2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தீண்ட கூடாததாகிய சமஷ்டி

என்.கே. அஷோக்பரன்   / 2017 நவம்பர் 06 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 117)

கூட்டணி சொன்ன தமிழர்களின் நிலைப்பாடு   

இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் விசேட ஆலோசகராக இருந்த கோபால்சாமி பார்த்தசாரதியின் அறிவுறுத்தலின் படி, அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலாக தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்கள், தமது தரப்புக் கோரிக்கையின் முதலாவது வரைபை, பார்த்தசாரதியிடம் கையளித்தனர்.   

இந்தியக் குடியரசின் அரசமைப்பின் முதலாவது சரத்தின் முதலாவது பிரிவு, ‘இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒரு ஒன்றியமாகும்’ (Union of States) என்று வழங்குகிறது.

இதையொத்தே, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் ‘மாநிலங்களின் ஒன்றியம்’ (Union of States) என்ற வார்த்தைகளைத் தனது கோரிக்கை வரைபில் பயன்படுத்தியிருந்தது. 

 இலங்கை அரசாங்கத்தின் நிலை பற்றி உணர்ந்ததாலோ என்னவோ, அந்த வார்த்தைப் பிரயோகத்தை மாற்றுமாறு கோபால்சாமி பார்த்தசாரதி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்களுக்கு அறிவுறுத்தினார்.   

‘மாநிலங்களின் ஒன்றியம்’ என்பது சமஷ்டிக் கட்டமைப்பைச் சார்ந்து வருகிறது. சமஷ்டிக் கட்டமைப்பைச் சிங்களவர்கள் முற்றாக எதிர்க்கிறார்கள். ஆகவே, இந்த வார்த்தைப் பிரயோகம் பொருத்தமானதல்ல என்று சொன்ன பார்த்தசாரதி, டட்லி சேனநாயக்க ‘பிராந்திய சபைகள்’ என்பதை ஏற்றிருந்தார் என்ற அடிப்படையில், ‘பிராந்தியங்களின் ஒன்றியம்’ (Union of Regions) என்ற பதத்தைப் பயன்படுத்துமாறு கோரினார்.   

இலங்கையின் இறைமைக்கும், ஒற்றையாட்சித் தன்மைக்கும், ஆட்புல ஒருமைப்பாட்டுக்கும் பங்கம் ஏற்படாதவாறு, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் கோரிக்கை இருக்க வேண்டும் என்பதில், பார்த்தசாரதியும் இந்திராவும் இந்தியாவும் தெளிவாக இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. 

பார்த்தசாரதியின் எண்ணப்படி அமைந்த, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் கோரிக்கை வரைபுடன், இலங்கை ஜனாதிபதி ஜே.ஆரைச் சந்திக்க, பார்த்தசாரதி இலங்கை விரைந்தார். அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் உள்ளிட்ட தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்கள், இந்தியாவிலேயே தொடர்ந்து இருந்தனர்.   

ஜே.ஆர் சொன்ன சிங்கள மக்களின் நிலைப்பாடு  

இலங்கையின் அரசாங்கத்தினதும், சிங்களத் தலைவர்களினதும் ‘சமஷ்டி விரோத’ப் போக்கை பார்த்தசாரதி அறிந்திருந்தார், அதனால்த்தான், அவர் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, ‘மாநிலங்களின் ஒன்றியம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதையோ, அல்லது இலங்கையின் இறைமை, ஒற்றையாட்சித் தன்மை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய கோரிக்கைகளை, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி முன்வைத்துவிடக் கூடாது என்பதில் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தார்.   

ஆனால், ஜே.ஆர் தலைமையிலான இலங்கை அரசாங்கத்தினதும், சிங்களத் தலைமைகளினதும் ‘சமஷ்டி ஒவ்வாமை’ இந்தளவுக்கு மோசமாக இருக்கும் என்பது, அவருக்கே அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்க வேண்டும்.   

ஜே.ஆரைச் சந்தித்து, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் கோரிக்கை வரைபை முன்வைத்த பார்த்தசாரதி, பேச்சுவார்த்தையில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாடு இதுதான் என்று குறிப்பிட்டதுடன், இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறியத்தருமாறும் கோரினார்.   

“எனது அரசாங்கமும் இந்த நாட்டு மக்களும் இந்த நாடு பிரிவடைய ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை” என்று சொன்ன ஜே.ஆர், தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி, 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பே, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியுடனான பேச்சுவார்த்தைகளினூடாகத் தாம் அறிந்திருந்ததாகவும், தமிழ் மக்களுடைய பிரச்சினையைத் தாம் அறிந்திருந்தமையை, ஐக்கிய தேசியக் கட்சியினுடைய 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் குறிப்பிட்டிருந்தேன்” என்று சுட்டிக் காட்டிய ஜே.ஆர், “அந்தப் பிரச்சினைகளுக்கு நிச்சயம் தீர்வு வழங்கப்படும்” என்றார்.   

அத்துடன்,“மாவட்ட அபிவிருத்திச் சபைகளைப் பலப்படுத்துவதுடன், முழுமையாக அமுல்படுத்துதல் மட்டுமே, தன்னால்ச் செய்ய இயன்ற காரியம்” என்றார். அதுவே, இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடாக, பார்த்தசாரதியிடம் முன்னிறுத்தப்பட்டது.   

தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க, 1977 இல் ஜே.ஆர் திடசங்கற்பம் கொண்டிருந்தாராயின், அதன்பின்னர், 1977, 1981 மற்றும் 1983 எனத் தமிழ் மக்கள் மீது, இன அழிப்பு வன்முறை, கட்டவிழ்த்து விடப்பட்டது ஏன் என்ற கேள்வி, இயல்பாகப் புத்தியுள்ள அனைவரிடமும் எழக்கூடியதொன்றே! அதை உணர்ந்த ஜே.ஆர், 1983 கலவரங்களுக்கு, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் பிரிவினைவாதமும், தனது அரசாங்கத்தை இல்லாதொழிக்க உருவான இடதுசாரிகளின் சதியும்தான் காரணமென்றார்.  

இதன் பின்னர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவி சிறிமாவோ பண்டாரநாயக்கவை, பார்த்தசாரதி சந்தித்தபோது, சிறிமாவோவும் சமஷ்டியைக் கடுமையாக எதிர்த்ததுடன், ஒற்றையாட்சி என்ற கட்டமைப்பு மாற்றப்பட முடியாது என்பதில், உறுதியாக இருந்த தனது நிலைப்பாட்டை, பார்த்தசாரதியிடம் பகிர்ந்து கொண்டார். மீண்டும் பார்த்தசாரதி, ஜே.ஆரைச் சந்தித்தபோது, சிறிமாவினதும் தன்னுடையதும் நிலைப்பாட்டின் ஒற்றுமையைச் சுட்டிக்காட்டிய ஜே.ஆர், “தற்போது சிங்கள மக்களின் நிலைப்பாட்டை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்” என்று பார்த்தசாரதியிடம் சொன்னார்.   

“இலங்கையின் ஆளும் கட்சியும் பிரதான எதிர்க்கட்சியும் ஒரு பொது நிலைப்பாட்டில் இருக்கிறோம். எந்தத் தீர்வாக இருந்தாலும் அது இலங்கை அரசின் ஒற்றையாட்சித் தன்மையை மாற்றுவதாக அமைய முடியாது. இதுவே, சிங்கள மக்களின் நிலைப்பாடு. எனது அரசாங்கத்தினால், இயலுமான உச்சபட்சத் தீர்வு என்பது மாவட்ட அபிவிருந்தி சபைகளைப் பலப்படுத்துவதுடன், அதை முழுமையாக அமுல்படுத்துவதாகும்” என்று ஜே.ஆர், திட்டவட்டமாகப் பார்த்தசாரதியிடம் எடுத்துரைத்தார்.   

தூதுபோன பார்த்தசாரதிகள்  

ஜே.ஆரிடம், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் கோரிக்கை வரைபுடன் தூதுபோன, கோபால்சாமி பார்த்தசாரதியின் நிலையும், துரியோதனனிடம் பாண்டவர்களின் கோரிக்கையோடு தூதுபோன அந்தப் பார்த்தசாரதியின் நிலையும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.   
துரியோதனனும் நாட்டைப் பிரிக்க முடியாது என்று விட்டான்; ஜே.ஆரும் அதே நிலைப்பாட்டிலேயே இருந்தார். ஆனால், அந்தப் பார்த்தசாரதி, பாண்டவரின் நலனில் மட்டுமே அக்கறை கொண்டிருந்தார். இந்தப் பார்த்தசாரதியின் நிலைவேறு! தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினதோ, இலங்கை வாழ் தமிழ் மக்களினதோ நலன்தான் கோபால்சாமி பார்த்தசாரதியின் தூதின் நோக்கம் என்று சொல்லமுடியாது.  

இங்கு மேலோங்கிய நலன் என்பது, இந்தியா என்ற ‘பிராந்திய மேலாதிக்க’ அரசாங்கத்தின் நலன். இதில் ஆச்சரியப்படுவதற்கோ, ஆத்திரப்படுவதற்கோ, ஆதங்கப்படுவதற்கோ எதுவுமில்லை. சர்வதேச அரசியலினதும் இராஜதந்திரத்தினதும் அடிப்படையே இதுதான்.   

அன்று இனித்த சமஷ்டி  

ஆனால், இங்கு குறிப்பிட்டு நோக்க வேண்டிய இன்னொரு விடயம், இலங்கை சிங்கள அரசியல் தலைமைகளிடையே ஏற்பட்டிருக்கும் சமஷ்டி ஒவ்வாமை என்பது மிக விசித்திரமானதாகவே தோன்றுகிறது.   

‘சமஷ்டி’ என்ற கருத்தையும், இலங்கை ‘சமஷ்டி’ அரசாக அமையவேண்டும் என்ற கோரிக்கையையும் இலங்கையில் முதன் முதலில் முன்வைத்தவர்கள் தமிழர்களோ, தமிழ்த் தலைமைகளோ அல்ல; மாறாக சிங்களத் தலைவர்களே அதை முன்வைத்திருந்தனர்.  

இந்தத் தொடரின் ஆரம்ப பகுதிகளில், இதை நாம் சற்று விரிவாகவே நோக்கியிருந்தோம். குறிப்பிட்டுச் சொல்வதாயின், 1926 இல், எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க (சொலமன் வெஸ்ட் றிஜ்வே டயஸ் பண்டாரநாயக்க), யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரையொன்றில், “இலங்கையில் கீழ் நாட்டுச் சிங்களவர், கண்டியச் சிங்களவர், தமிழர்கள் ஆகிய மூன்று இனக்குழுமங்களுக்குமான, மாகாண சுயாட்சி முறையிலான சமஷ்டி முறை வேண்டும்” என்பதை உறுதியாக வலியுறுத்தியிருந்தார்.  

தன்னுடைய உரையில் அவர், “நாம் முன்னைய வரலாற்றை நோக்கினோமானால், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, இங்கு வாழ்ந்துவரும் தமிழர், கண்டியச் சிங்களவர் மற்றும் கீழ்நாட்டுச் சிங்களவர்கள் ஆகிய மூன்று இனக்கூட்டமும் ஒன்றிணைவதற்கான எந்த எண்ணத்தையும் கொண்டிராததைக் காணலாம். அவர்கள் தங்களது மொழி, பாரம்பரியம் மற்றும் மதத்தைப் பாதுகாத்தார்கள். இந்தப் பிரிவுகள் காலத்தோடு இல்லாது போகும் என்று நம்புகின்ற மனிதன், அலட்சியம் கொண்ட நபராகவே இருப்பார். இலங்கையில் ஒவ்வொரு மாகாணமும் சுயாட்சியைக் கொண்டிருக்க வேண்டும். இந்த முறைக்கு எதிராக, ஆயிரம் எதிர்ப்புகளை முன்வைக்கலாம். ஆனால், அந்த எதிர்ப்புகள் மறையும் போது, சமஷ்டி முறையே, ஒரே தீர்வாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.   

இது மட்டுமல்ல, இலங்கைக்கு சமஷ்டியின் பொருத்தப்பாடு பற்றி, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று, நாடு திரும்பியிருந்த இளைஞரான எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க, சிலபல கட்டுரைகளையும் எழுதினார். 1925 இல் இலங்கைத் தேசிய காங்கிரஸிலிருந்து பிரிந்த, கண்டித் தலைவர்களால் உருவாக்கப்பட்ட கண்டி தேசிய பேரவை, அடுத்த இரண்டு வருடங்களிலேயே கண்டிப் பிராந்தியத்துக்கான சுயாட்சி பற்றிப் பேசியதுடன், கண்டிச் சிங்களவர், கீழ் நாட்டுச் சிங்களவர், மற்றும் தமிழர்கள் ஆகிய மூன்று தரப்புக்குமான சுயாட்சிப் பிராந்தியங்களைக் கொண்ட சமஷ்டிக் கட்டமைப்பைக் கோரினார்கள். இதே சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்து, தலதா மாளிகையில் நடந்த கூட்டத்திலும் பேசினார்கள்.   

சமஷ்டி, சுயநிர்ணயம் என்பவை, சிங்களத் தேசியவாதிகளின் (குறிப்பான கண்டி தேசியவாதிகளின்) கோரிக்கையாக மட்டும் இருக்கவில்லை. இடதுசாரிகளும் இதையே முன்மொழிந்திருந்தார்கள். ஒக்டோபர் 1944 இல், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கையின் எதிர்கால அரசமைப்பு தொடர்பில் மேற்கொண்ட தீர்மானத்தில், ‘இலங்கையில் வரலாற்று ரீதியில் வேறுபட்டுக் கூர்ப்படைந்த தேசங்கள் இருப்பதனால், உதாரணமாகத் தமிழர்களும் சிங்களவர்களும் தமக்கென்று தனிப்பட்ட தாயக பிரதேசத்தையும், தமக்கென்றொரு மொழியையும், பொருளாதார வாழ்வையும், கலாசாரத்தையும், உளவியல் உருவாக்கங்களையும் கொண்டிருப்பதோடும், இந்தத் தேசங்களின் பிரதேச எல்லைகளுக்குள் பரவி வாழும் சிறுபான்மைகள் உள்ளதனாலும், இந்தக் கூட்டமானது, சுதந்திர மற்றும் ஒன்றுபட்ட இலங்கையின் அரசமைப்பானது, பின்வரும் ஜனநாயகப் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று பிரகடனம் செய்கிறது என்று குறிப்பிட்டு, தேசங்களும் எவ்வித தடையுமற்ற சுயநிர்ணய உரிமையைக் கொண்டிருக்க வேண்டும்; அந்தச் சுயநிர்ணய உரிமையானது, அவை விரும்பும் பட்சத்தில், தமக்கான சுதந்திர அரசை ஸ்தாபிக்கக் கூடிய உரிமையையும் உள்ளடக்கி அமைய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.   

பின்பு கசக்கும் சமஷ்டி  

ஆக, இதெல்லாம் 1949 இல் சா.ஜே.வே. செல்வநாயகம், ‘சமஷ்டிக் கட்சி’ என்று ஆங்கிலத்தில் அறியப்படும் இலங்கைத் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்து, தமிழர் தலைமையொன்று, சமஷ்டிக் கோரிக்கையை முன்வைக்க முன்பு நடந்தவை.  
ஆக, இலங்கையில் சிங்களத் தலைவர்களே, முதன் முதலில் சமஷ்டி என்ற கருத்தியலை, இலங்கைக்கு மிகப் பொருத்தமான தீர்வென்று முன்வைத்திருந்தார்கள். குறிப்பாக கண்டித் தலைவர்கள், இதற்காக நீண்ட பிரசாரமும், பிரித்தானிய கொலனித்துவத்திடம் வலுவான கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தார்கள்.   

பெயர்போன சிங்களத் தலைவர்கள் பலரைக் கொண்டிருந்த கம்யூனிஸ்டுகள் இதற்கு ஒருபடி மேலேபோய், பிரிந்து செல்லத்தக்க உரிமையுடைய தேசங்களின் சுயநிர்ணயம் பற்றித் தீர்மானமே நிறைவேற்றியிருந்தார்கள். இதுதான் இலங்கையின் வரலாறு.   

தமக்குத் தேவைப்பட்டதென அவர்கள் நினைத்தபோது, இனித்த சமஷ்டி, தமிழர்கள் அதை வேண்டியபோது ஒவ்வாததாய், கசப்பானதாய் போனது ஏன்? அவர்கள் வேண்டியபோது, வேறுபட்ட தேசங்கள் கொண்ட நாட்டை, அந்தத் தேசங்களுக்கான சுயநிர்ணய உரிமைகளைப் பாதுகாப்பதோடு, ஒன்றுபட்ட நாடாகப் பேணத்தக்கதொரு உபாயமாகத் தெரிந்த சமஷ்டி, தமிழர்கள் கோரிய போது, பிரிவினைக்கான அடிப்படையாக, தீண்டத்தகாததாக மாறியது ஏன்?   

இதற்கு முக்கிய காரணியாகப் பங்களித்தவை எனச் சிலவற்றை அடையாளம் காணமுடியும். 1930கள் வரை, கண்டிச் சிங்களவர், கீழ் நாட்டுச் சிங்களவர் இடையேயான அடிப்படை வேறுபாடுகள், பெருமளவு தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.   

கீழ் நாட்டுச் சிங்களவரிடமிருந்து தம்மைத் தனித்த தேசமாகவே கண்டிச் சிங்களவர் அடையாளப்படுத்தினர். ‘சிங்களவர்’ என்ற ஒற்றைத் தேசிய அடையாளம், பெரிதளவுக்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 1931இல் டொனமூர் சீர்திருத்தம், சர்வசன வாக்குரிமையை அறிமுகப்படுத்தியதானது, ஆட்சியில் தெளிவான சிங்களப் பெரும்பான்மைக்கு வழிசமைத்தது.   

அத்தோடு, அதன் பின்னர் பௌத்த பிக்குகளின் அரசியல் எழுச்சியையும் நாம் கொஞ்சம் கொஞ்சமாகக் காணக் கூடியதாக இருக்கிறது. இவையெல்லாம் கண்டி, கீழ் நாடு என்ற வேறுபாடுகளைத் தாண்டிய, ‘சிங்கள - பௌத்த’ பெரும்பான்மைத் தேசிய அடையாளமொன்றைக் கட்டியெழுப்ப வழிசெய்தது.  

‘சிங்கள - பௌத்த’ பெரும்பான்மைத் தேசிய அடையாளத்துக்குள் கண்டிய - கீழ் நாட்டு வேறுபாடுகள் பெருமளவுக்குத் தொலைந்து போனது. மாறாக, சிங்களவர் - தமிழர் என்ற இரண்டு தேசங்கள் பெரும்பான்மை - சிறுபான்மை என்ற முரண் நிலையை அடையும் வண்ணம், பேரினவாத அரசியல் முன்னெடுக்கப்பட்டது.   

முழு இலங்கை மீதான அதிகார மேலாதிக்கத்தை விட்டுக் கொடுக்க விரும்பாத பெரும்பான்மைப் பேரினவாத அரசியல், தமிழர்களுக்கு உரியதென சில தசாப்தங்களுக்கு முன்பு, அவர்களே கருதிய தனித் தேச அடையாளத்தையும், சுயநிர்ணயத்தையும் மறுத்தது. அதன் விளைவும், தொடர்ச்சியும்தான் இன்றுவரை நடந்து கொண்டிருக்கிறது.   

(அடுத்த திங்கள்கி​ழமை தொடரும்)  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .