2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நெஞ்சில் நெருப்பைத் தமிழினம் ஏந்திய நாள்

Editorial   / 2020 மே 21 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -இலட்சுமணன் 

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டங்களையும் அதன் வரலாற்றுப் பின்புலங்களையும் அறியாதவர்கள், அந்த அரசியல் நீரோட்டத்தில் கலக்காத, சுயநல அரசியல் சார்ந்த செயலொழுங்கில் பயணிப்பவர்களாகவே பெரும்பாலும் இருக்க முடியும். இத்தகையோர், சலுகைகளுக்காக உரிமைகளைத் தாரைவார்த்துக் கொடுத்து, சுயத்தை இழந்து நிற்பவர்களாகவே இருக்கமுடியும். இவர்களுக்கு, முள்ளிவாய்க்கால் ஓர் அஸ்தமனமாகத் தெரியலாம்; ஏன், தமிழ்த் தேசிய போராட்டத்தின் முடிவாகக் கூடக் கருதலாம்.

1949ஆம் ஆண்டில் இருந்து, 1975வரை இடம்பெற்ற தமிழர்களின் அஹிம்சைப் போராட்டம் சம்பந்தமாக, ஒரு முழு விளக்கம் தர வேண்டும் என்றும், அமெரிக்காவில் கறுப்பின மக்களின் உரிமைக்காகப் போராடிய மார்டின் லூதர் கிங், அவர்களினதும் மற்றைய அமைப்புகளினதும் அஹிம்சைப் போராட்டங்களில் ஒரு சிறிதளவாவது தமிழர்கள், தமிழ்த் தலைவர்கள் செய்தார்களா? அல்லது, அஹிம்சைப் போராட்டம் நடத்தி, தோற்றுப் போனதற்கான எந்த ஆதாரமாவது இருக்கிறதா? எனவும் சில அரசியல் மேதாவிகள், கேள்வி எழுப்புகின்றனர்.

தேர்தல் அரசியலை நோக்காகக் கொண்ட செயற்பாடுகளே நடைபெற்றன; ஆயுதப் போராட்டம் தொடங்கும் அளவுக்கு, தமிழர்களின் மேல் இராணுவ அடக்குமுறை இலங்கையில் இருந்ததா என, வினா எழுப்புகின்ற, தங்களைத் தாங்களே பகுத்தறிவாளர்கள் என, இனங்காட்டிக் கொள்ள முயலும் பச்சோந்திகளும் புல்லுருவிகளும் சமூகத்தில் நடமாடித்திரிகிறார்கள். இவர்கள், தமிழ் அரசியல் தலைவர்களே, வன்முறையைத் தூண்டினார்கள் என்பதை நியாயப்படுத்துவதற்கான, நிறைய ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகத் தம்பட்டம் அடிக்கின்றனர்.

அதற்கு, அல்பிரட் துரையப்பாவின் படுகொலையை நியாயப்படுத்தி, அப் படுகொலைக்கு, தமிழ் அரசியல்வாதிகளின் தூண்டுதலே காரணம் என, காரணம் கற்பிக்கிறார்கள். தமிழ் அரசியல் தலைவர்கள், ஒருபக்கம் அஹிம்சையைப் பேசிக்கொண்டு, மறுபக்கம் வன்முறையை, அரசியல் நலன்களுக்காகத் தூண்டிவிட்டனர் எனக் குற்றம் சுமத்துபவர்கள், 'மார்ட்டின் தூதர் கிங், மகாத்மா காந்தி போன்றவர்கள், அஹிம்சையைக் கடைப்பிடித்தார்கள்; எங்காவது வன்முறையைத் தூண்டும் செயலிலோ, பேச்சிலோ ஈடுபட்டார்களா' எனத் தர்க்கிக்கின்றனர்.

இதில், இரட்டை வேடம் போடுபவர்கள், வன்முறையை ஊக்குவிப்பவர்களுடனும் வன்முறையை நியாயப்படுத்துபவர்களுடனும் சேர்ந்து, அரசியல் செய்தாலும், வன்முறையை, ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்கவலில்லை என, வெளிப்படையாக அரசியல் பேசுபவர்களும் அதற்கு வாக்காளத்து வாங்குபவர்களும் முள்ளிவாய்க்காலுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கக்கூடாது.

ஏனெனில், முள்ளிவாய்க்கால் அவலம் என்பது, இவர்களுக்குரியது அல்ல. ஏனெனில், இவர்கள் தேசியத்தின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் நேரடியாகப் பார்க்காதவர்கள்; பங்காளியாகாதவர்கள்.

ஆனால், இவர்கள் வரலாற்றை திரிபுபடுத்த முயலும் திரிபுவாதிகள்; ஐரோப்பியர் ஆட்சிக்கு முன்னர், தமிழரின் ஆட்சி அதிகாரத்தில் இருந்த பிரதேசங்கள், ஐரோப்பிய கொலனித்துவத்தின் பின்னர் பறிபோன சூழலில், வழங்கப்பட்ட சுதந்திரம், இலங்கைச் சிறுபான்மை தமிழ்ச் சமூகத்தைப் புறந்தள்ளி, அதன்விளைவாக, கடந்த 72 ஆண்டுகளாக, இலங்கையில் தமிழினம், தமது உரிமைக்காக அஹிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராடியது.

இவ்வகையில், காலத்துக்குக் காலம், இனக்கலவரங்கள் சிங்கள ஆட்சியாளர்களால் தூண்டிவிடப்பட்ட பொழுதுகளில், சிறுபான்மையினத் தமிழர்கள், தமது தலைவிதியைத் தீர்மானிக்கவும் தமது இனத்தைப் பாதுகாக்கவும் போராட வேண்டும் என்ற சூழ்நிலை தோற்றுவிக்கப்பட்டது. 

சத்தியாகிரகப் போராட்டம், சிறி ஒழிப்பு, ஹர்த்தால் எனப் பல போராட்டங்கள் வேகமாக வளர்ச்சி கண்டன.  இவ்வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருந்தவர்கள் தமிழ்த் தலைவர்களா, சிங்களத் தலைவர்களா? டட்லி - செல்வா ஒப்பந்தம், பண்டா-செல்வா ஒப்பந்தம், சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம், திம்புப் பேச்சுவார்த்தை போன்றவை, அஹிம்சை வழியில் போராடியதால் நடைபெற்றன. ஆயினும், அவை சிங்கள அரசுகளால் கிழித்தெறியப்பட்டன; நிராகரிக்கப்பட்டன. ஏமாற்றியவர்கள் தமிழ்த் தலைவர்களா, சிங்களத் தலைவர்களா?

இதனால்தான், வன்முறை மீது, தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்தனர். இதன் வெளிப்பாடுதான் 35க்கும் மேற்பட்ட இயக்கங்களின் தோற்றமும் வளர்ச்சியும்.

இந்தப் போராட்டத்தின் உக்கிரமே, இந்திய-இலங்கை ஒப்பந்தம், சந்திரிகா- விடுதலைப் புலிகள் ஒப்பந்தம், ரணில்-பிரபா நோர்வே அனுசரணையுடனான ஒப்பந்தம் என நீண்டது.

இந்த ஒப்பந்தங்கள், எதை உலகுக்கும் தமிழ் மக்களுக்கும் வெளிக்காட்டி நிற்கின்றன. இந்த ஆயுதப் போராட்டம் தவறு என்றால், ஏன் இந்த ஒப்பந்தங்கள்? ஆயுதமேந்தியது தவறு என்றால், முள்ளிவாய்க்காலும் போராடிய போராட்டமும் தமிழ் அரசியல் கட்சிகளும் தவறுதான்.

அவ்வாறாயின், போராட்டத்தை இதயசுத்தியுடன் முன்னெடுத்த ஒட்டுமொத்தத் தமிழினமும் தவறுதான்; அவ்வாறாயின், பொது மன்னிப்பைத் தமிழரே கேட்கவேண்டும் என்ற கோட்பாடு நோக்கியும், போராட்டமும் தியாகங்களும் தவறானது எனப் பயணிக்க முயல்பவர்கள், உலகுக்கும் சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் தெரியப்படுத்த முனைகின்ற செய்தியாகும்.

2002இல் ஆயுதப் போராட்டத்துடனான தமிழ் அரசியல் செல்நெறியின் தேவை கருதிய, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கமும் வளர்ச்சியும் 2009இல்  ஆயுதப்போராட்டத்தின் மௌனிப்புக்குப் பின்னர், கூட்டமைப்பு, தமிழ் அரசியல் தலைமையை ஏற்றமையும் ஜெனீவாத் தீர்மானம் வரை சென்றமையும், அதன் பங்குதாரர்களாலேயே கொச்சைப்படுத்துவதற்காகவா நடைபெற்ற?

போராட்டத்தைக் கொச்சைப்படுத்திக் கொண்டு, முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளை, அரசியலாக்கும் முயற்சிகளும் அறிக்கைகளும் இயல்பெழுச்சி, உணர்வெழுச்சிக்கு அப்பால், நடத்தி முடித்துள்ளனர். தமிழினம் தம் உறவுகளையும் பொருளாதாரத்தையும் இழந்தநாள், தமிழினத்தின் உணர்வை நெஞ்சங்களில் கொழுந்துவிட்டு எரிய வைத்த நாள்; இந்நாளில், தமிழினம் தன் உறவுகளுக்கு அஞ்சலி செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலை; தடைகள், பரிசோதனைகள், அச்சுறுத்தல்கள் இவற்றைவிட, சமூக இடைவெளி எனக் கொரோனா வைரஸைக் காரணம் காட்டி, தமிழர் தங்கள் கடமைகளைச் செய்ய உரிமை மறுக்கப்பட்டது.

தமிழ் அரசியல் காரியாலயங்கள், முக்கிய பகுதிகள், முள்ளிவாய்க்கால், அம்பாறை, திருக்கோவில், திருகோணமலை போன்ற பிரதேச நிகழ்வுகளும் திட்டமிட்ட முறையில் நடத்த முடியாமல் போயிற்று. ஆயினும், மக்களின் உணர்வுகள், உள்ளங்களிலும் இல்லங்களிலும் விளக்கேற்றி, ஆலயங்களிலும் அலுவலகங்களிலும் பிரகாசித்தது.

ஆனால், இந்த இனத்தை ஒடுக்கியதன் இராணுவ வெற்றி விழா, மிகச்சிறப்பாக  வானூர்திகள் பூமழை பொழிய, நடைபெற்றது. இது, இலங்கையின் சட்டவாக்கத்தின் செயற்பாட்டினது பலத்தையும் பலவீனத்தையும் காட்டுகிறது.

1972ஆம் ஆண்டு, இலங்கை தீவு குடியரசு அந்தஸ்தைப் பெற்றபோது முதலாவது குடியரசு அரசமைப்பு தயாரிக்கப்பட்டது. அந்த அரசமைப்பில், இலங்கை சுதந்திரமும் தன்னாதிக்கமும் இறைமையும் கொண்ட குடியரசு என, முகவாசகம் குறிப்பிடுகிறது. அதன் அரசு கொள்கைகளும் தத்துவங்களும் அரச பிரஜைகளின் பொருட்டு, அனுசரிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பாகவும் அபிவிருத்தி, சமாதானம், அமைதி, சகவாழ்வு உட்பட சகல விடயங்கள் தொடர்பாகவும் மேம்பாட்டை ஏற்படுத்துவது அரசின் கடப்பாடாகும் எனவும் காணப்படுகின்றது. எனினும், அது செய்யப்படவில்லை என்று சட்டத்தின்முன், பிரஜைகள் அதைக் கேள்விக்கு உட்படுத்த முடியாது என, இதே அரசமைப்பின் 16, 18 ஆவது உறுப்புரைகள் வலியுறுத்துகின்றன.

மேலும், முதன்முறையாக இலங்கையின் அரசமைப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமைகள், அரசமைப்பின் 18ஆவது உறுப்புரை குறிப்பிடுகின்றது. இதன் மூலம் இன, மத, பால், சாதி வேறுபாடுகளின்றி சகல உரிமைகளையும் சமத்துவமாக சகல பிரஜைகளும் அனுபவிக்க உரித்துடையவர்கள் என குறிப்பிட்டாலும், மேற்படி உரிமைகள் தொடர்பாக, நிவாரணம் கோரிச் செல்லக்கூடிய ஓரிடம் குறிப்பிடப்படவில்லை.

இதன் விளைவாக, அன்றைய ஆட்சியாளர்களால் 1978ஆம் ஆண்டு இலங்கையின் இரண்டாவது குடியரசு அரசமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த யாப்பு மூலம், ஜனநாயகத்தின் ஊடாக சோஷலிஸம் கூறும் இலக்குகளை அடையலாம் என்ற நம்பிக்கையால் ஜனநாயகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

அடிப்படை உரிமைகள் குறித்த அத்தியாயம் மேலும் விரிவுபடுத்தப்பட்டதுடன் அவை மீறப்படும்போது, பாதிக்கப்பட்டவர் நிவாரணம் பெறுவதற்கான ஏற்பாடுகள் சேர்க்கப்பட்டன. மேலும், 1978ஆம் ஆண்டு, அறிமுகப்படுத்திய அரசமைப்பில் பின்வரும் அத்தியாயங்களில், சட்டம் செயற்படுவது தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வகையில், முதலாம் அத்தியாயம், இலங்கை அரசு, அதன் இறைமை பற்றியும் இரண்டாம் அத்தியாயம், மதம் பற்றியும் குறிப்பிடுகிறது. மூன்றாம் அத்தியாயம், அடிப்படை உரிமைகள் பற்றிக் கூறுகிறது. 18ஆம் அத்தியாயம், பொதுமக்கள் பாதுகாப்பு பற்றிப் பேசுகிறது.

ஆயினும், இவை நடைமுறையில், எவ்வளவு தூரம் இலங்கை மக்கள் அனைவருக்கும் சாதகமாகப் பிரயோகிக்கப்படுகின்றன? எழுத்தில் உள்ள சட்டங்கள், சிறுபான்மையினரைப் பொறுத்தவரையில் நடைமுறைப்படுத்துவதில் உள்ள பாரபட்சம், அன்றும் இன்றும் தொடர்கிறது. எனவே, இந்தத் தொடர் அச்சுறுத்தல் நிலை தகர்க்கப்படும் போதே, உண்மை ஜனநாயகம் பிறக்கும்; உரிமைகள் கிடைக்கும். இவை கிடைக்கும்வரை, தமிழினத்தின் மனங்களில் தாம் பாரபட்சப்படுத்தப்படுகிறோம் என்ற மாறாவடு, கனன்றுகொண்டே இருக்கும்.

இழப்புகள் இழப்புகள்தான்; அவை ஆறா ரணங்கள்; என்றும் நெஞ்சங்களில் எரி தணலாய் கொளுந்துவிட்டு எரிபவை. ஏனெனில், போர் தமிழினத்தின் மீது வலிந்து திணிக்கப்பட்டது; தமிழினத்தை அழிப்பதற்கு முயற்சிக்கப்பட்டது. அதனால்தான், மே18 தமிழினம் நெஞ்சில் நெருப்பை ஏந்திய நாள் என்றாகி விடுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .