2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்து கேவலமான அரசியலின் மற்றுமோர் அத்தியாயம்

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2018 ஏப்ரல் 04 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான நாடாளுமன்ற விவாதம், இன்று நடைபெறவிருக்கிறது.   

ஐக்கிய தேசியக் கட்சியின் சிலரும், பகிரங்கமாகவே பிரதமருக்கு எதிராகக் கருத்து வெளியிட்டு வரும் நிலையில், இந்தப் பிரேரணை பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.  மத்திய வங்கி பிணைமுறி விவகாரமே, இந்தப் பிரேரணையில், பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரதான குற்றச்சாட்டாகும்.   

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன், அதாவது 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி, மத்திய வங்கி பிணைமுறி விற்பனையின் போது, மா பெரும் ஊழலொன்று இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டினர். இந்தக் குற்றச்சாட்டு, தமது இருப்பைக் கேள்விக்குறியாக்கும் என, ஐக்கிய தேசியக் கட்சியினர் அப்போது நினைத்திருக்க மாட்டார்கள்.   

எனவே, அவர்கள் அந்தக் குற்றச்சாட்டை அடியோடு மறுத்ததோடு, குற்றஞ்சாட்டப்பட்டவர்களைப் பாதுகாக்கும் வகையில், சில ஐ.தே.க தலைவர்கள் புத்தகங்களையும் எழுதினர்.   

இப்போது, பாரிய தேர்தல் தோல்வியொன்றை அடுத்து, இன்று ஐ.தே.க நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றையும் அதனால் எதிர்நோக்கியிருக்கிறது.  

2015 ஆம் ஆண்டு, ஐக்கிய தேசியக் கட்சி பதவிக்கு வந்ததன் பின்னர், எதிர்நோக்கிய முதலாவது பலப் பரீட்சை, கடந்த பெப்ரவரி மாதம் 10 திகதி, நாடு தழுவிய ரீதியில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஆகும்.   

அத்தேர்தலில், ஐ.தே.க  படுதோல்வி அடைத்தது. 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது, அக்கட்சி பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையைப் பார்க்கிலும், இந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலின்போது, அக்கட்சி சுமார் 15 இலட்சம் வாக்குகளைக் குறைவாகவே பெற்றது.   

அந்த 15 இலட்சம் வாக்குகளும் எதிர்க் கட்சியின் பக்கம் செல்லாமல் ஆளும் கூட்டணியின் மற்றைய கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பக்கம் தாவியது என்பது உண்மைதான். ஆனாலும், ஐ.தே.கவைப் பொறுத்தவரை, அது மிகவும் மோசமான தோல்வி என்றே கூற வேண்டும். இந்தத் தோல்விக்கு இந்தப் பிணைமுறி விவகாரமே காரணம் எனக் கருதப்படுகிறது.  

ஐ.தே.கவின் இந்தத் தோல்வி, ஒரு தொடர் தோல்விக்கே வழிவகுக்கும் சாத்தியம் உள்ளது. ஏனெனில், பெரும்பாலான மக்கள் கொள்கை கோட்பாடுகளை விட, வெற்றி பெறும் வாய்ப்புள்ள கட்சிகளை ஆதரிக்கவே விரும்புவர்.  

 அதாவது, இந்தத் தோல்வி, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்கள், 2020 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல், அதே ஆண்டில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் ஆகியவற்றின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும்.   

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளால், ஐ.தே.க தலைவர்கள் உஷாராகிவிட்டார்கள் என்றும், எனவே வரப்போகும் தோல்விகளைத் தவிர்க்கலாம் என்றும் சிலர் வாதிடலாம்.  

ஆனால், ஐ.தே.கவுக்குள்ளும் ஆளும் கூட்டணிக்குள்ளும் ஏற்பட்டிருக்கும் மோதல்கள், அவ்வாறான எதிர்பார்ப்புகளையும் சிதறடிக்கின்றன.   

ஐ.தே.கவுக்குள் ஏற்பட்டிருக்கும் மோதல்களை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தோல்வியே வெளிக் கொணர்ந்தது. அதேவேளை, அந்தத் தோல்வி, ஆளும் கூட்டணியின் பிரதான இரு கட்சிகளான ஐ.தே.க மற்றும் ஸ்ரீ ல.சு.கவுக்கிடையில் ஏற்பட்டு இருந்த முரண்பாடுகளையும் தீவிரமடையச் செய்துள்ளது.  

அதன் ஓர் உச்சக் கட்டமாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.தே.க தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அந்தப் பதவியிலிருந்து விலகுமாறு ஆலோசனை வழங்கியதாகச் செய்திகள் வெளியாகின.    

பிரதமரைப் பதவியிலிருந்து வெளியேற்றுவது தொடர்பாக,   அவர் சட்ட மா அதிபரின் ஆலோசனையைக் கோரியிருந்ததாகவும் தெரிய வந்தது.   

தேர்தல் முடிவுகளை அடுத்து, பிரதமர் பதவி விலக வேண்டும் என்றும் அரசாங்கம் இராஜினாமாச் செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தி வரும் ஒன்றிணைந்த எதிரணி, ஜனாதிபதிக்குப் பிரதமரைப் பதவிநீக்கம் செய்யும் அதிகாரம் இருப்பதாக வாதாடியது.  

2015 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த மைத்திரி-ரணில் அரசாங்கம், அவ்வாண்டு ஏப்ரல் மாதம் நிறைவேற்றிய 19 ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் மூலம், ஜனாதிபதியினதும் பிரதமரினதும் அதிகாரங்களிலும் கடமைகளிலும் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.   

அந்தத் திருத்தத்தின் சில வாசகங்களில் பிரதமர் நீக்கப்படுவது தொடர்பான கருத்துகள் உள்ளடக்கப்பட்டுள்ள போதிலும் நேரடியாகவே ஜனாதிபதியால் பிரதமர் பதவி நீக்கம் செய்யப்பட முடியுமா, இல்லையா என்று எதுவும் கூறப்படவில்லை. அதனால்தான், ஜனாதிபதி அது தொடர்பாகச் சட்ட மா அதிபரின் ஆலோசனையைக், கோரியிருந்தார்.  உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னரும் இவ்விரண்டு கட்சிகளுக்கிடையே முரண்பாடுகள் தோன்றியிருந்தன.  

 2016 ஆம் ஆண்டு முதல் ஸ்ரீல.சு.க தலைவரான ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேன, முன்னைய அரசாங்கத்தின் தலைர்களுக்கு எதிரான ஊழல் குற்றச் சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை, ஐ.தே.க தலைவர்கள் தாமதப்படுத்தி வருவதாகவும் அவற்றுக்கு பல்வேறு இடைஞ்சல்களை ஏற்படுத்தி வருவதாகவும் குற்றஞ்சாட்டி வந்தார். பின்னர் மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் அம்பலமாகவே, அவர் அது தொடர்பாகவும் ஐ.தே.க தலைவர்களைக் குற்றஞ்சாட்டினார்.   

அப்போது சில, ஐ.தே.க காரர்களும் ஜனாதிபதியைப் பகிரங்கமாகவே தாக்கிப் பேசினர். இந்த மோதல் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மேடைகளிலும் காணப்பட்டது.   

ஒன்றிணைந்த எதிரணியினருக்குப் புறம்பாக ஜனாதிபதியும் பிணைமுறி விவகாரத்தை தேர்தல் மேடைகளில் முக்கிய விடயமாக எடுத்துக் கொண்டார். தேர்தலில் ஆளும் கட்சிகளின் பின்னடைவுக்கு அதுவும் முக்கிய காரணமாகியது எனச்சில விமர்சகர்கள் கூறுகின்றனர்.   

தேர்தலின் பின்னர் பிரதமரைப் பதவிநீக்கம் செய்வது, வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அரசாங்கத்தை நிறுவுவது போன்ற சில மாற்றுத் திட்டங்களை பரிசீலித்த பின் ஜனாதிபதியும் அவரது கட்சியான ஸ்ரீ ல.சு.கவும் வேறு வழியின்றி மீண்டும் அதே பிரதமருடனும் அதே ஐ.தே.கவுடனும் தேசிய அரசாங்கத்தை தொடர்வது என்ற முடிவுக்கு வந்தது.  இந்த நிலையில் தான், ஒன்றிணைந்த எதிரணியினர் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளித்தனர்.   

தார்மிக ரீதியில் பார்த்தால் இந்தப் பிரேரணையை எதிர்க் கொள்வது ஐ.தே.கவுக்கு மிகவும் கடினமாகவே இருக்கும். ஏனெனில், மத்திய வங்கிப் பிணைமுறி விவகாரத்தின் போது, பிரதமர் செய்தவையும் செய்யாமல் விட்டவையுமே இந்தப் பிரேரணையில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.   

பிணைமுறி விவகாரத்தின் போது, மாபெரும் ஊழல் இடம் பெற்றுள்ளமை இப்போது நாடே அறிந்த விடயமாகிவிட்டது. அந்த விவகாரம் தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன் பாரதுரமான பல விடயங்கள் அம்பலமாகின.   

அதன் விளைவாக ஐ.தே.கவின் பிரதித் தலைவர்களில் ஒருவரான ரவி கருணாநாயக்க, தமது அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார்.   

பிணைமுறிச் சந்தையில் முக்கிய புள்ளிகளான பேர்பெச்சுவல் டிரெஷரீஸ் நிறுவனத்தின் தலைவரான அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும் பிரதமரின் நெருங்கிய நண்பருமான அர்ஜுன மஹேந்திரன் தேடப்பட்டு வருகிறார்.   

எனவே, நம்பிக்கையில்லாப் பிரேரணை ஐ.தே.கவை பெரும் இக்கட்டான நிலைக்கு தள்ளிவிட்டுள்ள போதிலும், அது தொடர்பான விவாதத்தின் போது, அக்கட்சி முன்னைய அரசாங்கத்தின் தலைவர்கள் செய்த பாரியளவிலான ஊழல்களைக் காட்டி, தம் மீதான குற்றச்சாட்டுகளின் பாரதூரத் தன்மையைக் குறைக்க முற்படலாம்.  

அரசியல் நாகரிகம், தார்மிகம் என்று வரும்போது பிணைமுறி விவகாரத்தின் மூலம் ஐ.தே.க மட்டுமல்லாது, ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீ ல.சு.க மற்றும் பிரேரணையை முன்வைத்த மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் இயங்கும் ஒன்றிணைந்த எதிரணியும் கஷ்டமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.  

குறிப்பாக, பிணைமுறி விவகாரத்தின் காரணமாக, ஒரு மாதத்துக்கு முன்னர் பிரதமரைப் பதவிநீக்கம் செய்ய முயன்ற ஜனாதிபதியும் பிரதமரை ஒதுக்கித் தள்ளிவிட்டு, ஒன்றிணைந்த எதிரணியுடன் அரசாங்கத்தை அமைக்க முயன்ற ஸ்ரீ ல.சு.கவும் அதே பிணைமுறி விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு, பிரதமரைப் பதவி நிக்கம் செய்வதற்காக முன்வைத்துள்ள இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை, எவ்வாறு எதிர்க்க முடியும்?   

மறுபுறத்தில், பிரதமரின் தலைமையிலான ஐ.தே.கவை ஒதுக்கித் தள்ளிவிட்டு, வேறு அரசாங்கமொன்றை அமைக்க வழியில்லை என்பதைக் கண்டதால் தேசிய அரசாங்கத்தைத் தொடர்வதென ஒரு சில வாரங்களுக்கு முன்னர் முடிவு செய்த ஜனாதிபதியும் ஸ்ரீ ல.சு.கவும் ஐ.தே.கவையும் பிரதமரையும் மேலும் பகைத்துக் கொள்ளும் வகையில் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு தெரிப்பது எவ்வாறு? 

அவ்வாறு ஆதரித்துவிட்டு, பிரேரணை தோல்வியடைந்தால், மீண்டும் ஐ.தே.க பெரும்பான்மையாக உள்ள அரசாங்கத்தில் ஸ்ரீ ல.சு.ககாரர்கள் அமைச்சுப் பதவிகளை வகிப்பது எப்படி?  பிணைமுறி விவகாரத்தில் ஜனாதிபதிக்கும் மறைமுகப் பங்குண்டு. நிதி அமைச்சின் கீழ் இருக்க வேண்டிய மத்திய வங்கியை, பிரதமரின் அமைச்சின் கீழ் வைத்துக் கொண்டமை நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இருக்கும் ஒரு குற்றச்சாட்டாகும்.   

பிரதமரின் ஆலோசனையின் பேரிலாயினும், அவ்வாறு மத்திய வங்கியைப் பிரதமரின் அமைச்சின் கீழ் கொண்டு வந்தவர் ஜனாதிபதியே. சிங்கப்பூர் பிரஜையான மஹேந்திரனை, மத்திய வங்கியின் ஆளுநராக நியமித்தமை பிரேரணையிலுள்ள மற்றுமொரு குற்றச்சாட்டாகும். பிரதமரின் ஆலோசனையின்படி அதையும் செய்தவர் ஜனாதிபதியே.  

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னர், மஹிந்தவுக்குச் சாதகமாக உருவாகியுள்ள அரசியல் அலை காரணமாக, ஸ்ரீ ல.சு.க அமைச்சர்கள் மஹிந்தவின் பக்கம் தாவச் சந்தர்ப்பம் உருவாகும் வரை, காத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றே ஊகிக்க முடிகிறது. எனவே, அவர்கள் இந்தப் பிரேரணையை ஆதரிக்கவே விரும்புவர்.  

இந்தப் பிரேணையின் மூலம், தாம் ஊழலுக்கு எதிரானவர்கள் என்று காட்டிக் கொள்ள, ஒன்றிணைந்த எதிரணியினர் முயல்கின்றார்கள். ஆனால், ஐ.தே.கவும் மக்கள் விடுதலை முன்னணியும் விவாதத்தின் போது, அதற்கு இடமளிக்க மாட்டார்கள்.    

அவர்கள், முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற ‘மிக்’ ஊழல், ‘அவன்ட் காட்’ ஊழல், ‘ஹெஜிங்’ ஊழல், ‘கிரீக்’ பிணைமுறி ஊழல் ஆகியவற்றை இழுத்துப் போட்டு வாதாடுவார்கள்.   

 கோட்டாபய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, யோஷித்த ராஜபக்ஷ, மஹிந்தானந்த அலுத்கமகே, விமல் வீரவன்ச போன்ற பலர் பாரிய ஊழல்கள் தொடர்பாக நீதிமன்றம் முன் நிறுத்தப்பட்டுள்ளனர். எனவே, தார்மிகப் போட்டியில் வெற்றி பெறுவது, ஒன்றிணைந்த எதிரணிக்கு இலகுவான விடயமாகாது.  

பிரேரணையிலுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தாலும், பொய்யாக இருந்தாலும் அதன் செல்லுபடித் தன்மையை நிர்ணயிக்கப் போவது, ஐ.தே.கவும் ஒன்றிணைந்த எதிரணியும் நாடாளுமன்றத்தில் திரட்டிக் கொள்ளும் வாக்குகளேயாகும்.   

அதாவது, குற்றச்சாட்டுகள் பொய்யாக இருந்தாலும், பிரேரணை நிறைவேறலாம். அதேபோல், குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தாலும், பிரேரணை தோல்வியடையலாம்.   

எனவே, இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 வாக்குகளும் பெரும் முக்கியத்துவம் பெறுகின்றன. அந்த நிலையில் இப்போதைக்கு பிரேரணை தோல்வியடையும் சாத்தியங்களே அதிகமாகக் காணப்படுகின்றன.  

ஐ.தே.கவின் 27 எம்.பிக்கள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பர் என ஐ.தே.க காரான இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார கூறியிருக்கிறார்.   

உண்மையில், அவ்வாறு ஐ.தே.க காரர்கள் பெருமளவில் பிரேரணைக்கு ஆதரவு வழங்கும் நிலை உருவாகினாலன்றி, அது வெற்றி பெறும் சாத்தியப்பாடு இல்லை. ஓர் அமைச்சருக்காக அரசாங்கம் மாதமொன்றுக்கு 7.5 மில்லியன்  ரூபாய் செலவிடுவதாக, அண்மையில் செய்தியொன்றில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அவ்வாறான, அமைச்சுப் பதவிகளைக் கைவிட்டு, பிரதமருக்கு எதிராகச் செயற்பட ஐ.தே.க அமைச்சர்கள் முன்வருவார்களா?  பிரேரணைக்கு எது நடந்தாலும், அதன் பின்னர், நாடு மேலும் நிலையற்ற நிலைக்குத் தள்ளப்படலாம்.   

அரசியல் கட்சிகள், தாமே ஏனைய கட்சிகளுக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுகளை, ஒருபுறம் வைத்துவிட்டு, வெட்கமில்லாமல், அவற்றுடனேயே ஒன்றிணைந்த சேர்ந்து நிற்கும் கேவலமான அரசியல் நிலைமையை, அதன் பின்னரும் அவதானிக்கலாம்.  அரசியலில் கொள்கை, கோட்பாடுகள் எல்லாமே, வெறும் ஏமாற்று வித்தைகள் என்பதையும் மேலும் தெளிவாக அப்போது உணரலாம்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .