2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தமிழர்களின் இதயங்களை கவர்ந்த மோடி

எம். காசிநாதன்   / 2019 ஒக்டோபர் 17 , பி.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங்கும், சென்னையிலிருந்து 58 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மகாபலிபுரத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமை வரலாற்றுச் சிறப்புமிக்கது.   

பல்லவ மன்னன் ஆண்ட வரலாற்றுச் சுவடுகள் நிறைந்த இந்த இடம், இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் அதிசயச் சிற்பங்கள் நிறைந்த இடமாகும். குறிப்பாக, இந்து மத நினைவுச் சின்னங்கள் உள்ள இந்த இடத்தைப் பேச்சுவார்த்தைக்குத் தெரிவு செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தேர்தலின் போது, குறிப்பாக 2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்.  

அந்தத் தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர், “வெளிநாட்டு ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் மட்டும் ஏன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். நாட்டில் உள்ள பிற மாநிலத் தலைநகரங்களில் அந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றால் என்ன” என்ற கேள்வியை எழுப்பி, “நான் பிரதமரானால், வெளிநாட்டுத் தலைவர்களுடனான பேச்சுவார்த்தை, மாநிலத் தலைநகரங்களிலும் நடக்கும்” என்று வாக்குறுதியளித்தார்.   

அதனை நிறைவேற்றும் விதமாக, சீன ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையைச் சென்னையில் தற்போது நடத்திக் காட்டியிருக்கிறார் மோடி. இது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி இருப்பதன் அடையாளம் என்பது ஒரு புறமிருக்க, மத்திய அரசு இது போன்ற நிகழ்வுகளை டெல்லியில் மட்டுமே நடத்தி, வெளியுறவுக் கொள்கைகளுக்கும் மாநிலங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்ற நிலையை ஏற்படுத்த அவர் விரும்பவில்லை.   

வெளியுறவுக் கொள்கை போன்ற விடயங்களில், மாநிலங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று, பிரதமர் மோடி முடிவு செய்து இந்தப் பேச்சுவார்த்தையை மாநிலத்தின் தலைநகர் ஒன்றில் நடத்தியிருக்கிறார். 

அந்த வகையில், தமிழகத்தின் கலாசாரம், மொழி, நாகரிகம் போன்றவற்றை தனது வருகையின் போது, சீன ஜனாதிபதி நேரில் காண, ஓர் அரிய சந்தர்ப்பத்தை உருவாக்கியிருக்கிறார்.  

தமிழ்நாட்டுக்கு இது ஒருவகையில் பெருமைதான். ஏனென்றால், கடந்த ஆறு வருடங்களாகப் பிரதமர் மோடியை வறுத்து எடுத்துக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் எல்லாம், இந்தப் பேச்சுவார்த்தைக்கு வரவேற்பு அளித்துள்ளன.  

 குறிப்பாகத் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்டாலின், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் உள்ள, குறிப்பாக தமிழகத்துக்கும் சீனாவுக்கும் உள்ள உறவின் வரலாற்றை நினைவு கூர்ந்து, இந்தப் பேச்சுவார்த்தையை வரவேற்றிருக்கிறார். 

ஆளுங்கட்சியாக உள்ள அ.தி.மு.கவுக்கும் இந்தப் பேச்சுவார்த்தையை வரவேற்பதில்  தயக்கம், பெரிய அளவில் இருந்திருக்கக் கூடும் என்றே தெரிகிறது. ஏனென்றால், மோடி கலந்து கொள்ளும் பேச்சுவார்த்தைக்கு வரவேற்புத் தெரிவித்து, சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெறமுடியாமல் போய்விடக்கூடாது என்று நினைத்திருக்கக் கூடும்.  அதனால்தான் முதலில், இந்தப் பேச்சுவார்த்தையை வரவேற்றிருக்க வேண்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைதி காத்தார். 

ஆனால் தி.மு.க தலைவர் ஸ்டாலினைப் பொறுத்தமட்டில், இதில் முந்திக் கொண்டார். சீன ஜனாதிபதி - இந்தியப் பிரதமர் வருகைக்கும், பேச்சுவார்த்தைக்கும் வரவேற்புத் தெரிவித்தார். அந்தப் பேச்சுவார்த்தை, வெற்றி பெற வேண்டும் என்றும் வாழ்த்தினார்.  

ஸ்டாலினின் அறிக்கை வெளிவந்த பிறகுதான், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்தப் பேச்சுவார்த்தையை வரவேற்று அறிக்கை வெளியிட்டார். பிற கட்சித் தலைவர்களும் அடுத்தடுத்து வரவேற்பு அறிக்கைகளை வெளியிட்டார்கள்.   

ஆகவே, ஆளுங்கட்சி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும், இந்தப் பேச்சுவார்த்தையை, ஒரு முகமாக நின்று வரவேற்றன. ‘தமிழ்நாட்டுக்குப் பெருமை’ என்று அனைத்துக் கட்சிகளும் வரவேற்க வேண்டிய சூழ்நிலையை, பிரதமர் மோடி இந்த விடயத்தில் வெற்றிகரமாக உருவாக்கி விட்டார் என்பதே உண்மை. 

அரசியல் ரீதியாகத் தனக்கு எதிராக இருந்த அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே முயற்சியில் வரவேற்க வைத்து விட்டார் மோடி என்றால், அது அவர் சீன ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைக்குத் தமிழகத்தை தெரிவு செய்ததுதான். 

ஆகவே, பேச்சுவார்த்தை தொடங்கப்படுவதற்கு முன்பே மோடிக்கு கிடைத்த முதல் வெற்றியாகவே இதைப் பார்க்க வேண்டும்.  

இரு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தை, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு மட்டும் பெருமை தேடித் தரவில்லை. தமிழக மக்களுக்கும் பெருமை தேடி தந்திருக்கிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் பிரதமர் மோடிக்கு எதிராகவே வாக்களித்தார்கள்.  

 அவர் கூட்டணி வைத்த அ.தி.மு.கவுக்கு ஒரேயோர் இடத்தில் மட்டுமே வெற்றியைக் கொடுத்தார்கள். மீதியுள்ள 38 நாடாளுமன்றத் தொகுதிகள் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணிக்கே போனது. 

குறிப்பாக, காங்கிரஸ் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் மரியாதை கொடுக்கும் ‘எண்ணிக்கையை’ வழங்குவதற்கு, தமிழகத்தில் அக்கட்சி போட்டியிட்ட இடங்களில் பெற்ற வெற்றியே கை கொடுத்தது. ஆனாலும் பிரதமர் மோடி, தமிழகத்தைப் புறக்கணிக்கத் தயாராக இல்லை. தமிழகத்தை இந்த ‘இரு நாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு’ தெரிவு செய்தது, மிகப்பெரிய ராஜதந்திர முயற்சி என்றே சொல்ல வேண்டும்.   

தமிழகத்தில் தனக்கு வெற்றி, ‘தொட்டு விட முடியாத தொலைவில் இல்லை’ என்பதை பிரதமர் மோடி புரிந்து கொண்டிருக்கிறார். தமிழக மக்களைத் தன் பக்கம் இழுத்து விட முடியும் என்ற நம்பிக்கையை அவர் கொண்டிருக்கிறார். ஆகவே தான், இந்தப் பேச்சுவார்த்தையை, இங்கே நடத்தி முடித்திருக்கிறார். இரு நாடுகளின் உறவில், இந்தப் பேச்சுவார்த்தை முக்கிய பங்காற்றப் போகிறது என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு தூரம், இந்தப் பேச்சுவார்த்தை, பாரதிய ஜனதாக் கட்சியின் வளர்ச்சிக்கு, தமிழகத்தில் துணை நிற்கப் போகிறது என்பதும் உண்மையே. 

இதெல்லாம், பா.ஜ.கவுக்கு தமிழக மக்களிடம் ஒரு மதிப்பையும் மரியாதையையும் ஏற்படுத்தித் தரும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதை மாநிலத்தில் உள்ள பா.ஜ.கவினர் எப்படி முன்னெடுத்துச் செல்லப் போகிறார்கள் என்பது வேறு விடயம்.  

பா.ஜ.கவுக்கு இந்தப் பேச்சுவார்த்தை அதன் வளர்ச்சியில் தமிழகத்தைப் பொறுத்தமட்டில் ஒரு ‘மைல்கல்’ என்றால், பா.ஜ.கவைத் தவிர்த்து விட்டு, கூட்டணி வைக்க விரும்பும் எந்தக் கட்சிக்கும் இது சற்றுச் சிக்கலைத் தோற்றுவிக்கும் விவகாரம்தான். 

தி.மு.கவுடன் இருக்கும் காங்கிரஸ் கட்சி, இதுவரை இது போன்றதொரு முயற்சியை எடுத்ததில்லை. பக்தவத்சலம் முதலமைச்சராக இருந்த போது, சீனாவின் சூ என் லாய் சென்னை வந்தார். என்றாலும், இரு நாட்டுப் பேச்சுவார்த்தைகள் தமிழகத்தில் இப்படி நடைபெற்றதில்லை.  

 ஆகவே, தமிழகத்தை எந்தக் காலத்திலும் மதிக்காத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து, அக்கட்சிக்கு முக்கியத்துவமும் கொடுக்கிறது தி.மு.க என்ற குற்றச்சாட்டைச் சந்திக்க வேண்டியிருக்கும். இது இப்போதைக்கு பிரச்சினையில்லை. என்றாலும், 2021 சட்டமன்றத் தேர்தலில் இதற்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.  

அ.தி.மு.கவுக்கோ தற்போது பா.ஜ.கவை கூட்டணியிலிருந்து விலக்கி வைக்க முடியாத நிலை. ஆட்சியிலிருப்பதால் மட்டுமல்ல, நாளைக்கு ஆட்சியே போனாலும், தேர்தல் என்று வரும் போது பா.ஜ.கவுடன் நல்லுறவு பேண வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உருவாகும்.   

ஏனென்றால், அ.தி.மு.க ஆட்சி இருக்கும் போது, அந்த முதலமைச்சரை மதிக்கும் வகையில் ‘இரு நாட்டுத் தலைவர்களின் பேச்சுவார்த்தையை’ தமிழகத்தில் வைத்ததற்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டிய கட்டாயம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வரும். இது மட்டுமல்ல, மற்ற எதிர்க்கட்சிகள், மோடி மீதான விமர்சனத்தை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.   

ஏனென்றால், பா.ஜ.க ஆட்சியே நடக்காத தருணத்தில், இப்படியொரு முக்கிய பேச்சுவார்த்தையைச் சென்னையில் நடத்தியது மோடிக்குத் தமிழக மக்கள் மத்தியில் நற்சான்றிதழைப் பெற்றுக் கொடுத்துள்ளது. அந்த சான்றிதழை, அவ்வளவு எளிதாக மாற்றிவிட முடியாது என்ற நிலை எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளதை மறந்துவிட முடியாது.  

ஆகவே, இந்திய பிரதமர்- சீன ஜனாதிபதி சந்திப்பு, இரு நாடுகளின் உறவில் மிக முக்கியமான  வரலாற்றுச் சிறப்பு மிக்க மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது. அந்தச் சாதனையின் சிதறலாக பா.ஜ.கவுக்கு  குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழகத்தில் ஒரு சாதகமான பிம்பத்தை உருவாக்கியிருக்கிறது.   

இந்தப் பிம்பத்தை, பா.ஜ.க நேரடியாகப் பயன்படுத்தி, தமிழகத்தில் 2021 தேர்தலில் வெற்றி பெற வியூகம் அமைக்குமா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை முன்னிறுத்தி, அந்த வெற்றி என்ற அறுவடையைச் செய்ய நினைக்குமா என்பது இனி வரும் காலங்களில், அடுத்தடுத்து நடைபெறும் அரசியல் நிகழ்வுகளை வைத்துத்தான் எடை போட்டுச் சொல்ல முடியும். 

 ஆனால், இந்த இரு நாட்டுத் தலைவர்கள் பேச்சுவார்த்தையை தமிழகத்தில் வைத்ததன் மூலம், ‘தமிழர்களின் இதயங்களை’ பிரதமர் மோடி கவர்ந்து விட்டார். அது உண்மை!    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .