2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தொக்கி நிற்கும் மாகாண சபை தேர்தல்கள்

என்.கே. அஷோக்பரன்   / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊவா மாகாண சபையைத் தவிர்ந்த ஏனைய எட்டு மாகாண சபைகளும், அரசமைப்பின் 154E உறுப்புரைப்படி, அவற்றின் ஐந்து வருடகாலப் பதவிக்காலம் நிறைவடைந்ததன் நிமித்தமாகக் கலைந்துள்ளன. ஊவா மாகாண சபையின் பதவிக்காலமும், எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் நிறைவுக்கு வருகிறது. மாகாணசபைத் தேர்தல்கள் சட்டத்தின் பத்தாம் சரத்து மற்றும் அரசமைப்பின் 154E உறுப்புரை ஆகியனவற்றின்படி, மாகாண சபையொன்றின் பதவிக்காலம் நிறைவடைந்து, அந்த மாகாணசபை கலைந்த நாளிலிருந்து, நான்கு வார காலத்துக்குள், குறித்த மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான அறிவித்தலை, தேர்தல் ஆணைக்குழு விடுக்க வேண்டும் என்கின்றது. 

ஆனால், மாகாண சபைகள் கலைந்து, பல மாதங்களாகியும் இன்றுவரை மாகாண சபைத் தேர்தலுக்கான அறிவித்தல் விடுக்கப்படவில்லை. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் ஏற்பட்டுள்ள சட்டச் சிக்கல்தான், மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியாத சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.

அது என்ன சட்டச் சிக்கல்?

2017ஆம் ஆண்டில், மாகாண சபைத் தேர்தல் சட்டத்துக்கான சில அடிப்படைத் திருத்தங்களை, நாடாளுமன்றம் மேற்கொண்டிருந்தது.  2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல் (திருத்தச்) சட்டத்தை நிறைவேற்றியதன் ஊடாக, 13ஆம் திருத்தத்தினூடாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபைகளுக்கான, உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும் தேர்தல் முறைமை, மாற்றியமைக்கப்பட்டது. இதுவரை காலமும், நாடாளுமன்றத் தேர்தல் போலவே, விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில், மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெற்றன. 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க, திருத்தச் சட்டத்தின் மூலம், விகிதாசார முறை முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டு, இதற்கு முன்னர் உள்ளூர் அதிகார சபைத் தேர்தல் (திருத்தச்) சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட உள்ளூராட்சி மன்றுகளுக்கான புதிய தேர்தல் முறைக்கு ஒத்த வகையிலான ‘கலப்புமுறை’ அல்லது ‘கலப்பு உறுப்பினர் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை’ அறிமுகப்படுத்தப்பட்டது. 

சுருக்கமாகச் சொன்னால், இது தொகுதி முறை, விகிதாசார முறை ஆகிய இரண்டையும் கொண்ட கலப்பு முறையாகும். விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ், மாவட்ட ரீதியாகக் கட்சிக்கான வாக்கு, விருப்பு வாக்கு என்ற இரண்டு அடிப்படைகளில் உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவர். ஆனால், தொகுதிமுறை என்று வரும் போது, ஒவ்வொரு தொகுதிக்குமான உறுப்பினர் தெரிவுசெய்யப்பட வேண்டிய நிர்ப்பந்தம் உள்ள நிலையில், தொகுதி எல்லை நிர்ணயம் என்பது அவசியமானதொன்றாகிறது. 

ஆகவே, 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்கத் திருத்தச் சட்டத்தின் கீழ், மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படவேண்டுமானால், தொகுதி எல்லை நிர்ணயமானது முதலில் செய்யப்பட வேண்டும். அதன் அடிப்படையில், தொகுதி நிர்ணய குழு நியமிக்கப்பட்டுத் தொகுதிகளை நிர்ணயம் செய்து, நாடாளுமன்றத்தில் அந்தத் தொகுதி நிர்ணயமானது, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என, 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்கத் திருத்தச் சட்டம் உரைக்கின்றது. இங்குதான் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. 

குறித்த எல்லை நிர்ணய அறிக்கை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டாலும், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறமுடியாத நிலையில், அது நிறைவேற்றப்படவில்லை. இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்கத் திருத்தச் சட்டம் உரைப்பதன் படி, பிரதமரின் தலைமையிலான மீளாய்வுக் குழு ஒன்றமைக்கப்பட்டு, அது தனது மீளாய்வை முன்னெடுத்து வருகிறது. சட்டம் வழங்குவதன்படி, எல்லை நிர்ணய மீளாய்வுக் குழுவின் பதவிக்காலம் நிறைவடைந்து, பல மாத காலங்களாகி விட்டன. 

எல்லை நிர்ணய மீளாய்வுக் குழுவானது, தமக்கு எல்லை நிர்ணயத்துக்காக வழங்கப்பட்ட கால அவகாசம் போதாது என்று, சபாநாயகருக்கு அறிவித்துள்ளது. ஆனால், எல்லை நிர்ணய மீளாய்வுக் குழுவின் பதவிக்காலம் என்பது, சபாநாயகர் தீர்மானிக்கக்கூடியதொன்றல்ல; மாறாக, நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தின் படி, நிர்ணயிக்கப்பட்டதொன்றாகும். இதனை மாற்றியமைக்கும் அதிகாரம், சபாநாயகருக்கு இல்லை. இந்த நிலையில், ஏறத்தாழ ஒருவருடத்துக்கும் மேலாக, எல்லை நிர்ணயத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையே நீடிக்கிறது. 

எல்லை நிர்ணய அறிக்கை, நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்படாத வரை, 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்கத் திருத்தச் சட்டம் அறிமுகப்படுத்திய புதிய முறையின் கீழ், மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டிருக்கின்ற நிலையில், மாகாண சபைத் தேர்தல்களைப் பழைய முறையின் கீழ் நடத்தவேண்டும் என்ற கோரிக்கை, பல கட்சிகளாலும் முன்வைக்கப்பட்டது. இதுபற்றிப் பல மட்டங்களில் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன. ஜனாதிபதி, பிரதமர், தேர்தல் ஆணையாளர எனப் பல்வேறு நபர்கள் தலைமையிலும் பல கூட்டங்கள் நடைபெற்றன. பழைய முறையிலோ, புதிய முறையிலோ தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை, பலமாக முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு, மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் றிட் மனுக்கள், பல்வேறு தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகளின் சாரம்சம் பின்வருமாறு அமைந்திருந்தது. எல்லை நிர்ணய செயற்பாடுகள் தொடர்பிலான கால வரையறைகள், 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்கத் திருத்தச் சட்டத்தில் மிகத் தௌிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. 

ஆயினும், எல்லை நிர்ணயம் தொடர்பில் குறித்த கால வரையறைகள் மீறப்பட்டுள்ளதோடு, எல்லை நிர்ணய செயற்பாடுகள், தற்போது முட்டுக்கட்டை நிலையை எட்டி இருக்கின்றன. எல்லை நிர்ணயம் செய்யப்படாது, 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்கத் திருத்தச் சட்டம் அறிமுகப்படுத்திய புதிய ‘கலப்பு முறையின்’ கீழ், தேர்தல்கள் நடத்தப்பட முடியாத, முட்டுக்கட்டைச் சூழல் எட்டப்பட்டிருக்கிறது. இதன் மூலம், மக்களின் வாக்களிக்கும் உரிமை பாதிக்கப்பட்டுள்ளதுடன், மக்களது இறைமையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. 

ஆகவே, புதிய முறையின் கீழ் தேர்தல் நடத்தப்பட முடியாத முட்டுக்கட்டைச் சூழலைத் தவிர்க்க, எல்லை நிர்ணய செயற்பாடுகள் நிறைவுறும் வரை, பழைய முறையின் கீழ் தேர்தலை நடத்தத் தேர்தல் ஆணையகத்துக்கு ஆணையிடுமாறு குறித்த றிட் மனுக்கள் வேண்டிநின்றன. இந்த வழக்குகளைப் பொறுத்தவரையில், குறிப்பிடத்தக்க முக்கியமான விடயங்களிலொன்று, இதில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்ட தேர்தல் ஆணையாளர், மனுதாரரின் நிலைப்பாட்டை மறுக்கவில்லை. மாறாக, அவர்களும் மனுதாரரின் நிலைப்பாட்டைக் கொள்கையளவில் ஆதரித்தார்கள். 

நாடாளுமன்றம் திருத்தச் சட்டமூலமொன்றை நிறைவேற்றி, சட்டமொன்றைத் திருத்தியதன் பின்னர், அந்தச் சட்டம் வலிமையற்றதென, அதற்கு முன்னிருந்த சட்டத்தைப் பின்பற்ற முடியுமா என்பது, இந்த வழக்குகளில் எழுந்த முக்கிய கேள்வியாகும். இதுதொடர்பில், தம்தரப்பு வாதமாக மனுதாரர்களும் தேர்தல் ஆணையாளர்களும், பொருள்கோடல் கட்டளைச்சட்டத்தின் 6(2) சரத்தின் அடிப்படையிலான பொருள்கோடல் தொடர்பான வாதமொன்றை முன்வைத்திருந்தனர். பொருள்கோடல் கட்டளைச் சட்டத்தின் 6(2) சரத்தானது, எழுத்து மூலமான சட்டமொன்று முழுவதுமாகவோ, பகுதியளவிலோ முன்னர் இருந்த எழுத்து மூலமான சட்டமொன்றை நீக்கி, புதிய ஏற்பாடொன்றை மாற்றீடு செய்யுமானால், குறித்த மாற்றீடு செய்யப்பட்ட ஏற்பாடு, இயக்கத்துக்கு வரும் வரை, குறித்த நீக்கமானது அமுலுக்கு வராது என்று வழங்குகிறது. 

இதன் அடிப்படையில், எல்லை நிர்ணயம் என்பது, நிறைவேற்றப்படாதவரை, 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்கத் திருத்தச் சட்டம் அறிமுகப்படுத்திய புதிய தேர்தல் தொடர்பான ஏற்பாடுகள், இயக்கத்துக்கு வர முடியாது; ஆகவே, அது இயக்கத்துக்கு வராத வரை, முன்னைய ஏற்பாடுகளின் நீக்கம், அமலுக்கு வராது; எனவே, முன்னைய ஏற்பாடுகளின் கீழ் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது, அவர்களது வாதத்தின் சுருக்கம். ஆனால், இந்த வழக்குகள் முழுமையாக வாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட முன்பே, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில், ஏற்பட்டுள்ள முறுகல் நிலை சார்ந்து, மூன்று கேள்விகளை அரசமைப்பின் 129(1) சரத்தின் கீழ், ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றின் அபிப்பிராயத்தைக் கோருவதற்குள்ள அதிகாரத்தின் படி, உயர் நீதிமன்றத்திடம் முன்வைத்திருந்தார். 

இது தொடர்பில் ஆராய்ந்து, ஐந்து நீதியரசர்களைக் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு, மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில், ஜனாதிபதி எழுப்பியிருந்த கேள்விகள் தொடர்பிலான தனது அபிப்பிராயத்தை, ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தது. குறித்த அபிப்பிராயம், இதுவரை ஜனாதிபதியால் பகிரங்கப்படுத்தப்படவில்லை. எனினும், ஜனாதிபதியின் செயலகம் விடுத்திருந்த அறிக்கையின்படி, நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்படாத எல்லை நிர்ணய அறிக்கையைச் செயற்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்று உயர்நீதிமன்றம் குறிப்பிட்டிருந்ததாகவும், ஆகவே, எல்லை நிர்ணயம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்படும் வரை, புதிய ஏற்பாடுகளின் கீழ், தேர்தல்கள் நடத்தப்பட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளதாகவும் இதுதொடர்பில் வௌிவந்துள்ள செய்தியறிக்கைகள் குறிப்பிடுகின்றன. 

உயர்நீதிமன்றின் அபிப்பிராயத்தின் முழுமையான வடிவம் பகிரங்கப்படுத்தப்படும் வரை, உயர்நீதிமன்றத்தின் அபிப்பிராயத்துக்கான தர்க்க நியாயங்களை, நாம் ஊகிக்க மட்டுமே முடியும். மேற்குறித்த, ஐந்து நீதியரசர்களைக் கொண்ட அமர்வின் அபிப்பிராயமானது, நடைமுறை யதார்த்தத்தில் மேற்குறித்த றிட் வழக்குகளையும் முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டது. ஆகவே, இன்றுள்ள சூழலில் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமானால், அது ஒன்றில் நாடாளுமன்றமானது எல்லை நிர்ணய அறிக்கையை மூன்றிலிரண்டு நிறைவேற்றுவதனூடாக அல்லது, மாகாண சபைத் தேர்தல் சட்டத்தைத் திருத்தி, தற்போது எழுந்துள்ள முறுகல் நிலையை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகளை அதில் புதிதாகச் சேர்ப்பதனூடாக மட்டுமே சாத்தியமாக்க முடியும். 

அரசியல் ரீதியான பார்வை

இந்த விடயத்தை, நாம் அரசியல் ரீதியாக அணுகினால், இந்த அரசாங்கமானது அரசமைப்புக்கான 20ஆம் திருத்த சட்டமூலம் ஒன்றினூடாக, 09 மாகாண சபைகளின் தேர்தல்களையும் ஒரே தினத்தில் வைப்பதற்கான முன்னேடுப்புகளைச் செய்திருந்தது. ஆனால், குறித்த சட்டமூலம் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட போது, உயர்நீதிமன்றமானது, குறித்த நடவடிக்கை, மக்களின் வாக்களிக்கும் உரிமையையும் மக்களின் இறைமையையும் பாதிப்பதால், அது அரசமைப்பின் மூன்றாம், நான்காம் சரத்துகளை நேரடியாகப் பாதிக்கிறது; ஆகவே, நாடாளுமன்றத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடனும், சர்வசனவாக்கெடுப்பில் மக்களின் அங்கிகாரத்துடனும் மட்டுமே, குறித்த 20ஆம் திருத்த சட்டமூலம் நிறைவேற்றப்பட முடியும் என்று தீர்மானித்திருந்தது. இத்தீர்மானத்தின் பின்னர், குறித்த 20ஆம் திருத்த சட்டமூலம் கைவிடப்பட்டது. ஆகவே, அரசமைப்புக்குத் திருத்தமொன்றைக் கொண்டுவந்து, அதன் மூலம், தாம் செய்ய விரும்பிய ஒரு விடயத்தை, அது இயலாமற் போன காரணத்தால், மறைமுகமாக எல்லை நிர்ணய இழுத்தடிப்பினூடாக, அரசாங்கம் செய்ய விளைகிறதோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியாதுள்ளது. இதனால்தான், அண்மைய மாதங்கள் வரை, எதிர்க்கட்சிகள் மாகாண சபைத் தேர்தல் உடனடியாக வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக முன்வைத்து வந்தன. 

ஆனால், ஜனாதிபதித் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மாகாண சபைத் தேர்தல் தொடர்பில், தற்போது அனைத்துக் கட்சிகளுமே அக்கறையை இழந்துவிட்டன என்றே தோன்றுகிறது. இன்றைய சூழலில், எந்தக் கட்சியும் மாகாண சபைத் தேர்தல்கள் பற்றிப் பேசுவதில்லை. இதில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நேரடியான எந்த அழுத்தமும் இல்லாத, அதேவேளை மாகாண சபையை மிக முக்கியமானதொரு விடயமாகக் கருதவேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அக்கறையின்றி இருப்பது ஆச்சரியமே. 

மாகாண சபை முறைமை என்பது, தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யத்தக்கதோர் அதிகாரப் பகிர்வுக் கட்டமைப்பு என்று கூறிவிட முடியாது. ஆனால், இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில், இன்று யதார்த்தத்தில் இருக்கக்கூடிய ஒரே அடிப்படைக் கட்டமைப்பு அதுதான். எல்லை நிர்ணயம் என்ற முட்டுக்கட்டை மூலம், அதன் இயக்கம் முடங்குமானால், அது பெயரளவிலான அதிகாரப்பகிர்வின் முடக்கமாகத்தான் பார்க்கப்பட வேண்டும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .