2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தமிழ் - முஸ்லிம் உறவின் எதிர்காலம்

மொஹமட் பாதுஷா   / 2017 ஜூலை 17 , பி.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

போருக்குப் பின்னரான இலங்கையில் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் மற்றும் பகைமறத்தல் பற்றியெல்லாம் பேசப்பட்டு வருகின்றது.  

சிங்கள - தமிழ் - முஸ்லிம் மக்களிடையே நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் ஓர் ஆணைக்குழுவை நியமித்தது. இனங்களுக்கு இடையில் உறவைப் பலப்படுத்தும் விதத்தில் அமைச்சுளை உருவாக்கியது; அதிகாரிகளை நியமித்தது. இருப்பினும் நல்லிணக்கம் என்பது எதிர்பார்த்த அளவு ஏற்படவில்லை என்றே கூற வேண்டும்.   

குறிப்பாக, நாட்டில் வாழ்கின்ற இரு சிறுபான்மை இனங்களான தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் சீர்குலைந்துள்ள உறவைக் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் இவ்விரு இனங்களும் ஒற்றுமைப்பட்டு செயற்பட வேண்டுமென்றும் அரசியல், சமூக அரங்குகளில் இருந்து குரல்கள் உரக்கக் கேட்கின்றன.   

ஆனால், இதற்காக விசேட வேலைத்திட்டங்களோ அல்லது தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நடுவில் உறவை எவ்வாறு சீர்செய்வது என்பது பற்றிய பரந்தளவிலான முயற்சிகளோ கட்டமைக்கப்பட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை.  

தமிழ் - முஸ்லிம் உறவில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும் அதற்குக் காரணம், இவ்விரு இனங்களின் மக்களும் அன்றாடம் தமக்கிடையே மேற்கொள்கின்ற கொடுக்கல்வாங்கல்களும் பேணுகின்ற தொடர்புகளும் ஆகும்.   

எவ்வாறாயினும், இவ்விரு சமூகங்களுக்கும் இடையில் நீடித்து, நிலைத்திருந்து, பிற்காலத்தில் சிதைவடைந்து போயிருக்கின்ற உறவை, எல்லா மட்டங்களிலும் அறுதியும் உறுதியுமாக ஒட்ட வைப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற முயற்சிகள் பேச்சளவில் மட்டும் இருக்கின்ற காரணத்தாலும், உறவு எவ்வாறு சீர்குலைந்தது என்பது தெரியாத காரணத்தாலும், தமிழ் - முஸ்லிம்களின் உறவு இன்னும் முழுஅளவில் சீர்செய்யப்படவில்லை.  

 இவ்வாறு, கடந்தகால கசப்புணர்வுகள் களையப்பட்டு உறவு மீளக் கட்டியெழுப்பப்படாதிருக்கின்ற சூழ்நிலையில், எதிர்வரும் காலங்களில் இவ்விரு சிறுபான்மைச் சமூகங்களுக்கு இடையிலான உறவு எவ்வாறிருக்கும் என்பதை அனுமானிப்பது கடினமாக இருக்கின்றது.   

இலங்கையில் தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு இடையிலான உறவு மிகவும் தொன்மையானது. இதே உறவை சிங்கள மக்களுடனும் முஸ்லிம்கள் பேணி வந்தனர். 

முஸ்லிம்கள் காலனித்துவ சக்திகளுக்கு எதிராகச் சிங்கள மன்னர்களோடு தோளோடு தோள் நின்று போராடினார்கள். இந்தக் காரணத்துக்காக முஸ்லிம்களை வெள்ளையர்கள் பழிவாங்கும் நோக்கில் அணுகினர் என்று வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. 

இதற்கு வேறுபல காரணிகளும் காரணங்களாக இருந்தன. அதாவது, முஸ்லிம்களின் கடல்மார்க்க வர்த்தகத்தைக் கைப்பற்றியே காலனித்துவ நாடுகள் வருமானம் உழைத்தமை; இலங்கைக்கு வந்த காலனித்துவ சக்திகளுக்குத் தென்கிழக்காசியாவில் பரவியிருந்த இஸ்லாமிய மதம், தம்முடைய மதத்தை விஸ்தரிப்பதற்கு இடையூறாக இருந்தமை; சிலுவை யுத்தத்துக்குப் பின்னர் மேற்குலகில் இஸ்லாத்துக்கு எதிராக ஏற்பட்டிருந்த எண்ணங்கள் போன்ற மேலும் பல விடயங்களும் இதற்குக் காரணங்களாக அமைந்தன எனக் குறிப்பிட முடியும்.   

இதனால் முஸ்லிம்களை துரத்தியடிக்கும் பாங்கிலான அல்லது புறமொதுக்கும் வகையிலான செயற்பாட்டையே இலங்கையில் காலனித்துவ வெள்ளையர்கள் மேற்கொண்டார்கள். அந்த வேளைகளில் எல்லாம் சிங்கள மன்னர்கள் முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள். நாட்டின் பல பாகங்களுக்கும் பாதுகாப்பாக அனுப்பிவைத்து நிலங்களை வழங்கி குடியேற்றினார்கள். 

அதுகாலவரையும் சிங்களவர், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற இனங்களாகவே இலங்கை மக்கள் வாழ்ந்தார்களே தவிர, இனரீதியாக நோக்கும் போக்கோ அல்லது இனரீதியாகச் சிந்திக்கும் மனோநிலையோ இருக்கவில்லை. 

இந்தக் காலகட்டத்தில்தான் ஓர் இனத்தின், மதத்தின் ஆசார நடைமுறைகளும் கலாசாரமும் மற்றைய இனங்களின் அன்றாட நடைமுறைகளாக. பழக்க வழக்கமாக மாற்றப்பட்டன என்றும் சொல்ல முடியும்.   

1915 ஆம் ஆண்டு இடம்பெற்ற சிங்கள - முஸ்லிம் கலவரம் என்பது இலங்கையின் இனத்துவ கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உண்டுபண்ணியது. 

இக்கலவரத்தின் பின்னர் முஸ்லிம்கள் தங்களை ஒரு தனித்துவ இனக் குழுமமாகக் கருதத் தொடங்கினர். தம்முடைய இனமும் வழிபடுகின்ற மதமும் அடிப்படையில் வேறுபட்டவை என்ற நிலைப்பாட்டுக்கு அவர்கள் வரவேண்டியிருந்தது.   

இதற்குப் பிறகு முஸ்லிம்களின் சமூக, அரசியல் என்பது கணிசமான அளவுக்குத் தமிழர்களை நோக்கித் திருப்பப்பட்டது என்று கூறலாம். 

தாம் இத்தனை தூரம் சிங்கள மன்னர்களுக்கு விசுவாசமாக இருந்தும், இப்படிச் செய்து விட்டார்களே என்ற விரக்தி மனநிலை, முஸ்லிம்களைத் தமிழரின் பக்கம் சாயவைத்தது.   
அதற்குப் பின்வந்த காலங்களில் குறிப்பாகச் சுதந்திரத்துக்குப் பிற்பாடு, தமிழ் அரசியல்வாதிகளே முஸ்லிம்களுக்காகக் குரல்கொடுத்தார்கள். 

அப்போதிருந்த முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம்களின் முன்னேற்றம், அபிவிருத்திக்காக ஆற்றிய பங்களிப்புக்குச் சற்றும் குறையாத விதத்தில் முஸ்லிம்களின் உரிமைசார்ந்த குரலாகத் தமிழ் தலைமைகள் ஒலித்திருக்கின்றன.

இருப்பினும், 1983 கலவரம், இலங்கை - இந்திய ஒப்பந்தம், வடக்கு- கிழக்கு மாகாணங்களின் இணைப்பு, இந்திய அமைதிகாக்கும் படையின் வருகை, தமிழ் ஆயுதக்குழுக்களின் பெருக்கமும் வளர்ச்சியும் எனப் பலதரப்பட்ட காரணங்களின் பின்னணியில் தமிழ் - முஸ்லிம் உறவுகளில் கீறல்கள் விழத் தொடங்கின.  

 இரு சிறுபான்மை இனங்களும் நெருக்கமாக இருப்பதை விரும்பாத சிங்கள தேசத்தின் ஆட்சியாளர்கள் மட்டுமன்றி, பெயர் குறிப்பிடக் கூடிய சில வெளிநாடுகளும் இதற்குப் பின்னால் காய்நகர்த்தி இருக்கின்றன.  

சிங்கள தேசியம், சிறுபான்மை மக்களை மாற்றாந்தாய் மனப்பாங்குடன் நோக்குகின்றது என்று முஸ்லிம்கள் உணரத் தலைப்பட்டதும் முஸ்லிம்கள் அதிலும் விசேடமாக வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் தமிழர்களுடனான உறவை இறுக்கமாக்கிக் கொண்டனர்.   

இது எந்தளவுக்கு என்றால், தமிழர் அரசியலோடு முஸ்லிம்கள் இரண்டறக் கலந்து செயற்பட்டனர். மசூர் மௌலானா, எம்.எச்.எம்.அஷ்ரப் உள்ளடங்கலாகக் கணிசமான முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் தமிழரசுக் கட்சி போன்றவற்றுடன் இணைந்து அரசியல் செய்தனர்.

 அந்தக் கட்சிகளின் பிரசாரப் பீரங்கியாகவும் தமிழர் விடுதலை உணர்வை முஸ்லிம்களிடையே விதைக்கும் செயற்பாட்டாளர்களாகவும் முஸ்லிம் அரசியல்வாதிகள் இருந்தனர். ஒரு கட்டத்தில் உணர்ச்சிப் பேச்சின் உச்சக் கட்டத்தில், “அண்ணன் அமிர்தலிங்கம் தமிழீழத்தைப் பெற்றுத் தராவிட்டால் தம்பி அஷ்ரப் பெற்றுத் தருவான்” என்று மர்ஹூம் அஷ்ரப் சொன்னார்.  

இதற்குச் சமாந்தரமாகத் தமிழர் விடுதலைப் போராட்டத்திலும் முஸ்லிம்கள் இணைந்து செயற்பட்டனர். முஸ்லிம்களுக்கு தனிநாடோ, தனியே ஒரு நிலப்பரப்போ அப்போது அவசியப்பட்டிருக்கவில்லை.   

ஆனால், தமிழ்ச் சகோதரர்களின் விடுதலைப் போராட்டத்தில் உள்ள நியாயங்களை ஏற்றுக் கொண்டு, முஸ்லிம் இளைஞர்கள் விடுதலைப்புலிகள், ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈ.பி.டி.பி., ஈரோஸ்., ஈ.என்.டி.எல்.எப் எனக் கிட்டத்தட்ட எல்லா ஆயுத இயக்கங்களிலும் இணைந்து களத்தில் நின்று போரிட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் இன்னும் வீடு திரும்பவில்லை.   

சுதந்திரமடைந்த காலம் தொட்டு முஸ்லிம்களுக்கும் ஒரு தனியான தீர்வு வழங்கப்பட வேண்டுமெனப் பல தடவை தீர்மானங்களை நிறைவேற்றியிருந்த தமிழர் அரசியலானது, 80 களின் முற்பகுதியில் யதார்த்த அரசியல் களத்தில் எடுத்த சில நிலைப்பாடுகள், இவ்வளவு காலமும் ஒன்றிணைந்து செயற்பட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் மனம்கோணுவதற்கு வழிவகுத்தது எனலாம்.  

எனவே, முஸ்லிம்கள் தமிழர்களுக்கு எதிராக இயங்க வேண்டியதில்லை; என்றாலும் தனியான அரசியல் அடையாளத்துடன் இயங்க வேண்டிய அவசியத்தை அஷ்ரப் போன்றோர் அந்தக் கணத்திலேயே உணர்ந்து கொண்டனர் என்றும் கூறலாம்.   

இந்தப் பின்னணியுடனேயே முஸ்லிம்களுக்குத் தனியான ஓர் அரசியல் கட்சியைப் பதிவு செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அப்போதும் தமிழ் - முஸ்லிம் உறவு பலமாகவே இருந்தது.  

வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டதும் அதற்கு அடுத்தடுத்த வருடங்களில் புலிகளும் ஏனைய ஆயுதக்குழுக்களும் மேற்கொண்ட மிலேச்சத்தனமான நடவடிக்கைகளுமே இவ்விரு சமூகங்களுக்கும் இடையில் குறிப்பிடத்தக்க விரிசலை உண்டுபண்ணின என்பதை யாரும் மறுக்க முடியாது.   

தமிழர் அரசியலில் இருந்து சற்று விலகிப் பயணிக்கத் தொடங்கியிருந்தாலும், தமிழ் ஆயுத இயக்கங்களில் முஸ்லிம் போராளிகள் தொடர்ந்தும் அங்கம் வகித்துக் கொண்டே இருந்தனர். 

ஆனால் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் முஸ்லிம்கள் தமது எதிர்காலம் குறித்து, வேறு கோணத்தில் சிந்திக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது.   
வடக்கில் பூர்வீகமாக வாழ்ந்த முஸ்லிம்கள் சிலமணிநேர அவகாசத்தில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். கிழக்கில் பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருந்த, தொழிலுக்குச் சென்று கொண்டிருந்த, மார்க்கக் கடமையைச் செய்துவிட்டுத் திரும்பிய முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களிடம் கப்பம் கோரப்பட்டது; காணிகள் அபகரிக்கப்பட்டன; இப்படி இன்னும் எத்தனையோ சம்பவங்கள் ஓரிரு வருடங்களுக்குள் நடந்தேறின.   

உலகெங்கும் விடுதலைக்காகப் போராடுவதாகக் கூறும் இயக்கங்களின் அநேகமானவை அப்பாவிகளையும் குறிவைப்பது வழக்கமானதே. 

ஆனால், தம்மோடு அரசியல் ரீதியாகவும், ஆயுதப் போராட்டத்தில் இணைந்திருந்த முஸ்லிம்கள் மீது புலிகளும் ஏனைய ஆயுத இயக்கங்களும் இவ்வாறான அத்துமீறல்களை மேற்கொண்டமை, ஏதோ ஒரு செய்தியை முஸ்லிம்களுக்கு சொல்லாமல் சொல்லியது.   

புலிகளும் ஆயுதம் தரித்தோரும் செய்த அட்டூழியங்களுக்கு அப்பாவித் தமிழர்கள் ஒருபோதும் காரணமாகி விட முடியாது. தமிழ் அரசியல்வாதிகளும் காரணமெனக் கூற இயலாது. இச்சந்தர்ப்பத்தில் தமிழ் முற்போக்குச் சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் கவிஞர்களும் புலிகளின் செயற்பாடுகளைக் கண்டித்தனர்.   

இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று, தமிழர் அரசியலின் மகத்தான இடத்தைப் பிடித்த தமிழ் அரசியல் தலைவரான மு. சிவசிதம்பரம், “யாழ். முஸ்லிம்கள் தமது சொந்த இடங்களில் குடியேறும் வரை நான் வடபுலத்துக்குச் செல்லமாட்டேன்” என்று அறிவித்தார். அந்தத் திடசங்கற்பத்துடனேயே அவர் கடைசி மூச்சு வரையும் இருந்தார். ஆனால், மற்றைய தமிழ்த் தலைமைகள் புலிகளுக்குப் பயந்தோ என்னவோ அடக்கி வாசித்தனர்.   

புலிகள் இவ்வாறு செய்தார்கள் என்பது ஒரு புறமிருக்க, அப்போதிருந்த கணிசமான தமிழ் அரசியல்வாதிகள் இதற்கெதிராகக் குரல் கொடுக்கவில்லை என்பதே முஸ்லிம்கள் இன்று வரையும் தமிழர் அரசியலில் நம்பிக்கையற்று இருப்பதற்குக் காரணமாகும். 

எனவே, தமிழர் அரசியலில் இருந்தும், விடுதலைப் போராட்டத்திலிருந்தும் வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் அந்நியப்படுத்தப்பட்டார்கள். அந்த அடிப்படையில், தனித்துவ அடையாள அரசியலோடு, தனித்த ஓர் இனக் குழுமமாக முஸ்லிம்கள் பயணிக்கத் தொடங்கினார். இதனால் தமிழ் - முஸ்லிம்களுக்கு இடையில் இருந்த உறவு சிதிலமடைந்தது.   

அதன்பிறகு, வடக்கு, கிழக்கில் பல இடங்களில் திட்டமிடப்படாத பல கலவரங்கள் இடம்பெற்றன. தமிழ் பிரதேசங்களிலும் பல அட்டூழியங்கள் நிகழ்த்தப்பட்டடன. 
ஆகவே, முஸ்லிம்களுக்குத் தமிழ்த் தரப்பில் இருந்து இழைக்கப்பட்டதை விட, குறைவாகவெனினும் தமிழர்களுக்கும் முஸ்லிம்கள் பக்கத்தில் இருந்து சிற்சில தவறுகள் இழைக்கப்பட்டுள்ளன. 

எப்படி முஸ்லிம்கள் மீதான படுகொலைகளுக்குச் சாதாரண தமிழ் மக்கள் காரணமில்லையோ அதுபோலவே தமிழர்கள் மீதான வன்முறைகளுக்கு அப்பாவி முஸ்லிம்கள் காரணமில்லை. முஸ்லிம் ஊர்களில் அதிகாரத்துடன் ஆயுதம் வைத்திருந்தோரும், அந்தந்த ஊர்களில் இருந்த பக்குவப்படாத சண்டியர்களுமே இதற்குப் பிரதான காரணம் என்றால் மிகையில்லை.   

எனவே, அவர்கள் பிழை எனக் கூறும் முஸ்லிம் சமூகம், தாம் செய்த தவறுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். தமக்குச் செய்த அநியாயங்களுக்காகத் தமிழ்ச் சமூகம் பிராயச்சித்தம் செய்ய வேண்டுமென நினைக்கின்ற முஸ்லிம்கள், தமிழர் குக்கிராமங்களில் நடந்த அசம்பாவிதங்களுக்குக் குறைந்தபட்ச பரிகாரம் தேட வேண்டியுள்ளது. 

அப்படியென்றால் தமக்கிடையில் நடந்த தவறுகள், சரி பிழைகளை இரு சமூகமும் மனசுக்குள் வைத்திராமல் மனம் திறந்து பேசி, உள்மன அழுக்குகளை அகற்ற வேண்டும். அதுவே நல்லிணக்கம் அல்லது பகைமறத்தலின் ஆரம்பமாக இருக்கும் என்று உலக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.   

அந்த வகையில், இரு தரப்பும் மனம் விட்டு, கடந்தகாலத் தவறுகளைப் பேசி, இத்தோடு அதைப் பேசுவதை நிறுத்தி, அடுத்த கட்டத்துக்குப் போக வேண்டும். அந்தப் பணி இப்போதே மேற்கொள்ளப்பட வேண்டும். 

ஏனெனில், எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் எம்.பிபோன்றோர் இப்போது முஸ்லிம்களின் விடயத்தில் அக்கறையை வெளிப்படுத்துபவர்களாக இருக்கின்றனர்.

அவர்களது காலத்துக்குப் பிறகு, இந்த இன உறவும், இனப்பிரச்சினைக்கான தீர்வில் முஸ்லிம்களின் பங்கும், அரசியல் இணக்கப்பாடும் எவ்வாறு இருக்கும் என்று கூற முடியாது. இதே கருத்தை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீனும் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.   

எனவே, எதிர்காலத்தில் தமிழ் - முஸ்லிம் உறவு பலப்பட வேண்டுமென்றால், கடந்தகாலத் தவறுகள் திருத்தப்பட வேண்டும். முஸ்லிம்களின் துணையின்றி தீர்வைப் பெறுவது கடினம் என விளங்கிக் கொண்ட பிற்பாடு, முஸ்லிம்கள் பற்றி தமிழ்த் தலைமைகள் காட்டிவரும் அக்கறை அதிகரித்திருக்கின்றது. 

ஆனால், இன்னும் முஸ்லிம்கள் முழுமையாக நம்பும்படியான அபூர்வ நல்லெண்ண சமிக்கைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும்.   

முதலாவதாக, இலங்கை முஸ்லிம்கள் தனித்துவமான ஓர் இனக் குழுமம் எனவும் அவர்களுக்குத் தனிப்பட்ட அபிலாஷைகள் இருக்கின்றன என்பதையும் அவர்களுக்கும் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதையும் அவர்கள் இஸ்லாமியத் தமிழர்கள் அல்லர் என்பதையும் பகிரங்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். 

வடக்கில் இருந்து இடம்பெயர்ந்தோரை உடன் மீள்குடியேற்றல், வடக்கு கிழக்கில் கையகப்படுத்தப்பட்ட காணிகள், சொத்துகளை விடுவித்தல் உள்ளிட்ட பல சமிக்கைகளை தமிழ்த் தரப்பு வெளிப்படுத்த வேண்டும். 

அதற்குப் பதிலாக முஸ்லிம்களும் நல்லெண்ண பதில் சமிக்கைகளைக் காட்ட வேண்டும். இல்லாவிட்டால், தமிழ் - முஸ்லிம் உறவின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடலாம்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .