2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நம்பிக்கையில்லாப் பிரேரணை முற்றாக தோற்கவில்லை

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2018 ஏப்ரல் 11 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணியால் சமர்ப்பிக்கப்பட்டு இருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, நாடாளுமன்றத்தில் கடந்த நான்காம் திகதி நடைபெற்ற வாக்கெடுப்பின்போது தோல்வியடைந்தமை, நாட்டின் அரசியல் நிலைமையில், பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது எனலாம்.   

பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஒன்றிணைந்த எதிரணியினரின் அரசியல் கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, பெரும்பாலான சபைகளில் முதலிடத்தைப் பெற்றது.   
அந்த வெற்றியால் நாட்டு மக்களிடையே ஏற்பட்டு இருந்த தாக்கம், அவர்களது நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்ததை அடுத்து, வெகுவாக மழுங்கிப் போய்விட்டது.   

தேர்தல் வெற்றியை அடுத்து, அவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் எனக் கூச்சலிட்டனர். ஆனால், நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்ததை அடுத்து, அந்தக் கோஷம் முற்றாக நின்றுவிட்டது.  

அவர்கள் மட்டுமன்றி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அவர் தலைமை தாங்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரும் “பிரதமர் பதவி விலக வேண்டும்” என வற்புறுத்தி வந்தனர். அவர்களது குரலும் தற்போது அடங்கிவிட்டது.   

ஒன்றிணைந்த எதிரணி, இந்தத் தோல்வியை எதிர்பார்த்திருக்க வேண்டும். இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்படும் போது, ​ஐ.தே.கவில் பாரிய பிளவு ஏதும் ஏற்பட்டு இருக்கவில்லை. ​  

ஐ.தே.கவைச் சேர்ந்த இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கோ பண்டார, அப்போது பிரதமருக்கு எதிராகத் தாமே நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டு வருவதாகக் கூறிக் கொண்டு இருந்தார். மற்றோர் ​ஐ.தே.க உறுப்பினரான பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெகரும, தமது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.  

 ​ஐ.தே.கவில் போட்டியிட்ட அத்துரலியே ரத்தன தேரர், ​ஐ.தே.கவைத் திட்டிக் கொண்டு இருந்தார். பிரதி அமைச்சர் வசந்த சேனாநாயக்கவும் சற்று வித்தியாசமாக நடந்து கொண்டார். அவர்களைத் தவிர, வேறு ​ஐ.தே.க காரரும் பிரதமருக்கு எதிராகச் செயற்படுவார் என்று கூறும் நிலை இல்லாத நேரத்திலேயே, நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டது.  

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, பிரதமருக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணிக்கு ஆதரவாகச் செயற்படும் நிலையும் அப்போது இருக்கவில்லை. எனவே, ​ஐ.தே.கவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் சேர்ந்தால், எந்தவொரு நம்பிக்கையில்லாப் பிரேரணையையும் தோற்கடிக்கலாம் என்ற நிலை காணப்பட்டது. 

இந்நிலையிலேயே, ஒன்றிணைந்த எதிரணி, தமது நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் சமர்ப்பித்தது. எனவே, அது தோல்வியைத் தமது தலையில் சுமந்து கொண்டே பிறந்தது எனலாம்.  

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன பெற்ற வெற்றியால், அக்கட்சியினர் விரைவில் பதவிக்கு வரும் ஆசையால் உந்தப்பட்டனர்.   

எனவே, அரசாங்கம் பதவி விலக வேண்டும் எனக் கூச்சலிட ஆரம்பித்தனர். அத்தோடு, மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தைக் காரணம் காட்டி, தேர்தல் காலத்தில் ​ஐ.தே.கவுக்கும் பிரதமருக்கும் எதிராகக் கடுமையாகக் கருத்து வெளியிட்டு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தேர்தல் முடிவுகளை அடுத்து, பிரதமரைப் பதவி விலகுமாறு கேட்டு இருந்தார். அதனால், ஒன்றிணைந்த எதிரணி மேலும் தெம்பூட்டப்பட்டது.  

பிரதமரைப் பதவி நீக்கம் செய்வது எவ்வாறு என்று, அரசமைப்பில் கூறப்படவில்லை. ஆனால், அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று வெற்றி பெற்றால், பிரதமரும் அமைச்சர்களும் பதவிகளை இழப்பர் என அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

 பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரமுடியாது என்றும், அதில் குறிப்பிடப்பட இல்லை.   

நாடாளுமன்றத்தில் இருக்கும் உறுப்பினர்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் நம்பிக்கையை வென்றவர் என ஜனாதிபதி நம்பும் உறுப்பினரையே ஜனாதிபதி, பிரதமராக நியமிக்க வேண்டும். அவ்வாறாயின் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று வெற்றி பெற்றால், அவர் மீது நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் நம்பிக்கை வைத்துள்ளதாக ஜனாதிபதி கருத முடியாது. எனவே அவ்வாறான நிலையில் பிரதமர் தொடர்ந்தும் பதவியில் இருக்க முடியாது.   

அவ்வாறு கணக்குப் போட்டுத் தான், ஒன்றிணைந்த எதிரணியினர் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து இருக்க வேண்டும். ஆனால், அது பிசுபிசுத்துப் போய் விட்டது.  

இப்போது பிரதமரின் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, திருப்பித் தாக்க ஆரம்பித்துள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த 15 ஸ்ரீ ல.சு.க அமைச்சர்களும் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவும் தத்தமது பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும் என இப்போது ​ஐ.தே.க கூறி வருகிறது. அது சம்பந்தமாக, ​ஐ.தே.க உத்தியோக பூர்வமாகவும் எழுத்து மூலமாகவும் கோரிக்கை விடுத்துள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.  

அந்த 16 ஸ்ரீ ல.சு.க உறுப்பினர்களில் ஆறு பேருக்கு எதிராக, ​ஐ.தே.க பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த வெள்ளிக்கிழமை நம்பிக்கையில்லப் பிரேரணைகளைச் சமர்ப்பித்ததாகவும், அவை கட்சியின் முடிவு அல்லாததால், அவற்றை வாபஸ் பெறுமாறு, பின்னர் பிரதமர் ஆலோசனை வழங்கியதாகவும் செய்திகள் கூறின.   

கட்சித் தலைமையின் ஆலோசனையின்றி, பின்வரிசை உறுப்பினர்கள் அவ்வாறு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை சமர்ப்பிப்பார்களா என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, ஸ்ரீ ல.சு.க காரர்களுக்கு எதிரான, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை வெறும் மிரட்டலாகவும் கருதலாம்.  

இந்த 16 ஸ்ரீ ல.சு.க உறுப்பினர்களில் பிரதி சபாநாயகர் பதவி விலக வேண்டும் என்று கோருவது முறையானதாகத் தெரியவில்லை. ஏனெனில், பிரதி சபாநாயகர் பதவியானது அரசாங்கத்தின் பதவியொன்றல்ல; அது நாடாளுமன்றத்தின் சுயாதீனமான பதவியாகும். அதேபோல், அந்தப் பதவிக்குத் தெரிவு செய்யப்படுபவர், சபாநாயகரைப் போலவே, நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குப் பலத்தாலேயே தெரிவு செய்யப்படுகிறார்.   

நாடாளுமன்ற அமர்வுகளுக்குத் தலைமை தாங்கும் மூன்று பேர் இருக்கின்றனர். சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் ஆகியோரே அந்த மூவராவர். 

இவர்கள் சபையில் இல்லாத போது மட்டுமே, மற்றோர் உறுப்பினர் சபைக்குத் தலைமை தாங்கலாம். 
அவர்களில் சபாநாயகர், ஒருபோதும் சபாநாயகர் ஆசனம் தவிர்ந்த வேறு எந்தவோர் ஆசனத்திலும் அமர்வதில்லை. விவாதங்களில் கலந்து கொள்வதோ அல்லது வாக்கெடுப்புகளில் கலந்து கொள்வதோ இல்லை. ஆனால், மற்றைய இருவரும் விவாதங்களின் போது, தமது கட்சியின் சார்பில் விவாதங்களில் கலந்து கொள்வர்; வாக்கெடுப்புகளிலும் கலந்து கொள்வர். இது சட்ட விரோதமானதோ அல்லது மரபுக்கு எதிரானதோ அல்ல.  

ஒரு வாக்கெடுப்பின் போது, ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் சமமாக வாக்குகளைப்   பெற்றால் மட்டும் சபாநாயகரும் தமது வாக்கை, அவற்றில் ஒரு கட்சிக்கு வழங்க சட்டத்திலும் மரபிலும் இடமுண்டு.  

 எனவே, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தமை காரணமாக, அவர் நடுநிலையை மீறினார்; எனவே பதவி விலக வேண்டும் என்று கூறுவது வேடிக்கையான விடயமாகும்.   

பல்வேறுபட்ட அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்வது தொடர்பாக, அரசமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிரகாரம், பிரதமரின் ஆலோசனையின்படி, ஜனாதிபதி அமைச்சர்களை, பிரதி அமைச்சர்களை மற்றும் இராஜாங்க அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்ய முடியும்.   

ஆனால், இந்த விடயத்தில் பிரதமரின் ஆலோசனையை, ஜனாதிபதி கட்டாயம் ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. 

பிரதமரின் ஆலோசனைப் படியே, ஜனாதிபதி, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களை நியமிக்க வேண்டும் என்று அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதால், பிரதமரின் விருப்பத்துக்கு மாறாக, அவ்வாறான அமைச்சர்கள் பதவியில் இருக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.   

ஆயினும், பிரதி அமைச்சர்கள் மற்றும் ஏனைய (இராஜாங்க) அமைச்சர்களை நியமிக்கும் போது, பிரதமரின் ஆலோசனைப்படி, ஜனாதிபதி அவர்களை நியமிக்கலாம் என்றுதான், அரசமைப்பு கூறுகிறது. (நியமிக்க வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை) 

எனவே, அந்த அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்யும் விடயத்தில், பிரதமரின் ஆலோசனைப்படி, ஜனாதிபதி நடந்து கொள்ளத் தேவையில்லை என்று அர்த்தம் கொள்ளலாம்.   

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த 16 ஸ்ரீ ல.சு.க உறுப்பினர்களைப் பதவி நீக்கம்செய்ய வேண்டும் என்ற ​ஐ.தே.கவின் கோரிக்கை, ஜனாதிபதியின் பலத்தைக் குறைத்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பலத்தை அதிகரிக்கும் செயலாகவே அமையும்.   

அமைச்சுப் பதவிகள் இல்லாமல், அவர்கள் அரசாங்கத்திலோ அல்லது ஜனாதிபதியுடனோ இருக்க மாட்டார்கள். ஏற்கெனவே மஹிந்த அவர்களைத் தம்மோடு இணையும்படி கோரிக்கை விடுத்துள்ளார். அதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின்படி, மஹிந்தவுக்கே எதிர்காலத்தில் வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவதால், அந்த அமைச்சர்களும் மஹிந்தவுடன் இணையும் வாய்ப்பைத் தவறவிட மாட்டார்கள்.   

அவ்வாறு அவர்கள் மஹிந்தவுடன் இணைந்தால் ​ஐ.தே.க நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் எந்தவொரு சட்ட மூலத்தையோ பிரேரணையையோ நிறைவேற்றிக் கொள்ள மென்மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது தங்கியிருக்கும் நிலை உருவாகும். 

அதற்காக, ​தமிழ் கூட்டமைப்பின் நிபந்தனைகளை, ஐ.தே.க நிறைவேற்ற முனைந்தால், அது தென்பகுதியில் மஹிந்தவின் செல்வாக்கை அதிகரிக்க ஏதுவாக அமையலாம். 

கூட்டமைப்பின் உதவியைப் பெற்று, அந்த நிபந்தனைகளை நிறைவேற்றாவிட்டால், கூட்டமைப்பு தமது போட்டியாளர்களின் தாக்குதல்களுக்கு இலக்காகும்.   

பிரதமருக்கு எதிராக வாக்களித்த அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்தால், அவர்கள் தொடர்ந்தும் தம்மோடு இருக்கப் போவதில்லை என்பது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குத் தெரியும்.   

அதனால்தான் அவர், அவர்களைப் பதவிநீக்கம் செய்வதைக் கடுமையாக எதிர்த்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்வுக்கு எதிராக வாக்களித்தவர்கள், பதவி விலக வேண்டும் என்றால் ஜனாதிபதியும் அமைச்சரவையின் தலைவருமான தம்மைப் பகிரங்கமாக விமர்சித்த அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ போன்றவர்களும் பதவி விலக லேண்டும் என அவர் வாதிட்டுள்ளார்.   

ஸ்ரீ ல.சு.க உறுப்பினர்கள் 16 பேர், அமைச்சரவையிலிருந்து விலகுவது, ​ஐ.தே.கவுக்கும் பாதகமாக அமையலாம். அந்த 16 பேரும், நாம் முன்னர் கூறியதைப்போல், அமைச்சர் பதவிகள் இல்லாமல் மைத்திரியுடன் இருப்பார்கள் என நம்ப முடியாது.

அவர்கள் 16 பேரும், ஒரே நேரத்தில் மஹிந்தவுடன் இணைந்தால் பொதுஜன பெரமுனவுக்கு அது பெரும் உத்வேகத்தை அளிக்கும். நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்ததால் ஏற்பட்ட பின்னடைவை, அது சரி செய்துவிடும். நாட்டு மக்கள் மத்தியிலும் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தும்.   

பொதுவாகப் பார்க்கும்போது, நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்து, அரசாங்கத்துக்குள் ஏற்பட்டு இருக்கும் பிளவைப் பார்க்கும் போது, அந்தப் பிரேரணை முற்றாகத் தோல்வியடையவில்லை என்றே கூற வேண்டும்.  

ஆனால், ​ஐ.தே.க உறுப்பினர்கள் இந்த விடயத்தில் பிடிவாதமாகவே இருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட ஸ்ரீ ல.சு.க காரர்களும் தம்மை அமைச்சரவையில் இருந்து விலக இடமளியுங்கள் என ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அதில் எத்தனை பேர் நேர்மையாகவே அந்தக் கோரிக்கையை விடுக்கிறார்கள் என்பது கேள்விக்குறியே. 

ஆனால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்து, மஹிந்தவுடன் இணையக் காத்துக் கொண்டு இருக்கும் ஸ்ரீ ல.சு.க உறுப்பினர்களுக்கு இது நல்ல சந்தர்ப்பமாக அமையலாம்.  

இந்த நிலையில்தான், ​ஐ.தே.க மறுசீரமைக்கப்படவிருக்கிறது. இதுவும் கட்சித் தலைமைக்கு எதிராக, கட்சிக்குள் இருந்தே எழுந்த எதிர்ப்புகளின் பயனாகவே மேற்கொள்ளப்படுகிறது. 

ஆனால், அந்த மறுசீரமைப்பின் போது,     ​ஐ.தே.க தலைமை மாறப் போவதில்லை என்றே தெரிகி றது.   
இடதுசாரி கட்சிகளைப் போல், உடனடியாகவும் விரைவாகவும் முடிவுகளை எடுக்கும் அரசியல் குழுவொன்றை அக்கட்சி நியமித்துள்ளது. ஆனால், இவை சிலவேளை ஐ.தே.க உறுப்பினர்களை சமாளிக்கவே உதவும். அடுத்து வரும் தேர்தல்களின் போது மக்களை கவர ஐ.தே.கவுக்கு எந்தவொரு திட்டமும் இல்லை.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X