2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘ஜே.ஆர் முதல் கோட்டாபய வரை சிறுபான்மை சமூகத்தை திருப்திப்படுத்தவில்லை’

Editorial   / 2020 ஜூலை 31 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

கடந்த காலத்தில், கிழக்கில் வழங்கப்பட்ட நியமனங்களின்போது, இன விகிதாசாரம் பேணப்படாமல், தமிழ், முஸ்லிம் சமூகம் புறக்கணிக்கப்பட்டது. இதனை, இனி அமையப்போகும் அரசாங்கம் சீர்செய்ய வேண்டும். இதற்கான முழுப் பொறுப்புடன் நாம் செயற்படுவோம். இதுவரை ஆட்சியில் அமர்ந்த எந்தவோர் அரசாங்கமும், இந்த விடயத்தில் சிறுபான்மைச் சமூகத்தைத் திருப்திப்படுத்தவில்லை. ஜே.ஆர் காலம் தொடக்கம், கோட்டாபய வரை, இவ்வாறானதோர் இக்கட்டான நிலையிலேயே எமது சிறுபான்மைச் சமூகம் இருந்து வருகிறது” என, முன்னாள் பிரதியமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.  

‘தமிழ்மிரர்’ பத்திரிகைக்கு அவர் வழங்கிய செவ்வியின் முழு விவரம் வருமாறு:

கேள்வி - திருகோணமலை மாவட்டத்தில், உடன் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளாக எவற்றைக் கருதுகிறீர்கள்?

பொதுவாக, கிழக்கு மண் என்பது, மூவினங்களையும் கொண்ட பிராந்தியமாகும். முஸ்லிம், தமிழ், சிங்களம் என, மூவின மக்களும் இங்கு வாழ்கிறார்கள். கடந்த காலத்தில் அரசாங்கங்கள், மாறிமாறி ஆட்சிசெய்த போதிலும், சிறுபான்மை மக்கள், வேலைவாய்ப்புகளில் புறக்கணிக்கப்பட்டார்கள். இன விகிதாசாரம் பேணப்படவில்லை; அபிவிருத்தியிலும் சரி, வேலைவாய்ப்பு விடயங்களிலும் சரி, புறக்கணிப்பு என்பது எமது சமூகத்துக்கு இருந்தது. வரப்போகின்ற அரசாங்கத்துடன், உரிய பேச்சுவார்த்தைகளை நடத்தி, சமூக உரிமைகளை வென்றெடுக்கக் கூடியவாறு, அதிக முனைப்புக் காட்டுவோம்.

1947க்குப் பிறகு, திருகோணமலை மாவட்டத்துக்கு, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி  வழங்கப்பட்டிருக்கவில்லை. இராஜாங்க, பிரதி அமைச்சர்களே வழங்கப்பட்டு வந்தன. எமது சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரைப் பெறவும் முழுக் கவனம் செலுத்துவோம்.

கேள்வி - திருகோணமலையில் உள்ள தொழிற்சாலைகளை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் உள்ளனவா?

இம்மாவட்டத்தில், இல்மனைட், சீமெந்து, பெற்றோலியம் போன்ற வளங்களைக் கொண்ட தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றை, நவீனமயமான முறையில், பாரிய அபிவிருத்தியை நோக்கிக் கொண்டுசெல்லக் கூடிய வகையில், வழிவகைகளைச் செய்ய வேண்டும். கந்தளாயில் உள்ள சீனித் தொழிற்சாலை உற்பத்திகளை அதிகரிக்கவும் அதனை அண்டிய விவசாயப் பகுதிகளுக்குள் கரும்பு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமும், உற்பத்திகளை அதிகரிக்கலாம். அரச காணிகளை, குறைந்தது மூன்று ஏக்கர் வீதம் ஒவ்வொரு விவசாயிக்கும் பகிர்ந்தளித்து, இவ்வாறான உற்பத்திகளை விரிவுபடுத்துவதன் ஊடாக, பல வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம்.

கேள்வி - சீமெந்து தொழிற்சாலை ஊடாக, எதிர்காலத்தில் வேலை வாய்ப்பை மேம்படுத்த திட்டங்கள் உள்ளனவா?

கடந்த காலங்களில், திருகோணமலையில் உள்ள சீமெந்துத் தொழிற்சாலை, தனிநபருக்குச் சொந்தமாக்கப்பட்டு, இயங்கி வந்தது .பிறீமா கம்பனி, சீமெந்து தொழிற்சாலை ஆகியவற்றில், அதிகளவான இளைஞர்கள் வேலை செய்துவருகின்ற போதிலும், தற்போது அவர்களில் சிலருக்குப் புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்பட்டு வருவதும் இவர்களுக்கு, ETF,EPF என்பன முறையாகக் கிடைக்கப் பெறாமை போன்ற பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

25 - 30 வருடங்களாகத் தொழிற்சாலைகளில் பணியாற்றியவர்கள், சேமலாப நிதியைப் பெறமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவற்றைச் சீர்செய்யவும் அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய தொகைகளைக் கிடைக்கச்செய்யவும் நடவடிக்கை மேற்கொள்வோம்.

கேள்வி - திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெறும் காணி அபகரிப்பு, சட்டவிரோதக் குடியேற்றங்களைத் தடுக்க, நீங்கள் முன்வைக்கும் நடவடிக்கைகள் என்ன?

கடந்த காலங்களில், மூன்று வகையான காணிப் பிரச்சினைகள் காணப்பட்டன. வெள்ளைமணல் தொடக்கம் உவர்மலை வரையும் 4ஆம் கட்டை தொடக்கம் முத்துநகர் வரையான காணிகள், 1983களில் அப்போதைய துறைமுக அமைச்சராக இருந்த லலித் அத்துலத்முதலியால் துறைமுக அமைச்சுக்குப் பிரகடனப்படுத்தப்பட்டது.

நான், துறைமுக பிரதியமைச்சராக இருந்தபோது, மக்கள் குடியிருப்பில் உள்ள பகுதிகளுக்கு, உறுதிப்பத்திரங்கள் வழங்க நடவடிக்கை எடுத்திருந்த போதிலும், அரசாங்கம் கலைக்கப்பட்டது. இதனால், அது  தடுத்து நிறுத்தப்பட்டது.

கிண்ணியாவில் உள்ள பைசல் நகர், அண்ணல் நகர், கூபா நகர் போன்ற பகுதிகளிலுள்ள காணிகள், 1971இல் சுவீகரிக்கப்பட்ட போதிலும், மக்கள் குடியேறிய நிலையில், அதற்கான முறையான உரித்துகளை வழங்க, டிசெம்பர் 14இல் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் பின், நவம்பரில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. மீண்டுமொரு சந்தர்ப்பம் வருகின்ற போது, சகல காணிகளுக்கும், முழு அளவில் சட்ட ரீதியான பத்திரங்களை வழங்கவும் நடவடிக்கைகளைத் தொடருவேன்.

கேள்வி - சிறுபான்மைச் சமூகப் பிரச்சினை, பெரும்பான்மை இனத்துக்கு வாய்ப்பாக உள்ளது. இதைத் தடுக்க வழி என்ன?

சிறுபான்மைச் சமூகத்தின் ஒற்றுமையை, அரசாங்கம் வலியுறுத்திப் பிரகடனம் செய்யவேண்டும். முஸ்லிம், தமிழ் சமூகம் ஒற்றுமையாக இருந்துவிட வேண்டும். பிரிவினைகள் இருக்கக்கூடாது. கிறிஸ்தவ, இந்து, முஸ்லிம் மதத்தவர்கள் மொழியால் ஒன்றுபட்டவர்கள்; மதத்தால் வேறுபடலாம். மதத்தால் பிரிவினையை உண்டாக்கி, எமது உரிமைகளைப் பறிக்கும் நிகழ்ச்சித் திட்டங்களைப் பட்டியலிடுகிறார்கள்.

கிழக்கில் அதிகமாகத் தமிழ் பேசும் சமூகமே உள்ளது. அரசமைப்பின் 19ஆவது திருத்தம், இராஜினாமாக்கள், நாடாளுமன்றத்தில் சிறுபான்மைச் சமூக ஒற்றுமையைக் காட்டியுள்ளது. கிழக்கில், தொல்பொருள் என்ற போர்வையில், 75 சதவீதமான சிறுபான்மை இனத்தவர்களின் காணிகளை கபளீகரம் செய்ய முனைகிறார்கள். குறித்த 11 பேர் கொண்ட செயலணியில், தமிழ், முஸ்லிம் எவரும் இல்லை. முப்பது வருடகால யுத்தத்தின் போது, காடுகளாக இருந்தவை, தேர்தல் காலங்களில் காணி அளவீடுகளை நிறுத்த வேண்டும்.

எமது சமூகத்தின் காணிகளுக்கான அடையாளங்களை உரியவர்களுக்கு முறையாக வழங்க வேண்டும். இந்தச் செயலணியில், அரசிமலை தேரர், மேதானந்த தேரர், தெரண ஊடகப் பிரதானி போன்றவர்களும் அடங்குகின்றனர். இரு நாள்களுக்கு முன்னர், மஹிந்த, பந்துல போன்றவர்கள், சிறுபான்மை இனங்களையும் செயலணியில் உள்வாங்குவதாகப் போலியாகச் சொல்லிவிட்டு, இராணுவ உயரதிகாரியை நியமிப்பது ஒற்றுமையைச் சீர்குலைத்து, ஒரு வகை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

போலிக் காரணங்களைக் கூறும் அலி சப்ரி, மயோன் முஸ்தபா, பஷீர் சேகுதாவூத் போன்றவர்களே, அரசாங்கத்துக்கு முட்டுக் கொடுக்கிறார்கள். கொவிட் வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை எரித்தார்கள். தெற்கில் இனவாதத்தைத் தூண்டி, வாக்குகளுக்காக நாடகமாடினார்கள். இதனைத் தடுத்து, மூன்று சமூகமும் வாழும் பிரகடனத்தை உருவாக்க ஜனாதிபதி முன்வர வேண்டும்.

கேள்வி - பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத் திட்டங்களை மேம்படுத்த, திருகோணமலை மாவட்டத்தில் ஏதாவது எதிர்கால திட்டங்கள் உள்ளனவா?

கடந்த நான்கரை வருடகாலமாக, திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள பெண்கள் தலைமை தாங்கும், சுமார் 9,600 குடும்பங்களுக்கு, சுயதொழில் ஊக்குவிப்புத் திட்டங்களை வழங்க, முன்னாள் அமைச்சர் ரிஷாட் ஊடாக நடவடிக்கை எடுத்த போதிலும், ஆட்சி மாறியதால் தடுத்து நிறுத்தப்பட்டது.

மீண்டும் அமையப் போகும் புதிய நாடாளுமன்றத்தின் பின்னர், சுயதொழில் ஊக்குவிப்புத் திட்டத்தின் ஊடாக, பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு, தலா 50,000 ரூபாய் வழங்கி, வாழ்வாதாரத் திட்டங்களை விருத்திசெய்ய நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .