2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

திறக்கப்படுகிறது கிழக்குப் பல்கலைக்கழகம்: உண்மையை சொன்னால் வெட்கம்

அதிரதன்   / 2017 செப்டெம்பர் 12 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தகாலத்தில்கூட, இந்த அளவுக்கு மோசமாகக் காலம் இழுத்தடிக்கப்பட்டதாக  ஞாபகமில்லை. குண்டு வெடித்தால் ஒருசில வாரங்கள்தான், கிழக்குப் பல்கலைக்கழகம் மூடப்பட்டிருக்கும். பிறகு எப்படியோ திறக்கப்பட்டுவிடும். மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள் என அனைவரும் பயந்து பயந்தேனும் வந்து சேர்ந்துவிடுவார்கள்.  ஆனாலும், இப்போது மாதக்கணக்காக கிழக்குப் பல்கலைக்கழகம் மூடப்பட்டிருந்தது. என்ன காரணம் என்று வெளியில் சொல்வதற்குக் கூட, வெட்கமாக இருக்கிறது.

பல்கலைக்கழக நடைமுறைகள் மாத்திரமல்ல, இலங்கையின் கல்விமுறையில் உள்ள இலவசத் தன்மைதான், இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று, பலரும் கருத்துகளை வெளியிட்டாலும், அது வெளிப்படையான காரணம் இல்லை.

நாட்டிலுள்ள 15 பல்கலைக்கழகங்களுக்கும் பொதுவானதாக, பல்கலைக்கழக சட்டதிட்டங்கள், மாணவர் ஒழுக்கக் கோவைகள், உபவிதிகள்  எனப் பல சட்ட திட்டங்கள் உள்ளன. 

இவற்றின் அடிப்படையில்தான் பல்கலைக்கழகங்களில் உள்ள மூதவை, பேரவை என்ற இரண்டு உயர் பீடங்களும் இவற்றின் அடிப்படையில்தான் முடிவுகளை எடுக்கின்றன.  இந்த இரண்டு உயர் பீடங்களினாலும் எடுக்கப்படுகின்ற முடிவுகள், எந்த விதத்திலும் மாற்ற முடியாதவைகளாகளாகவும் மாணவர்கள், கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவைகளாகவும் இருந்து வருகின்றன. ஆனால், நாட்டில் ஒரு பல்கலைக்கழகத்தில் மாத்திரம், அதைக் கடைப்பிடிப்பதற்கு முடியாது என்கிறார்கள் மாணவர்கள்.

மாணவர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் என்று வந்துவிட்டால் அவர்களுக்கிடையில் இன, மத, மொழி, ஜாதி வேறுபாடுகள் இல்லை என்பதுதான் யதார்த்தம்; அதுதான் உண்மை. ஆனால், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விவகாரத்தில், இதுவேறு மாதிரியாக இருப்பதாகவே எல்லோராலும் ஊகிக்க முடிகிறது.

வெளிப்படையாகச் சொல்வதில் கூட, அச்சப்படத்தான் வேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட சில மாணவர்களுக்கு, அவர்களுடைய பல்கலைக்கழக ஒழுக்க விரோதச் செயற்பாடுகளுக்காக, வழங்கப்பட்ட தண்டனையை விலக்கவேண்டும் என்பதற்காகவே, மிகப் பெரியளவான பிரச்சினை ஒன்று உருவாக்கப்பட்டிந்தது.  

இதற்கான முடிவை, எந்த விதமான பாரபட்சமும் இன்றி எடுப்பதாக இருந்தால், குறிப்பிட்ட மாணவர்கள் பல்கலைக்கழக கல்வி வாழ்க்கையையே இழக்க நேரிட்டிருக்கும்.  இருப்பினும், தொடர்ந்தும் வழங்கப்படுகின்ற மன்னிப்புகள், விட்டுக்கொடுப்புகள் காரணமாக, முழுப் பல்கலைக்கழகமும் அனைத்து மாணவர்களது கல்வியும் கேள்விக்குறியாகி இருந்தது.

ஒரு பல்கலைக்கழகத்தை, இழுத்து மூடுவதும், மீண்டும் திறப்பதும் சாதாரணமான நடவடிக்கையல்ல. பேரவை, மூதவைகளின் கூட்டங்கள், முடிவுகள், குறிப்பிட்ட வாரங்களுக்கு முந்தியதான கடித அறிவித்தல்கள், பத்திரிகை அறிவித்தல்கள் வழங்கப்பட்டுத்தான் மீண்டும் ஆம்பிக்க முடியும். 

கடந்த ஓகஸ்ட் மாதம் எட்டாம் திகதி நிருவாகக் கட்டடத்தை, மாணவர்கள் முற்றுகையிட்டது முதல் இயக்கமற்று இருந்திருந்த கிழக்குப் பல்கலைக்கழகம், எப்போது மீண்டும் திறக்கப்படும் என்ற கேள்வி, எல்லோரிடமும் இருந்தது. அதற்கான பதில், கடந்த வெள்ளிக்கிழமை (08)நண்பகலுக்குப் பின்னர் கிடைத்திருக்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை (08), மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையிலான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

அதன் அடிப்படையில், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டிருக்கும் மாணவர்களது பதாதைகள், சுவரொட்டிகள், கறுப்பு நிறக் கொடிகள், கூடாரங்கள் அகற்றப்பட்டதுடன்  நிர்வாகக் கட்டடத்திலிருந்தும் மாணவர்கள் வெளியேறினார்கள்.

2017ஆம் ஆண்டில், ‘செனற்’ எனப்படுகிற நிர்வாகக் கட்டத்தை, மாணவர்கள் முற்றுகையிட்டமை, இது, இரண்டாவது தடவையாகும். முதல் தடவை நடைபெற்ற முற்றுகையின்போது, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் த.ஜெயசிங்கம், வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். நாடு திரும்பியதும், மாணவர் முற்றுகை நடைபெற்றிருப்பது தெரியாதது போன்று, உள்ளே சென்று திரும்பினார். 

அதன் பின்னர், சில நாட்களில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினர் வருகை தந்து, விடுதி வசதிகளை, அனைத்து மாணவர்களுக்கும் வழங்குமாறு பணித்துச் சென்றிருந்தனர். அதற்கமைய மாணவர்களுக்கு விடுதி வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டன. 

ஆனால், அதன் பின்னரும் கடந்த ஓகஸ்ட் மாதத்தில், மீண்டும் மாணவர்கள் முற்றுகையை ஆரம்பித்து, தொடர்ந்து நடத்தி வந்தனர். ஆனால், மீண்டும் எழுந்த பிரச்சினை, நீதிமன்றம் வரை சென்றது. இரண்டு தடவைகள், உபவேந்தர் நீதிமன்றத்துக்குச் சென்று திரும்பியிருக்கிறார்.

 அதன்பின்னர், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் ஆராய்வு கூட்டம் ஒன்று செப்டெம்பர், நான்காம் திகதி நடைபெற்றது. அதன் பின்னர், கடந்த வியாழக்கிழமை (07) மாணவர்களுடன், பேரவை உறுப்பினர்கள் சந்தித்துக் கலந்துரையாடி இருந்தனர்.

அதன்போது, பல்கலைக்கழகத்தை மீளவும் ஆரம்பிப்பதற்கு ஏதுவாக, 10ஆம் திகதி பகல் 12 மணிக்குள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறுதல், முன்னுரிமை அடிப்படையில் முதல், இறுதி, மூன்றாம் மற்றும் இரண்டாம் வருட மாணவர்களுக்கு விடுதி வசதிகள் வழங்குதல், ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களது பிரச்சினைகளை ஆராயவென குழு ஒன்று நியமிக்கப்படுதல், மாஹாபொல மற்றும் பேசறி கொடுப்பனவுகளை ஒழுங்குபடுத்துதல், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்காதிருத்தல், எதிர்வரும் 18ஆம் திகதி, இறுதி வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்தல், ஏனையவர்களுக்கு ஒக்டோபர் இரண்டாம் திகதிக்குள் ஆரம்பித்தல், எதிர்காலத்தில் பல்கலைக்கழக நடைமுறைகள் குறித்து ஏற்படும் பிரச்சினைகளை பேச்சுவார்த்தைகள் மூலமாகத் தீர்த்தல், பல்கலைக்கழகம் மூடப்பட்ட நாட்களில் நடைபெறவிருந்த பரீட்சைகளை விசேடமாக நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களது பிரச்சினைகளை ஆராயவென கலாநிதி எச்.ஆர்.தம்போபிற்றவைத் தலைவராகக் கொண்டு, ஓய்வு பெற்ற பேராசிரியர் எஸ்.மௌனகுரு மற்றும் அருட்தந்தை போல் றொபின்சன் ஆகியோரைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழு ஒரு வார காலத்துக்குள் இது தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்கும். 

