2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘நேர் கொண்ட பார்வை’

காரை துர்க்கா   / 2019 ஓகஸ்ட் 13 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாங்கள், பாடசாலையில் கல்வி கற்ற காலம்; அன்று தமிழ்ப் பரீட்சை; ‘நான் விரும்பும் பெரியார்’ பற்றி எழுதுமாறு கட்டுரை எழுதும் பகுதியில் கேட்கப்பட்டிருந்தது. உடனடியாகவே, ‘நான் விரும்பும் பெரியார் மஹாத்மா காந்தி’ எனத் தொடங்கி, விரல்கள் எழுதிச் சென்றன. அவ்வாறாக, இலங்கைத் தமிழர்களின் மனங்களில் இந்தியப் பெரியார்கள் கொலுவீற்றிருந்தார்கள்.  

இலங்கை சுதந்திரமடைந்த காலந்தொட்டே, தமிழர்கள் மீதான பேரினவாதத்தின் கொடூரக் கரங்கள் நீளத் தொடங்கிவிட்டன. எனவே, இதிலிருந்து இந்தியா எங்களைப் பாதுகாக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை, காலங்காலமாகவே இலங்கைத் தமிழ் மக்கள் மனங்களில் குடிகொண்டிருந்தது.   

இலங்கையில் 1980களுக்குப் பின்னரான காலப்பகுதியில், அன்றைய பிரதமர் இந்திரா காந்தியை, இலங்கைத் தமிழ் மக்கள் ‘அன்னை’யாகவே நோக்கினர்.  

இதையே, 23 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியிருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, ‘ஹிந்து’ ஆங்கிலத் தினசரிக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில், ‘இந்திரா அம்மையார், தமிழ் ஈழத்தை உருவாக்கிக் கொடுத்திருந்தால், அவரை இலங்கைத் தமிழர்கள், ஆயிரம் வருடங்களுக்கு பராசக்தியாகப் போற்றி  வழிபட்டிருப்பார்கள்’ என்று கூறியிருந்தார்.   

ஆனாலும், தமிழீழத்தை அமைப்பதற்கான செயற்றிட்டம் ஒன்று இந்திரா காந்தியிடம் இருந்தது எனவும் அவர் தெரிவித்திருந்தார். இருந்த போதிலும், இராணுவ ரீதியில் தலையிட்டால், மலையகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்கள் ஆபத்தில் சிக்க நேரிடும் என, இந்திராகாந்தி தன்னிடம் கூறியதாகவும் வைகோ தெரிவித்திருந்தார்.  

மேலும், இலங்கையின் வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்கள், அம்மண்ணின் பூர்வீகக் குடிகள் எனக் கூறியதாகவும் வைகோ சுட்டிக்காட்டியிருந்தார். 

இவ்வாறாக இருந்த உறவு நிலை, இந்திரா காந்தியின் மறைவுக்குப் பின்னர் மாற்றம் கண்டது. அக்காலப் பகுதியில், இலங்கையிலும் உள்நாட்டுப் போர் தீவிரம் கண்டது. போரின் தீவிரத்தை அடுத்து, இந்தியா நேரடியாக இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட்டது. இந்திய விமானப்படையின் விமானங்கள், வட இலங்கையில் உணவுப் பொதிகளைப் போட்டன.  

தொடர்ந்து, இலங்கை இனப்பிணக்குக்கு தீர்வு காணும் முகமாக, இந்தியா - இலங்கை ஒப்பந்தம், 1987 ஜூலையில் கைச்சாத்திடப்பட்டது. இவ்வாறாகக் கொண்டுவரப்பட்ட ஒப்பந்தத்தை, இனப்பிணக்கில் சம்பந்தப்பட்ட இலங்கை அரசாங்கம், இலங்கைத் தமிழ் மக்கள் என இரு தரப்புமே ஏற்றுக்கொள்ளவில்லை.  

1987ஆம் ஆண்டுவரை, உள்நாட்டு விவகாரமாகப் பார்க்கப்பட்ட தமிழ் மக்களது விடுதலைப் போராட்டத்தில், கடல் கடந்த பிராந்திய வல்லரசு (இந்தியா) உள்நுழையும் நிலை ஏற்பட்டது.   

மேலும், அது இலங்கை இனப்பிணக்கு விவகாரத்தில் பலமான மூன்றாம் தரப்பின் அழுத்தம் என்ற அடுத்த நிலைக்குச் சென்றது. இதனை, அன்றைய ஜே.ஆர். ஜயவர்தன தலைமையலான ஐக்கிய தேசியக் கட்சி விரும்பவில்லை. அத்துடன், அதுவே அனைத்துச் சிங்களக் கட்சிகளினதும் நிலைப்பாடாகவும் இருந்தது.  

மறுபுறமாக, தங்களது நீண்டகால அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றாத தீர்வுப்பொதி எனத் தமிழ் மக்களும் அவர்களது அரசியல் தலைவர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை.  

இருந்த போதிலும், வல்லரசின் அழுத்தத்துக்கு இரு தரப்பினரும் அடிபணிய வேண்டியநிலை ஏற்பட்டது. இந்நிலையில், இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளாத ஒப்பந்தம், சவால்களுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளானது.  

அதையடுத்து, ஒப்பந்தம் கைச்சாத்தாகி மூன்று மாதங்களுக்குள் (1987 ஒக்டோபர்) இந்தியப் படைகளுக்கும் தமிழீழ வீடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் மூண்டது.   

‘இந்தியா எங்களைப் பார்க்கும்; எங்களைப் பாதுகாக்கும்’ என, ஆண்டாண்டு காலமாக நம்பியிருந்த தமிழ் மக்களின் இதயங்களுக்கு எதிராக, இந்தியத் துப்பாக்கிகள் சடுதியாகத் திரும்பின. உணவுப் பொட்டலங்களைப் போட்ட விமானங்கள், குண்டுப் பொதிகளைப் போட ஆரம்பித்தன.   

இந்தியா - இலங்கைத் தமிழ் மக்கள் உறவு விரிசல் கண்டது. 1987 ஒக்டோபர் தொடக்கம் 1990 மார்ச் வரை, இந்தியப்படை வடக்கு, கிழக்கில் போர் நடத்தியது. இந்தியப்படை, தமிழ்ப் போராளிகள் என, இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியெடுக்கப்பட்டன. இதற்கு மேலதிகமாக, அப்பாவித் தமிழ் மக்களது பல்லாயிரம் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. வல்வைப் படுகொலைகள், யாழ்ப்பாண வைத்தியசாலைப் படுகொலைகள் உள்ளிட்ட பல படுகொலைகளை அமைதிப்படை அரங்கேற்றியது.  

இலங்கைத் தமிழ் மக்களைப் பாதுகாக்க வந்த படைகளே, தமிழ் மக்களுக்கு எதிராக ஆயுதம் தூக்கின. இவ்வாறாக, இலங்கை அரசாங்கத்தின் வஞ்சக வலையில் சிக்கியது பிராந்திய வல்லரசு. இதுவே, ஜே.ஆர். ஜயவர்தனவின் இராஐதந்திரம். இதையடுத்து, 1991 மே மாதத்தில், அன்றைய பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணத்துடன், இந்தியாவுக்கும் தமிழ் மக்களுக்குமான உறவு, கடும் விரிசல் கண்டது.   

இது இவ்வாறு நிற்க, இலங்கை - இந்திய ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடுவதற்காக, 1987 ஜூலை 30இல் பாரதப் பிரதமர் இலங்கை வந்திருந்தார். ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னர் இடம்பெற்ற கடற்படை மரியாதை அணிவகுப்பின் போது, அப்போது கடற்படை வீரராகக் கடமையாற்றிய விஐித்த ரோஹன வியஜமுனி, தனது துப்பாக்கியால் இந்தியப் பிரதமரைத் தாக்க முயற்சித்தார்.   

இச்சம்பவம் நடைபெற்று 32 ஆண்டுகள் கடந்து, ஊடகங்களுக்குக் கருத்துத்  தெரிவித்த வியஜமுனி, “அன்று 21 வயது இளைஞராக இருந்த நான், கொலை செய்யும் நோக்கிலேயே தாக்கினேன்” என்பதோடு, பல விடயங்களைப் பகிர்ந்துள்ளார்.  

கடற்படை வீரரைத் தாக்கியதில் பாரதப் பிரதமர் 1987 ஜூலை 30இல் இறந்திருந்தால், நிலைமை வேறுவிதமாகச் சென்றிருக்கும். இந்தியர்களுக்கு, இலங்கை அரசாங்கம் மீதான பார்வை, கொதி நிலைக்குச் சென்றிருக்கும். சில வேளைகளில், பிறிதொரு கறுப்பு ஜூலையாக அரசாங்கத்துக்கு அமைந்திருக்கும்.  

இந்நிலையில், இன்றும் தமிழ் மக்கள் இந்தியாவைத் தங்களது நேச சக்தியாகவே பார்க்கின்றார்கள்; பார்க்கவும் வேண்டும்; என்றும் இந்தியாவுக்கான நேச சக்தியாக இருப்பார்கள். ஏனெனில், இந்தியாவை முற்றாக விலத்தியோ, விலக்கியோ தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வுகள் வரப்போவதில்லை; ஏன், இல்லை என்றே கூறலாம். நாம், விரும்பியோ விரும்பாமலோ, இதுவே ஏற்றுக்கொள்ள வேண்டிய நிதர்சனம்.  இந்தியாவும், தமிழ் மக்களுடன் இணைந்து, தமிழ் மக்களை இணைத்துப் பயணிப்பதே சாலச்சிறந்தது. இலங்கை ஆட்சியாளர்கள், தொடர்ந்தும் எதிரிகளான தங்களையும் சீனாவையும், கவனமாகக் கையாண்டு வருகின்றார்கள் என்பதையும் இந்தியா நன்கு அறியும். ஆனாலும், இலங்கையில் அதிகரித்த சீனத் தலையீடுகள், என்றைக்கும் இந்தியாவுக்குத் தலையிடியையே கொடுக்கும்.  

இவ்வாறான நிலையில், இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் உள்ள தமிழ் மக்களுக்குச் சாதகமான விடயமான, இணைந்த வடக்கு, கிழக்கு என்பதுகூட பிரிந்(த்)து 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. மேலும், அண்மைய நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம், மாகாண முதலமைச்சருக்குக் கூட தனது அமைச்சரவையில் உள்ள அமைச்சரை நீக்குவதற்கு அதிகாரம் இல்லை. அது கூட, மத்திய அரசாங்கத்தின் நேரடிப் பிரதிநிதியான மாகாண ஆளுநருக்கே உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.  
இதுவே இந்தியாவால் தமிழ் மக்களது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதாகக் கொண்டுவரப்பட்ட 13இல் உள்ள நிரப்ப முடியாத கோறைகள். இங்கு இந்தியா தமிழ் மக்கள் விடயத்தில் தான் விட்ட தவறுகளை பிழைகளை உணர்ந்துகொள்ள வேண்டும். தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளைப் புரிந்துகொள்ள வேண்டும்.  

“இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு, வெளிநாடுகளுக்கு எவ்வித உரிமையும் இல்லை” என ஜூலை 28ஆம் திகதி, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ, தங்காலையிலுள்ள அவரது இல்லத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். இதுவே, இலங்கை ஆட்சியாளர்களின் விருப்பமும் கூட.  

இதேவேளை, இலங்கை ஆட்சியாளர்கள், இலங்கையில் இனப்பிணக்கு இருக்கின்றது என்பதையே ஒரு காலத்தில் எற்றுக் கொள்ளவில்லை. மேலும், இனப்பிணக்கு விவகாரங்களில் மூன்றாம் தரப்பு வருகையை விரும்பியதும் இல்லை. ஏனெனில், வருகின்ற மூன்றாம் தரப்பு, நேர்மையாக நடந்து கொண்டால் தமிழ் மக்களின் பக்கமே நியாயம் இருப்பதை இலகுவில் கண்டறிந்து விடும். இன்று இனப்பிணக்கு உள்ளதாக ஏற்றுக்கொண்டாலும், தாமாக முன்வந்து எக்காலத்திலும் இனப்பிணக்குக்குத் தீர்வு வழங்கப்போவதில்லை. மாறாக, அவ்வப்போது அரசாங்கத்துக்கு வருகின்ற வெளிநாட்டு நெருக்கீடுகளே, தமிழ் மக்களது நெருக்கீடுகளுக்கு மன நிம்மதியைத் தருகின்றது.  

தமிழ் மக்கள் பலமாக உள்ளவரை, இந்தியா தனது தென்கோடியின் பாதுகாப்பு பலமாக இருக்கும் என்பதை ஏற்றுக் கொண்டு, தமிழ் மக்களுக்கு அரணாக இருக்க வேண்டும். ஏனெனில், தமிழர்கள் விவகாரத்தில் இந்தியா தலையிடுவதையும் தீர்வு பெற்றுக்கொடுப்பதையும் ஏனைய நாடுகள் தடுக்கப்போவதில்லை.  

ஆகவே, பாரத தேசம் இலங்கைத் தமிழர் விடயத்தில் நேர்கொண்ட பார்வையுடனேயே இனி இருக்கவேண்டும். ஏனெனில், இலங்கை அரசாங்கம் இனப்பிணக்கு விவகாரத்தில், தமிழ் மக்களுடன் சேர்த்து, பாரத தேசத்தையும் ஏமாற்றி இருக்கின்றது; ஏமாற்றி வருகின்றது; இனியும் அதையே தொடரவும் விரும்புகின்றது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X