2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பதவியிழந்தார் சிறில் மத்யூ

என்.கே. அஷோக்பரன்   / 2018 ஓகஸ்ட் 06 , மு.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 155)

சிங்கள - பௌத்த தேசியவாதமும் ஜே.ஆரும்

சமகால ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதம் என்பது, 19ஆம் நூற்றாண்டின் ஈற்றில், அநகாரிக தர்மபாலவின் ‘புரட்டஸ்தாந்து பௌத்த’ சித்தாந்தத்திலிருந்து தோன்றியது என்று கணநாத் ஒபேசேகர, ஸ்ரான்லி ஜே. தம்பையா உள்ளிட்ட மானுடவியலாளர்களும் லெஸ்லி குணவர்த்தன, எச்.எல்.செனவிரட்ன உள்ளிட்ட வரலாற்றாய்வாளர்களும் குறிப்பிடுகிறார்கள். 

அநகாரிக தர்மபாலவில் உதித்த ‘புரட்டஸ்தாந்து பௌத்தம்’, ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதமாக, வல்பொல ராஹூல தேரர் போன்ற வித்யாலங்கார பிரிவேனாவைச் சேர்ந்த அரசியல் ஈடுபாடுகொண்ட பௌத்த துறவிகளாலும், மெத்தானந்த, மலலசேகர உள்ளிட்ட பௌத்த தொண்டர்களாலும் 20ஆம் நூற்றாண்டில் வளர்த்தெடுக்கப்பட்டது. 

1956இல் ஆட்சியை எவ்வாறேனும் கைப்பற்றிவிட வேண்டும் என்று தாகம் கொண்டிருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்கவால், அதுவரை காலமும் பிரதான அரசியல் களத்துக்குள்  நுழைய முயன்று கொண்டிருந்த, சிங்கள-பௌத்த தேசியவாதத்துக்குச் செங்கம்பளம் வழங்கப்பட்டது. 

அன்றிலிருந்து, இலங்கை அரசியலின் முதன்மை முகமாக, ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதம் உருப்பெற்றது. தேசியவாத அரசியல், அடுத்த படிமுறைகளில் பேரினவாதம், இனவெறியை எட்டிப்பார்ப்பது 20ஆம், 21ஆம் நூற்றாண்டுகளில் உலக அரசியல் கண்டுணர்ந்த ஒரு விடயமாகும். 

தன்னுடைய ‘சிங்கள-பௌத்த’ அடையாளப் பெருமையை, ஒரு போதும் ஜனாதிபதி ஜே.ஆர் பேசத்தயங்கியதில்லை. ஆங்கிலத்தில் convert’s zeal என்று ஒரு சொற்றொடர்ப் பிரயோகமுண்டு. மதமொன்றைச் சார்ந்த குடும்பத்தில் பிறந்தவர்களை விட, அந்த மதத்துக்கு மாறியவர்கள், அம்மதம் மீது தாம், அதீத ஆர்வம் கொண்டவர்களாகக் காட்டிக் கொள்வார்கள் என்பதைச் சுட்டிக் காட்டப் பயன்படும் சொற்றொடரது. 

ஒல்லாந்தர் காலத்தில் மதம் மாறிய கிறிஸ்தவ குடும்பங்களில் ஜெயவர்தன குடும்பமும் ஒன்று; ஆனால், அந்தக் குடும்பத்தில் பிறந்த ஜூனியஸ் றிச்சர்ட் ஜெயவர்தன, இளமையிலேயே தாய் மதத்துக்குத் திரும்பியிருந்தார். இதுபற்றி, 1996ஆம் ஆண்டு ஜே.ஆர் நினைவுக்கட்டுரையில் குறிப்பிடும் றுபேட் ஸ்கொட், பண்டாரநாயக்கவைப் போன்றே, ஜே.ஆரும் தன்னுடைய ஆங்கிலேய அடையாளங்களைத் துறக்க மிகுந்த பாடுபட்டதாகவும், அதன்படியே, பௌத்த மதத்துக்கு மாறியதுடன், சிங்கள மொழியைச் சரளமாகக் கற்றுக் கொண்டதுடன், பண்டாரநாயக்கவைப் போன்றே சுதேச உடையை அணிந்து கொள்ளவும் செய்தார் என்று குறிப்பிடுகிறார். 

இலங்கை ஜனநாயக நாடாக மாறினால், பெரும்பான்மை மதம், பழக்கவழக்கம், மொழி, உடை ஆகியவற்றிலிருந்து உயர்குழாமினர் விலகிநிற்க முடியாது என்பதை ஜே.ஆர், மிக இளமையிலேயே உணர்ந்துகொண்டதே இதற்குக் காரணம் என்று றுபேட் ஸ்கொட் கருத்துரைக்கிறார். 

சிங்கள மொழியை உத்தியோகபூர்வ மொழியாக்க வேண்டும் என்று, சட்டசபையில் முதன்முதலில் முன்மொழிந்ததிலிருந்து, சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தன்னைச் சிறந்த பௌத்தனாகக் காட்டிக் கொள்வது வரை, ஜே.ஆர் செய்த பல நடவடிக்கைகளை, இந்த மீள்நோக்கி பார்க்கும்போது, ஜனநாயக வௌியில், பெரும்பான்மை இன-மய்ய அரசியலைத் தனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்ட அவரது தந்திரோபாயத்தின் ஓர் அங்கமோ என்று தோன்றுவது தவிர்க்க முடியாதுள்ளது. 

ஜே.ஆர் தன்னைச் சூழ, பல்வேறுபட்ட அரசியல் ஆளுமைகளை நெருக்கமாக வைத்துக்கொண்டார். மெத்தக்கற்றறிந்த லலித் அத்துலத்முதலி, மக்கள் செல்வாக்கு மிக்க இளந்தலைவரான காமினி திசாநாயக்க, அவரிலும் இளையவரான ரணில் விக்கிரமசிங்க, மறுபுறத்தில் ஏழை எளிய மக்களின் நாயகனாக அறியப்பட்ட ரணசிங்ஹ பிரேமதாஸ, மாத்தறையின் அசைக்கமுடியாத அரசியல் தலைமையாக இருந்த றொனி டி மெல், சிறுபான்மையினர்களில் ஏ.ஸி.எஸ்.ஹமீட், மற்றும் கே.டபிள்யூ.தேவநாயகம் என எல்லாவகை அரசியல் ஆளுமைகளையும் தன்னருகே வைத்துக்கொண்டார். அப்படி ஜே.ஆருக்கு நெருக்கமாக இருந்த இன்னோர் அரசியல் ஆளுமைதான் சிறில் மத்யூ. 

ஜே.ஆரின் ‘பூனைப்பாதம்’

‘அதிகாரம் பற்றிய 48 சட்டங்கள்’ என்று, அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வது பற்றிய தனது நூலில் 26ஆவது சட்டமாக, ‘உங்கள் கையை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்’ என்கிறார் றொபேர்ட் க்ரீன். 

அதில், பூனையின் பாதம் என்று ஒரு விடயத்தை க்ரீன் குறிப்பிடுகிறார். அதாவது, ஒரு குரங்கானது, நெருப்பில் வெந்துகொண்டிருந்த ஒரு விதையை எடுத்து உண்பதற்கு, தன்னுடைய கையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, தன்னுடைய நண்பனான பூனையில் பாதத்தைப் பயன்படுத்தியதாம்; 
அதுபோலவே, வெறுப்பு விளைவிக்கின்ற அல்லது பிரபல்யமற்ற செயற்பாடுகளை நீங்கள் செய்வது ஆபத்தானது; ஆகவே, நீங்களும் ஒரு பூனையின் பாதத்தைப் பயன்படுத்துதல் அவசியமாகும் என்பது க்ரீனின் அறிவுரை. 

ஜே.ஆரின் ‘சிங்கள-பௌத்த’ பேரினவாத அரசியலின் ‘பூனைப் பாதமாக’, சிறில் மத்யூ இருந்ததாகவே தோன்றுகிறது. களனித் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவான சிறில் மத்யூ, வௌிப்படையாகவே சிங்களப் பேரினவாதியாக நடந்து கொண்டவர். ‘சிங்களவரே! பௌத்தத்தைக் காக்க எழுந்திருங்கள்!’ என்ற, சிங்கள-பௌத்த பேரினவாதக் கருத்து நிறைந்த, சிறு பிரசுரத்தை எழுதி வௌியிட்டவர். இலங்கை, ‘சிங்கள-பௌத்த’ தேசம் என்று வௌிப்படையாக முழங்கியவர். மாக்ஸிஸ தொழிற்சங்கங்கள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த காலத்தில், இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கமாகக் கருதப்படும் ‘ஜாதிக சேவக சங்கமய’ (தேசிய தொழிலாளர் சங்கம்) தொழிலாளர் மத்தியில் பிரபல்யமுறாத தொழிற்சங்கமாக இருந்தது. 

