2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தேசிய அரசாங்கம் தேவையா?

முகம்மது தம்பி மரைக்கார்   / 2019 பெப்ரவரி 05 , மு.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 தேசிய அரசாங்கமொன்று நாட்டில் இருந்தது. அதற்கு ‘நல்லாட்சி அரசாங்கம்’ என்று பெயர் வைத்திருந்தார்கள். ஆனால், கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதியுடன், தேசிய அரசாங்கம் இல்லாமல் போய்விட்டது.   

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் உருவான மோதல், தேசிய அரசாங்கத்தை இல்லாமலாக்கியது.  

இப்போது ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. தனிக் கட்சி அல்லது அணியொன்று அமைக்கும் ஆட்சியில், ஜனாதிபதி உள்ளடங்கலாக அமைச்சர்களின் எண்ணிக்கை 30ஐத் தாண்டக் கூடாது என்று அரசமைப்பின் 19ஆவது திருத்தம் கூறுகிறது. அதேபோன்று, அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சர்கள், பிரதியமைச்சர்களின் மொத்த எண்ணிக்கையும் 40ஐ விஞ்சலாகாது என்றும் அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

ஒக்டோபர் 26ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின்போது, ஜனநாயகத்தைக் காப்பாற்றப் போவதாகக் கூறிக் கொண்டு, ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த, ஐ.தே. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஐ.தே.கட்சிக்கு ஆதரவளித்து வரும் கூட்டுக் கட்சிகளுக்கும் அமைச்சுப் பதவிகளை ரணில் பங்கீடு செய்தபோது, அதிருப்திகளும் முரண்பாடுகளும் தோன்ற ஆரம்பித்தன.  

குறிப்பாக, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் அமைச்சுப் பதவி கிடைக்காதவர்கள், தமது கோபத்தை வெளிப்படையாகவே தெரிவிக்கத் தொடங்கினர். இந்த நிலைவரமானது, ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கடுமையான சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.  

இந்த இக்கட்டைச் சமாளிக்க வேண்டிய அவசியம், ரணிலுக்கு  உள்ளது. ஏற்கெனவே ரணிலின் தலைமைத்துவத்துக்கு எதிரான அணி,  ஐ.தே.கட்சிக்குள் உள்ளது. இப்போது ஜனாதிபதியும் ரணிலுடன் எக்கச்சக்க கோபத்தில் இருக்கின்றார். இவ்வாறானதொரு நிலையில், கட்சிக்குள் அதிருப்தியாளர்களை மேலும் உருவாக்குவது, தனது தலைமைத்துவத்துக்கு ஆபத்தாக அமையும் என்பதை, ரணில் மிக நன்கு அறிவார்.

மேலும், தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டிய காலமும் நெருங்கி வருகின்றது. எனவே, அமைச்சுப் பதவிகள் கிடைக்காமையால் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அதிருப்திகளைத் தீர்த்து வைக்க வேண்டிய அவசரத் தேவை, ஐ.தே.கட்சித் தலைவருக்கு உள்ளது.  

இதற்காக, தேசிய அரசாங்கம் ஒன்றை, மீண்டும் அமைக்கும் முயற்சியொன்றை ரணில் விக்கிரமசிங்க கையில் எடுத்துள்ளார். 

‘தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் போது, அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையும் அமைச்சரவை உறுப்பினர்கள் அல்லாத அமைச்சர்களின் எண்ணிக்கையும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கையும் நாடாளுமன்றத்தால் தீர்மானிக்கப்படுதல் வேண்டும்’ என்று, அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தின் உறுப்புரை 46(4) தெரிவிக்கின்றது.  

இவ்வாறான சூழ்நிலையில், தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கான பிரேரணை ஒன்றை,  ஐக்கிய தேசியக் கட்சி சமர்ப்பித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல, மேற்படி பிரேரணையை நாடாளுமன்றச் செயலாளரிடம் கடந்த முதலாம் திகதி கையளித்துள்ளார்.

இந்தப் பிரேரணை மீதான விவாதம், நாளை மறுதினம் 07ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.  

இந்த இடத்தில், தேசிய அரசாங்கமொன்றை ஐக்கிய தேசியக் கட்சி எவ்வாறு உருவாக்கப் போகிறது என்பதை, நாம் தெரிந்து கொள்தல் வேண்டும். 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு நாடாளுமன்றில் ஏழு உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் நான்கு பேர் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். இன்னுமிருவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் மூலம், நாடாளுமன்றம் வந்தவர்கள். மிகுதியுள்ள ஒருவர், அலிசாஹிர் மௌலானா. இவர், மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தில் போட்டியிட்டு, வெற்றி பெற்றவர்.  

எனவே, முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகிய அலிசாஹிர் மௌலானாவை, ஒரு கட்சியாக இணைத்துக் கொள்வதன் மூலம், தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு, ரணில் விக்கிரமசிங்க முயல்கிறார்.   

தற்போதுள்ள ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில், முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா, இராஜாங்க அமைச்சராகப் பதவி வகிக்கின்றார் என்பதும் நினைவுகொள்ளத்தக்கது.  

இவ்வாறானதொரு சூழ்நிலையில், பிரதமர் ரணிலுக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை (02) அலரி மாளிகையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. முஸ்லிம் காங்கிரஸின்  தலைவர் ரவூப் ஹக்கீம், முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா ஆகியோர், பிரதமரை இதன்போது சந்தித்துள்ளனர்.  

தேசிய அரசாங்கமொன்றை உருவாக்குவது தொடர்பில், இந்தச் சந்திப்பின்போது பேசப்பட்டதாக, முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் பி.பி.சிக்குத் தெரிவித்திருந்தார்.  

தேசிய அரசாங்கம் என்பதற்கு, அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தின் உறுப்புரை 46(5)இல் வரைவிலக்கணம் கூறப்பட்டுள்ளது. மேற்படி உறுப்புரையானது, சிங்களம், ஆங்கில மொழிகளில் ஒன்றாகவும் தமிழில் வேறு கருத்துப்படவும் உள்ளமை, சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.  

தேசிய அரசாங்கம் என்பதற்கு, 19ஆவது திருத்தத்தின் உறுப்புரை 46(5)இன் தமிழ் மொழிப் பிரதியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ‘தேசிய அரசாங்கம் என்பது, நாடாளுமன்றத்தில் ஆகக்கூடுதலான ஆசனங்களைப் பெறும், அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக் குழுவும், நாடாளுமன்றத்தில் அங்கிகரிக்கப்பட்ட ஏனைய அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக் குழுவும் ஒன்று சேர்ந்து உருவாக்கும் ஓர் அரசாங்கமாகும்’.  

அதாவது, அதிக ஆசனங்களைக் கொண்ட தரப்புடன், ஏனைய அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக் குழு (கவனிக்க: அரசியல் கட்சி, சுயேட்சைக் குழு என்று ஒருமையில் குறிப்பிடப்பட்டுள்ளது) சேர்ந்து கொண்டால், தேசிய அரசாங்கத்தை அமைக்கலாம் என்று தமிழ் மொழியில் கூறப்பட்டுள்ளது.  

ஆனால், ஆங்கிலம், சிங்களத்தில் அதிக ஆசனங்களைக் கொண்ட அணியுடன், ஏனைய அரசியல் கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுகள் (கவனிக்க: அரசியல் கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்கள் என்று பன்மையில் குறிப்பிடப்பட்டுள்ளது) இணைந்து கொண்டால், தேசிய அரசாங்கத்தை அமைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

எவ்வாறாயினும், அரசமைப்பில் கூறப்பட்டுள்ள விடயங்கள் குறித்து, மொழிகளுக்கிடையே வேறுபாடுகள் அல்லது சொல் மயக்கங்கள் காணப்படுமாயின், சிங்கள மொழியில் கூறப்பட்டுள்ள விடயமே, மேலோங்கி நிற்கும் என்று அரசமைப்புக் கூறுகிறது. 

அந்தவகையில் பார்த்தால், தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்கள் இணைய வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.  

அப்படியென்றால், முஸ்லிம் காங்கிரஸை மட்டும் இணைத்துக் கொண்டு, தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியாது. அவ்வாறு முயற்சிப்பது, அரசமைப்புக்கு விரோதமானதாகும் என்று, அரசமைப்பில் நிபுணத்துவம் பெற்றவர்கள் கூறுகின்றனர்.   

ஒக்டோபர் 26ஆம் திகதி இடம்பெற்ற அரசியல் நெருக்கடியின் போது, அரசமைப்பை ஜனாதிபதி மீறிவிட்டார் எனக் குற்றம்சாட்டி, ஜனநாயகத்தைக் காப்பாற்றப் போவதாகக் கூறிக் கொண்டு, நீதிமன்றம் சென்ற முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை உருவாக்கும் முயற்சியில், அரசமைப்பை மீறலாமா என்கிற கேள்வி, இங்கு எழுகிறது.  

மறுபுறமாக, ஐக்கிய தேசியக் கட்சியும் முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து, தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க முயற்சிப்பது, தார்மிக ரீதியில் தவறானதாகும்.   

தார்மிகம் என்பது, சட்டம் மற்றும் நியதிக்கு அப்பாற்பட்ட நியாயமாகும். ஏற்கெனவே, ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணிக் கட்சியாக இருந்து கொண்டு, அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ், இப்போது தன்னைத் தனிக்கட்சியாகக் காட்டி, தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு முயற்சிப்பது, தார்மிகத்தைக் கடந்தாகும்.    

இதேவேளை, தீர்வுகாணப்பட வேண்டிய எத்தனையோ, மிக முக்கிய பிரச்சினைகள் நாட்டில் உள்ள நிலையில், அமைச்சுப் பதவிகளுக்கு ஆசைப்படுகின்றவர்களின் தாகத்தைத் தீர்ப்பதற்காக, தேசிய அரசாங்கமொன்றை அமைக்கப் போவதாகக் கூறிக் கொண்டு, நடத்துகின்ற நாடகம், வெட்கக் கேடானது எனவும், அவ்வாறான தேசிய அரசாங்கம் போலியானதாகவே அமையும் என்றும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் குற்றம்சாட்டுகின்றனர்.  

இன்னொருபுறம், அமைச்சர்கள், அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள், பிரதியமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் போது, அதற்காக மேலும் பெருமளவு நிதியைச் செலவிட வேண்டிய தேவை ஏற்படும்.  

ஏற்கெனவே, நாட்டில் பொருட்களுக்கான விலைகள் உயர்ந்து கொண்டிருக்கின்றன. அரசாங்கம் பெற்றுள்ள கடனுக்காகச் செலுத்த வேண்டிய வட்டியும் முதலும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. ரூபாய்க்கு எதிரான டொலரின் பெறுமதி குறைந்த பாடில்லை.   

மேலும், தோட்டத் தொழிலாளர்களுக்கான அடிப்படைச் சம்பளத்தை 1,000 ரூபாயாக வழங்குவதற்குரிய திட்டமொன்றை வகுக்க முடியாமல், விழி பிதுங்கி நிற்கிறது அரசாங்கம்.   
இவைபோன்ற நெருக்கடிகளின் மத்தியில், மேலும் செலவுகளை ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஆட்சியாளர்கள் முயற்சிப்பது, அக்கறையின்மையின் வெளிப்பாடாகும்.  

‘எரிகிற வீட்டில் பிடுங்குவது லாபம்’ என்கிற மனநிலையில்தான், தங்கள் அரசியல் தலைவர்களும் பிரதிநிதிகளும் இருக்கின்றார்கள் என்பதை, மக்கள் புரிந்து கொள்வதற்கு, இது மிகப் பொருத்தமான தருணமாகும்.  

மொழிகளுக்கு இடையிலான முரண்பாடு

தேசிய அரசாங்கம் என்பதை, அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தின் 46(5)ஆம் உறுப்புரையின் தமிழ் மொழியாக்கம், எவ்வாறு விவரிக்கின்றது என்பதை படம் - 01இல் காணலாம். 

 அதே உறுப்புரையின் ஆங்கில மொழியாக்கத்தை படம் - 02 இல் காணலாம். இங்கு, நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களைப் பெறும் கட்சி அல்லது சுயேட்சைக் குழுவும் ஏனைய அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்களும் (other recognized political parties or the independent groups) ஒன்று சேர்ந்து, தேசிய அரசாங்கத்தை உருவாக்கலாம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது

.  

46(5)ஆம் உறுப்புரையின் சிங்கள மொழியாக்கம் எவ்வாறு விவரிக்கின்றது என்பதை படம் - 03இல் காணலாம். இங்கும் நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களைப் பெறும் கட்சி

அல்லது சுயேட்சைக் குழுவும், ஏனைய அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்களும்  ஒன்று சேர்ந்து தேசிய அரசாங்கத்தை உருவாக்கலாம் என்று விவரிக்கப்பட்டுள்ளது.  

 

தேசிய அரசாங்கம் அமைவது சாத்தியமா?

என்ன சொல்கிறார் வை.எல்.எஸ் ஹமீட்

“ஐக்கிய தேசியக் கட்சியும் முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து, தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியாது” என்று, அரசியல் ஆய்வாளரும் சட்ட முதுமாணியுமான வை.எல்.எல். ஹமீட் தெரிவிக்கின்றார்.

அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தின் உறுப்புரை 46(5)இனை சுட்டிக்காட்டி, அவர் இதற்கான விளக்கத்தை வழங்கினார்.  

“ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் அல்லது சுயாதீனக் குழுக்களுடன் இணைந்துதான் ஐக்கிய தேசியக் கட்சியால் தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்க முடியும்” என்று அவர் கூறினார்.  

இதற்காக, முஸ்லிம் காங்கிரஸுடன் சேர்த்து, மக்கள் விடுதலை முன்னணி, டக்ளஸ் தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி போன்றவற்றை இணைத்துக் கொள்ள முடியும்” என்றும், வை.எல்.எஸ். ஹமீட் உதாரணம் காட்டினார்.   

இதேவேவளை, “முஸ்லிம் காங்கிரஸையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து விலகி, சுயாதீனமாகச் செயற்படும் ஓர் அணியையும் இணைத்துக் கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சியால் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியுமா” என்கிற கேள்விக்கும் அவர், பின்வருமாறு விளக்கமளித்தார்.  

“ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்தக் கூட்டமைப்பிலிருந்து விலகி, மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் ஒன்றிணைந்த எதிரணியாகச் செயற்பட்டு வந்தார்களல்லவா? அதன்போது, தம்மை நாடாளுமன்றத்தில் சுயாதீனமான ஓர் அணியாக அறிவிக்குமாறு, சபாநாயகரிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அதைச் சபாநாயகர் ஏற்றுக் கொள்ள வில்லை. இவ்வாறான பின்னணியில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்கும் பொருட்டு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து இப்போது ஓர் அணி பிரிந்து வந்து, தம்மை சுயாதீனமான குழுவாக அங்கிகரிக்குமாறு கோரிக்கை விடுத்தாலும், அதைச் சபாநாயகர் எப்படி ஏற்றுக் கொள்வது? ஒன்றிணைந்த எதிரணியினருக்கு மறுப்புத் தெரிவித்த சபாநாயகர், இப்போது அதே கூட்டமைப்பிலிருந்து பிரிந்த மற்றோர் அணியினரை எவ்வாறு சுயாதீனமானவர்களாக ஏற்றுக் கொள்வது? எனவே, முஸ்லிம் காங்கிரஸையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து வருகின்ற ஓர் அணியையும் இணைத்துக் கொண்டும் கூட, ஐக்கிய தேசியக் கட்சியால் தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்க முடியாது” என்று, ஹமீட் விவரித்தார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X