2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தேசியக் கட்சிகளுக்கான விசுவாசம்: எந்தக் கருமத்தையும் ஈடேற விடாது

Editorial   / 2018 ஏப்ரல் 03 , மு.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

அரசியல் சக்கரம் பல படிப்பினைகளை உணர்த்தியதாகவே சூழன்று கொண்டிருக்கின்றது, என்பதற்கு அண்மைய இலங்கை அரசியல் போக்கு சான்றாகிறது.  

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களாக எண்ணப்பட்ட பலரும், தமது பலம்பொருந்திய மக்கள் தளத்தை வெளிப்படுத்தியதாகவே, நடந்து முடிந்த தேர்தல் காணப்படுகின்றது.   

ஸ்திரமில்லாத சபைகளை உருவாக்கும் விதமாக, உள்ளூராட்சி மன்றங்கள் அமைந்திருந்தாலும் கூட, தேர்தல் முறைமையானது, நீண்ட காலப் பகையாளிகளை, அன்னியோன்னியம் ஆக்கியுள்ள நிலையில், இனம் சார்ந்த கருத்தியல் கொண்டவர்களை, நிரந்தரப் பகையாளிகளாகவும் உருவாக்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.  

தேர்தல் ஆரம்பித்த காலத்தில் இருந்தே, வடக்கு, கிழக்கு பகுதிகளில் ஏற்பட்டிருந்த தமிழ்க் கட்சிகளுக்கு இடையிலான உடைவுகள், ஒவ்வொரு கட்சிகளுடைய கடந்த காலச் செயற்பாட்டை மேடை போட்டுக்காட்டியிருந்தன.  

அதன் தொடர்ச்சியாக, ஒன்றிணைந்து பயணிக்கவேண்டிய தேவையுடைய பல தமிழ்க் கட்சிகள், நிரந்தரப் பகையாளிகளாகத் தம்மை உருவாக்கிக் கொண்டதுடன், ஒரு சிலர் தமது சுயலாப அரசியலுக்காக, கூடாத கூட்டத்துடனும் கூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.  

புதிய அரசமைப்பு மாற்றம் என்ற சொல்லாடலுக்குள் சிக்குண்டிருந்த அரசியல்களம், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின்னர், எவ்வாறு அதில் இருந்து மாற்றமடைந்து, நிர்வாக ரீதியிலான பொறிமுறைக்குள் சபைகளை கொண்டு செல்வது என்ற எண்ணப்பாட்டை சிந்திக்கத் தொடங்கியிருந்ததோ அன்றிலிருந்து அரசமைப்பு என்ற சொல்லாடல் கைவிடப்பட்டுள்ளதுடன், தென்னிலங்கை அரசியல் மாற்றத்தால், அது சாத்தியமற்றதாகவும் ஆகிவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.  

எனினும், ‘கரணம் தப்பினால் மரணம்’ என்ற நிலையில் உருவாக்கப்பட்டு வந்த அரசமைப்பைத் தக்க தருணம் பார்த்து கைவிட்டுள்ளது அரசாங்கம். இதற்கு, வியாக்கியானம் கூறும் பாத்திரமொன்றைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வகித்து வருகின்றமை, தமிழர்களின் இருப்புக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கத் தோன்றுகின்றது.  

நாடாளுமன்றத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்ட மூலத்துக்கு அங்கிகாரம் வழங்கிய கட்சிகளில் ஒன்றான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்று தனது சுயபலத்துடன் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்க முடியாதுள்ள பாதகத்தன்மையை உணரத்தொடங்கியுள்ளது.  

இதற்குமப்பால் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல்த் தோல்விக்கு பல்வேறு காரணங்களைத் தேடிவரும் தமிழரசுக்கட்சி, முதற்காரணமாக வட மாகாணசபையின் செயற்பாடற்ற தன்மையும் காரணம் என தெரிவித்துள்ளது.  

குறிப்பாக, ‘ஆடத்தெரியாதவன் மேடை சரியில்லை’ என்பது போல், தமது உள்ளார்ந்த பிரச்சினைகளும் தமது முக்கியஸ்தர்களின் மாறுபட்ட கருத்துகளும் எந்தளவு தூரத்துக்குப் பின்னடைவான நிலையை எற்படுத்தியுள்ளது என்பதை ஆராயவேண்டிய நிலையில் கூட்டமைப்பு உள்ளது.  

அதுமாத்திரமின்றி, வட மாகாணத்தில் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்கும் தலைமைத்துவத்தைத் தக்க வைப்பதற்காகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த பிரயத்தனங்கள், தமிழ் மக்கள் மத்தியில் விசனமான நிலையை உருவாக்கியுள்ளது.  

குறிப்பாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை, எந்த ஒரு சபையிலும் ஆட்சி அமைப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்க கூடாது என்பதற்காக, தேசியக் கட்சிகளுடன், தமக்கு ஒவ்வாத அல்லது பலமேடைகளில் தம் மீது தாக்கியவர்கள் என பகிரங்கமாகவே பகையாளிகளாகக் காட்டிவந்த கட்சிகளுடன் இணைந்து, கூட்டுச்சேர்ந்துள்ளமை ஆரோக்கியமான அரசியல் நிலைவரத்தை எடுத்தியம்பியதாக இல்லை.   
தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகளுடன், ஏற்பட்ட முரண்பாடான நிலைமை, இன்று பகைமை பாராட்டியவர்களுடன், ஆளும் தரப்பில் இருக்க வேண்டிய நிலைக்கு அல்லது அவர்களுக்கான பணிவிடைகளைத் தலைமைத்துவத்தை காப்பதற்காக செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமையை, அதிர்ஷ்டவசம் என்பதா, துரதிஷ்டவசம் என்பதா?   

இந்நிலையில், வெறுமனே தமது சுயநல அரசியல் தளத்தில் இருந்து, தமிழர் அரசியல் நிலைப்பாட்டைச் சிந்திக்க வேண்டிய நிலைக்குத் தமிழ்த் தேசியக் கட்சிகள், வெறுமனே தேர்தல் மேடைகளில் ஒருவரையொருவர் விமர்சனம் செய்திருந்த நிலையிலேயே, வடக்கு, கிழக்கில் தேசியக்கட்சிகளின் இருப்பு நிலைநிறுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க வேண்டும்.  

தொடர்ச்சியாகத் தமக்குள்ளான வெட்டுக்கொத்துகள் எதிர்வரப்போகும் மாகாணசபையில் தேசியக்கட்சிகளின் அதிகப்படியான ஆளுமையை வெளிப்படுத்தும் பட்சத்தில், தேசியம் என்ற நிலைப்பாட்டில் இருந்து அல்லது தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் உரிமை சார்ந்த விடயங்களைப் பேசும் தளத்தில் இருந்து, தமிழர் அரசியல் களம் வீழ்ச்சியை காணும். அப்போது பேரம் பேசும் சக்தியற்று, பத்தோடு பிதினொன்றாக தமிழ் அரசியலாளர்களைப் பார்க்கும் நிலை உருவாகும்.    

இவ்வாறான நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரிய சவாலை எதிர்கொள்ளவேண்டிய நிலைக்குப் போகும் பட்சத்தில், ஆக்கபூர்வமான அரசியல் நிலைப்பாட்டை எடுக்க முடியாத, ஸ்திரமற்ற நிலையைத் தமிழ்க் கட்சிகள் எதிர்கொள்ள வேண்டியேற்படும்.   

இதற்குமப்பால் வடக்கு, கிழக்கில் வருடங்கள் கடந்து இடம்பெற்றுவரும் மக்கள் போராட்டங்களுக்கு, ஆக்கபூர்வமான தீர்வுகள் எட்டப்படாத நிலையில், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான கரிசனை ஏற்படத்தொடங்கியுள்ளது.  

குறிப்பாக, ஆட்சிப்பீடத்தை அலங்கரிக்கும் இருபெரும் தேசியக்கட்சிகள், கடந்த மூன்று ஆண்டுகளாகத் தமிழர் தரப்புக் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காத நிலை காணப்படுவதான கொதி நிலை தமிழர் தரப்பில் உள்ளது.  

அரச தரப்பில் அங்கம் வகிக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், தாமும் பேரம் பேசும் சக்தியாக மாற்றமடையவேண்டும் என்ற எண்ணப்பாட்டுடன் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக கையொப்பமிட்டிருந்தனர். இதன் காரணமாக, பிரதமர் உட்பட, பல ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள், அவர்களைத் தேடிச்சென்று, தேவையானவற்றை செய்து தர வாக்குறுதி அளித்துள்ளதை அறியமுடிகின்றது.  

எனவே, பெரும் சக்தியாக, எதிர்க்கட்சி என்ற அரியாசனத்தை அலங்கரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, இவ்வாறான நிலையை ஏற்படுத்த முடியாமல் போனது துர்ப்பாக்கியமானதே.   

சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தமிழ்த் தேசிய அரசியல் களத்தில் உள்ள அரசியலாளர்கள், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல்போனோர் விவகாரம், காணி விடுவிப்பு போன்ற இன்னொரன்ன விடயங்களைச் சாதிப்பதற்கான வாய்ப்புகளைத் தவறவிட்டுள்ளனரா என எண்ணத்தோன்றுகின்றது.  

யதார்த்தமான நிலைப்பாடுகளை, உரிய தருணத்தில் எடுக்கத் தவறும் பட்சத்தில், அது வடக்கு, கிழக்கில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் தளத்தில் உள்ள மாறுபட்டதான நிலைப்பாடுகளை, மேலும் வலுப்பெற வைத்து, தேசிய கட்சிகளின் இருப்புக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி விடும்.  

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்கான ஆதரவைத் தேசியக் கட்சிகள், தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கியிருந்தாலும் கூட, இவ்வாறான நிலை ஏற்படுவதற்கு அல்லது தேசியக் கட்சிகளை நம்பி இருக்க வேண்டிய நிலைக்குத் தமிழ்க் கட்சிகள் செல்ல வேண்டிய காலச்சூழல் ஏற்பட ஏதுவானது எது என்பது தொடர்பான ஆழமான பார்வை தமிழ் அரசியலாளர்களுக்குத் தேவையாகவுள்ளது.  

தமது கட்சியினூடாக நாடாளுமன்றம் சென்றவர்களுக்கே, பேச்சுரிமையை மறுப்பதாகக் கூட்டமைப்பு மீதான கோபம் வன்னிப்பிரதேச மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில், தேசியக் கட்சிகளுக்கு அல்லது உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமக்கு ஆதரவு வழங்கினார்கள் என்ற கரிசனையிலான நிலைப்பாடு, தமிழர்களுக்கான விமோசனத்தை ஏற்படுத்தாது.  

எனவே, ‘காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’ என்பதுபோல், காலம் கனிந்து வரும்போது, தமது பலத்தை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தைத் தமிழ் அரசியலாளர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.   
அவ்வாறு இல்லாமல் போனால், கால ஓட்டத்தில் கரைந்து போன நினைவுகளாகவே, தமிழர்களது அரசியல் பயணம் இருக்குமே தவிர, உரிமைகளை வென்றெடுப்பதற்கான முனைப்பாக இருக்காது என்பது நிதர்சனம்.  
இச்சூழலில், ஆக்கபூர்வமான செயன்முறைகளை முன்னெடுத்து, தமிழ் மக்கள் மத்தியில் நிரம்பியுள்ள எதிர்பார்ப்புகளையும் அவர்கள் சார் அபிலாஷைகளையும் வென்றெடுப்பதற்கான நிலைமைகளாக, பிரதமர் மீதான நம்பி​க்கையில்லாப் பிரேரணையைப் பயன்படுத்தாது விட்டால், எந்தக்கருமமும் இவ்வாண்டிலும் நிறைவேறாது என்பதே வெளிப்படை.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .