2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தாராளமயமாதலும் வணிக, அரசியல் அதிகார கூட்டு முதலாளித்துவமும்

Ahilan Kadirgamar   / 2017 ஓகஸ்ட் 09 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவப்பு குறிப்புகள்

2018     ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்துக்கான பேச்சு வார்த்தைகளும் ஒதுக்கீடுகளும் நடந்து கொண்டுள்ளன. பிரதமர் விக்கிரமசிங்க, வரவு செலவுத் திட்டத்துடன் அடுத்த சுற்றுத் தாராளமயமாதல் நடக்கும் என்று கூறுகின்றார்.   

பணக்காரர்களுக்கு சாதகமான, தனியார் மயமாதலுக்கான உந்துதலுக்கு எதிரான போராட்டங்களை, தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வருகின்றன. இதற்கு, அரசாங்கம் பொல்லடி, தண்ணீர்த்தாரைப் பிரயோகம், கண்ணீர்ப்புகை, இராணுவத்தினரின் ஒத்துழைப்பு என்பவற்றின் மூலம் பதில் அளித்து வருகின்றது.  

அரச சொத்துகளைக் கொள்ளையடிப்பதாக அரசாங்கமும் கூட்டு எதிரணியும் ஒன்றை ஒன்று குற்றம் சாட்டிக் கொண்டிருக்கையில், விவாதங்களில் ஊழல் ஆதிக்கம் செலுத்தும் விதமாகத் தொடர்கின்றது.  

ஆயினும், மாறி மாறி வரும் அரசாங்கங்கள் ஒரே பொருளாதாரக் கொள்கை வழியில் செல்கின்றன. இந்தக் கொள்கையைப் பொறுத்தவரையில், துறைமுக நகரம், சைட்டம், உமாஓயா மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற திட்டங்களைச் செயற்படுத்த கடும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.   

நிதிமயமாக்கல், வர்த்தக தாராளமயமாக்கல் மற்றும் தனியார் மயமாக்கல் என்பன அடங்கலான பொருளாதாரக் கொள்கை குறித்த பகிரங்க விவாதங்கள் அநேகமாகக் காணப்படுவதில்லை.  

தற்போதைய அரசாங்கம், ராஜபக்ஷ ஆட்சி முறை, வணிக மற்றும் அரசியல் அதிகாரக் கூட்டு (Crony Capitalism) முதலாளித்துவமாக இருந்தமை எனக் குற்றம் சாட்டுகின்றது. அத்தோடு, தனது தாராளமயப்படுத்தல் மட்டுமே, பொருளாதார செழிப்பை உறுதிப்படுத்துமெனவும் கூறுகின்றது. 

அப்படியானால், முதலாளித்துவம் எப்போதாவது அரச மற்றும் வணிக அதிகாரத்தின் கூட்டுக் கொள்ளையில்லாது, தூய முதலாளித்துவமாக இருந்துள்ளதா? மேலும், தாராளமயமாக்கல் எவ்வாறு சமூகத்தைப் பாதிக்கின்றது?   

அரசியல், பொருளாதார தொடர்ச்சிகள்  

அரசாங்கங்கள் மாறலாம். ஆனால், ஒரு நாட்டின் அரசியல், பொருளாதாரத்தைப் பகுப்பாய்வு செய்வதற்கு, முக்கியமாக அரச மற்றும் மூலதனத்தின் தொழிற்படுகையில் நீண்டகாலமான தொடர்ச்சிகள் உள்ளன.   

தசாப்தங்களாக நடக்கக்கூடிய நகர மற்றும் ஏனைய உட்கட்டமைப்புகள் மீதான பாராபட்சமான முதலீடு, நிதி நிறுவனங்​களை வளர்த்துவிடல், அவசிய சேவைகளைச் சந்தை தீர்மானிக்க விடல், ஆடம்பரப் பொருட்கள் உட்பட இறக்குமதிகளை அதிகரித்தல் என்பன பொருளாதாரத்தை மாற்றியமைக்கின்றன.   

பொருளாதாரம் பற்றிய விவாதங்களில் வாய்வீச்சும், தனியார் ஆளுமைகளும் ஆதிக்கம் செலுத்துவதால் இவ்வாறான பொருளாதார அபிவிருத்திகளின் அரசியல், குறுகிய காலத்தில் மறந்து ​போய்விடுகின்றன.   

தற்போதை, ஐ.தே.க அரசாங்கத்தின் தலைமை, அதன் தாராளமயமாக்கலின் ஆரம்ப வருகையின் வரலாற்றை நல்ல விடயமாகக் காட்ட முயல்கின்றது. 1977 ஜூலையில் நடந்த பொதுத் தேர்தலில் ஐ. தே. கவின் பாரிய வெற்றி, திறந்த பொருளாதாரச் சீர்திருத்தத்துக்கான சகாப்தத்தைத் தொடக்கி விட்டது. ஒரு மாதத்தின் பின்னர், ஓகஸ்டில் நடந்தேறிய தமிழர்களுக்கு எதிரான கலவரம், இனவன்முறை மற்றும் அரச ஒடுக்குமுறை நோக்கிய திருப்பத்தைக் கட்டியம் கூறியது.   

