2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஜெனீவாவுக்குப் பிறகு, எங்கே கையேந்துவது?

Johnsan Bastiampillai   / 2021 பெப்ரவரி 21 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

கடந்த பத்தாண்டுகளாக, ஈழத்தமிழ் அரசியலின் மையப்புள்ளிகளில் ஒன்றாக ஜெனீவா இருந்துவருகின்றது. ஒருபுறம் இலங்கையில் இருந்து பிரமுகர்கள் அங்கு காவடியெடுக்க, ‘புலம்பெயர் புத்திமான்கள்’ நடைபவனி, பேரணி, ஈருளிப் பயணம் என ஐரோப்பியத் தலைநகரங்களில் இருந்து, ஜெனீவாவை நிறைத்தார்கள். 

ஜெனீவாவில் தமிழ் மக்களுக்கு நன்மை விளையாது என, 2010ஆம் ஆண்டுமுதலே, சொல்லி வந்தவர்கள் இருக்கிறார்கள். இலங்கையைத் தங்கள் வழிக்குக் கொண்டுவருவதற்கான ஒரு களமாக, ஜெனீவா பயன்படுகிறது. அதற்கு தமிழர் பிரச்சினை ஒரு துரும்புச்சீட்டு மட்டுமே என்பதை, தொடர்ச்சியாக வலியுறுத்தியவர்களை, அரசியல் தெரியாதவர்கள், உலகறிவு அற்றவர்கள், தேசியத்தின் விரோதிகள் எனப் பலவாறு நிந்தித்தார்கள். 

கடந்த வாரம், “ஜெனீவாவில் தமிழர்களுக்கு நன்மை விளையாது” என்று, ஐ.நாவில் பணியாற்றியவர்களே சொல்லி விட்டார்கள். இவர்களின் மொழியில், ‘மணிகட்டின மாடு’ சொல்லிவிட்டது. இனி என்ன?   

உலகத் தமிழர் பேரவை, கனடிய தமிழர் பேரவை, நியூயோர்க் பல்கலைக்கழகத்தின் மனித  உரிமைகளுக்கும் சர்வதேச நீதிக்குமான நிலையம், சமாதானத்துக்கும் நீதிக்குமான இலங்கை செயற்பாட்டு அமைப்பு ஆகியன இணைந்து ஒழுங்குசெய்த ‘இலங்கை: நீதி,சட்டம் ஒழுங்கு, ஜனநாயக உரிமைகளுக்கான தேடல்’ என்ற தலைப்பில் அமைந்த கருத்தாடல் நிகழ்வில், இலங்கை தொடர்பில் பணியாற்றிய உயர்நிலை ஐ.நா அதிகாரிகள், சில முக்கியமான செய்திகளைச் சொல்லி இருக்கிறார்கள். இச்செய்திகள் மிக முக்கியமானவை.

இக்கலந்துரையாடலில் பங்குபற்றியோரில் ஒருவர், ஐ.நாவின் முன்னாள் துணைச் செயலாளர் நாயகமாக இருந்த சார்ள்ஸ் பெற்றி. ஐ.நா செயலாளர் நாயகம், ஜூன் 2010ஆம் ஆண்டு இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பில் ஆராய்வதற்கான நிபுணர் குழுவை நியமித்தார். அக்குழு, தனது அறிக்கையை ஏப்ரல் 2011இல், ஐ.நா செயலாளர் நாயகத்திடம் கையளித்தது. 

அவ்வறிக்கையின் முக்கியமான முடிவுகளில் ஒன்று, ‘இலங்கை விடயத்தில் ஐ.நா தவறிழைத்தது’ என்பதாகும். நிபுணர் குழு, தனது அறிக்கையில், ‘மக்களைப் பாதுகாப்பதை, தனது பிரதான கடமையாகக் கொண்ட ஐ.நா, அந்தக் கடமையில் இருந்து தவறியது. இலங்கை விடயத்தில், அடிப்படை மனித உரிமைகளைக் காக்கத் தவறி, தவறிழைத்துவிட்டது’ என்று குறிப்பிட்டது. 

இதையடுத்து, இலங்கையில் ஐ.நா நடந்துகொண்ட விதம் தொடர்பில், உள்ளக மீளாய்வு ஒன்றைச் செய்வதற்கான குழுவை, ஐ.நா செயலாளர் நாயகம் உருவாக்கினார். அக்குழுவின் தலைவராக இருந்தவரே சார்ள்ஸ் பெற்றி. ஒன்பது மாதகாலப் பணியின் பின்னர், அவ்வறிக்கை,  2012 நவம்பர் மாதம், ஐ.நா செயலாளர் நாயகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 128 பக்கங்கள் நீள்கிற அறிக்கை, ‘பெற்றி அறிக்கை’ எனப் பொதுவாக அறியப்பட்டது.

ஐ.நாவின் அமைப்பு ரீதியான செயற்பாட்டடை விமர்சிக்கும் உள்ளக மீளாய்வு அறிக்கையாக இது இருந்தும், ஐ.நா சபையின் அறிக்கை என்ற அடிப்படையில், அதில் சொல்லப்பட்ட விடயங்களுக்குள்ள பெறுமதியை மறுக்க இயலாது. 
அவ்வறிக்கை, ‘இலங்கையில் ஓர் இனப் படுகொலை, அரங்கேறாது தடுப்பதற்கு வழிகள் இருந்தும், ஐ.நா அசமந்தப் போக்குடன் செயற்பட்டது’ எனக் கோடிட்டுக் காட்டுகிறது. 

அதேவேளை, போர் முடிந்த பின்னர், மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் துன்பப்படுகையில், ஐ.நா வாளாவிருந்ததையும் சுட்டிக்காட்டுகிறது. இன்றும் பொதுவெளியில், கிடைக்கின்ற  அறிக்கையில் சில பகுதிகள், கறுப்பு மையால் நீக்கப்பட்டிருக்கின்றன. அப்பகுதிகள், ஐ.நாவின் செயலாளர் நாயகம் பன் கீ மூனையும் அவரது பிரதான அலுவலர் விஜய் நம்பியாரையும் குற்றம் சாட்டுகின்றன.நடந்தேறிய மனிதப் படுகொலைக்கான இரத்தம் தோய்ந்த கரங்களுடையோராக இவ்விருவரையும் சுட்டுகின்றன. இதை, ஐ.நா பணியாளர்களே சொல்லியிருக்கிறார்கள். ஐ.நா பற்றிய மாயைகளைக் களைய, இன்றும் வாசிக்கப் பயனுள்ள அறிக்கையையே சார்ள்ஸ் பெற்றி தந்திருக்கிறார். 

கடந்த வாரம், சார்ள்ஸ் பெற்றி என்ன சொன்னார் என்கிற விடயத்துக்கு வருவோம். கலந்துரையாடலின் போது, தனது தொடக்கவுரையை அவர் பின்வருமாறு நிறைவு செய்தார். 

“உலகளாவிய ரீதியில், மனித உரிமை மீறல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் முகங்கொடுப்பதில் ஓர் அமைப்பாக, ஐக்கிய நாடுகள் சபை இன்று செயலிழந்துள்ளது. இதன் அர்த்தம், ஐ.நாவிடம் இதற்கான வழிமுறைகளோ கருவிகளோ இல்லை என்பதல்ல. மாறாக, அதற்கான தைரியமும் விருப்பமும் அதனிடம் இல்லை. அரசியல் கணக்குகளைப் புறந்தள்ளி, ஐ.நாவின் சாசனத்தை நிறைவேற்றும் வகையில், ஐ.நா செயலாற்ற வேண்டும். இதை, ஐ.நா செய்யுமா என்பதைக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால், உடனடியாகவும் குறுகிய கால நோக்கிலும் நீதியையும் தேவையையும் எதிர்பார்த்து இருப்போருக்கு, நான் சொல்வது ஒன்றுதான்; ஐ.நாவை நம்பி இராதீர்கள். ஐ.நா, தனது சாசனத்தின் படி நடந்துகொள்ளும் என்று எதிர்பாராமல் இருப்பது நல்லது. அது பலத்த ஏமாற்றங்களையும் தேவையற்ற துன்பங்களையும் தவிர்க்க உதவும்”. 

இச்சொற்கள், மிகவும் சாதாரணமான ஒருவர் உதிர்த்தவையல்ல. 20 ஆண்டுகளுக்கு மேலாக, ஐ.நாவில் பணியாற்றிய ஒருவரின் வார்த்தைகள். ருவாண்டா, மியான்மார், ஆப்கானிஸ்தான், கொங்கோ என பாரிய மனிதஉரிமை மீறல்கள் இடம்பெற்ற நாடுகளில் எல்லாம், ஐ.நாவின் அலுவலராகப் பணியாற்றிய ஒருவரின் வார்த்தைகள் ஆகும். 

சார்ள்ஸ் பெற்றியைத் தொடர்ந்து கருத்துரைத்த, ஐ.நாவின் இலங்கைக்கான முன்னாள் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிறீப்,  “பெற்றியின் கருத்துகளையே, நான் எதிரொலிக்கிறேன்” எனச் சொன்னார். தனது உரையின் நிறைவில் இரண்டு விடயங்களை அவர் அடிக்கோடிட்டார். 

“இலங்கையின் எதிர்காலம், இலங்கையர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. இலங்கை மக்களே, தங்களுக்கான உரிமைகளை வெல்வதற்கும் தக்கவைப்பதற்கும் பங்களிக்க வேண்டும். அதேவேளை, மனித உரிமைகள் என்பதை, வெறுமனே ஒரு சமூகத்தின் நலன்களுக்கு மட்டுமே உரியதாகச் சுருக்கிவிடாதீர்கள். அது தவறானது. அனைத்துச் சமூகத்தினரையும் ஒன்றிணைக்கும் கருத்தாக, மனித உரிமைகளை மாற்றுங்கள். இது அனைத்து இலங்கையருக்கும் ஆனது என்பதை, நினைவில் கொள்ளுங்கள்”.      

இருவரது கருத்துகளும் மிக முக்கியமானவை. கடந்த ஒரு தசாப்த காலமாகக் கிளுகிளுப்பான, பரபரப்பான, உணர்ச்சிவசமான களமாக ஜெனீவா, இலங்கையிலும் புலம்பெயர் தேசங்களிலும் ஈழத்தமிழர்களிடையே இருந்துவந்துள்ளது. 

இந்தக்களம் குறித்த நேர்மையானதும் வெளிப்படையானதுமான கருத்துகளை ஏற்க, எம்மில் பலர் தயார் இல்லை. ஏனெனில், போரின் நிறைவு முதல், ‘தமிழ் மக்களுக்கான தீர்வு, ஜெனீவாவிலிருந்தே கிடைக்கும்’ என்றுதான் பலரும் சொல்லி வந்திருக்கிறார்கள். 

கடந்த பத்தாண்டு கால, ஈழத்தமிழ் அரசியல் போக்கைத் திரும்பிப் பார்த்தால், சில விடயங்களைப் புரிந்து கொள்ளவியலும். 

முதலில், ஜெனீவாவில் நிறைவேற்றப்படும் தீர்மானம், தமிழ் மக்களுக்கு விடிவைப் பெற்றுத்தரும் என்றும் இனி, தமிழ் மக்களின் உரிமைகளை, ஐ.நா உறுதிப்படுத்தும் என்றும் சொல்லப்பட்டது. 

இந்தியா எவ்வாறு இலங்கை அரசுக்கு அழுத்தங்களைப் பிரயோகித்து, வட மாகாண சபைத் தேர்தலை நடத்தி, அவ்வாறே வடமாகாண சபையின் ஊடாகத் தமிழ் மக்களுக்கான விடிவைப் பெற்றுத் தரும் என்று சிலரும், மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தை அகற்றிய அமெரிக்கா, இன்னோர் அரசாங்கத்தை உருவாக்குவதன் மூலம், தமிழருக்கான தீர்வு சாத்தியமாகும் என்று, வேறு சிலரும் சொன்னார்கள். 

வடமாகாண சபையையும் கண்டோம்; மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் அகற்றப்பட்டு, நல்லாட்சி அரசாங்கத்தையும் கண்டோம். இன்று, தொடங்கிய இடத்தில் மீண்டும் வந்து நிற்கிறோம். தமிழ் மக்கள், தங்கள் மீதில்லாமல், பிற அனைத்தின் மீதும் நம்பிக்கை வைக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது

இனியாவது நாம், அந்நியக் கனவுகளில் இருந்து அகல வேண்டும். எமக்கான போராட்ட வெளிகளை, நாம் உருவாக்க வேண்டும். மக்களைப் போராட்டத்தின் மையமாக்க வேண்டும். குறுகிய கட்சி அரசியலையும் வாக்கு அரசியலையும் விடுத்து, ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும். 

ஜெனீவாவை வைத்து அரசியல் செய்பவர்களது உடனடிப் பிரச்சினை, ஜெனீவாவில் என்ன நடக்கும் என்பதல்ல; மாறாக, ஜெனீவாவுக்குப் பிறகு, எங்கு கையேந்துவது என்பதுதான்.

கலந்துரையாடலின் நிறைவுக் கருத்தாக, சார்ள்ஸ் பெற்றி உதிர்த்த சொற்கள் மனங்கொள்ளத்தக்கவை: 

“இலங்கை மக்களுக்கான எனது அறிவுரை யாதெனில், ஐ.நாவை நம்பி இராதீர்கள்; நீங்கள் ஏமாந்துபோகக் கூடும். உங்கள் எதிர்ப்பாற்றலில் நம்பிக்கை வையுங்கள். ஐ.நாவை மையப்படுத்தி, உங்கள் மூலோபாயங்களை வகுக்காதீர்கள்” என்பதாக அமைந்துள்ளது.  

தமிழ் மக்களின் உரிமைக்கும் நீதிக்குமான நெடிய போராட்டத்தின் முக்கியமான ஒரு புள்ளியில் நிற்கிறோம். எம்முன்னே, இரண்டு தெரிவுகள் உள்ளன. தமிழ் மக்களுக்கு, அன்று முதல் இன்று வரை மறுக்கப்பட்டு வருகின்ற மனித உரிமைகளும் அடிப்படை உரிமைகளும், சிங்கள, முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களுக்கும் மறுக்கப்படுபவற்றையும் பரந்த நோக்கில் கண்டு, இன்றைய சூழலில் அனைத்து மக்களையும் அணிதிரட்டிப் போராடுவதற்கேற்ற அரசியல் கொள்கையுடனும் வேலைத்திட்டத்துடனும் மக்களை  அணிதிரட்டப் போகிறோமா? அல்லது, இன்னொரு சக்தியை ‘ஆபத்பாண்டவர்’ என்று நம்பிக் கையேந்தப் போகிறோமா?


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .