2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

ஜப்பானைத் தனிமைப்படுத்தும் சிங்கப்பூர் சந்திப்பு

Editorial   / 2018 ஜூன் 11 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஜனகன் முத்துக்குமார்

வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான அண்மைக்காலத்து சமாதான இணக்கப்பாடுகளைத் தொடர்ந்து, வடகொரியத் தலைவருக்கும் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதிக்கும் இடையில் சிங்கப்பூரில் சந்திப்பு நடைபெறவிருக்கும் நிலையில், குறித்த இரண்டு விடயங்களிலும் தனது பங்கு இல்லாமல் போனமை குறித்து, ஜப்பான் கவலை தெரிவித்துள்ளமை, சர்வதேச விவகாரங்களில் மிகவும் உன்னிப்பாகப் பார்க்கப்பட வேண்டியதாகவும்.

தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன்னுடன் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கருத்துத் தெரிவித்த ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபே, ​​ஐ.அமெரிக்க - வடகொரிய பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், வடகொரியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்றை நடாத்த விரும்புவதாகவும், அதன்மூலமாக வடகொரியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ளமுடியும் எனவும் கருத்து தெரிவித்திருந்தார். ஜப்பானின் குறித்த வெளிப்படையான இராஜதந்திர நகர்வானது, வெறுமனே ஜப்பான் - வடகொரிய உறவுகளை மேம்படுத்தும் ஒரே ஓர் எண்ணத்துடன் அமைந்த விடயம் அல்ல என்பதே, இங்கு கவனிக்கப்பட வேண்டியதாகும்.

ஜப்பானுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள், பனிப்போருக்குப் பிந்திய காலத்திலிருந்து மிகவும் நீண்ட வரலாற்றைக் கொண்டன. 1991ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் திகதி பியோங்கியாங்கில் தொடங்கியிருந்த பேச்சுவார்த்தைகள், 13 முறையாக இறுதியில் பெப்ரவரி 8, 2006இல், பெய்ஜிங் வரை தொடர்ந்திருந்தன.

1991 முதல் 1992 வரை 2 ஆண்டுகளுக்குள், முதல் 8 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. குறித்த காலத்தில் இது, வடகிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் நிலவிய அரசியல் காரணிகள் மற்றும் 1991 டிசெம்பரில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னரான மூலோபாய நகர்வுகள் மத்தியில் ஆரம்பமானபோதிலும், கொரியத் தீபகற்பம் மீதான ஜப்பானிய ஆக்கிரமிப்புக் காலம் பற்றிய சட்டபூர்வத்தன்மை தொடர்பான முரண்பாடுகள்,  ஜப்பான் வடகொரியாவின் அபிவிருத்தி தொடர்பாக வழங்கவிருந்த கடன்களை இழப்பீடு அல்லது கோரிக்கைகள் அடிப்படையில் வரையறுக்க வேண்டும் என வடகொரியா நிபந்தனை விதித்தமை, அணுசக்தி பற்றிய ஆய்வு மற்றும் ஆராய்ச்சி மையத் தளங்கள் தொடர்பான முயற்சிகளை வடகொரியா கைவிடவேண்டும் என ஜப்பான் நிபந்தனையிட்டமையைத் தொடர்ந்து, குறித்த பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறவில்லை.

பேச்சுவார்த்தைகள் மீண்டும் 2000களில், தென்கொரியாவில் இடதுசாரி கட்சி ஆட்சியில் இருந்தபோது நடைபெற்றபோதிலும், 2002 பியோங்கியாங் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட போதிலும், குறித்த பேச்சுவார்த்தைகள் எவ்வித முன்னேற்றமும் காணாமலேயே முடிவுற்றிருந்தன. 

இந்நிலையிலேயே ஜப்பான் இப்போது பேச்சுவார்த்தைக்கு முனைப்புக் காட்டுதல், கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியதாகும். ஏனெனில், ஜப்பான் கடந்த இருமுறையும் (1990, 2002) பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதன் அடிப்படையில் உண்மையிலேயே ஜப்பான், குறித்த கொரியா-ஜப்பான் முறுகல் நிலைக்குத் தீர்வு காணும் எண்ணம் இருக்கவில்லை என்பதும், அரசியல் புறக்காரணிகளே ஒவ்வொரு முறையும் செல்வாக்குச் செலுத்தியிருந்தமை என்பதுவும் - இன்னும் இம்முறையும் செல்வாக்குச் செலுத்துகின்றமையும், கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.

தனது பாதுகாப்புக்கு, தென்கொரியாவும் மேற்கத்தேய நாடுகளும் உறுதியளிக்குமாயின், தனது அணுவாயுதப் பரிசோதனையை, வடகொரியா முற்றாகக் கைவிடும் என, வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன், அண்மையில் தெரிவித்திருந்தார். இது, மேற்கத்தேய நாடுகளால் வெகுவாகவே வரவேற்கப்பட்டது.

இது, தென்கொரியா, ஐ.அமெரிக்கா மற்றும் ஏனைய மேற்கத்தேய நாடுகளுடன் இணைந்து, பொருளாதார மற்றும் சமூக நலன்களைக் கட்டியெழுப்புதல் மற்றும் இதர உடன்படிக்கைகளை வடகொரியா மேற்கொள்ள உதவும் என்ற போதிலும், ஜப்பானைப் பொறுத்தவரை இந்நிலை சாத்தியமானதன்று.

ஏனெனில், அணுவாயுதப் பரிசோதனையைக் கைவிடுதல் என்பது, ஜப்பானைப் பொறுத்தவரை முரண்பாடுகளைத் தீர்க்க உதவும் ஒரு நிபந்தனையே தவிர, ஒரேயொரு நிபந்தனை அல்ல. மாறாக, தென்கொரியா எவ்வாறு ஜப்பானுடன் நீண்டகால பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்களைப் பேணுகின்றதோ - அத்தேவை வடகொரியாவுக்கு ஜப்பான் மீது இருக்கப்போவதில்லை. வடகொரியா ஏற்கனவே, சீனா, ரஷ்யா மற்றும் அண்மையிலான ஐ.அமெரிக்க - வடகொரியா பேச்சுவார்த்தை நன்னிலையை எட்டுமாயின், ஐ.அமெரிக்காவுடனும் நட்பினை பேணுதல், வடகொரியாவுக்கு ஜப்பானின் தேவையை இல்லாது செய்கின்றது என்பது ஜப்பானுக்குத் தெரிந்த விடயமாகும்.  இதற்கு மேலதிகமாகவே, இம்முறை பேச்சுவார்த்தைக்கான தேவை ஜப்பானுக்கு ஏற்பட்டமை, ஐ.அமெரிக்க - கொரிய உறவு வலுப்பெறுமாயின், ஜப்பான் தனது பிராந்தியத்தில் தனித்து விடப்பட்டுவிடும் என்ற நிலைமையும், கொரியத் தீபகற்பத்தின் பதற்றம் தணிக்கப்படுமாயின், ஐ.அமெரிக்கா, ஜப்பானில் மூலதனம் செய்யும் பாதுகாப்பு, பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு என்பன வெகுவாகக் குறைவடையும், இதனால் ஜப்பானின் பாதுகாப்புப் பெருமளவில் பாதிக்கப்படும் என்பதும், ஜப்பான் தனது பாதுகாப்புத் தொடர்பில் தனது உள்நாட்டு நிதிமூலத்தைப் பாவிக்க வேண்டிவருமாயின், அது ஜப்பானின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் என ஜப்பான் அஞ்சுவதேயாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X