தாராளமயமாக்கலோடு சேர்ந்து, பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் போன்ற சர்வாதிகார நடவடிக்கைகளும் வந்தன. 1980 வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து, தொழிற்சங்கங்கள் நசுக்கப்பட்டன. மக்களிடையே பெருமளவில் அதிகரித்த சமத்துவம் இன்மைகளும் கொழும்பை மையமாகக் கொண்ட சமத்துவமில்லாத அபிவிருத்தியும் பொருளாதாரத்தின் தன்மைகளாயின.   

உலகத்திலிருந்தும் எமது வரலாற்றிலிருந்தும் நாம் கற்றுக் கொள்ளக் கூடிய பாடம் யாதெனில், தாராளமயப்படுத்தல் பொருளாதார சமத்துவமின்மைக்கு இட்டுச் செல்வதுடன் மட்டும் நின்றுவிடாது, அது வன்முறைக்கும் ஒடுக்கு முறைக்கும் கொண்டு செல்லும் என்பதாகும். அது உழைக்கும் மற்றும் கிராமிய வர்க்கத்தினர் மீதானதாக அல்லாதுவிடின் சிறுபான்மையினரைத் தாக்கும்.   

மூலதனமும் அரசும்  

மேற்கத்தேய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் முதலாளி வர்க்கம் வரலாற்று ரீதியாகப் பலவீனமாக இருந்தது. இலவச மருத்துவம், கல்வி அடங்கலாக, செல்வ மீள் பகர்தலுக்கான பல அரசாங்க சேவைகள், அரசாங்கத்தின் மீது பல்வேறு வர்க்க நலன்கள் செல்வாக்குச் செலுத்த முடிந்தபோது உறுதி செய்யப்பட்டன.   

நவீன அரச முதலாளித்துவ அபிவிருத்தியுடன் இசைந்து வளர முடியாத, பின் காலனித்துவ சமுதாயங்கள் பலவற்றின் நிலைமை இப்படித்தான் இருந்தது. உண்மையில் இந்தக் காலனித்துவ நாடுகளில், அரசாங்கத்தின் கட்டமைப்பும் காலனித்துவ அதிகாரத்தின் உருவாக்கமாக இருந்தன. 

கடந்த நான்கு தசாப்தங்களில், நன்கொடையாளர்கள் மற்றும் பூகோள நிதி மூலதனம் என்பவற்றின் செல்வாக்குக்கு உட்பட்ட திறந்த பொருளாதாரம், பொருளாதார செல்நெறியைத் தீர்மானித்தது. இந்தக் காலகட்டத்தில், சக்திமிக்க வெளிநாட்டுச் செயலிகளுடன் இணைந்து, பலவீனமான இலங்கை முதலாளித்துவ வர்க்கத்தினர் பொருளாதார கொள்கையைத் தீர்மானித்தனர்.   

அண்மைக்காலத்தில், இலங்கை அரசாங்கத்தின் மூலதனத்துடனான உறவு, நவீன மேற்கத்தைய சமுதாயங்களின் இயங்கியல் போன்று தெரிகின்றது.   

1848 இல் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் வெளியிட்ட கம்யூனிஸ்ட் விஞ்ஞாபனம், அரசுகளுக்கும் அவற்றின் முதலாளித்துவ வர்க்கத்துக்குமான (பூர்சுவா வர்க்கம்) உறவை பின்வருமாறு கூறுகின்றது.  

‘பூர்சுவாவின் அபிவிருத்தியின் ஒவ்வொரு படியும் அதற்கொத்த அந்த வர்க்கத்தின் அரசியல் முன்னேற்றத்துடன் சேர்ந்து வந்தது. நிலப்பிரபுத்துவத்தின் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டிருந்த ஒடுக்கப்பட்ட வர்க்கமான பூர்சுவா, இறுதியாக வெற்றி பெற்றது.   

இது நவீன கைத்தொழில் மற்றும் உலக சந்தை என்பவை நிறுவப்பட்டதால் சாத்தியமானது. இதன்மூலம் பூர்சுவா வர்க்கம் நவீன பிரதிநிதித்துவ அரசில் தனக்கு பிரத்தியேகமான அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டது. நவீன அரசின் நிறைவேற்று அதிகாரம், முழு பூர்சுவாக்களினதும் விவகாரங்களையும் முகாமை செய்வதற்கான ஒரு குழுவாகும்’ .

நிதிமயமாதல், சுதந்திர வர்த்தகம், தனியார் மயமாக்கல், இலாபமே ஒரே நோக்காதல் என்பன இலங்கை மூலதன விவகாரங்களில் முகாமை செய்வதால், அரசின் பிரதான வகிபாகம் ஆகிவிட்டது.   

இந்தச் சந்தை மையப்பட்ட கொள்கைகள், உழைக்கும் மக்களின் வாழ்வைப் பாதகமாகப் பாதிக்கும். இது, சில வணிகங்களையும் பாதிக்கலாம். அவை அரசாங்கம், உள்நாட்டு வணிகம் மற்றும் பூகோள மூலதனம் என்பவற்றின் ஒட்டுமொத்த நலன்களுக்கே சேவை புரிகின்றன.  

இந்தப் பின்புலத்தில் தாராளமயமாதல் அடிப்படையில் அரசு அதன் பொருளாதார கடமைகளைச் சந்தைச் சக்திகளுக்குப் பாரப்படுத்தி விடுவதாக உள்ளது. உண்மையில் அரசாங்கத்தின் வளங்களும் ஒடுக்கும் படைகளும் சந்தைப் பொருளாதாரத்தை வளர்க்கப் பயன்படுத்தப்படுகின்றன. இதையே தற்போதைய அரசாங்கம் செய்ய விழைகின்றது. இந்த அரசாங்கம் தன்னை ராஜபக்ஷ அரசாங்கத்திலிருந்து பிரித்துக்காட்டுவதற்காக ராஜபக்ஷ அரசாங்கத்தை வணிக மற்றும் அரசியல் அதிகார கூட்டு முதலாளித்துவ அரசாங்கம் எனக் குறிப்பிடுகின்றது.  

தற்காலத்தில் குரோணி முதலாளித்துவம் என்பது, மேற்கில் அதிகம் பயன்படுத்தப்படும் சொல்லாக உள்ளது. 1997 ஆம் ஆண்டு ஆசிய பொருளாதர நெருக்கடியின்போது, இந்தச் சொல் பிரபலமானது. இது வணிகத்தின் கீழ் அரசாங்கத்தைக் கொண்டு வருதலைக் குறித்தது.   

இது சந்தையோடு மட்டும் நின்றிருப்பின் இப்படியான நெருக்கடி ஏற்பட்டிருக்காது என கூறப்பட்டது. இவ்வாறான நெருக்கடியிலிருந்து மீட்புப் பெறுவதும், சந்தைப் பொறிமுறை ஊடாகவே நடக்கும் எனவும் கூறப்பட்டது. இறுதியில் ஆசிய நாட்டு மக்கள் நட்டப்பட்டனர். இந்த நெருக்கடியைத் தொடர்ந்து, உலக மூலதனம் இந்த நாடுகளைக் கொள்ளையடித்தது. அரசாங்கத்தின் கடன்களை மக்களே செலுத்தினர். நன்கொடை ​நிறுவனங்களின் நிபந்தனைகளைத் திருப்தி செய்வதற்காக சொத்துகள் ‘சூடைக்கருவாட்டு’ விலைக்கு விற்கப்பட்டன.   

2008 இல் மேற்கத்தைய பொருளாதார நெருக்கடி ‘குரோனிசம்’ எனப் பெயரிடப் காரணம் அல்ல. அப்போது ‘குரோனி’ முதலாளித்துவம் என்பது மேற்கத்தைய நாடுகளால் பயன்படுத்தப்பட்ட, கிண்டலடிக்கும் பதமாகும். இது அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட நவகாலனித்துவ பதமாகும்.  

தாராளமயமாக்கலில் ஊக்கமாக இருக்கும் ஐ.தே.க அரசாங்கம் எச்சரிக்கை செய்யப்பட ​வேண்டும். அதிகரித்துவரும் இறக்குமதி மற்றும் மூலதன வெளியேற்றம் என்பவற்றுடன் வரக்கூடிய எதிர்கால நெருக்கடியில் ஐ.தே.க அரசாங்கமும் ‘குரோனிஸ’ முதலாளித்துவ அரசாங்கம் எனப்படலாம்.   

கூட்டு எதிரணி, முன்னைய அரசாங்கத்தின் கொள்கைகளை நியாயப்படுத்த முயற்சிப்பதன் மூலம், அதன்நோக்கு அம்பலப்பட்டு நிற்கின்றது.   

வேலைநிறுத்தம் செய்தவர்களை அரசாங்கம் ஒடுக்கியதை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெட்கம்கெட்டு ஆதரித்தது. 

தாராளமயமாக்கல் மிக உத்வேகத்துடன் முன்னெடுக்கப்படுவதனால், எதிர்காலம் கவலைக்குரியது. மேலும், அடக்குமுறை வரும்போதாவது, உழைக்கும் மக்கள் போராடத் தயாராக வேண்டும்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .