2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

புதிய இராகத்தில் பழைய பல்லவி

மொஹமட் பாதுஷா   / 2020 ஜூன் 29 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்னுமொரு தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கின்றது. ஒவ்வொரு தேர்தலும், நமக்குப் புதிய அனுவமே என்றாலும், அது பற்றி புதிதாக ஒரு பத்தியை அல்லது கட்டுரையை எழுத வேண்டியதில்லை. முன்னைய தேர்தல் காலத்தில் எழுதிய ஒரு பத்தியை எடுத்து, திகதியையும் வேட்பாளர்களின் எண்ணிக்கைகளையும் திருத்தினால் மட்டுமே போதுமானது என எண்ணத் தோன்றுகின்றது. 

ஏனெனில், பொதுவாக அனைத்துக் கட்சிகளின் வேட்பாளர்களும், குறிப்பாக முஸ்லிம் அரசியல்வாதிகள், பழைய பல்லவியைத்தான் மீண்டும் பாடப் போகின்றார்கள். ஆனாலென்ன, சூழ்நிலையும் (சிட்டுவேசன்) ராகமும், கொஞ்சம் வேறுவிதமாகவும் புதிதாகவும் இருக்கப் போகின்றது. இதைத் தவிர வேறு எந்த மாறுதல்களும் இடம்பெற்றதாயில்லை. 

முஸ்லிம் சமூகத்தின் அடிப்படைப் பிரச்சினைகள், நீண்டகால அபிலாஷைகள் நிவர்த்தி செய்யப்படவில்லை. என்ன காரணத்துக்காக அரசியல் தலைமைகளை, நாடாளுமன்றம் மற்றும் மாகாண, உள்ளுராட்சிமன்ற  பிரதிநிதித்துவங்களுக்கு மக்கள் தெரிவு செய்து அனுப்புகின்றார்களோ, அதன் நோக்கம் நிறைவேற்றப்படாமல், மீண்டும் மீண்டும் அரசியல்வாதிகளைப் பதவிகளுக்குத் தெரிவு செய்கின்ற ‘வாக்களிக்கும் இயந்திரங்களாகவே’ மக்கள் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். 

கடந்த 2 அல்லது 3 நாடாளுமன்றங்களின் ஆசனங்களைச் சூடேற்றிய முஸ்லிம் அரசியல்வாதிகள், 

முஸ்லிம் சமூகத்துக்கு முன்னைய தேர்தல் மேடைகளிலும் பதவியில் இருந்த வேளையிலும் வழங்கிய வாக்குறுதிகள், விஞ்ஞாபனங்கள், நம்பிக்கையூட்டல்கள் என்பவை, இதுவரை நிறைவேற்றப்படாத நிலையில் மீண்டும் ஒரு தேர்தலுக்காக மக்கள் மன்றத்துக்கு வந்திருக்கின்றார்கள். 

அரசியல்வாதியாக இருப்பது அவ்வளவு இலகுவான பணியல்ல. ஆனால், அதை யாரும் அவர்கள் மீது வலிந்து திணிப்பதில்லை. அவர்கள்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். எனவே, அவர்கள் பிரதிநிதித்துவ அரசியலுக்குள் நுழைந்துவிட்டார்கள் என்றால், சமூக நலனுக்காகப் பணியாற்றுவது அவர்களது கடமையாகி விடுகின்றது. அத்துடன், மக்களுக்குச் சேவையாற்றுவோம் என்ற பகிரங்க வாக்குறுதியை வழங்கியே, மக்கள் ஆணையை அவர்கள் கோருகின்றார்கள் என்பதும் நினைவுகொள்ளத்தக்கது.

அப்படியாயின், ஒரு முஸ்லிம் அரசியல் கட்சி, தலைவர், அந்தக் கட்சி சார்பாகவோ அல்லது வேறு கட்சிகள் ஊடாகவோ, ஒரு முஸ்லிம் நபர் தேர்தலில் போட்டியிடுகின்றார் என்றால், அவரால் அல்லது அவர் சார்ந்த கட்சியால், கட்சியின் தலைவரால் மேற்கொள்ளப்பட்ட சேவைகளைச் சொல்லி வாக்குக் கேட்க முடியும். 

‘கடந்த காலங்களில் தாம் வழங்கிய வாக்குறுதிகளில், இத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். எனவே, மீதமுள்ள மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு வாய்ப்புத் தாருங்கள்’ என்று சொல்ல முடியும். ‘இந்த உரிமைக்காகப் போராடி முன்னேறினோம். அதில் பூரணமான வெற்றி இலக்கை அடைவதற்கு இம்முறைத் தேர்தலிலும் வாக்களிக்குமாறு’ மக்களிடம் கேட்கமுடியும்.  அதில் ஒரு நியாயமும் தர்மமும் இருப்பதாகச் சொல்லலாம். 

ஆனால், முஸ்லிம் கட்சிகள் சார்பாகவும் பெரும்பான்மைக் கட்சிகள் ஊடாகவும் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்கள் விடயத்தில், பொதுவாக அப்படியான ஒரு பண்பியல்பைக் காணமுடியவில்லை. தாங்கள் செய்த மிகப்பெரிய சேவைகளை, தமது சமூகத்துக்குப் பெற்றுத்தந்த உரிமைகளைச் சொல்லி வாக்குக் கேட்கமுடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. ஏனெனில், பல தலைவர்களுக்குக் கூட குறிப்பிட்டுச் சொல்லும்படி, அப்படியான பதிவுகள் எதுவுமே கிடையாது. 

தலைவர்களின் நிலையே இப்படியென்றால், முன்னாள் 
எம்.பி.க்கள், முன்னாள் மாகாண மற்றும் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள், புதுமுகங்களின் நிலைமை எப்படியிருக்கும் என்று விவரிக்க வேண்டியதில்லை. எனவே, மிகப் போட்டிகரமான இத்தேர்தலில், அதுவும் கொரோனா மனோநிலையில் இன்னுமிருக்கின்ற மக்களிடம் எதைச் சொல்லி வாக்குக் கேட்பது என்ற இனம்புரியாத குழப்பமும் தடுமாற்றமும், வேட்பாளர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. 

முஸ்லிம் அரசியலில் மட்டுமன்றி, தமிழர் அரசியலிலும் பெரும்பாலும் இதுவே நடக்கின்றது எனலாம். முஸ்லிம் அரசியலில் இனவாத நெருக்குதல் ஒரு பேசுபொருளாகக் கையாளப்படுவது போல, தமிழர் அரசியலில் அம்மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான நெடுங்கால வேட்கையை, அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் வேறுவேறு உத்திகள் மற்றும் உணர்ச்சி அரசியலின் ஊடாகப் பிரசாரப்படுத்தி வாக்குச் சேகரிக்க முனைவதைக் கூறலாம்.  

பல வருடங்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்து, நூற்றுக்கணக்கான வாக்குறுதிகளை வழங்கி, அதில் ஒன்றிரண்டைத்தானும் நிறைவேற்றாத பெரும் அரசியல்வாதிகளும், இன்னுமொரு தடவை வாய்ப்புத் தாருங்கள் என்ற பழைய பல்லவியைப் பாடியே வாக்குச் சேகரிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். இப்படி நடக்கும் என்று நாம் ஏற்கெனவே பல தடவை குறிப்பிட்டும் இருந்தோம். 

இது இவ்வாறிருக்க, தாம் செய்த சேவைகள் கைவசம் இல்லாத நிலையில், எதைச் சொல்லிப் பேசினால் மக்களைக் கவரலாம் என்ற மனக் குழப்பத்தில் இருக்கும் அரசியல் தலைமைகள், காமடித்தனமாகவும் நையாண்டியாகவும் பேசி, மக்களைக் குஷிப்படுத்த முனைகின்ற போக்குகளையும் முஸ்லிம் அரசியல் களத்தில் அவதானிக்க முடிகின்றது.

புத்தம் புதிதாக ஒரு நபர் அரசியலுக்கு வருகின்றார் என்றால், அவரிடம் ஒரு தெளிவான சமூக - அரசியல் மய்யப் பார்வை இருக்க வேண்டும். அதன்படி, அவர் தனது விஞ்ஞாபனங்கள், வாக்குறுதிகளை மக்கள் மன்றத்தில் முன்வைத்து, அவற்றின் அடிப்படையில் தம்மைப் பிரதிநிதித்துவ அரசியலுக்குத் தெரிவு செய்யுமாறு மக்களைக் கோர முடியும். அது வேறு விடயம். 

இருப்பினும், அடுத்தத் தேர்தல் வருவதற்கிடையில், தமது வாக்குறுதிகளில் கணிசமானவற்றை அவர் நிறைவேற்றியிருக்க வேண்டும். மீதமுள்ளவற்றை நிறைவேற்றிக் கொடுப்பதற்காக, மக்கள் நம்பும் அளவுக்குப் போராடி இருக்கவேண்டும். அப்படிச் செய்தால், மக்கள் மனங்களில் இயல்பாகவே அந்த அரசியல்வாதி பதிந்து விடுவார். தேர்தல் வந்தால், அவரது கட்சி, விருப்பு இலக்கம் என்னவென்பதை மக்களே தேடியறிந்து வாக்களிப்பர். பொய்க் கதைகளையும் போலி வாக்குறுதிகளையும் கொடுத்துப் பிரசாரம் செய்யவேண்டிய தேவை வராது.

ஆனால், தாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், வெட்கம் கெட்டத்தனமாகவும் சூடு சுரணையின்றியும், முஸ்லிம் கட்சித் தலைவர்களும் ஏனைய முன்னாள் 
எம்.பி.க்களும், மீண்டும் மக்களிடம் வாக்குக் கேட்டு வந்திருப்பதைக் காண முடிகின்றது. 

முஸ்லிம் அரசியலை நாசமாக்கி, கெடுத்துக் குட்டிச்சுவராக்கிய அரசியல்வாதிகளையும் பணம், பதவியாசை பிடித்தவர்களையும் வேட்பாளர்களாக நியமிக்க வேண்டாம் என்று, முஸ்லிம் சமூகம் நீண்டகாலமாகக் கோரி வருகின்றது.

அதேபோல், போதைப் பொருள் வர்த்தகத்துக்கு உதவுகின்றவர்கள், டீல் பேசும் தந்திரிகள், சபலபுத்திக் காரர்கள், மது மற்றும் மாதுப் பித்தர்கள், அரசியல் என்றால் என்னவென்று தெரியாதவர்கள், அரசியலைத் தவிர சமூகம் பற்றி எதுவுமே அறியாதவர்கள், சமூக சிந்தனை கொஞ்சம்கூட இல்லாமல் பதவி ஆசையில் அலைபவர்கள், அரசியல் கற்றுக்குட்டிகள், மக்களைப் பற்றிச் சிந்திக்காதவர்கள், சிறுபிள்ளைத்தனமான மற்றும் குறுகிய சிந்தனை கொண்டவர்களை எல்லாம், எந்தத் தேர்தலிலும் வேட்பாளர்களாகக் களமிறக்க வேண்டாம் என்று முஸ்லிம் சமூகம் முன்வைத்த வேண்டுதலை, இப்பக்கத்தில் நாம் தொடராக வலியுறுத்தி வந்தோம். 

ஆனால், இந்த வேண்டுதல்களைக் கண்டுகொள்ளாமல், அடிப்படைத் தகுதியற்றவர்களையும் ‘மார்ச் 12 இயக்கம்’ விதந்துரைத்துள்ள வேட்பாளருக்கான பண்புகள் பற்றிய கோட்பாடுகளுக்கு முரணான பல வேட்பாளர்களையும், முஸ்லிம் கட்சிகளும் ஏனைய கட்சிகளும் களமிறக்கியிருப்பதை மேலோட்டமாகவே விளங்கிக்கொள்ள முடியும். அதுமட்டுமன்றி, கடந்த பல நாடாளுமன்றங்களில் அங்கம் வகித்த போதும், மக்களை மறந்துச் செயற்பட்ட முன்னாள் எம்.பிக்கள் பலரும், மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார்கள். 

2000ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரையான நாடாளுமன்றத் தேர்தல்களிலும் ஏனைய தேர்தல்களிலும், முஸ்லிம் அரசியல்வாதிகளால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளும் அப்பதவிக்குத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் மக்களுக்குக் கொடுத்த உத்தரவாதங்களும், இன்னும் காதுகளில் ஒலிக்கின்றன. ஏனெனில், அவற்றை முஸ்லிம் எம்.பிக்கள் காற்றில் பறக்கவிட்டனரே தவிர, நிறைவேற்றித் தரவில்லை. இதில், இரண்டு பேருக்கு உட்பட்ட அரசியல்வாதிகள் மாத்திரம் சில விடயங்களில் விதி விலக்காக நோக்கப்படலாம்.

அவர்கள், எத்தனையோ பிரசாரங்களைச் செய்தனர். ரணிலுக்கும் மைத்திரிக்கும் வாக்குப் போட்டால் இனவாதம் கட்டுப்படுத்தப்படும் என்றார்கள். கடும்போக்குச் சக்திகள் சிறையிலடைக்கப்படுவர் என்று மேடைகளில் முழங்கினர். ராஜபக்‌ஷவின் வெற்றியில் முஸ்லிம்கள் பங்காளியானாலேயே நிம்மதியாக வாழலாம் என்றார்கள். சஜித்துக்கு வாக்களிப்பதே விடிவைத் தரும் என்று கூறினர். இப்படி, ஆளுக்கொரு கற்பிதங்களைச் சொன்னார்கள். 

பொதுவாக, நாட்டில் நிலவும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத ஒடுக்குமுறைகள் கட்டுப்படுத்தப்படும் என்று அனைத்துத் தரப்பினருமே வாக்குறுதி வழங்கினர். முஸ்லிம்கள் சரி சமமாக நடத்தப்படுவார்கள் என்பதே அவர்களது உத்தரவாதமாக இருந்தது. ஆனால், ராஜபக்‌ஷ ஆட்சியில், அளுத்கம கலவரமும் ரணில் ஆட்சியில் திகண கலவரமும் இடம்பெற்ற போதும், முஸ்லிம் சமூகம் நிம்மதி கொள்ளுமளவுக்கு நீதி நிலைநாட்டப்படவும் இல்லை; இனவாதம் இன்றுவரை முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டதாகச் சொல்லவும் முடியாது. 

மேலும் விபரித்துச் சொல்வதென்றால், மாயக்கல்லி போன்ற ஆக்கிரமிக்கும் பாங்கிலான சிலை வைப்புகளைத் தடுத்து நிறுத்துவோம் என்று முஸ்லிம் தலைவர்கள் கூறினர். கிழக்கில் காடாகிக் கிடக்கும் சுனாமி வீட்டுத் திட்டத்தைப் பகிர்ந்தளிப்போம் என்றனர். ஒலுவில் கடலரிப்புக்கு உடன் தீர்வு காணப்படும் என்றனர். முஸ்லிம்களின் நீண்டகால காணிப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதுடன் மீள்குடியேற்றத்தை நிறைவு செய்யவும் நடவடிக்கை எடுப்போம் என்று பகிரங்கமாக வாக்குறுதியளித்தனர்.

அது மட்டுமா, டுபாயைப் போல பஹ்ரேனைப் போல முஸ்லிம் பகுதிகளை அபிவிருத்தி செய்வோம், கடல் நீரைக் கொண்டு குடிநீர் வழங்குவோம் என்றனர். ‘நீங்கள் வாயை மூடிக் கொண்டிருங்கள், கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கத்துக்காக நாங்கள் பெற்றுத் தருவோம்’ என்று வீராப்புப் பேசினார்கள். ஆனால், முஸ்லிம் சமூகம் மாறி மாறி எவருக்கு வாக்குப் போட்டும், எதுவும் நடந்த மாதிரி இல்லை. வாக்குறுதி வழங்கிய முஸ்லிம் அரசியல்வாதிகள், அவற்றை வசதியாக மறந்துவிட்டனர்.

இங்கு, நாட்டின் நலனுக்காகச் செய்யப்பட்ட பொதுவான நகர்வுகளில், முஸ்லிம்களுக்கு அனுகூலம் ஏற்பட்டிருப்பினும், அது முஸ்லிம்களின் பிரத்தியேகப் பிரச்சினையோ அன்றேல் யாராவது ஒரு முஸ்லிம் அரசியல்வாதியால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியால் மட்டும் சாத்தியமானது என்றோ கூறமுடியாது. 

ஆக, முஸ்லிம் சமூகத்துக்குக் காணப்படுகின்ற உண்மையான அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் பிரத்தியேக அபிலாஷைகளில் ஒரு சிலவற்றையேனும் நிறைவேற்றாமலே, இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் தமது திருவோடுகளோடு அரசியல்வாதிகள் மக்களிடம் வந்திருக்கின்றார்கள். 

இனியென்ன, புதிய ராகத்தில் பழைய பல்லவியை இரசித்து இன்னும் ஐந்து வருடங்களுக்கு ஏமாறுவதா அல்லது புத்திசாலித்தனமாகச் செயற்படுவதா என்ற முடிவை, வாக்காளப் பெருமக்களே எடுக்கவேண்டும்...! 

தேர்தல் பிரசாரங்களில் மீறப்படும் கட்டுப்பாடுகள்

  ‘சில நாட்களுக்கு முன்பு வரை, புலியாக இருந்த கொரோனா இப்போது பூனையாக மாறிவிட்டது’ என்று ஐரோப்பிய வைத்தியர் ஒருவர் கூறியிருக்கின்றார்.   

உண்மையில், கொவிட்-19 வைரஸின் வீரியமும் இடர்நேர்வுக்கான சாத்தியக்கூறும் குறைந்துவிடவில்லை என்றாலும், இலங்கையில் தேர்தல்கால கொரோனா ஒழுங்குவிதிகள் பின்பற்றப்படாமல் அசட்டை செய்யப்படுவதைப் பார்க்கின்ற போது, அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள், கொரோனாவை கணக்கிலெடுக்கவில்லை என்றே கருத வேண்டியுள்ளது. 

தேர்தலை நடத்துவதற்காகவே அரசாங்கம் ‘வழமைக்குத் திரும்பும்’ முன்னெடுப்புகளை அவசர அவசரமாக மேற்கொண்டது. கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன. இருப்பினும், தேர்தல் காலத்தில் எவ்வாறு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும், வாக்களிக்க வேண்டும், அவற்றை எண்ண வேண்டும் என்ற அனைத்து நடவடிக்கைகளையும் உள்ளடக்கிய வழிகாட்டல் குறிப்புகளை, சுகாதார அமைச்சு, தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கியது.

இதற்கமைய தேர்தலை நடத்த, தேர்தல் ஆணைக்குழு பகிரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது. சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வாக்களிப்பை நடத்துதல், வாக்குகளை எண்ணுதல் போன்றவை தொடர்பில், பரீட்சார்த்த முயற்சிகளையும் தொடர்ச்சியாக ஆணைக்குழு மேற்கொண்டு வருகின்றது. 

ஆயினும், நாட்டில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் தொடர் விளைவாக, இப்போது மக்களில் கணிசமானோர், கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளைப் பேணுவதாகத் தெரியவில்லை. மிக முக்கியமாக, தேர்தல் கூட்டங்கள் மற்றும் மக்கள் சந்திப்புகளில் சமூக இடைவெளியோ கை கழுவுவதோ, முகக் கவசம் அணிவதோ குறைவடைந்துச் செல்வதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. 

பெரிய, பகிரங்கக் கூட்டங்களை நடத்த அனுமதியில்லை என்றபடியால், ஒரு சிறிய இடப்பரப்புக்குள், மக்களை வேட்பாளர்கள் சந்திக்கின்றார்கள். சில இடங்களில் சமூக இடைவெளி இன்றி, பெருமளவானோர் நெருக்கமாக ப்பங்குபற்றுவதுடன், முகக் கவசங்கள் அணிவோரையும் அரிதாகவே காண முடிகின்றது. 

இது மிகவும் மோசமான நிலையாகும். ஏனெனில், வாக்களிப்பு என்பது, ஒரு நாளில் நடக்கின்ற நிகழ்வாகும். வாக்கெண்ணும் பணிகளையும் விபரமறிந்த அதிகாரிகளே மேற்கொள்வர். எனவே, சுகாதார நடைமுறைகளைப் பேணுவது, அவ்வளவு கடினமானதல்ல. 

ஆனால், பிரசாரக் கூட்டங்களே மிக சிக்கலானவை. ஏனெனில், பிரசாரக் கூட்டங்களில் மக்கள் பங்குபற்ற முனைவார்கள் என்பதுடன், அரசியல் கட்சி ஆதரவாளர்களும் சட்டத்தை மதித்துச் செயற்படுவது குறைவாகும்.

இந்தத் தருணத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கூறியுள்ள அறிவுரையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். கவனயீனமான செயற்பாடுகள், நோய்த் தொற்றை மீண்டும் பரப்பக்கூடும். எனவே, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு, அனைத்து இலங்கையரையும் கேட்டுக் கொள்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 

இத்தேர்தலில், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள். சில பிரதேசங்களில், 3 அல்லது 4 பேர் நிறுத்தப்பட்டுள்ளனர். எனவே, எல்லாவற்றையும் ஒரு பொதுச் சுகாதார  பரிசோதகரோ பணிக்கமர்த்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரோ பார்த்துக் கொள்வார் என்பதில்லை. சுகாதார நடைமுறைகளைப் பேணும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X