அந்தத் தொழிற்சங்கத்துக்குத் தலைமையேற்ற சிறில் மத்யூ, எந்தக் கொள்கையின்பாலும் பற்றுறுதிகொண்டிராத அந்தச் சங்கத்தில், ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தை விதைத்தார் என்று ப்ரையன் செனவிரட்ன குறிப்பிடுகிறார். 

1981 யாழ். நூலக எரிப்பு மற்றும், 1983 ‘கறுப்பு ஜூலை’யின் முக்கிய காரணகர்த்தாக்களில் ஒருவராகக் கருதப்படும் சிறில் மத்யூ, கைத்தொழில் அமைச்சராக இருந்த காலத்தில், கொழும்பில் அமைந்திருந்த தமிழர்களின் பொருளாதாரத் தளத்தை இல்லாதொழித்தால், அவர்களைக் கொழும்பிலிருந்து அகற்றுவதற்கான முதற்படி என்று கருதிச் செயற்பட்டதாகவும் ப்ரையன் செனவிரட்ன கருதுகிறார். 

இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண, இந்தியா அழுத்தம் கொடுத்த போதெல்லாம், என்னுடைய அமைச்சரவை இதற்கு ஒத்துக்கொள்ளாது என்று ஜே.ஆர் காரணம் சொல்வதற்குக் காரணமாக இருந்த முதன் முக்கிய அமைச்சரும் இந்தச் சிறில் மத்யூதான். 

இதே சிறில் மத்யூதான், சர்வகட்சி மாநாட்டில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக, ஜே.ஆர் முன்மொழிந்திருந்த ஐந்தடுக்கு நிர்வாகப் பொறிமுறைக்கு, கடுமையாக எதிர்ப்பை வௌியிட்டிருந்தார். 

இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சியொன்றுக்கு, சிறில் மத்யூ எதிர்ப்புத் தெரிவிக்கும் முதல்முறை இதுவல்ல. டட்லி-செல்வா ஒப்பந்தத்தையே கட்சிக்குள் எதிர்த்ததில், சிறில் மத்யூ குறிப்பிடத்தக்கவர் என்று ரஜீவ விஜேசிங்ஹ குறிப்பிடுகிறார். 

ஆனால், இந்தமுறை சிறில் மத்யூ காட்டிய எதிர்ப்பு, ஜே.ஆருக்கு ஏற்றதாக அமையவில்லை. 1984 டிசெம்பர் மாதத்தின் இறுதிப்பகுதியில், ஜே.ஆர்  ஜெயவர்தன, அமைச்சர் பதிவியிலிருந்து சிறில் மத்யூவை நீக்கியதுடன், தொடர்ந்து கட்சியிலிருந்து விலக்கினார். 

இந்த நடவடிக்கைக்கு, ஜே.ஆர் குறிப்பிட்ட காரணம், “சிறில் மத்யூ அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார்” என்பதாகும். 

கூட்டுப்பொறுப்பு என்ற ஒரு மரபு

அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு என்பது, தற்காலத்தில் இலங்கையில் மறக்கப்பட்டுக் கொண்டிருக்கும் முக்கிய நாடாளுமன்ற அரசியல் மரபுகளில் ஒன்றாகும். 

இலங்கையின் நாடாளுமன்ற முறை என்பது, பிரித்தானிய ‘வெஸ்மினிஸ்டர்’ நாடாளுமன்ற முறையைப் பின்பற்றி உருவானதொன்று. பிரித்தானியாவைப் பொறுத்தவரையில் அது, தொகுக்கப்படாத அரசமைப்பைக் கொண்ட நாடு. அதாவது, பிரித்தானியாவில் அமெரிக்கா, பிரான்ஸ், இலங்கை போன்று அரசமைப்பு என்ற ஒரு தொகுக்கப்பட்ட சட்டம் கிடையாது. மிகச் சில எழுதப்பட்ட சட்டங்களும், பலவேறு மரபுகளும், மாண்புகளும் ஒன்று சேர்ந்ததுதான் பிரித்தானியாவின் அரசமைப்பு. 

ஆகவேதான், மரபுகள் என்பது ‘வெஸ்மினிஸ்டர்’ முறையில், மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. இத்தகைய மரபுகளில் ஒன்றுதான் அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு என்பது. 

நாட்டை நிர்வகிக்கும் அமைச்சரவையானது, ஒரு முடிவை எடுக்கும் போது, அந்த அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைச்சர்களும், அந்த முடிவுக்குக் கட்டுப்பட்டவர்களாகிறார்கள். 

அதாவது, குறித்த ஒரு முடிவு தொடர்பில், அமைச்சரவை விவாதிக்கும் போது, அதில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், தமது தனிப்பட்ட எண்ணப்பாடுகளை அந்த விவாதத்தில் தெரிவிக்கலாம்; ஆனால், விவாதத்தின் பின்னர், அமைச்சரவை ஒரு முடிவை எடுக்கும் போது, அமைச்சரவையின் அனைத்து அமைச்சர்களும் அந்த முடிவுக்குக் கட்டுப்பட்டவர்களாகிறார்கள் என்பதோடு, அவர்கள் தனிப்பட்ட ரீதியில் அம்முடிவை விரும்பாவிட்டாலும், பகிரங்கமாக, அம்முடிவை ஆதரிக்க வேண்டியவர்களாகிறார்கள். 

சுருங்கக் கூறின், அமைச்சரவையின் முடிவுக்கு, அனைத்து அமைச்சர்களும் கூட்டாகப் பொறுப்புடையவர்கள்; அமைச்சரவை ஒரு முடிவு எடுத்தபின், ஒரு தனிப்பட்ட அமைச்சர் வௌியில் வந்து, “இது அமைச்சரவையின் முடிவுதான்; ஆனால், இந்த முடிவை நான் ஏற்றுக்கொள்ளவில்லை” என்ற சொல்ல முடியாது. 

அதுபோலவே, இதனுடன் இணைந்த இன்னொரு மரபு, அமைச்சரவையின் இரகசியக் காப்பு. அதாவது, அமைச்சரவையில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் இரகசியமானவை; அவற்றை அமைச்சரவையின் உறுப்பினர்கள் வௌியிடக்கூடாது. அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த அமைச்சர் இப்படிச் சொன்னார்; அந்த அமைச்சர் அப்படிச் சொன்னார் என்று வௌியில் தெரிவிக்கக்கூடாது. 

ஏனெனில், அமைச்சரவையின் முடிவு, அது எதுவாக இருப்பினும், அது அனைத்து அமைச்சர்களுடைய கூட்டு முடிவாகத்தான் அமையும். 

யாராவது ஓர் அமைச்சரால், தனது தனிப்பட்ட நிலைப்பாட்டைத் தாண்டி, அமைச்சரவையின் முடிவை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால், அவர் தமது அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டும். 

தேசிய அரசாங்கம் ஒன்று அமைதல், முக்கியத்துவம் மிக்கதொரு சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படவிருத்தல் உள்ளிட்ட மிகச் சில சந்தர்ப்பங்களில் இந்த மரபானது ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதுதான் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு என்ற மரபின் சாரம் ஆகும். 

சிறில் மத்யூவின் பதவி நீக்கம்

ஜே.ஆரின் அமைச்சரவை, குறித்த ஐந்தடுக்கு நிர்வாகப் பொறிமுறை தொடர்பான முன்மொழிவை, சர்வகட்சி மாநாட்டில் சமர்ப்பிக்க முடிவெடுத்திருந்தது. 

சிறில் மத்யூ தன்னுடைய எதிர்ப்பை, அமைச்சரவைக் கூட்டத்தில் வௌிப்படுத்தியது இங்கு தவறல்ல; ஆனால், அமைச்சரவைக்கு வௌியில், துண்டுப்பிரசுரம் மூலமாக, அவருடைய எதிர்ப்புக் குரல் வௌிவந்தது, அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்புக்கு முரணாக அமைகிறது. 

இதைக் காரணம் காட்டித்தான் ஜே.ஆர், சிறில் மத்யூவை அமைச்சரவையிலிருந்து நீக்கினார். ஆனால், இந்த நடவடிக்கையால் ஜே.ஆருக்கோ, தமிழ்த் தரப்புக்கோ, இலங்கைக்கோ உண்மையில் எந்த நன்மையுமில்லை. 

ஏனெனில், சிறில் மத்யூவைவிட பலமான எதிர்ப்பு, ஜே.ஆரால், சர்வகட்சி மாநாட்டில் பங்குதாரர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட பௌத்த துறவிகளிடமிருந்து வந்தது. 

சிறில் மத்யூவைப் பதவியிலிருந்து நீக்கிவிடலாம்; பௌத்த துறவிகளின் எதிர்ப்பை என்ன செய்வது?

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .