2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நல்லாட்சிக்கான மக்கள் முன்னணியின் அதிரடி நடவடிக்கை

மொஹமட் பாதுஷா   / 2017 ஓகஸ்ட் 13 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூகம், அரசியல் தொடர்பாக தனிநபர் ஒருவர் கருத்துகளை முன்வைப்பதற்கும், அரசியல்வாதி ஒருவர் தனது பதவி அல்லது கட்சி சார்பாகவோ தனிப்பட்ட ரீதியிலோ கருத்துகளை வெளியிடுவதற்கும் வேறுபாடு இருக்கின்றது.   

தனிநபர் என்னதான் சர்ச்சைக்குரிய கருத்தைச் சொன்னாலும் அது கேள்விக்குட்படுத்தப்படுவதில்லை என்பதுடன், அது தனிப்பட்ட அபிப்பிராயமாகவே பார்க்கப்படும்.  

 ஆனால், அரசியல்வாதி ஒருவர் தனது சொந்தக் குடும்ப வாழ்க்கைக்கு அப்பால், வெளியிடுகின்ற எல்லாக் கருத்துகளும் அவர் ஒரு கட்சியின் அல்லது மக்களின் பிரதிநிதியாக வெளியிடும், பொது நிலைப்பாடாகவே நோக்கப்படும். இதுதான் உலக வழக்கம்.   

அந்த வகையில், வட மாகாண சபையின் உறுப்பினர் அய்யூப் அஸ்மின் தெரிவித்த தொடரான கருத்துகளும் அதன் பின்னணியில், அவர் நல்லாட்சிக்கான மக்கள் முன்னணி (என்.எப்.ஜி.ஜி) கட்சியில் இருந்து நீக்கப்பட்டதும் கடந்த வாரம் முழுக்க, முஸ்லிம் அரசியல் அரங்கில் பேசுபொருளாக மாறியிருந்தது.  

புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்ட இக்கட்சிக்கு, தேர்தல்கள் ஆணைக்குழுவால், அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற அந்தஸ்து கிடைத்த சில நாட்களுக்குள், கட்சியின் தலைமைத்துவ சபை மேற்கொண்டிருக்கின்ற இந்த அதிரடி நடவடிக்கை, மிகுந்த கவனிப்பைப் பெற்றிருக்கின்றது.   

நல்லாட்சிக்கான மக்கள் முன்னணியின் உறுப்பினரும், அக்கட்சிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் பிரகாரம், த.தே.கூ ஊடாக, வட மாகாண சபையில் அங்கம் வகிப்பவருமான அய்யூப் அஸ்மின், அண்மையில் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டிருந்தார்.  

“1990 ஓகஸ்ட் மூன்றாம் திகதி, காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுதுகொண்டிருந்த முஸ்லிம்கள், ஆயுததாரிகளால் சுட்டுப்படுகொலை செய்த நாள்” என்று குறிப்பிட்டிருந்தமை, ‘காத்தான்குடி பள்ளிவாசல்களில், படுகொலைகளை நிகழ்த்தியது புலிகள் அல்ல’ என்று கூற வருகின்றாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.   

‘கிழக்கில் இடம்பெற்ற முஸ்லிம்கள் மீதான படுகொலைகளை, புலிகள் செய்ததாக மக்கள் நம்பினாலும், அது உரிய விசாரணையின்படி நிரூபிக்கப்படவில்லை. எனவே, ஒரு சாராரை நோக்கி விரல்நீட்ட முடியாது’ என்ற அடிப்படையில், அவர் மேலும், சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தமை மேற்சொன்ன சந்தேகத்தை வலுப்படுத்தியது.   

கிழக்கில் பள்ளிவாசல்களுக்குள், குறிப்பாக காத்தான்குடி பள்ளிவாசலில், தொழுதுகொண்டிருந்த முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட வரலாற்றுத் துயரை நினைவுகூரும், சுஹதாக்கள் தினத்துக்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர், இவ்வாறான கருத்தை அவர் வெளியிட்டிருந்தமை பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதுடன், அந்தக் கட்சிக்குள்ளும் வெளியிலும் பாரிய விமர்சனத்தைத் தோற்றுவித்திருந்தது.  

உண்மைகளை மறைத்துவிட்டு, அஸ்மின் நல்லிணக்கம் பேச முனைகின்றாரா என்ற வினாவையும் எழுப்பியது.   

அய்யூப் அஸ்மினுக்குத் தனது கருத்தைப் பதிவு செய்வதற்கு, அடிப்படை உரிமை இருக்கின்றது. ஆனால், பள்ளிவாசல் உயிர்பறிப்புகள் பற்றி, புலிகள் என்ன நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும், அதைப் புலிகளே மேற்கொண்டார்கள் என்பது, முஸ்லிம் தரப்பில், பல்வேறு வழிகளிலும், ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டு இருப்பதாகும்.   

இதை அஸ்மினே பின்னர், ஏற்றுக் கொண்டும் இருக்கின்றார். ஆனால், குற்றவாளிகளை ஒழித்துமறைத்து, அவர் இவ்வாறான ஒரு கருத்தை வெளியிட்டமையே, கிழக்கு முஸ்லிம்களால் ஏற்றுக் கொள்ள முடியாத காரியமாக இருந்தது.   

நல்லாட்சிக்கான மக்கள் முன்னணியால், முஸ்லிம்களின் நலனைக் கவனிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஒருவர், அக்கட்சியின் பிரதான ஆதரவுத்தளமான காத்தான்குடி மக்களின் உணர்வுகளைக் கேலிக்குள்ளாக்கும் விதத்திலும் யாரையோ குளிர்விக்கும் கோதாவிலும் இக்கருத்தை வெளியிட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.   

2000 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து, நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் என்ற பெயரில், மட்டக்களப்பு மாவட்டத்தை மையமாகக் கொண்டு இயங்கிவந்த இயக்கம், 2013 ஆம் ஆண்டு, நல்லாட்சிக்கான மக்கள் முன்னணி என்ற பெயரில், நாடளாவிய ரீதியில் செயற்படும் நோக்கோடு, ஓர் அரசியல் கட்சியாகப் பரிணாமம் எடுத்தது.  

நல்லாட்சிக்கான மக்கள் முன்னணியில் வருகை என்பது, முஸ்லிம் அரசியல் பரப்பில் ஒரு புதிய திருப்பமாக அமைந்தது என்று கூறலாம். முற்போக்கான, தூய சிந்தனையுடனும் பண்பட்ட அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் நோக்கத்துடனும் வழக்கத்துக்கு மாறான, ஓர் அரசியல் போக்கை, நோக்கமாகக் கொண்டு, ஒரு முஸ்லிம் கட்சி உருவாக்கப்பட்டமை, முஸ்லிம் அரசியலில் ஒரு கட்டமைப்பு மாற்றத்துக்கு வித்திட்டது எனலாம்.   

இந்நிலையில், த.தே.கூட்டமைப்புடனும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடனும் ந.ம.முன்னணி ஒப்பந்தங்களைச் செய்து கொண்டது. அதன்படி, மு.காவின் ஊடாக எதிர்பார்க்கப்பட்ட தேசியப்பட்டியல் எம்.பி பதவி வழங்கப்படாத போதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நல்லாட்சிக்கான மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவரை வடமாகாண சபை உறுப்பினராக்கச் சம்மதித்தது.   

இவ்விரு தரப்பினருக்கும் இடையில் எட்டப்பட்ட உடன்பாட்டுக்கு அமைய, கிடைக்கப்பெற்ற போனஸ் ஆசனத்தின் மூலம், அய்யூப் அஸ்மின், வட மாகாண சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். எவ்வாறிருப்பினும் இது, தமிழர் அரசியலின் நல்லெண்ண வெளிப்பாடாகவும் தமிழ் - முஸ்லிம் அரசியல் இணக்கப்பாட்டுக்கு நல்ல சமிக்ஞையாகவும் அமைந்ததை மறுப்பதற்கில்லை.   

இவ்வாறிருக்கையிலேயே, அய்யூப் அஸ்மின் சர்ச்சைகளுக்குள் சிக்கிக் கொண்டார். அவர் சர்ச்சைக்குள் சிக்குவது, அல்லது அவரது செயற்பாடு மீளாய்வு செய்யப்படுவது, இது முதல் தடவையல்ல.   

இவ்வருடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டம் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பில் இடம்பெற்ற போது, அங்கு உரையாற்றிய அஸ்மின், “வடக்கும் கிழக்கும் இணைந்தாலும், முஸ்லிம்களுக்கு தென்கிழக்கு அலகு என்ற ஒன்று இருக்கக் கூடாது என்ற விடயத்தில் தமிழ் மக்கள் உறுதியாக இருக்க வேண்டும். இவ்விரு மாகாணங்களும் இணைந்திருந்தால் அது பலமாக அமையும். முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் இருக்கின்ற செயற்கையான பிரிவை, இல்லாது செய்ய வேண்டும். தென்கிழக்கு அலகு என்பது வெறும் கற்பனாவாதம். இது முஸ்லிம் சமூகத்தைப் பலவீனப்படுத்துகின்ற, நடைமுறைச் சாத்தியமற்ற விடயமும் ஆகும். அதுபற்றி எவரும் சிந்திக்க வேண்டியதில்லை” என்று கூறியிருந்தார்.   

வடபுலத் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இணைப்புப் பாலமாகவும் நல்லாட்சிக்கான மக்கள் முன்னணியின் அரசியல் பிம்பமாகவும் பார்க்கப்பட்ட இவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேடையில் வைத்து, தென்கிழக்கு அலகு என்பது கற்பனாவாதம் என்று கூறியதை கிழக்கு முஸ்லிம்கள் கடுமையாக ஆட்சேபித்தனர்.   

அதுமட்டுமன்றி, ந.தே.முன்னிணியின் நிலைப்பாடு அதுவாக இல்லாத நிலையில், முஸ்லிம்களுக்கும் நியாயமான தீர்வை வழங்குவது பற்றிப் பேசிவருகின்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கலந்து கொண்ட கூட்டத்தில், இவ்வாறு பேசியது, தமிழ்க் கூட்டமைப்பின் உள்மனக் கிடக்கையை, குறிப்பால் உணர்த்தும் முயற்சியா என்பது உள்ளிட்ட, பல்வேறு கேள்விகளைத் தோற்றுவித்தது.   

மாகாண சபை உறுப்பினர் அஸ்மினும் கட்சியும் வாய்மொழி மூலம் இணக்கம் கண்டிருந்ததற்கு அமைவாக, இரண்டரை வருட பதவிக்காலம் முடிவடைந்திருந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட மீள்பரிசீலனையின் அடிப்படையில், அப்பதவியில் இருந்து அவரை, நல்லாட்சிக்கான மக்கள் முன்னணி அண்மையில், மீள அழைத்திருத்திருந்தது.   

ஆனால், இதுவரை அவர் அப்பதவியை விட்டு விலகவில்லை என்பதுடன், கட்சியால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று, விசாரணைகளுக்குச் சமுகமளிக்கவில்லை என்றும் முன்னணியின் முக்கியஸ்தர் ஒருவர் கூறினார். இவ்வாறு, கட்சிக்கும் அவருக்கும் இடையிலான உறவில் சிறியதொரு கீறல் விழுந்திருந்த நிலையிலேயே, மற்றுமொரு சர்ச்சைக்குரிய கருத்தை, அய்யூப் அஸ்மின் வெளியிட்டுள்ளார்.   

காத்தான்குடி பள்ளிவாசல்களில், தொழுதுகொண்டிருந்த நூற்றுக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டது, உலக அளவில் பேசப்பட்ட, பதியப்பட்ட துயர்மிகு வரலாறு என்பதைத் தமிழர்களும் கூட மறுக்க மாட்டார்கள்.   

இதை மேற்கொண்டது, விடுதலைப் புலிகள் இயக்கம் என்றே, முஸ்லிம்கள் தம்மளவில் நிரூபித்துக் கொண்டும் நம்பிக்கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில், புலிகளுக்கு வக்காளத்து வாங்கும் தோரணையில், அஸ்மின் கருத்து வெளியிட்டமையும் ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களினதும் கணிசமான தமிழ் முற்போக்காளர்களினதும் நிலைப்பாட்டுக்கு, இது எதிராக இருந்தமையுமே, அவர் மீதான விமர்சனத்துக்கு இட்டுச் சென்றது.   

வட மாகாண முஸ்லிம்களின் விடயங்களைப் பார்ப்பதற்காகத் தமது கட்சியால் நியமிக்கப்பட்ட மாகாண சபை உறுப்பினர்,அந்த மக்களின் விடயங்களில் அக்கறைக் குறைவாக நடந்து கொள்வது ஒருபுறமிருக்க, கிழக்கில் உள்ள மக்களின் உணர்வுகளோடும் விளையாட முற்படுவது, ந.தே.முன்னணியால் ஏற்றுக் கொள்ள முடியாத விடயமாகும்.   

அத்துடன், தன்னுடைய அடுத்தகட்ட அரசியல் நலனைக் கருத்தில் கொண்டு, அஸ்மின் யாரையோ திருப்திப்படுத்த முனைகின்றார் என்ற ஊகங்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அது அக்கட்சியின் ‘அரசியல் கலாசாரத்தை மாற்றுதல்’ என்ற தாரக மந்திரத்துக்கு முரணானது ஆகும்.   

எனவேதான், நல்லாட்சிக்கான மக்கள் முன்னணி, உடனடியாக நடவடிக்கை எடுத்தது. தொடர்ச்சியாக அஸ்மினின் போக்குகளை அவதானித்துவந்த அக்கட்சி, இனியும் அவரைக் கட்சியில் வைத்திருப்பது ஆரோக்கிமானதல்ல என்ற நிலைப்பாட்டை எடுத்தது எனலாம்.   
இந்நிலையில் கட்சியின் உதவிச் செயலாளர் சிராஜ் மஸ்ஹூர், “நல்லாட்சிக்கான மக்கள் முன்னணியில் இருந்து நீக்க வேண்டிய நிலையை, மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மினே உருவாக்கியிருக்கின்றார்” என்று குறிப்பிட்டிருந்ததுடன், ஓகஸ்ட் நான்காம் திகதி, நடைபெறும் தலைமைத்துவ சபைக்கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.   

பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தவிசாளராகவும் நஜா மொஹமட் பொதுச் செயலாளராகவும், சிராஜ் மஸ்ஹூர் உதவிச் செயலாளராகவும் அங்கம் வகிக்கின்ற இக்கட்சியினது தலைமைத்துவ சபை, கடந்த நான்காம் திகதி ஒன்றுகூடி, முன்னமே மக்களால் எதிர்பார்க்கப்பட்ட தீர்மானத்தை எடுத்தது.   

“கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, தான்தோன்றித்தனமாகச் செயற்பட்டும் கருத்துக் கூறியும் வருகின்ற அய்யூப் அஸ்மின், கட்சியில் இருந்தும் கட்சியின் சகல நடவடிக்கைகளில் இருந்தும் நீக்கப்படுவதோடு, ந.தே.முன்னணியின் பிரதிநிதியாகவோ அல்லது ஏனைய விடயங்களையோ பிரதிநிதித்துவம் செய்பவராகக் கருதப்பட மாட்டார்” என்ற அறிவிப்பு, அக்கட்சி சார்பாக சில மணிநேரங்களில் வெளியானது.   

“ந.ம.முன்னணியின் ஏற்பாட்டில், வடமாகாண சபையின் போக்குகள் பற்றி ஆராயும் மீளாய்வுக் கூட்டம் ஒன்று 2016 மார்ச் மாதம் இடம்பெற்ற வேளையில், வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் ஏனைய நலன்கள் தொடர்பான விடயங்களில் மாகாண சபையின் செயற்பாடுகள், கட்சியின் பிரதிநிதியான அஸ்மினின் செயற்பாடுகள் பற்றி ஆராயப்பட்டது. அந்த அடிப்படையில் இதனுடன் தொடர்புபட்ட ஆறு விடயங்களில், திருப்திகரமான முன்னேற்றங்கள் ஏற்படவில்லை. அத்துடன்,கட்சியின் மக்கள் நலன் சார்ந்த சுயாதீன கொள்கை நிலைப்பாடுகளைப் பேணுதல், பதவி மூலமாகக் கிடைக்கும் நிதிகளை முறையாகக் கையாளுதல், மீளழைக்கும் தீர்மானத்துக்கு ஒத்துழைத்தல், கிடைத்த தீர்வையற்ற வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரம் மூலமான நன்மைகளை வடக்கு மக்களுக்காகப் பயன்படுத்தல் போன்ற விடயங்களுக்கும் அவர் ஒத்துழைக்கவில்லை. எனவே, அப்பதவியில் எமது பிரதிநிதி தொடர்ந்தும் இருப்பதில் அர்த்தமில்லை என்ற அடிப்படையில் அவரை மீள அழைப்பது” என்ற முடிவு எட்டப்பட்டதாக அக்கட்சியின் தலைமைத்துவ சபை உறுப்பினர் ஒருவர் சொன்னார்.   

இந்நிலையிலேயே, கடந்த நான்காம் திகதி நடைபெற்ற தலைமைத்துவ சபைக் கூட்டத் தீர்மானத்தின்படி, அய்யூப் அஸ்மீன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மூன்று விடயங்களைப் பிரதானமாகக் கொண்டு இவ்வாறான நடவடிக்கை ஒன்றை எடுத்ததாகக் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.   

1.கட்சியின் தீர்மானங்களுக்கு ஒத்துழைக்காமை,  

2.கட்சியின் அடிப்படைக் கொள்கைகள், நிலைப்பாடுகள், விழுமியங்கள் மற்றும் நடைமுறைகள் என்பவற்றுக்கு முரணாகக் கருத்துகளை வெளியிட்டும் செயற்பட்டும் வந்தமை,  

3. கட்சியின் ஒழுங்கு விதிகளை, குறிப்பாக நிதிசார் ஒழுங்கு விதிகளை உரிய முறையில் பின்பற்றாமை ஆகியவையே அவர் மீதான மூன்று குற்றச்சாட்டுகளும் ஆகும். 

இதனடிப்படையிலேயே, அஸ்மின் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள போதிலும் அவர் தமிழ்க் கூட்டமைப்பின் ஆசீர்வாதத்துடனோ அது இல்லாமலோ இன்னும் மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருக்கின்றார் என்பது கவனிப்புக்குரியது.   

அய்யூப் அஸ்மினுக்கு, கருத்துச் சுதந்திரம் இருக்கின்றது. ஆனால், அவர் இக்கருத்தை ந.தே.முன்னணியின் பிரதிநிதியாக அல்லாமல், தனது தனிப்பட்ட கருத்தாகச் சொல்லியிருந்தால், அது குறித்து, தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை.   

மாறாக, ஏன் அவ்வாறு ஆயுததாரிகள் என்ற சொல்லைப் பயன்படுத்தினேன் என்றே விளக்கமளித்துள்ளார். ஆகவே, இதைத் தனிப்பட்ட கருத்தாக அன்றி, ஓர் அரசியல்வாதியாக, இக்கட்சியின் பிரதிநிதியாகப் பதிவு செய்திருக்கின்றார் என்றே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.   

ஆனால், இதில் அவர் தரப்பில் முன்வைக்கப்படும் நியாயங்களும் நியாயமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது.  

இன்று, முஸ்லிம் அரசியல் கட்சிகளில் அங்கம் வகிக்கின்ற சாதாரண உறுப்பினர்கள் தொடக்கம், தலைவர்கள் வரை தமது கட்சியின் அடிப்படைக் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணாகவும் சமூக சிந்தனையில்லாமலும் செயற்படுவதையும் அறிக்கைவிடுவதையும் பரவலாகக் காணமுடிகின்றது.   

ஆனால், அப்படிப்பட்ட யார் மீதும் இவ்வாறான காரணங்களுக்காக நடவடிக்கை எடுத்து, கட்சியில் இருந்து வெளியேற்றியதை அண்மைக்காலத்தில் காண முடியவில்லை. அந்த வகையில், அஸ்மினின் பக்கமுள்ள நியாயங்களுக்கு அப்பால், ந.தே.முன்னணியின் நடவடிக்கை தனித்தன்மை வாய்ந்தது என்றே சொல்ல வேண்டும்.   

எது எவ்வாறிருப்பினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ந.தே.முன்னணிக்கும் இடையில் கருத்து வேற்றுமை வலுவடையவோ அல்லது ஏனைய முஸ்லிம் கட்சிகள் போல, நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்குள்ளும் உள்ளக முரண்பாடுகள் ஏற்படவோ, இது காரணமாகி விடக் கூடாது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X