2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

தொடங்கும் தேர்தல் நாடகங்கள்

Editorial   / 2020 ஜனவரி 19 , பி.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 புதிய ஆண்டு, புதிய நம்பிக்கைகள் என்று நாம் பேசத் தொடங்கினாலும், யதார்த்தம் நம் முகங்களில் ஆழ அறையும் போது, அச்சமும் கோபமுமே மிஞ்சுகின்றன.   

இப்போது, எம் சமூகத்தின் பிரதான பேசுபொருள்களாக இருப்பவை, எவை என்பதை நோக்கின், மூன்று விடயங்களைக் குறிப்பிட்டுச் சொல்லவியலும். 

முதலாவது, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தங்கள்;
இரண்டாவது ஜெனீவாவின் பேராலும் அமெரிக்காவின் பேராலும் கட்டமைக்கப்படுகின்ற நம்பிக்கைகள்;

மூன்றாவது, தேசிய கீதத்தை சிங்களத்தில் மட்டும் பாடுவது தொடர்பானது.   
இவை மூன்றும், ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. 

இன்று இலங்கையில், சிங்கள பௌத்த தேசியவாதம் மேலோங்கியுள்ளது. ஆட்சி அதிகாரத்தின் அனைத்துத் தளங்களிலும் அது நீக்கமற நிறைந்துள்ளது. 

இந்தச் சவாலை, நாம் எவ்வாறு எதிர் கொள்வது என்பதுபற்றி, சிறுபான்மையினர் ஆழமாகச் சிந்திக்க வேண்டியுள்ளது.   

அனைத்தையும் தேர்தல் அரசியலாகப் பார்த்துப் பழகிவிட்ட அரசியல் கட்சிகளைக் கொண்டதொரு தேசத்தில், நீண்டநோக்கில் விடயங்களை அலசும் பழக்கம் கிடையாது. 

இப்பழக்கம், குறிப்பாகத் தமிழ்த் தேசியத்தின் பெயரால் அரசியல் செய்கின்ற கட்சிகளிடம் இல்லை. ஏனெனில், தமிழ்த் தேசிய அரசியல், வெற்றுக் கூச்சல்களுக்கும் உணர்ச்சிகர உச்சாடணங்களுக்கும் வெளியே, காத்திரமான பங்களிப்பை வழங்கத் தயாராக இல்லை. இக்கட்சிகளிடையே, அரசியல் வேலைத்திட்டம் என்பது, தேடியும் கிடைக்காத ஒரு விடயமாகி விட்டது.   

 “அடுத்த தீபாவளிக்குள் தீர்வு” என்று உறுதிபடச் சொன்னார்கள். இன்று தீபாவளிகள் பல கடந்து, பொங்கலும் முடிந்த நிலையில்,‘சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் விழுந்த கதை’யாய் தமிழர்களின் எதிர்காலம் மாறியுள்ளது. 

தீர்வுக்கு நாள் குறித்தவர்களே, எதிர்காலத்தைக் கோடு காட்டியவர்களை ‘அறிவிலிகள்’ என்றும் ‘அரசியல் ஞானம் அற்றவர்கள்’ என்றும் சொன்னார்கள். இன்று நாம் எங்கே வந்து நிற்கிறோம் என்பதை, நின்று நிதானிக்க வேண்டியுள்ளது.   

 இப்போது அலுவல்கள் தேர்தல்களை மய்யப்படுத்தியே அரங்கேறுகின்றன. சிங்களப் பெருந்தேசியவாத அகங்காரத்துக்கு எதிரான தமிழ்த்தேசிய வெறி, எந்த வகையிலும் பயனற்றது.  
எதிர்வரும் தேர்தல்களில், தமிழ்த் தரப்புகள் எத்தனை ஆசனங்களைப் பெற்றாலும், அவை எதுவித மாற்றத்தையும் ஏற்படுத்த மாட்டா. அந்த ஆசனங்களை அலங்கரிப்போர், சுகபோகங்களை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அனுபவிப்பார்; அதற்கு மேல் விளையும் பயன் எதுவுமில்லை.

இப்போதாவது, எமது நாடாளுமன்ற அரசியல் பிரதிநிதிகள், கடந்த ஏழு தசாப்த காலத்தில் சாதித்தது என்ன என்ற கேள்வியை எழுப்ப வேண்டும்.  இப்போதே தேர்தலுக்கான நாடகங்கள் தொடங்கிவிட்டன. ஜெனீவாவில் இலங்கையை அமெரிக்கா இறுக்கப்போகிறது என்ற கரடியை, எமது பிரதிநிதிகளும் குத்தகைக்காரரும் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். அதற்கு, இங்குள்ள மேற்குலகத் தூதரகங்களும் ஒத்தூதுகின்றன.   

இப்போது இலங்கையில் ஜனநாயகத்துக்கான வெளி, மெதுமெதுவாகக் குறைகிறது. இதைத் தடுத்து நிறுத்துவது அவசியம். ஜனநாயகத்துக்கான வெளி குறைவதும், ஒருவகையில் தமிழ் நாடாளுமன்றத் தலைவர்களுக்கு வாய்ப்பானது. ஏனெனில் குறைவடைகின்ற வெளி, அவர்களின் மீதான விமர்சனங்களுக்கான வாய்ப்பையும் இல்லாமல் செய்யும். 

இன்றைய அவரசத் தேவை, இந்த ஜனநாயக இடைவெளியைத் தக்கவைப்பது. அதற்குப் பரந்துபட்ட மக்கள் ஐக்கியமும் செயற்பாடும் தேவை. இதைத் தேசியவாதங்களின் கால்களில் ஊன்றி நின்றுகொண்டு செய்யவியலாது.   

இன்று மக்கள் இன, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு, இலங்கையரின் கருத்துரிமையையும் சுதந்திரத்தையும் தக்கவைப்பதற்கான போராட்டத்தில் ஈடுபட்டாக வேண்டும். எமக்கு இருந்த ஜனநாயக உரிமைகளின் மீது, எதிர்பார்த்தது போலவே, ‘சுருக்கு கயிறு’ வேகமாக இறுகிறது. இதை ஒரு பாராளுமன்றத் தேர்தலால் தடுத்து நிறுத்த இயலாது. இந்த உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.   

தேர்தல் நெருங்கும் போது, புதிய கதைகள், புதிய தீபாவளிகள், புதிய வாக்குறுதிகள் என அனைத்தும், எம்மைச் சூழும். இந்த நாடகங்களுக்குள் ஆட்பட்டு அரங்காடியாவதா அல்லது அகப்படாமல் சுயமாய் சிந்தித்து செயற்படுவதா என்பதே எம்முன்னுள்ள தெரிவு. ஏனெனில், இனிவரும் நாடகங்களில், பார்வையாளர்கள் என்று யாரும் இருக்க முடியாது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .