2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதித் தேர்தல் உடனடிச் சாத்தியமா?

கே. சஞ்சயன்   / 2019 ஜனவரி 11 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அரசியலில், 52 நாள்கள் நீடித்த குழப்பம் முடிவுக்கு வந்த பின்னர், தேர்தல் பரபரப்பு தொற்றிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது.  

முறைப்படி மாகாணசபைத் தேர்தல்கள் தான், முதலில் நடத்தப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு உள்ளிட்ட ஆறு மாகாணசபைகளின் பதவிக்கால‍ங்கள்  ஏற்கெனவே முடிந்து விட்டன. ஆனாலும், உடனடியாக மாகாணசபைத் தேர்தல்களை நடத்தும் திட்டத்தில், அரசாங்கம் இருப்பதாகத் தெரியவில்லை.   

முன்னர், மாகாணசபைத் தேர்தல்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே இழுத்தடித்தது. இப்போது, மஹிந்தவின் நிழலில் உள்ள பொதுஜன பெரமுனவுடன் கூட்டு வைத்துக் கொண்டுள்ள சுதந்திரக் கட்சி, மாகாணசபைத் தேர்தலுக்குத் தயாராக இருக்கிறது.  

ஆனால், தற்போதைய ஆளும்கட்சியான ஐ.தே.க, மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்தும் திட்டத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் முதலில் எதிர்பார்ப்பது ஜனாதிபதித் தேர்தலைத் தான். முதலில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அதற்குப் பின்னர் மாகாணசபைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் போன்றவற்றை நடத்தலாம் என்றும், ஐ.தே.கவினர் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.  

இந்தநிலையில், ஜனாபதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று, கடந்த ஒன்பதாம் திகதியுடன் நான்கு ஆண்டுகள் முடிந்து விட்டன. ஜனாதிபதி ஒருவர், தான் பதவியேற்ற நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், எந்த நேரத்திலும், முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கு, அரசமைப்பு அனுமதித்துள்ளது. ஜனாதிபதி சிறிசேன விரும்பியோ விரும்பாமலோ, இந்த ஆண்டு இறுதிக்குள், ஜனாதிபதித் தேர்தலை நடத்தித் தான் ஆகவேண்டும். 

அவரது பதவிக்காலம், அடுத்த ஆண்டு ஜனவரி எட்டாம் திகதியுடன் காலாவதியாகி விடும். அதிலிருந்து 30 நாள்களுக்கு முன்னதாக, தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே, இந்த ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவது உறுதி. அது முன்கூட்டியே நடத்தப்படுமா, இல்லையா என்பதே இப்போதுள்ள கேள்வி.  

ஜனாதிபதி சிறிசேன, தெளிவான முடிவுகளை எடுக்கும் ஒருவரல்ல. அதை அவர், கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதிக்குப் பின்னர், பல சந்தர்ப்பங்களில் நிரூபித்திருக்கிறார். எனவே, அவர் முன்கூட்டியே தேர்தலை நடத்துவாரா, இல்லையா என்பதில் தெளிவான எதிர்வுகூறலை முன்வைக்க முடியாது.  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசமைப்பை மீறிவிட்டார் என்பதை, உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, உறுதி செய்து விட்டது என்றும், அரசமைப்பை மீறிய அவர், இனிமேல் ஜனாதிபதியாக இருப்பதற்குத் தகுதியில்லை என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம போன்ற மஹிந்த தரப்பில் உள்ளவர்களே கூறுகின்றனர். ஐ.தே.கவும், ஜனாதிபதித் தேர்தலை நடத்தத் தயாரா என்று சவால் விட்டுக் கொண்டிருக்கிறது.  

முறைப்படி பார்த்தால், வரும் நவம்பர், டிசெம்பரிலேயே ஜனாதிபதி தேர்தல் நடத்த வேண்டிய காலப்பகுதியாகும். அதற்கு முன்னதாக, ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்படுமாயின், அதற்கு ஒரேயொரு சந்தர்ப்பம் தான் இருக்கிறது.  

ஜனாதிபதி சிறிசேன, மீண்டும் இரண்டாவது பதவிக்காலத்துக்குப் போட்டியிட முடிவு செய்தால் மாத்திரமே அது சாத்தியப்படும். இதுவரையில், இரண்டாவது பதவிக்காலத்துக்காகப் போட்டியிடுவது பற்றி, ஜனாதிபதியிடம் இருந்து தெளிவான சமிக்ஞை எதுவும் வெளியாகவில்லை. இந்த விடயத்தில் அவர் குழப்பமான அறிவிப்புகளையே வெளியிட்டு வந்திருக்கிறார்.  

ஜனாதிபதியாக பதவியேற்ற காலத்தில், மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று கூறிவந்தார். எனினும், காலப்போக்கில் அவர் அந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதை தவிர்த்து வந்திருக்கிறார். அதுமாத்திரமன்றி, இரண்டாவது பதவிக்காலத்துக்காக, பொதுவேட்பாளராக ஐ.தே.க தன்னை முன்னிறுத்தப் போவதில்லை என்பதை உறுதி செய்து கொண்ட பின்னரே, ரணில் விக்கிரமசிங்கவுடனான கூட்டு அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முடிவையும் அவர் எடுத்திருந்தார். 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பலரும், அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தான் என்று, அடித்துச் சொல்லுகின்றனர்; அதை அவர் தடுக்க முனையவில்லை.இவையெல்லாம், மீண்டும் போட்டியிடும் முனைப்பில் தான் அவர் இருக்கிறார் என்பதையே வெளிப்படுத்துகின்றன.  

மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதித் தேர்தலில் போதுவேட்பாளராக களமிறக்க மஹிந்த ராஜபக்‌ஷ இணங்கிய பின்னரே, கடந்த ஒக்டோபர் 26 ஆட்சிக்கவிழ்ப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும், ஒரு பேச்சு உள்ளது.  

கடந்தவாரம் ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு மஹிந்த ராஜபக்‌ஷ அளித்திருந்த செவ்வியில், “அடுத்த ஜனாதிபதி தேர்தலில், மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராக நிறுத்த முடிவு செய்துள்ளீர்களா?” என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, “இல்லையில்லை. அதுபற்றி முடிவு செய்வதற்கான நேரம் இன்னமும் வரவில்லை. நேரம் வரும் போதே, வேட்பாளர் யார் என்பதைத் தீர்மானிப்போம்” என்று கூறியிருந்தார்.  

இப்போதைய நிலையில், மைத்திரிபால சிறிசேனவோ, மஹிந்த ராஜபக்‌ஷவோ உண்மைகளை வெளியிடும் நிலையில் இல்லை. கடந்த சில மாதங்களில் அவர்கள் வெளியிட்ட தகவல்களே அதற்குச் சான்று. ஊடகங்களையும் கட்சிகளையும் நாட்டு மக்களையும் பல சந்தர்ப்பங்களில் திசை திருப்ப முனைந்திருக்கிறார்கள்.  

எனவே, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விடயத்திலோ, அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் விடயத்திலோ, இவர்கள் இருவருமே முன்கூட்டியே எந்த இரகசியத்தையும் கசிய விடமாட்டார்கள்.  

தம்மை ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயார்படுத்திக் கொண்டு, ஐ.தே.கவுக்கு அதற்கான அவகாசத்தைக் கொடுக்காத வகையில், திடீர் தேர்தல் அறிவிப்பை வெளியிடவே மைத்திரி, மஹிந்த கூட்டு விருப்பப்படும்.  அதேவேளை, மைத்திரிபால சிறிசேனவே பொதுவேட்பாளராக போட்டியிடுவார் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச்செயலராக நியமிக்கப்பட்டுள்ள தயாசிறி ஜெயசேகர வெளியிட்டுள்ள கருத்துக்கு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் வெளியிட்டுள்ள கருத்தும் இங்கு கவனிக்க வைக்கிறது.  

அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை மஹிந்த ராஜபக்‌ஷவே தீர்மானிப்பார் என்றும், அதனை வேறெவரும் முடிவு செய்ய முடியாது என்றும் அவர் கூறியிருக்கிறார். அதைவிட, மொட்டுச் சின்னத்திலேயே போட்டியிடுவார் என்பதையும் அவர் வலியுறுத்தியிருக்கிறார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மொட்டு சின்னத்துக்குள் அடங்கிப்போகும் நிலையை அந்தக் கட்சியினர் விரும்பவில்லை.  

அதேவேளை, மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தும் முடிவை மஹிந்த ராஜபக்‌ஷ எடுத்தால், பொதுஜன பெரமுனவுக்குள்ளேயும் குழப்பம் வெடிக்கும் நிலை காணப்படுகிறது. குமார வெல்கம போன்றவர்கள், மைத்திரிபால சிறிசேனவைக் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.  

மஹிந்த ராஜபக்‌ஷ இரண்டு விடயங்களை கருத்தில் கொண்டே மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது பற்றித் தீர்மானிப்பார்.  

முதலாவது, வெற்றிபெறக் கூடிய வாய்ப்பு. மைத்திரிபால சிறிசேனவுக்கு செல்வாக்கு சரிந்துள்ள சூழலில் அவரை போட்டியில் நிறுத்தி, தனது கட்சியின் பெயரைப் பாழடிக்க, அவர் தயாராக இருக்கிறாரா என்ற கேள்வி இருக்கிறது. மைத்திரிபால சிறிசேனவைப் பொதுவேட்பாளராக நிறுத்தி தோல்வி கண்டால், அது மஹிந்த தரப்பின் தோல்வியாகவே அடையாளப்படுத்தப்படும். அது, பொதுஜன பெரமுனவுக்கும் இழப்பாக அமையும்.  

இரண்டாவதாக, தனது சொல்லுக்குக் கட்டுப்படும் ஒருவரையே, வேட்பாளராக நிறுத்த முனைவார் மஹிந்த ராஜபக்‌ஷ.  

கோட்டாபய ராஜபக்‌ஷ விடயத்தில் அவருக்கு சில குழப்பங்கள் இருந்தாலும், அவரையோ பசில் ராஜபக்‌ஷவையோ, வேட்பாளராக நிறுத்துவதில் பிரச்சினைகள் உள்ளன. அவர்கள் அமெரிக்க குடியுரிமையை துறப்பதில் பிரச்சினைகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதேவேளை, மைத்திரிபால சிறிசேன இப்போதைக்கு, மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு தலையாட்டும் ஒருவராக மாறியிருக்கிறார்.

ஆனாலும், அவரை எந்தளவுக்கு அவர் நம்புவார் என்பது கேள்வி. ஆனாலும், சில அரசியல் நெளிவுசுழிவுகளைக் கருத்தில் கொண்டு, மைத்திரிபாலவை பொதுவேட்பாளராக நிறுத்த மஹிந்த ராஜபக்‌ஷ முன்வரக் கூடும்.  

மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற வேண்டுமானால், அதற்கு சிறுபான்மையினரின் ஆதரவு தேவை. இந்தநிலையில் தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு எதிரான ஒரு நகர்வாகத் தான், வடக்குக்கு தமிழரையும் கிழக்குக்கு முஸ்லிமையும் ஆளுநராக நியமித்திருக்கிறார். இது ஜனாதிபதி தேர்தலுக்கான ஒரு முன்னோட்டமாக இருக்க வாய்ப்புகள் உள்ளன.  

எவ்வாறாயினும், மைத்திரிபால சிறிசேன தனக்கான வெற்றிவாய்ப்பை உறுதி செய்யாமல், முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை நடத்த முனைவார் என்று எதிர்பார்க்கவும் முடியாது.  
ஏனென்றால் அவர் தனது பதவிக்காலம் முழுவதற்கும் பதவியில் இருப்பேன் என்பதை ஏற்கெனவே வெளிப்படுத்தியிருக்கிறார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .