2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சர்வதேசத்திடம் நீதி கேட்கும் இரு சமூகங்கள்

Editorial   / 2018 மார்ச் 14 , மு.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

- க. அகரன்  

இன ரீதியான முரண்பாடுகள், மீளவும் தோற்றம்பெற்றுள்ள இலங்கை தேசத்தில், கலவரங்களும் தீ வைப்புகளும் சகிக்கமுடியாத கட்டத்தை எட்டிச்செல்கின்றன.  

தமிழ் மக்கள் தமது உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுத்தபோது, அதை இனவாதம் கொண்டு அழிக்க நினைத்தது மாத்திரமின்றி, தமிழர்களின் சொத்துகளும் 1958, 1977, 1983 எனக் அந்தந்தக் காலப்பகுதியில், பாரியளவில் அழிக்கப்பட்டும் வந்திருந்தமை கண்கூடு.  

இந்நிலையில், அம்பாறையில் ஆரம்பித்த சிங்கள - முஸ்லிம் முரண்பாடுகள், கண்டி மாநகரில் பாரிய கலவரமாக மாறியிருந்தமை திட்டமிட்ட செயற்பாடா என்ற சந்தேகத்தைப் பல்வேறு தரப்பினரிடமும் ஏற்படுத்தியிருக்கின்றது.  இந்தச் சந்தேகம், மக்கள் பிரதிநிதிகளுக்கு மாத்திரமல்ல சாதாரண மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. 

புதிய அமைச்சரவை மாற்றம் ஏற்பட்டது மாத்திரமின்றி, சட்டம், ஒழுங்கு அமைச்சு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்த நிலையில், இவ்வாறான நிலை ஏற்பட்டிருந்தமை விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.  

 சட்டம், ஒழுங்கு துறையின் அமைச்சராக சாகல ரட்ணாயக்க பொறுப்பு வகித்துக் கொண்டிருந்தபோது, குறிப்பிடும்படியான ஒரு கலவரமோ, கட்டுப்படுத்த முடியாத முரண்பாடுகளோ ஏற்பட்டிருக்காத நிலையில், சட்டம், ஒழுங்கு அமைச்சு, ரணிலிடம் சென்ற ஒருசில நாட்களில், முரண்பாடு ஒன்று தோற்றுவிக்கப்பட்டு, கலவரம் உருவாக்கப்பட்டுள்ளது.   

 ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள ரணிலுக்கு எதிரான கருத்தியலும் நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிராகக் கொண்டு வரப்படவிருந்த நம்பிக்கையில்லாத் தீர்மானங்களும் இங்கு தாக்கம் செலுத்தியிருக்க வாய்ப்புள்ளதாகச் சமூக மட்டத்தில் பேச்சுகள் உலாவிச்சென்றதை மறுப்பதற்கில்லை.  

இரண்டு இனங்களுக்கிடையில், ஒரு மாவட்டத்தில் ஏற்பட்ட  முரண்பாட்டைத் தடுப்பதற்கு, ஏதுவான வழிவகைகளை இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கவில்லையா என்ற கேள்விக்கப்பால், வடக்கு, கிழக்கில் முரண்பாடுகள் தணிந்ததன் பின்னராகக் குவிக்கப்பட்டுள்ள முப்படையினரின் தேவை, தற்போது எந்தப் பகுதிக்கு அத்தியாவசியமானது என்பதையும் எடுத்தியம்பியுள்ளது.  

சிறு அசம்பாவிதங்கள் ஏற்பட்டவுடன், தமிழ் மக்களை வெறுமனே விடுதலைப் புலிகளாகச் சித்திரிக்கும் அரசாங்கம், வடக்கு, கிழக்கில் ஐந்து பேருக்கு ஒரு இராணுவம் என்ற ரீதியில் நிலைநிறுத்தியுள்ளது. இந்நிலையிலேயே தென்பகுதியில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.  

ஏலவே, வடக்கு முதலமைச்சர் மாத்திரமின்றி, நியாயபூர்வ சிந்தனையுள்ள தமிழ்த் தலைமைகள், இராணுவத்தினரை வடக்கு, கிழக்கில் இருந்து குறைக்குமாறும், வெறியேற்றுமாறும் தெரிவித்துவரும் கருத்துகளுக்கு வலுச்சேர்க்கவல்ல செயற்பாடோன்றே இன்று அரங்கேறி இருக்கின்றது.  

முஸ்லிம்களைப் பொறுத்தவரை, தமிழ், சிங்கள மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் தமக்கான அடையாளங்களுடன் வாழும் இனமாகக் காணப்படுகிறார்கள். எனினும், இவர்களது செயற்பாடுகளை அடிப்படைவாதம் மற்றும் இனவாத சிந்தனையுள்ள சிங்கள மக்கள், ஏற்றுக்கொள்ள மறுத்து வந்தமையின் விளைவு, முரண்பாடான நிலைமையைத் தோற்றுவித்திருக்கின்றது.  இலங்கை தேசத்தில் இத்தகைய கலவர நிலைமை ஏற்படுவதற்கான பின்புலம் யார் என்ற கேள்வி மேலோங்கியுள்ளது.  

குறிப்பாக, இலங்கையில் தற்காலத்தில் முஸ்லிம்களின் இன விகிதாசார அபிவிருத்தி அதிகரித்துக் காணப்படுவதும், இலங்கையின் பொருளாதார பிடி முஸ்லிம்களின் கையில் இருப்பதும் பௌத்த மேலாதிக்கத்துடன் இன ரீதியான எண்ணம் கொண்டவர்கள், அதைத் தமக்கான அச்சுறுத்தலாகப் பார்க்கின்றார்கள். இதன் விளைவும், இதற்கு ஏற்றாற்போல், தூபமிடும் சில அரசியல்வாதிகளின் செயற்பாடுகளுமே இனங்களுக்கிடையிலான விரிசலை உருவாக்கியுள்ளது.  

இந்நிலையில், ஓரினக் குழுமம், மற்றுமோர் இன குழுமம் மீது, அதிகாரத்தைப் பிரயோகிப்பதை அடக்குமுறை என அரசியல் நூல்கள் விளக்கி நிற்கின்றபோதிலும், அவ்வாறான நிலை ஏற்படுகின்றபோது, அதைத்தடுப்பதற்கு அல்லது கட்டுப்படுத்துவதற்கு ஏதுவான வழிமுறைகள் தொடர்பான தெளிவு, அரசாங்கத் தரப்பில் இருக்கவில்லை என்பதையே தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் எடுத்தியம்புகின்றன.  

இதற்குமப்பால், இவ்வாறான இனக்குழுமங்களுக்கு இடையிலான விரிசலை அல்லது ஒரு கலவரத்தை கட்டுப்படுத்தும் வல்லமையின்றியா தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் உள்ளது என்ற கேள்வியை அனைத்துத் தரப்பினரும் கேட்டுவரும் நிலையில், அமெரிக்காவும் கனடாவும் ஐக்கிய நாடுகள் சபையும் உடனடியாக இக்கலவரத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தியிருந்தன.  

இச்சூழலிலேயே, விடுதலைப்புலிகளை அழித்ததாக மார்தட்டிக்கொள்ளும் இலங்கை அரசாங்கம், ஒரு மாவட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில், ஏனைய மாவட்டங்களிலும் கலவர நிலைமை பரவுவதற்கு இடமளித்துள்ளமை  ஏற்கமுடியாத விடயமாகும்.  

இதற்குமப்பால், தொடர்ச்சியாக அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்து, ஊரடங்குச் சட்டங்களைப் போட்டு, சமூக வலைத்தளங்களை முடக்கி கலவரத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவையென்பது, கண்டியில் ஏற்பட்ட சிறு அசம்பாவிதங்கள்தான் பிரச்சினைக்கான காரணமாக மாத்திரம் பார்த்து நகர்ந்துசெல்ல முடியாது.  

ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வுகள் இடம்பெற்றுவரும் நிலையில், அது தமிழர் தரப்பில் தற்போதும் கொதி நிலையில் உள்ள விடயமாகவே உள்ளது. குறிப்பாக, வடக்கு, கிழக்கில் ஐ. நாவுக்கு வலியுறுத்தும் முகமாகக் கையெழுத்துப் போராட்டங்கள் வலுப்பெற்றிருந்த காலமாக இது காணப்பட்டது.  

கடந்த ஆண்டு, இவ்வாறான அமர்வு இடம்பெற்றபோது, வடக்கு, கிழக்கில் ஆர்ப்பாட்டங்களும் மக்கள் செயற்பாட்டு இயக்கங்களின் போராட்டங்களும் மேலோங்கியிருந்தன. எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கால அவகாசத்துக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தரும் என்ற நம்பிக்கை அரசாங்கத்துக்குக்  காணப்பட்டது.  

ஆனால், தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவு என்பது, பல்வேறு விடயங்களைத் தௌிவுபடுத்தியிருக்கிறது.  இந்நிலையில், ஐ.நாவில் அரசாங்கத்துக்கு ஒத்தோதும் நிலையால் ஏற்பட்ட பின்னடைவு என்பதையும் தேர்தலின் பின்னடைவுக்கான காரணத்தைத் தேடி ஆராயும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் பலரும் தமது கருத்தாக முன்வைத்துள்ளனர்.  

எனவே, இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மத்திய அரசாங்கத்துக்கு தன்னாலான பங்களிப்பை வலிந்து செய்ய முற்படாத நிலையில், வடக்கு, கிழக்குப் போராட்டங்கள், ஐ. நாவில் தாக்கம் செலுத்தும் என்பது உண்மை.  

ஆகவே, நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலைப் பயன்படுத்தி, அவசரகாலச் சட்டத்தைப் பிரயோகித்து, பல்வேறு நன்மைகளைத் தன் பக்கம் பெற்றுக்கொள்ள, அரசாங்கம் நம்பிக்கை கொள்கின்றது.  

முரண்பாடான நிலைகளுக்கு மத்தியில், அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் எவ்வித செயன்முறைகளையும் முஸ்லிம் அமைச்சர்களோ மக்கள் பிரதிநிதிகளோ பாரியளவில் பிரயோகிக்காத நிலையில், வெளிநாட்டுப் பிரதிநிதிகளைச் சந்தித்து, தமது தரப்புப் பிரச்சினைகளை முன்கொண்டு செல்வதை அண்மைய நாட்களில் காணமுடிகிறது.  

ஐ.நா அதிகாரிகளைச் சந்தித்த முஸ்லிம் அமைச்சர்கள், தமக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளுக்கு, சர்வதேசம் நியாயத்தைப் பெற்றுத்தரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இச் சூழலில் தமிழ்த் தரப்புப் பிரச்சினைகள் சற்று மௌனிக்கப்பட்டுள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.     

அண்மைய காலத்தில் ஏற்பட்டுள்ள இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு இன்மையைச் சுமூகமாக்க, தமிழ் அரசியல் தலைமைகளும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய தேவையுள்ளது. அதேநேரம், தீர்வு நோக்கிய நீண்ட தூரப் பயணத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் கொண்டு செல்ல வேண்டிய முக்கிய பொறுப்பு, தமிழ் அரசியல்வாதிகளிடமும் மக்கள் பிரதிநிதிகளிடமும் உள்ளன.  

சொந்த நாட்டில், தாம் ஆட்சிப்பீடம் ஏற்றிய ஆட்சியாளர்களிடமே, நம்பிக்கை இழந்த இரு சமூகங்கள், சர்வதேசத்திடம் நீதி கேட்கும் நிலைமை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், உத்வேகம் பெறவேண்டிய நீதிக்கான பயணத்தில், கடந்துவந்த இன்னல்களையும் சர்வதேசத்திடம் ஓரணியில் எடுத்தியம்ப வேண்டிய தேவையுள்ளது.  

தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையை மாத்திரம் முன்னிறுத்தி, அதற்கான தீர்வை, சர்வதேசத்திடம் பெற முனைப்புக்காட்டும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில், துயர் நிறைந்த பாதையில் பயணித்து, முள்ளிவாய்க்காலில் முடிவடைந்த யுத்தத்தின் விளைவுகளுக்கும் தீர்வு வேண்டி, இரு சமூகங்களும் கோரிக்கையை எடுத்துச்செல்ல தாமதம் காட்டுமாயின், வெண்ணெய் திரண்டு வருகையில் தாழி உடைந்த கதைபோல் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X