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டட முற்றுகை தொடர்பில், கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரிய சங்கத்தினால், ஓகஸ்ட் மாத இறுதியில், வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில், ‘கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஒரு சிறுபகுதி மாணவர்களால் 08.08.2017 தொடக்கம், கிழக்குப் பல்கலைக்கழக மூதவை கட்டடத்தை, சட்ட விரோதமாக ஆக்கிரமித்து, நிர்வாக செயற்பாடுகளையும் கல்விநடவடிக்கைகளையும் சீர்குலைத்து மேற்கொள்ளப்பட்டுவரும் பிரச்சினையால், கிழக்குப்பல்கலைக்கழகத்தின் அனைத்துக் கல்வி நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக, ஆசிரியர் சங்கம் தங்களது ஆழ்ந்த கவலையை இத்தால் வெளிப்படுத்துகிறது. இது, ஒரு சிறுதொகுதி, மாணவர்களால் மேற்கொள்ளப்படுகின்ற ஒழுக்கமற்ற நடவடிக்கையாகும்’ என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தனர். இருந்தாலும் அந்த அறிக்கைக்கு எந்த விதமான பலனும் கிடைக்கவில்லை. 

அதேபோன்று, கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கம் தனது அறிக்கையில், ‘பல்கலைக்கழக மாணவர்கள் எனும் ரீதியில், உங்களது உரிமைகள் தொடர்பாகப் போராடுவதற்கு பல்கலைக்கழக சட்டதிட்டங்கள், மாணவர் ஒழுக்கக் கோவைகள், உப விதிகள் என்பவற்றுக்கமைவாக உரித்துடையவர்கள். ஆயினும், தற்போதைய நடவடிக்கைகள், மாணவர் உரிமைகளுக்கான சட்டதிட்டங்களை எல்லை மீறுவதாக அமைந்திருக்கிறது’ என்று குறிப்பிட்டிருந்தது.  அந்த அறிக்கையினாலும் பயன் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை.

நிர்வாகக் கட்டடத்தை ஆக்கிரமித்ததன் காரணமாக, இயக்கமற்றிருக்கும் கிழக்குப் பல்கலைக்கழத்தின் செயற்பாடுகளை, மீள ஆரம்பிப்பது தொடர்பில் மாணவர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில், பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும், அவையாவும் பயனற்றவையாகவே போயிருந்தன.

மட்டக்களப்பு, வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னால், ஓகஸ்ட் மாதம் எட்டாம் திகதி முதல், சீசீடிவி கமெராவை அகற்றவேண்டும், விடுதி வசதி வழங்கப்படவேண்டும், தடை விதிக்கப்பட்டுள்ள மாணவர்களை அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகளுடன் மாணவர்கள், வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத் தொகுதியை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, அக்கட்டடத் தொகுதியினுள்ளேயே இருந்து வந்த மாணவர்களை, நிர்வாகத்தினரின் முயற்சிகள் நீதிமன்ற ரீதியான நடவடிக்கைகள் கூட, ஒன்றும் செய்துவிடவில்லை.

இந்த நிலையில்தான், அரசியல் ரீதியான அழுதங்கள், பின்புலங்கள் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களது விடயத்தில் காலூன்றியிருக்கிறதா என்ற கேள்வி எழத் தொடங்கியிருந்தது. எந்தவிதமான பின்புலமும் இல்லாமல், இவ்வளவு துணிச்சலாகவும் விட்டுக்கொடுப்புகள் எதுவுமின்றி மாணவர்கள் ஒரு போராட்டத்தை நடத்துவார்களா என்ற கேள்வியே அது.

முதலாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கு மாத்திரம் விடுதி வழங்குதல் என்ற, அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் உள்ள நடைமுறை, பல காரணங்களை அடிப்படையாகக் கொண்டது. 

இடவசதி, பராமரிப்பு, கற்றலில் ஏற்படுகின்ற இடையூறுகள், பகடிவதைகள் உள்ளிட்டவைகளும் இதிலடக்கம். இருப்பினும் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாத்திரம், அனைத்து மாணவர்களுக்கும் விடுதி வசதி பல்கலைக்கழகத்தினால் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது. 

யுத்த காலத்தில் கூட, பல்கலைக்கழகத்துக்கு அயலிலுள்ள வீடுகளில், விடுதி வசதிகள் வழங்கப்படாத மாணவர்கள், தங்களது சொந்தப்பணத்தில் விடுதி வசதிகளை ஏற்படுத்தித் தங்கியிருந்தார்கள்; கற்றுப் பட்டம் பெற்றும் சென்றிருக்கிறார்கள். 

விடுதி வசதி வழங்கப்பட்டாலும் கற்றல் இடையூறுகள் காரணமாக வெளியிடங்களில் விடுதி வசதியை ஏற்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்.

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பொதுவாக கல்வி நடவடிக்கைகள் பல்வேறு காரணிகளால் தாமதமாவது வழமையாகி விட்டது. உண்மையில் மாணவர்களால் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்கள் இதில் முக்கியத்துவம் பெறுகின்றன. 

பட்டப்படிப்பு கல்வியாண்டு 03 அல்லது 04 வருடங்களுக்குள் முடிவுற வேண்டும். இலங்கையில் பின்தங்கிய பிரதேசங்களில் இருந்து, பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் உயர்தரக் கல்வியை பூர்த்தி செய்து, பட்டப்படிப்பைப் பயில வந்திருக்கும் மாணவர்கள், உரிய காலத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்து, தொழில்வாய்ப்பைப் பெற்று, பெற்றோரின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டியது கடமையாகும். எமது நாட்டில் வேலையில்லாப் பிரச்சினை தீவிரமாகியுள்ள இன்றைய நிலையில், பட்டப்படிப்பும் தாமதமாவது மிகவும் கவலைக்குரியது.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஏறத்தாள 4,000 மாணவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்களுக்கு விடுதி வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. ‘பொதுச் சொத்து எங்கள் சொத்து; நிதியெல்லாம் சிறுவர்களாக இருக்கையிலேயே சாத்தியம்’ ஆனால், இந்த வரைவிலக்கணத்துக்கு மாற்றாகவே, நடைமுறை  காணப்படுவது வழக்கம். அதாவது, எவ்வாறு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்பதேயாகும். இதைத்தான் பல்கலைக்கழகத்தில் மாணவர்களும் செய்கிறார்கள்.

மாணவர்களுக்கு விடுதி வசதிகளை  வழங்கினால், விடுதி வசதி நியதியை மீறி மேற்கொள்ளும் நடவடிக்கைகள், ஏனைய மாணவர் நலன்களில் பிரச்சினைகளை ஏற்படுத்தும். நீர் வசதி, சுகாதாரப் பிரச்சினைகள், இட நெருக்கடிகளால் மாணவர்களிடையேயான முரண்பாடுகள், மன உளைச்சல்களும் ஏற்படுகின்றன. 

விடுதிகளில் இடநெருக்கடி காரணமாக, மாணவர்களால் ஏற்படுத்தப்படும் பிரச்சினைகளும் அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக மாணவர்களுக்கு தண்டனைகளும் வழங்கப்படுகின்றன.
இருந்தாலும், மாணவர்கள் மேற்கொள்ளும் பகடிவதைகள், ஊழியர்கள் மீதான தாக்குதல்கள், பல்கலைக்கழக சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் என்பவற்றுக்கெதிரான தண்டனைகள் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு,  பல்கலைக்கழக விதிக்கோவை என்பவற்றுக்கமைவாக ஒழுக்கக் கோவை, உபவிதிகள் என்பவற்றினூடாக  அனைத்து மாணவர்களுக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ள போதும் அதையும் மீறிச் செயற்படுகின்றமையானது, மாணவர்களின் தவறான செயற்படாகவே பார்க்கப்படுகிறது.
பல்கலைக்கழகத்துக்குள் வந்துவிட்ட மாணவர் ஒருவர், தவறான செயற்பாடுகளைக் கற்றுக்கொண்டவராக, வெளியே செல்வதென்பது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு விடயமாகும். தவறான செயற்பாடுகளுடைய மாணவர், அந்தப்பழக்கத்தை ஏனைய மாணவர்களிடையேயும் பரப்ப முனைவது தவறானதொன்றாகும். அதே நேரத்தில், இவ்வாறானவர்கள் தங்களது பிரச்சினைகளையும் தவறுகளையும் மறைத்துக் கொள்வதற்காக இனம் சார்ந்த வியாக்கியானங்களையும் பயன்படுத்துகிறார்கள். இது தவறாகும்.
ஆனாலும், மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்படுகின்ற தண்டனையைக் குறைப்பதற்கான மேன்முறையீட்டை எழுத்து மூலமாக மேற்கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.  அத்துடன், கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களுக்கு இன்றுவரை குறைந்த தண்டனைகளையே வழங்கி வந்துள்ளதாகவும் அறிய முடிகிறது. மாணவர்களது நலன்சார்ந்து, பல்கலைக்கழகம் சிந்தித்தாலும் அதை மாணவர்கள் புரிந்து கொண்டு, ஏற்றுக் கொள்ளாத வரையில் அதனால் எந்தப்பயனுமில்லை என்பது இப்போது நடைபெற்று முடிந்த போராட்டத்தின் மூலம் தெளிவாகியுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள் தங்களது உரிமைகள் தொடர்பாகப் போராடுவதற்கு பல்கலைக்கழக சட்டதிட்டங்கள், மாணவர் ஒழுக்கக் கோவைகள், உபவிதிகள் என்பன இடமளித்திருந்தாலும். மாணவர் உரிமைகளுக்கான நடவடிக்கைகள் எல்லை மீறுவதாக அமைந்திருப்பதே தவறாகும்.
பெற்றோர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான மிகப் பாரிய பொறுப்புகளை உடைய பல்கலைக்கழக மாணவர்கள், தேவையானதும் பொருத்தப்பாடுடையதுமான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர, பெற்றோர்களின் கனவுகளைச் சிதைப்பதாக அமைந்து விடக்கூடாது. தவறாக வழிநடத்தும் பின்புலங்கள், தமது நலன்களை மாத்திரமே கருத்தில் கொள்ளும் என்ற சாதாரண யதார்த்தங்களைக்கூட அறிந்து கொள்ளாது செயற்படும் மாணவர்களை, எவ்வாறு சரி செய்வது என்பதே இப்போதைய பிரச்சினை.
இந்த நிலையில்தான் மாணவர்களது பிரச்சினைகளைத் தீர்த்து, கிழக்குப்பல்கலைக்கழகத்தை மீளவும் ஆரம்பிப்பது தொடர்பிலான கலந்தாய்வுக் கூட்டம் திங்கட்கிழமை (05) காலை கொழும்பிலுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஓகஸ்ட், எட்டாம் திகதி முதல் கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகக்கட்டடமான ‘செனற்’றை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மாணவர்களது பிரச்சினைகள் குறித்தும், பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.  எவ்வாறாயினும், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கான முடிவுகள் எட்டப்பட்டிருப்பது மகிழ்ச்சியே.
எது எவ்வாறாயினும், கிழக்குப் பல்கலைக்கழகம் அரசியல்வாதிகள், புத்திஜீவிகள், சிவில் அமைப்புகளாலும் கணக்கெடுக்கப்படாமல் இருக்கின்றமைக்கு என்ன காரணம் என்ற கேள்வியும், நீண்ட வரலாற்றைக் கொண்ட நிருவாகத்தையுடைய கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு சிறுதொகை மாணவர்களது பிரச்சினையை எதிர்கொள்வதற்கு மூன்று மாத காலம் தேவைப்பட்டதா என்றும் கேள்வி எழுகிறது. 
கல்விப் புலமையாளர்கள் அனைவரும் இருக்கின்ற இடத்தில், ஏன் சிறு தொகை மாணவர்களின் பிரச்சினையைச் சீர் செய்ய முடியாது திண்டாடினார்கள் என்றும் கேட்டுக் கொள்ளலாம்.
பல்கலைக்கழகம் என்பது தேசிய நிறுவனம். அதற்கொரு இழுக்கென்றால் அது தேசிய ரீதியான இழுக்கு. இந்த இழுக்கை அரசும் கல்வியாளர்களும் எவ்வாறு தீர்த்து வைக்கப்போகிறார்கள்.  காணாமல் போகிற ஒழுக்கங்கள் எப்போது கண்டுபிடிக்கப்படும்?


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .