2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சிறைச்சாலையிலும் இன அழிப்பு

என்.கே. அஷோக்பரன்   / 2017 ஜூலை 17 , பி.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 101)

வெலிக்கடைச் சிறைச்சாலை 
இன அழிப்புப் படுகொலை

1983 ஜூலை 24 இரவு, பொரளையில் தொடங்கிய “கறுப்பு ஜூலை” இன அழிப்புத் தாக்குதல்கள், 25ஆம் திகதி மாலையளவில், கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளென வேகமாகப் பரவியிருந்தது. கொழும்பு நகரத்தில், சிறுபான்மையினரின் சொத்துகளும் உடமைகளும் கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருந்தன. மறுபுறத்தில், தமிழ் மக்களின் இரத்தம் வழிந்தோடிக்கொண்டிருந்தது. 

ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான அரசாங்கமும் அதன் அதிகாரக் கரங்களும், இந்த நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவில்லை. அரசாங்கம் அறிவித்த ஊரடங்கு கூட, வலுவற்றதாக இருந்தது. ஏனெனில், இன அழிப்பு தொடர்ந்து கொண்டுதான் இருந்தது என்று, 1983 “கறுப்பு ஜூலை” இன அழிப்பை நேரில் கண்ட பலரும் பதிவு செய்கின்றனர்.

35 தமிழ்க் கைதிகள்

கொழும்பு எரிந்து கொண்டிருந்த சூழலில், ஜூலை 25ஆம் திகதி மாலை, வெலிக்கடைச் சிறைச்சாலையிலும் இந்த பதற்ற சூழல் உணரப்பட்டது. வெலிக்கடைச் சிறைச்சாலை என்பது, கொழும்பில் அமைந்துள்ள அதிகபட்ச பாதுகாப்புக் கொண்ட சிறைச்சாலையாகும். 

1841இல் பிரித்தானிய காலனித்துவ ஆளுநர் கமரனின் ஆட்சிக்காலத்தில் ஸ்தாபிக்கப்பட்ட சிறைச்சாலையாகும். “கறுப்பு ஜூலை” இன அழிப்பு நடைபெற்ற போது, இந்தச் சிறைச்சாலையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சுமத்தப்பட்ட 29 நபர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாகக் காணப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட 6 பேர், சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருந்தனர்.

25ஆம் திகதி மாலை 2 மணியளவில், வெலிக்கடைச் சிறைச்சாலையின் “சப்பல் பிரிவில்” பரபரப்பு ஏற்பட்டது. மூன்று மாடிகளைக் கொண்டிருந்த சப்பல் பகுதிக் கட்டடம், ஏறத்தாழ 850 சிறைவாசிகளைக் கொண்டிருந்ததாக, ரீ.டீ.எஸ்.ஏ.திசாநாயக்க பதிவுசெய்கிறார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் குற்றவாளிகளாகக் காணப்பட்டு தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்தவர்கள் என மொத்தமாக 35 பேர், சப்பல் பகுதியின் கீழ் மாடியில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

மேல் மாடியில் சிறைவைக்கப்பட்டிருந்த மற்றைய சிறைவாசிகள் சிலர், கீழ் மாடியை அடைந்து, சிறைக்காவலர்களைத் தாக்கி, அவர்களிடமிருந்த சிறைப் பூட்டுகளுக்கான திறப்புகளைக் களவாடி, வெலிக்கடைச் சிறையின் சப்பல் பகுதிக் கட்டடத்தை, உள்ளிருந்து தாழிட்டுப் பூட்டினர்.

சிறையறைகளின் இரும்புக் கதவுகளிலிருந்து உடைத்தெடுக்கப்பட்ட இரும்புக் கம்பிகளையும் மரக்கட்டைகளையும் தமது கைகளில் ஆயுதமாக ஏந்தியிருந்த இவர்கள், அடுத்து பாரியதொரு கொடூரத்தை அங்கு நிறைவேற்றினர்.

அரங்கேறிய கொடூரம்

அங்கு அன்று அரங்கேறிய கொடூரத்தை, “இலங்கை - பயங்கரத்தின் தீவு (ஆங்கிலம்)” என்ற தமது நூலில் ஈ.எம்.தோன்டனும் ஆர்.நித்தியானந்தனும், இவ்வாறு பதிவு செய்கின்றனர்: “தப்பிப் பிழைத்த ஏனைய தமிழ் சிறைக்கைதிகளின் கூற்றுப்படி, சிங்களக் கைதிகள், சிறைக் காவலர்கள், சிவிலுடையிலுள்ளோர் என ஏறத்தாழ 400 பேர், தமிழ் சிறைக்கைதிகள் அடைக்கப்பட்டிருந்த இடத்துக்குள் நுழைந்தனர்.

சிறைக் கதவுகளைச் சிறைக் காவலர்கள்  திறந்துவிட, கத்திகள், இரும்புக் கம்பிகள், கோடரிகள் என்பவற்றால், தமிழ் சிறைக்கைதிகள் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.

அங்கிருந்த தமிழ் சிறைக்கைதிகளில் பெருமளவிலானோர், அடித்தே கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட அனைவரும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்தோரே (அல்லது தண்டனை பெற்றோரே). இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் டெலோ அமைப்பின் (தமிழீழ விடுதலைக் கழகம்) தலைவரான ‘குட்டிமணி’ என்றறியப்பட்ட செல்வராசா யோகசந்திரனும், அரசியல் எழுத்தாளரான கணேஷானந்தன் ஜெயநாதனும் உள்ளடக்கம்.

இவ்விருவரும் மரண தண்டனைக் கைதிகள். நீதிமன்றிலே குற்றவாளிக் கூட்டிலிருந்து தனது கண்களைத் தானம் செய்ய விரும்புவதாகவும், தான் காணமுடியாத தமிழீழத்தை தனது கண்கள் காணட்டும் என்று குட்டிமணி கூறியிருந்ததை ஞாபகம் வைத்திருந்த தாக்குதல் நடத்தியவர்கள், குட்டிமணியை  முழங்கால்களில் மண்டியிடச் செய்து, இரும்புக்கம்பிகளால் குட்டிமணியின் கண்களைக் குத்திக் கிண்டியெடுத்து வீசிய பின், குட்டிமணியைக் கொன்றனர்.

தப்பிப்பிழைத்த ஒரு தமிழ்க் கைதியின் கூற்றுப்படி, குட்டிமணியின் நாக்கை வெட்டிய ஒருவன், அந்த இரத்தத்தைக் குடித்துவிட்டு  ‘புலியின் இரத்தத்தை நான் குடித்துவிட்டேன்’ என்று கூக்குரலிட்டதாகத் தெரிகிறது.

இதன் பின்னர் கொல்லப்பட்ட 35 பேரின் உடல்களும், சிறைவளாகத்திலிருந்து புத்தர் சிலை முன் வைக்கப்பட்டு, ‘சிங்கள இராட்சசர்களின் இரத்தவெறியை ஆற்றுவதற்காக தியாகம் செய்து’ படைக்கப்பட்டனர்.

அப்போதுகூட, உயிர் உடலில் தங்கியிருக்க தம்மைக் காப்பாற்றுமாறு வேண்டியவர்களை, அங்கேயே அடித்துக் கொன்றனர். இவற்றை, அன்றைய தாக்குதலில் தப்பிப் பிழைத்த எஸ்.ஏ.டேவிட் பதிவு செய்கிறார். இதையொத்த விவரணத்தையே தனது நூலில், எம்.ஆர்.நாராயன் சுவாமியும் பதிவு செய்கிறார்.

இதேவேளை, இந்தச் சம்பவங்கள் பற்றிய பதிவுகள் ஆதாரமற்றவை என நிராகரிப்போரும் உள்ளனர். ரீ.டீ.எஸ்.ஏ.திசாநாயக்க உள்ளிட்ட சில சிங்கள எழுத்தாளர்கள், சிறைச்சாலைக் கலவரத்தில் பயங்கரவாதிகள் 35 பேர் கொல்லப்பட்டனர் என்பதைப் பதிவு செய்வதோடு சரி, அதன் விவரங்களுக்குள்ளும் விவரணங்களுக்குள்ளும் அவர்கள் செல்லவில்லை. 

ரீ.டீ.எஸ்.ஏ.திசாநாயக்க, கொழும்பு பிரதான நீதவான் கே.சீ.விஜேவர்தனவின் வெலிக்கடைச் சிறைச்சாலைச் சம்பவம் தொடர்பிலான மரண விசாரணை அறிக்கையிலிருந்து, பின்வரும் பகுதியை மேற்கோள் காட்டுகிறார், “என்னால் பதிவுசெய்யப்பட்ட சாட்சியங்களிலிருந்து, 1983 ஜூலை 25ஆம் திகதி, சப்பல் பிரிவின் மேல்மாடிகளின் பொதுவான அமைதியின்மை ஏற்பட்டு, அதன் விளைவாகக் கலவரம் ஒன்று நடந்துள்ளமை தெட்டத்தௌிவாகத் தெரிகிறது.

இந்தச் சிறைக்கைதிகள், கீழ் மாடியில் அமைந்துள்ள பி3 மற்றும் டி3 ஆகிய சிறைக்கூண்டுகளுக்குள் நுழைந்திருக்கிறார்கள். வன்முறை வெடித்திருக்கிறது. அதன் விளைவாக 35 சிறைக்கைதிகளின் மரணம் சம்பவித்திருக்கிறது.

குறித்த சிறைக்கூண்டுகளுக்குள் சென்ற சிறைக்கைதிகள் யாரென சந்தேகநபர்களாக அடையாளங்காண, சாட்சியங்கள் ஏதுமில்லாதிருக்கின்றன. சில சிறைக்கைதிகள், வன்முறையை அடக்குவதற்கு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறார்கள் என்பதற்குச் சாட்சியங்கள் உள்ளன.

சிறை அதிகாரிகளோ, பின்னர் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்ட இராணுவ அதிகாரிகளோ, தாக்குதலைத் தவிர்ப்பதற்கு அந்தச் சூழ்நிலையில் செய்திருக்கத்தக்கவை ஏதுமில்லை. அவர்கள் அனைவரும் ஆட்கொள்ளப்பட்டிருந்தனர். இந்தச் சம்பவத்துக்குக் கண்ணால் கண்ட சாட்சியமாக இருந்த எந்த சிறைக்கைதியும், இன்று என்முன் சாட்சியமளிக்க முன்வரவில்லை.

என்முன் சாட்சியமளித்த இருவரும், கண்ணால் கண்ட சாட்சிகள் அல்லர், அவர்கள் எதனையும் காணவில்லை என்று ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். என்னிடம் சமர்ப்பிக்கப்பட்ட மரணித்த 35 சிறைக்கைதிகளினது பிரேத பரிசோதனை அறிக்கைகளை, நான் கவனமாக வாசித்துள்ளேன்.

அதன்படி 35 மரணங்களும், சிறையில் நடந்த கலவரத்தின் விளைவால் நடந்த கொலைகள் என்று தீர்மானிக்கிறேன். ஆகவே, பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை, மேலதிக விசாரணைகளை நடத்துமாறு நான் பணிக்கிறேன்” என்றார்.

பின்னணியில் யார்?

1983 வெலிக்கடைச் சிறைச்சாலை இன அழிப்பின் பின்னணியில், அரசாங்கமும் அரசாங்கத்துடன் தொடர்புபட்ட பாதாள உலகக் கோஷ்டிகளுக்கும் தொடர்புண்டு என்ற விடயங்கள், சில நீண்டகாலத்தின் பின்பு வௌிவரத் தொடங்கின.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்களுக்கும் பாதாள உலகக் கோஷ்டிகளுக்குமான தொடர்புகள் பற்றி, அரசல் புரசலான பேச்சுகளும் கிசு கிசுக்களும், நீண்டகாலமாக இருந்து வந்திருக்கின்றன. குறிப்பாக, பிரேமதாஸ தொடர்பில், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தன.

இதைப் பற்றிப் பலரும் பல்வேறு தளங்களிலும் எழுதியிருக்கின்றனர். ஆனால், இதன் உண்மைத் தன்மைகள் பற்றிய நிச்சயங்கள் எதுவுமில்லை. இது ஓர் அழுக்குக் கிடங்கு. இதைத் திறப்பது, புழுக்கள் நிறைந்த பேணியைத் திறப்பதற்கு ஒப்பானதாகும்.

ஆனால், 1983 “கறுப்பு ஜூலை” வெலிக்கடைச் சிறைச்சாலை இன அழிப்புப் படுகொலைகளுக்கு பின்னணியில், கொணவால சுனில் என்ற பாதாள உலகத் தலைவன் இருந்ததாக, ஓய்வுபெற்ற பிரதி சிறைச்சாலைகள் ஆணையாளர் ஆர்.ஜே.என்.ஜோர்டன், 1999இல் பத்திரிகைகளுக்கு வௌிப்படையாக எழுதியிருந்தார்.

கொணவால சுனிலின் ஆட்களே, வெலிக்கடைச் சிறைச்சாலை இன அழிப்பின் பின்னணியில் இருந்ததாக இவர் தெரிவித்தார். கொணவால சுனில் என்ற இந்த பாதாள உலக நபருக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் தொடர்புண்டு என்று, பலரும் பதிவு செய்திருக்கின்றனர்.

கம்பஹா மாவட்டத்தில் கொணவால சுனிலின் குடும்பம், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாகச் செயற்பட்ட குடும்பங்களில் ஒன்று. ஐக்கிய தேசியக் கட்சியின் சிறிய கூட்டங்கள் பலவும், கொணவால சுனிலின் வீட்டில் நடந்ததாக, சிலர் பதிவு செய்கின்றனர்.

கடன தொகுதி இடைத் தேர்தலின் போது, ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சார்பாக வாக்குப் பெட்டிகளைக் களவாடியதாகக் கூட, கொணவால சுனில் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. 15 வயது சிறுமி ஒருத்தியை வன்புணர்ந்த குற்றத்துக்காக, கொணவால சுனிலுக்கு, 1970களின் இறுதிப்பகுதியில் 15 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மேன்முறையீட்டிலும் அந்தத் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால், 1982 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பதாக, கொணவால சுனில், ஜனாதிபதியின் மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டான்.

இது கொணவால சுனிலுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமான தொடர்பை நிரூபிப்பதில் வலுச்சேர்க்கிறது. 15 வயது சிறுமியை வன்புணர்ந்த குற்றவாளிக்கு, ஜனாதிபதி மன்னிப்பு அளிக்க வேண்டியது ஏன்? பதிலில்லை. 1999இல் ஓய்வுபெற்ற பிரதி சிறைச்சாலைகள் ஆணையாளர் ஆர்.ஜே.என்.ஜோர்டன் வௌிப்படுத்திய மேற்குறித்த விடயம் பற்றி, அவரிடம் கூட விசாரணை நடத்தப்படவில்லை.

எந்தவித நடவடிக்கையும் இது சார்ந்து முன்னெடுக்கப்படவில்லை என்பது, கவலையளிக்கும் விடயமாகும். இந்த பாதாள உலக நடவடிக்கைகள் பற்றிய உண்மைகளைத் தேடப் போனால், அது இன்னும் நிறைய அழுக்குகளை நிச்சயம் வௌிக்கொண்டு வந்திருக்கும்.

ஜே.ஆரின் ஆட்சியினதும், தொடர்ந்த பிரேமதாஸவின் ஆட்சியினதும் இன்னொரு கொடூரமான, பயங்கரமான, அழுகிய முகம் வௌிக்கொண்டு வரப்படலாம். நிற்க.
1983 ஜூலை 25ம் திகதி வெலிக்கடைச் சிறைச்சாலையில் 35 தமிழ்க் கைதிகள் இன அழிப்புப் படுகொலையில் பலியெடுக்கப்பட்டிருந்தனர்.

ஆனால், இத்தோடு இது நின்றுவிடவில்லை, இன்னும் இரண்டு நாட்களில், இந்தக் கொடூரத்தின் இரண்டாவது அத்தியாயம், இதே வெலிக்கடைச் சிறைச்சாலையில் நிறைவேற்றப்படக் காத்திருந்தது. 

தாக்குதலுக்காளான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினர்

இதேவேளை, கொழும்பு நகரில் பற்றியெரிந்த “கறுப்பு ஜூலை” இன அழிப்பில், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் பாதிக்கப்பட்டனர். தமிழ்ப் பெயர்களையும் தமிழ்ப் பெயர்களையொத்த பெயர்களைக் கொண்டிருந்த அவர்களும் தாக்குதலுக்காளானார்கள்.

குறிப்பாக இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் பணியாற்றிய சிலர், வௌ்ளவத்தைப் பகுதியில் வசித்துவந்தனர், அவர்களது வீடுகள், இன அழிப்பு காடையர்களால் தாக்கப்பட்டது.

உடனடியாகச் செயற்பட்ட இந்திய உயர்ஸ்தானிகராலயம், தமது பணியாளர்களை அங்கிருந்து வௌியேற்றி, கொழும்பு ஒபரோய் ஹோட்டலில் தங்க வைத்தது. இதுவேளை, மாலையில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதன்மைச் செயலாளர் எம்.ஜே.ஆப்ரஹாம்ஸின் வாகனத்துக்கு, பம்பலப்பிட்டிப் பகுதியில் வைத்துத் தீ வைக்கப்பட்டது.

இதில், ஆப்ரஹாம்ஸூம் அவரது உதவியாளர் கே.வி.ஐயரும் காயமடைந்தனர். படுகாயங்களுக்கு உள்ளான கே.வி.ஐயர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசாங்கம், உடனடியாக இந்திய உயர்ஸ்தானிகராலயத்துக்கான பாதுகாப்பை அதிகரித்ததுடன், உயர்ஸ்தானிகராலயத்தினர் அடைந்த பாதிப்புகளுக்காக, ஒரு மில்லியன் 217 ஆயிரம் ரூபாயை நட்டஈடாகச் செலுத்தியதாக, ரீ.டீ.எஸ்.ஏ.திசாநாயக்க பதிவுசெய்கிறார். 

25ஆம் திகதி, கொழும்பும் கொழும்பை அண்டிய பகுதிகளும் மேல்மாகாணத்தின் வேறு சிலபகுதிகளிலுமே இன அழிப்பு வன்முறைகள் நடந்து கொண்டிருந்தன. ஆனால் 26ஆம் திகதி, இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கு இந்த வன்முறைகள் பரவின. 
(அடுத்த வாரம் தொடரும்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X