2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நிதானத்தை இழக்கிறாரா மைத்திரி?

கே. சஞ்சயன்   / 2018 பெப்ரவரி 04 , பி.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதிகம் பதற்றமடையத் தொடங்கியிருக்கிறார். உள்ளூராட்சித் தேர்தல் தோல்வி பற்றிய பயம், அவரை ஆட்டிப் படைக்கிறது. அதனால்தான், அவர் கண்டதையெல்லாம் பேசத் தொடங்கியிருக்கிறார்.” இவ்வாறு கூறியிருப்பவர் வேறு யாருமல்ல, மைத்திரிபால சிறிசேனவின் இன்றைய முதல்நிலை அரசியல் எதிரியான மஹிந்த ராஜபக்ஷதான்.  

மஹிந்த ராஜபக்ஷவின் இந்தக் கணிப்பை அவ்வளவாக யாரும், குறைத்து மதிப்பிட முடியாது. இதில் நிறையவே உண்மைகள் உள்ளன.  

தான் தலைமை தாங்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு, உள்ளூராட்சித் தேர்தலில் ஏற்படக் கூடிய தோல்வியைத் தவிர்க்க- தடுக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உச்சக்கட்ட முயற்சிகளை இப்போது முன்னெடுத்து வருகிறார்.  

அதனால் தனக்கு முன்பாக உள்ள இரண்டு பிரதான எதிரிகளான ரணிலையும், மஹிந்தவையும் அவர் திருடர்களாக முன்னிலைப்படுத்தவும் தவறவில்லை.  

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே தன்னை ஜனாதிபதியாக்கினார் என்ற நன்றியுணர்வையோ, அவருடன் சேர்ந்தே கூட்டு அரசாங்கத்தை நடத்துகிறேன் என்ற கூச்ச உணர்வோ இல்லாமல், திருடர்களாக விமர்சிக்கும் அளவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கீழ் இறங்கியிருக்கிறார்.  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய உரைகளை எடுத்துப் பார்த்தால் குழப்பம் நிறைந்ததாக இருப்பதை அவதானிக்கலாம். முன்னுக்குப் பின் முரணாகவும், நடைமுறைக்குப் பொருத்தமற்றதாகவும் அவர் பலவேளைகளில் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.  

இந்தக் கருத்துகள் சிக்கலாக மாறும் போது, அவரைப் பிணையெடுக்க மூத்த அமைச்சர்கள் வரவேண்டியிருக்கிறது. அவரது உரைக்கு விளக்கம் கொடுத்துக் காப்பாற்ற வேண்டியநிலை அவர்களுக்கு ஏற்படுகிறது.  

உள்ளூராட்சித் தேர்தலில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இரண்டு பிரதான எதிரிகளையும் தோற்கடித்து முன்னிலை பெறவேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கிறது.  

அதிலும், மஹிந்த ராஜபக்ஷவின், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை, எப்படியாவது தோற்கடித்து விட வேண்டும் என்பது முக்கியமானது.  

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால்தான் மஹிந்த உருவானார்; பலமடைந்தார் என்று நிரூபிக்க வேண்டிய கட்டம் இது. மஹிந்தவினால்தான் சுதந்திரக் கட்சி பலமடைந்தது என்ற நிலை உறுதிப்படுத்தப்பட்டு விட்டால், தன்னுடன் எஞ்சியிருப்பவர்களும் தருணம் பார்த்து ஓடி விடுவார்கள் என்பது மைத்திரிபால சிறிசேனவுக்குத் தெரியும்.  

ஆட்சிமாற்றத்துக்குப் பின்னர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியைக் கைப்பற்றிய மைத்திரிபால சிறிசேனவினால், கட்சியை முழுமையாகக் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியாமல் போனது, அவரது முதலாவது சறுக்கல்.  

அந்தச் சறுக்கல் தான், ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், சற்று ஒதுங்கியிருந்த மஹிந்த ராஜபக்ஷவை, மீண்டும் அரசியல் களத்துக்குக் கொண்டு வந்தது. அது காலப்போக்கில் பலமடைந்து, இன்று மஹிந்த ராஜபக்ஷ ஒரு நிழல் தலைவராக இருந்து கொண்டு, மற்றொரு கட்சியை வழிநடத்தும் அளவுக்குச் சென்றிருக்கிறது.  

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து கொண்டே, அதன் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து கொண்டே, இன்னொரு கட்சியின் நிழல் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ உலாவுகிறார்; அந்தக் கட்சிக்காக வாக்குக் கேட்கிறார்; மேடைகளில் ஏறிப் பிரசாரம் செய்கிறார்; கூட்டங்களுக்குத் தலைமை தாங்குகிறார்; ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியையும், அதன் தலைவரையும் தாறுமாறாக விமர்சிக்கிறார்;  

ஆனாலும், மஹிந்த ராஜபக்ஷவைக் கட்சியில் இருந்தோ, கட்சிப் பதவிகளில் இருந்தோ தூக்கி வீசக் கூடிய திராணியற்றவராகத்தான், இன்னமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருக்கிறார். கட்சியை ஒன்றுபடுத்தத் தவறியதன் உச்சக்கட்ட விளைவு இது.  

இந்தநிலையில், மஹிந்த ராஜபக்ஷவின் நிழல் தலைமைத்துவத்தின் கீழ் போட்டியிடும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, அதிக இடங்களில் வெற்றி பெற்றுவிட்டால், அது சுதந்திரக் கட்சிக்குப் பேராபத்தாக அமையும் என்று கருதுகிறார் மைத்திரி. அது உண்மையும் கூட.   

அதேவேளை, ஐ.தே.கவிடமும் தோல்வியடைந்து விடக்கூடாது என்ற பிரச்சினையும் அவருக்கு உள்ளது. ஒருவேளை, ஐ.தே.க வென்று விட்டால், ஐ.தே.கவின் வெற்றிக்காக சுதந்திரக் கட்சியைப் பலிக்கடாவாக்கி விட்டார் என்ற அவப்பழியை, தமது கட்சியினரே கூறுவார்கள் என்ற அச்சமும் அவருக்கு இருக்கிறது.  
இதனால், இரண்டு கட்சிகளையும் எதிரிகளாக்கி, பிரசாரத்தை மேற்கொண்டிருக்கிறார். துரத்துகின்ற தோல்வி பயம், ஜனாதிபதியைத் தடுமாறச் செய்திருக்கிறது.   

அவரது பொறுப்பையும், மறந்து பலவேளைகளில் சாதாரண அரசியல்வாதியாகப் பேசுகின்ற நிலையையும் ஏற்படுத்தி விடுகிறது.  

அதனால்தான், “மைத்திரிபால சிறிசேன தோல்விப் பயத்தினால் குழம்பிப் போயிருக்கிறார்” என்று மஹிந்த ராஜபக்ஷ கிண்டலடித்திருந்தார். அதில் நிறையவே உண்மையும் இருக்கிறது.  

வாள் வீச்சுப் பற்றிப் பேசத் தொடங்கியதில் இருந்து, மைத்திரிபால சிறிசேன வெளியிட்டு வருகின்ற எல்லாக் கருத்துகளிலும் ஓர் அதிரடிப் பாணி தென்படுகிறதே தவிர, அவை நடைமுறைச் சாத்தியம் இல்லாத விடயங்களாகவே இருக்கின்றன.  

அதிலும், “ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தெரிவு செய்யப்பட்ட 96 நாடாளுமன்ற உறுப்பினர்களும் என்னிடம் வந்தால், மறுநாளே சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைப்பேன்” என்று கூறியது, அவரை இன்னமும் கேலிக் கூத்தாகப் பார்க்க வைத்திருக்கிறது.  

அவரது அந்தக் கருத்து, ஒரு பக்கத்தில் ஐ.தே.கவை சினமடையச் செய்தது. ரணில் விக்கிரமசிங்க கூட, அதற்கு நாசூக்காகப் பதிலடி கொடுத்திருந்தார்.  

96 எம்.பிக்களும் தன்னுடன் வந்தால், சுதந்திரக் கட்சியின் ஆட்சியை அமைக்கத் தயார் என்று கூறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, “தனியான அரசாங்கத்தை அமைப்பதற்காக ஜனாதிபதி அப்படிக் கூறவில்லை, கட்சியை ஒற்றுமைப்படுத்துவதற்காக, ஒரு பேச்சுக்காகத்தான் குறிப்பிட்டார்” என்ற பாணியில் அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த வந்து பிணையெடுக்க வேண்டியிருந்தது.  

அதற்கு அடுத்தநாள், “தாம் ஒருபோதும் திருடர்களுடன் இணைந்து ஆட்சியமைக்கப் போவதில்லை” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார்.  

“96 பேரும் வாருங்கள் ஆட்சியமைப்போம்” என்று கூறியபோது, அந்த 96 பேருக்குள்தான், தான் திருடர்கள் என்று கூறியவர்களும் இருக்கிறார்கள் என்று அவருக்குத் தெரியாமல் போனது விந்தை.  

“ஐ.தே.கவும், கூட்டு எதிரணியும் மாறி மாறித் திருடர்கள் என்று அடித்துக் கொள்கிறார்கள், யார் திருடர்கள் என்று மக்களுக்குத் தெரியும்” எனக் கூறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, ஐ.தே.கவின் தயவில்தான் ஆட்சி நடக்கிறது என்பது தெரியாமல் போனது எப்படி?  

இவ்வாறாக முன்னுக்குப் பின் முரணாகவும், குழப்பமாகவும் ஜனாதிபதி பேசத் தொடங்கியிருக்கிறார். தன்னையும், தனது தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியையும் நூறு சதவீதம் சுத்தமானது என்று அவர் காண்பிக்க எத்தனிக்கிறார்.  

ஆனால், பாரிய மோசடிகள், ஊழல்கள் குறித்து விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பலர் இன்னமும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் தான் இருக்கிறார்கள்.  
கைகளில் கறைபடியாத தூய்மையான அரசியலைச் செய்வது மாத்திரம், முக்கியமல்ல. அரசியலில் நேர்மையும் முக்கியமானது. அந்த அரசியல் நேர்மையை மைத்திரிபால சிறிசேன இந்த உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரங்களினால் தொலைத்து விடுவாரோ என்ற சந்தேகம் பலரிடம் ஏற்பட்டிருக்கிறது.  

எப்படியாவது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வெற்றிபெற வைத்துவிட வேண்டும் என்ற அவரது ஆர்வம், பல விடயங்களை மறந்து விடச் செய்திருக்கிறது. 

தேர்தலுக்கு அப்பாலும், அரசாங்கத்தை நகர்த்திச் செல்ல வேண்டிய தேவையையும், அதற்கான பொறுப்பையும் அவர் எந்தளவுக்கு நினைவில் வைத்திருக்கிறார் என்ற கேள்வியை எழுப்ப வைத்திருக்கிறது.  

தாம் ஆட்சிக்கு வந்தபோது கொடுத்த வாக்குறுதிகளை இன்னமும் காப்பாற்றாமல் இருக்கும் மைத்திரிபால சிறிசேன, அந்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதற்குத் தேவையான சூழலை இல்லாமல் செய்ய முனைகிறாரோ என்ற சந்தேகமும் ஏற்படுகிறது.  

தோல்வி பயம் என்பது முடிவுகளை எடுப்பதில் மாத்திரமன்றி பேச்சிலும், செயலிலும் கூட நிதானத்தை இழக்க வைத்து விடும். அத்தகையதொரு நிலைக்குள் தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தள்ளப்பட்டுள்ளாரா?  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .