாம்.   

எனினும், 2015 ஆம் ஆண்டில் போல், மஹிந்த அணிக்கு எதிரான பொது வேட்பாளர் ஒருவரைக் கண்டு பிடிக்க முடியுமா என்பது கேள்விக்குறியே.   

எனவே, அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் போது, மஹிந்த அணியின் வேட்பாளர் முதலிடத்துக்கு வந்தாலும், வெற்றி பெற முடியாது. 

ஏனெனில், ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின்படி, செல்லுபடியாகும் வாக்குகளில் ஒரு வேட்பாளர், 50 சதவீதத்துக்கு ஒரு வாக்காவது அதிகமாகப் பெற்றால் மட்டுமே, அவர் வெற்றி பெற்றவராக ஏற்றுக் கொள்ளப்படுவார்.   

தற்போதைய நிலையில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் போது, ஒவ்வொரு வாக்கும் பெறுமதி வாய்ந்ததாகவே கருதப்படும். குறிப்பாகச் சிறுபான்மை மக்களின் வாக்குகளின்றி எவரும் வெற்றி பெற முடியாது.   

சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெறுவதில், மஹிந்த அணியில் ஏனையவர்களை விட, கோட்டா மிகவும் பின்நிலையில் இருக்கிறார். பொதுவாக, சிறுபான்மை மக்கள் அவரை விரும்பவில்லை.   

ஜனாதிபதித் தேர்தலை விட, பொதுத் தேர்தலே தற்போதைய நிலையில் மஹிந்த அணிக்குச் சாதகமாக இருக்கிறது.

 மிகவும் மோசமான முறையில் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த நிலையிலும், அவ் அணியினர் 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 90க்கு அதிகமான ஆசனங்களைப் பெற்றனர்.   

தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வெற்றியை அடுத்து, அவர்கள் சிலவேளை அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறலாம் அல்லது ஐ.தே.கவை விட நாடாளுமன்ற ஆசனங்களைப் பெறலாம்.   

எவ்வாறோ 113 ஆசனங்களைப் பெற்றால், பணம் கொடுத்து எம்பிக்களை விலைக்கு வாங்கி, அரசமைப்பை மாற்றி, மஹிந்த மீண்டும் ஜனாதிபதியாக வாய்ப்பு உண்டு.   

ஆனால் 19 ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் படி, 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துக்கு முன்னர், ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது. 

எனவே, பொதுத் தேர்தல் மூலம் விரைவில் ஆட்சிக்கு வர, மஹிந்த அணிக்கு உள்ள ஒரே வழி, மக்கள் விடுதலை முன்னணி முன்வைத்துள்ள நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான 20 ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்ட மூலத்தை ஆதரிப்பதே. ஆனால், அவர்கள் அதை எதிர்ப்பதாகக் கூறியிருக்கிறார்கள்.  

உபாலி தேரர், பின்னர் கோட்டாவைப் பற்றிய தமது கூற்றை விளக்கிக் கருத்து வெளியிட்டு இருந்தார். “உறுதியானதும் நேர்மையானதுமான தலைவர் ஒருவர் வேண்டும்” என்பதே தமது உரையின் அர்த்தமாகும், என அவர் கூறியிருந்தார்.   

ஊழல், மோசடி ஆகியன இரத்தத்திலேயே ஊறிவிட்ட ஒரு சமூகத்திலிருந்து, அவ்வாறான தலைவர் ஒருவரை எவ்வாறு எதிர்ப்பார்க்க முடியும்? 

கோட்டா எவ்வகையிலும் அவ்வாறானவர் அல்லவே.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X