2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தமிழர்களின் அரசியல் நிகழ்காலமும் எதிர்காலமும்

எஸ்.கருணாகரன்   / 2017 செப்டெம்பர் 07 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நல்லூர்த் திருவிழா, மடுப்பெருநாள், மட்டக்களப்பு மாமாங்கப் பெருவிழா, சந்நிதி கோவில் திருவிழா எல்லாம் அமர்க்களமாக நடந்து முடிஞ்சிருக்கு. ஆனால், தமிழர்களின் அரசியல் தீர்வைப் பற்றிய பேச்சுத்தான், ‘தேஞ்ச தும்புத்தடி’ கணக்காக இருக்கு” என்று தேநீர்க் கடையில் ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். கையில் பத்திரிகை இருந்தது. அவர் எதிர்பார்த்த செய்தி அதில் இல்லை என்ற ஏமாற்றமே, இந்தக் கொதிப்புக்குக் காரணம்.   

அண்மையில் (03), முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழரசுக் கட்சியின் முன்னாள் செயலதிபருமான அப்பாப்பிள்ளை அமர்தலிங்கத்தின் 90 ஆவது பிறந்த தினத்தையொட்டிய நிகழ்வு, யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.   

இதில் கலந்து கொண்டு, இந்நாள் எதிர்க்கட்சித் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன், நினைவுப் பேருரையாற்றினார். இந்தப் பேருரை, அமிர்தலிங்கத்தின் சாதனைகளை நினைவு கூருவதாக இருந்தாலும், சமகால அரசியலைப் பற்றிய செய்திகளையும் சொல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.   

பத்திரிகையாளர்களிடத்திலும் மக்களிடத்திலும் அப்படியான ஓர் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த எதிர்பார்ப்பைப் பொய்யாக்கி விட்டார் சம்பந்தன். அந்தக் கொதிப்பே, மேற்படி தேநீர்க்கடையில் இருந்தவரின் வார்த்தைகளிலும் வெளிப்பட்டது.   

ஆனால், சம்பந்தன் என்னதான் செய்வார்? சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் எடுப்பதற்கும் பரிமாறுவதற்கும். 

அதனால், அவர் தனக்குத் தெரிந்த அளவுக்கு ஏதோ சொல்ல முயன்றார். பெருமளவுக்குப் பழைய கதைகளைப் பற்றியே பேசினார். அதுதான் வசதியாகவும் இருந்தது. பேச்சின் ஒரு சிறிய பகுதியில் மட்டும், தற்போது எதிர்பார்க்கப்படும் அரசியல் தீர்வைப் பற்றிக் கொஞ்சம் பேசினார். அதில், “உள்ளக சுய நிர்ணய அடிப்படையில், பிரிந்து போகாத இலங்கைக்குள் கௌரவமான தீர்வையே, தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதைப்பற்றியே நாம், அரசாங்கத்தோடு பேசிக் கொண்டிருக்கிறோம்” என்றார்.   

அத்துடன், “இந்த நாடு, தற்போதுள்ள நிலையில் இருந்து மீட்கப்பட வேண்டுமாயின், பொருளாதாரக் கஷ்டங்களில் இருந்து விடுபட வேண்டுமாயின், பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால், இந்நாட்டுக்கு ஓர் எதிர்காலமே இல்லை; இதுவே உண்மை” என்றும் கூறினார்.  

சபையில் எந்தப் பெரிய உற்சாகமும் ஏற்படவில்லை. பழைய வாய்ப்பாட்டை எத்தனை தடவைதான் கேட்பது என்று அங்கே இருந்தவர்கள் எண்ணியிருக்கக்கூடும். ஊடகவியலாளர்களும் எந்தப் பகுதியை முக்கியத்துவப்படுத்துவது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தனர்.   

இந்த உள்ளகச் சுயநிர்ணய உரிமையைப்பற்றி, விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், ஒரு காலத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு விளங்கப்படுத்தக் கடுமையாகக் கஷ்ரப்பட்டார்.   

மறுபக்கத்தில், விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையில் நடந்த பேச்சுவார்த்தைகளின்போது, வெளியக சுயநிர்ணய உரிமை, உள்ளக சுயநிர்ணய உரிமை என்ற இரண்டு வகையான சுயநிர்ணய உரிமைகளைப் பற்றிப்பேசி, அரசாங்கத் தரப்புப் பிரதிநிதிகளின் வயிற்றை, அந்த நாட்களில் கலங்க வைத்தார் அன்ரன் பாலசிங்கம்.   

இந்த, இரண்டு சுயநிர்ணய உரிமைகளைப் பற்றியும் அறிவதற்காக, சிங்கள அரசியல் ஆய்வாளர்களும் சிங்கள அரசியலாளர்களும், அப்போது தங்களுடைய ஆய்வுகூடங்களில் இரவு பகலாகக் கிடந்து, தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தனர்.   

ஆனால், “இது ஒரு ‘டப்பாக்’ கதை. இதில் பெரிதாக ஒன்றுமே இல்லை. உள்ளக சுயநிர்ணய உரிமை என்பது, தமிழர்களின் அரசியல் அபிலாஷையை ஒருபோதுமே நிறைவேற்றாது. தமிழர்களுடைய போராட்டத்துக்கும் அவர்கள் செய்த தியாகத்துக்கும் இது ஈடாக அமையாது. இது ஒரு வார்த்தை விளையாட்டே தவிர, அரசியல் வடிவம் அல்ல. பலஸ்தீன விடுதலைப் போராட்டத்தைப் பலவீனப்படுத்துவதற்கு மேற்குலத்தின் ஏற்பாட்டில், நோர்வே முன்வைத்த வடிவம், ஏறக்குறைய இவ்வாறான ஒன்றே. ஆகவே, தமிழீழப் போராட்டத்தை முன்னெடுப்போர், இதுகுறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று ஒரு குண்டைத் தூக்கிப்போட்டார் ‘தராக்கி’ சிவராம்.   

அன்ரன் பாலசிங்கத்தின் உள்ளக சுயநிர்ணய உரிமை என்ற பரிந்துரையை, ‘தராக்கி’ கடுமையாக விமர்சித்தார். சிவராம் செல்வாக்குச் செலுத்திய ‘தமிழ் நெற்’றும் இதைக் கடுமையாக ஆட்சேபித்தது. போதாக்குறைக்கு தற்போதைய நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரனும் இதை மென்னிலையில் விமர்சித்திருந்தார்.   

இந்த விடயம் தொடர்பான விவாதங்கள், மெல்லச் சூடு பிடிக்கத் தொடங்கின. ஒரு கட்டத்தில் சிவராமின் வாதங்கள், புலிகளிடத்தில் செல்வாக்குப் பெறத் தொடங்கின. ஆயிரக்கணக்கான போராளிகளையும் பொதுமக்களையும் இழந்து நடத்திய போராட்டத்துக்கு, சின்னஞ்சிறியதோர் அதிகாரப் பகர்வே கிடைக்கப்போகிறது என்று, புலிகளின் தளபதிகளில் பலரும் குழம்பிப் போனார்கள்.   

இதைப்பற்றி, புகழ்மிக்க தளபதியாக இருந்த கேணல் பால்ராஜ், பகிரங்கமாகவே ஒரு பொது மேடையில் பேசினார். “நாங்கள் தமிழீழத்தை அடைவதற்காகவே போராடிக் கொண்டிருக்கிறோம். அந்தக் கனவோடுதான், ஆயிரக்கணக்கான போராளிகள், மாவீரர்கள் ஆனார்கள். (மாவீர்கள் என்பது களத்தில் போராடிச் சாவடைவது). இப்போது உள்ளக சுயநிர்ணயம், வெளியக சுயநிர்ணயம் என்று ஏதோவெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விளங்காத விடயத்துக்காக நாங்கள் போராடவில்லை.

எங்களைப் பொறுத்தவரை, களத்தில் நிற்கும் போராளிகளைப் பொறுத்தவரை, தமிழீழம்தான் ஒரே முடிவு; அதுதான் தீர்வு” என்றார் பால்ராஜ்.   

‘தராக்கி’ சிவராமுக்கு, இது மிகப் பெரிய வாய்ப்பாக இருந்தது. ஏறக்குறைய இந்த வாய்ப்பின் மூலமாக, பாலசிங்கத்தைப் பின்னுக்குத் தள்ளித் தோற்கடித்தார். இதற்குப் பிறகு, அன்ரன் பாலசிங்கம், பேச்சுவார்த்தைகளில் பங்கெடுப்பது இல்லாமற்போனது. 

அதற்குக் கூறப்பட்ட காரணம், அவருடைய உடல்நிலை சரியில்லை என்பது. அதில் பாதி உண்மை இருந்ததும் உண்டு.   

ஆனால், அதையும் விட, பாலசிங்கம் மனரீதியாகக் களைப்படைந்து, விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்டார். பின்னாட்களில் அவர், கவலைகளையே அதிகமாகக் கொண்டிருந்தார். 

நிலைமைகளும் நிகழ்ச்சிகளும் எதிர்மறையாகிக் கொண்டிருந்தன. ஆனால், அதுவரையிலும் புலிகளுக்கு வெகு தொலைவிலிருந்த சிவராம், இந்த ஒரு விளக்கத்தோடு, மிகக் கிட்ட வந்தார். பின்னர், புலிகளின் மிக முக்கியமான தளபதிகளும் பொறுப்பாளர்களும், சிவராமின் பெயரை அடிக்கடி உச்சரிக்கத் தொடங்கினர். சிலர், சிவராமுடன் உறவுகளைப் பலப்படுத்தினார்கள். சிவராம், அடிக்கடி வன்னிக்குப் பயணித்துத் திரும்பினார்.   

ஆனால், பாலசிங்கம் தெரிவித்திருந்த, “ஒரு மக்கள் சமூகத்துக்கு, அதன் உள்ளக சுயநிர்ணய உரிமை மறுக்கப்பட்டு, அரசாட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டு, அடக்குமுறைகளுக்கு ஆளாக்கப்பட்டால், அம்மக்களுக்கு வெளியக சுயநிர்ணய உரிமைக்கு, அதாவது பிரிந்து சென்று அரசியல் சுதந்திரத்தை நிலைநாட்டும், உரிமைக்கு உரித்துண்டு. உள்ளக சுயநிர்ணய உரிமை மறுக்கப்பட்டு, அரச அடக்குமுறைக்கு ஆளாகும் மக்கள், வெளியக சுயநிர்ணய உரிமைக்கு உரித்தானவர்கள்” என்ற கருத்தை பலரும் கவனத்தில் கொள்ளத் தவறினார்கள்.   

இப்போது புலிகளும் இல்லை; பாலசிங்கமும் இல்லை; பிரபாகரனும் இல்லை; சிவராமும் இல்லை. ஆனால், உள்ளக சுயநிர்ணயம், வெளியக சுயநிர்ணயம் என்ற கருத்து நிலையும் இது தொடர்பான வாதப்பிரதிவாதங்களும் மட்டும் மிஞ்சியுள்ளன.   

இந்த இரண்டு நிலைப்பாட்டையும் இரண்டு தரப்புகள், தங்களுடைய அரசியல் நிலைப்பாடுகளாகக் கொண்டிருக்கின்றன. உள்ளக சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தித் தன்னுடைய அரசியலை முன்னெடுக்க முனைகிறது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு. இதன் வெளிப்பாட்டையே சம்பந்தன், அமிர்தலிங்கம் நினைவரங்கில் பிரதிபலித்தார்.   

வெளியக சுயநிர்ணயக் கோட்பாட்டை வலியுறுத்துகிறது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் மக்கள் பேரவையும்.   

ஆனால், இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக, இலங்கை அரசாங்கமோ, பிராந்திய சக்திகளோ, மேற்குலகமோ தங்களுடைய அபிப்பிராயத்தை இதுவரையில் வெளிப்படுத்தியதில்லை. ஏன் சிங்கள, முஸ்லிம், மலையகத் தரப்பிலிருந்து கூட இந்தச் சுயநிர்ணயக் கோரிக்கைகளைப் பொறுத்து, செல்வாக்குள்ள தரப்புகள் பகிரங்கமாகத் தமது நிலைப்பாட்டை வெளியிட்டதில்லை.   

இதற்குள் கூட்டமைப்பும் பேரவை மற்றும் மக்கள் முன்னணியும் தங்களுக்குள் இதுவா, அதுவா, நீயா, நானா? என்ற கணக்கில் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றன. இது முன்பு, அன்ரன் பாலசிங்கமும் ‘தராக்கி’ சிவராமும் மறைமுகமாக மோதிக் கொண்டதற்கோ, போட்டியிட்டுக்கொண்டதற்கோ நிகரானதாகும். இறுதியில், இரண்டில் ஒன்றுக்குக் கூட வாய்ப்பில்லாமல் போனதைப்போலவே, இப்போதும் ஆகி விடக்கூடிய நிலைமைகளே காணப்படுகின்றன.   

ஒரு சமூகத்தில் பல்வேறு விதமான அரசியல் சிந்தனைகள் இருப்பது இயல்பு. ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறைகளும் நடைமுறைச் சாத்தியங்களுமே குறித்த சிந்தனைகளை அர்த்தமாக்கும்.   

தமிழர்களின் அரசியல் போராட்டம் என்பது தொடர்ந்தும் தமிழர்களாலேயே இழுபறி நிலைக்குள் தள்ளப்படுகிறதா? ஏனென்றால், முன்னர் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸுக்கும் அகில இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் இழுபறிகள் இருந்தன. பிறகு தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இயக்கங்களுக்கிடையிலும் இருந்தன. பிறகு புலிகளுக்கும் ஏனைய அரசியல் சக்திகளுக்குமிடையில் இருந்தது.

இப்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் பேரவை போன்றவற்றுக்கிடையில் உள்ளது.   

ஆளாளுக்குச் சுத்தம் பற்றிப் பேசுகிறார்கள்; மற்றவர்களை அளவுக்கதிகமாகக் குற்றம் சாட்டுகிறார்கள்; துரோகிப்பட்டமும் புனிதர் பட்டமுமாக, தமிழ்ச் சூழல் தொடர்ந்து அல்லாடிக் கொண்டேயிருக்கிறது. ஆனால், நடைமுறையில் ஒரு சிறு முன்னேற்றத்தைக் கூடக் காண முடியவில்லை. இந்த நிலையில்தான், தமிழர்களின் அரசியல் நிகழ்காலமும் எதிர்காலமும் உள்ளது. ஆமாம், இன்னும் மங்கிய சித்திரமாக, கேள்விக்குறியின் முன்னே உள்ளது. சம்மந்தன் மட்டுமல்ல, எல்லோருமே இந்த அரசியலில் நம்பிக்கையைத் தரவில்லை.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X