2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

பலமான தலைவர்களும் பலமான நிறுவனங்களும்

Johnsan Bastiampillai   / 2021 மார்ச் 01 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.கே. அஷோக்பரன்

தமிழில் ‘முதல்வன்’ என்று ஒரு திரைப்படம். அதில், கதாநாயகன் ஒரே ஒரு நாள் மட்டும், மாநிலத்தின் முதலமைச்சராகப் பணியாற்றுவதாகக் கதை. அந்த ஒரு நாளில், குறித்த முதலமைச்சர், மக்களுடன் நேரடியாகத் தொலைபேசியில் உரையாடி, அவர்களின் குறைகளைக் கேட்டு, உடனே நேரடி களவிஜயம் செய்து, அதிரடி, தடாலடியாக நடவடிக்கைகளை எடுத்து, மக்களின் மனங்களை வெற்றி கொள்வதாகக் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். 

இந்தக் காட்சிகள், பலரையும் மயிர்க்கூச்செறியச் செய்திருக்கலாம், இப்படி ஒரு தலைவன், எமக்கு இல்லையே என்று அங்கலாய்க்கவும் ஆதங்கப்படவும் செய்திருக்கலாம். இவ்வளவும் ஏன், ஒரு நாட்டின் தலைவன் என்றால், இப்படியல்லவா இருக்க வேண்டும் என்று கூடக் கருதச் செய்திருக்கலாம். சிலர் ஒரு படி மேலே போய், எமது மன்னர்கள் எல்லாம், இப்படித்தானே நகர்வலம் சென்று, மக்களின் நலன்களையும் குறைகளையும் தேவைகளையும் அறிந்து செயற்பட்டார்கள்; இதுவல்லவோ, ஆட்சி தர்மம் என்றும் உணர்ச்சி வசப்பட்டார்கள். 

ஜனநாயகம் சீரழிந்துள்ள ஒரு நாட்டில், ஜனநாயகக் கட்டமைப்புகள் முறையாக இயங்காத ஒரு நாட்டில், மக்கள் தமக்கு விமோசனம் தரும் ஓர் இரட்சகனை எதிர்பார்ப்பது ஒன்றும் ஆச்சரியமான விடயமல்ல. கிட்டத்தட்ட ஒரு ‘சுப்பர் ஹீரோ’ தலைவரைத் தமது அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சர்வரோக நிவாரணியாக மக்கள் எதிர்பார்க்கும் மனநிலை, இதுபோன்ற ஜனநாயகக் கட்டமைப்பு, சீரழிந்துள்ள நாடுகளில் காணலாம். 

அதனால்தான், இதுபோன்ற நாடுகளில், எமக்கு “ஹிட்லரைப் போன்ற பலமான உறுதியான தலைவர்கள் வேண்டும்” என்ற அசட்டுத்தனமானதும் அதேவேளை மிக ஆபத்தானதுமான குரல்கள், அவ்வப்போது ஒலிப்பதைக் கேட்கக்கூடியதாக இருக்கிறது.

ஜனநாயகம் என்பது என்ன? வெறுமனே மக்கள் வாக்களித்து, அதில் பெரும்பான்மை வாக்குகள் கிடைப்பவர் சர்வ வல்லமை பொருந்திய தலைவர் ஆவதுதானா? இல்லை, நிச்சயமாக இல்லை. ஒரு சர்வாதிகாரியை, தேர்தல் மூலம் பெரும்பான்மையோர் தேர்ந்தெடுப்பதற்குப் பெயர் ஜனநாயகம் அல்ல. 

ஜனநாயகம் என்பது ஜனங்கள் ஆள்வது. இங்கு நாயகம், அல்லது தலைமை மக்கள்தான். அப்படியானால், ஜனநாயகத்தின் அடிப்படைக் கூறுகளுள் ஒன்றாக ஒரு தனிநபரிடமோ, குழுவிடமோ அதிகாரங்கள் குவியாது இருக்கும் நிலை இருக்கவேண்டும். 

ஒரு செயல்படும் ஜனநாயகத்தில் குறைந்தபட்சம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ மக்களின் அரசியல் பங்கேற்பு, நீதித்துறையின் சுதந்திரம், அதிகாரப் பிரிவு, சட்டவாட்சி, அடிப்படை உரிமைகளுக்கான மரியாதை, சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்கள், பல கட்சி அமைப்பு, ஊடக சுதந்திரம், பொறுப்புக்கூறல், அரசு அதிகாரிகளின் வெளிப்படைத்தன்மை என்பன காணப்பட வேண்டும். 

இவை அனைத்தும் ஒரு தனிமனிதனின் விருப்பிலோ, நல்லெண்ணச் செயற்பாட்டிலோ தங்கியிருக்கக் கூடாது. மாறாக, இவை அந்த ஜனநாயகத்தின் அத்திவாரக் கட்டமைப்பில் இருக்க வேண்டும். 

தலைமை யாராக இருந்தாலும், தலைமைகளில் மாற்றங்கள் வந்தாலும், எத்தனை தலைவர்கள் வந்தாலும், போனாலும், இந்த ஜனநாயகக் கட்டமைப்பு தொடர்ச்சியாகச் செயற்படுமானால், ஜனநாயக இயந்திரம், தனிமனிதர்களின் அதிரடி நடவடிக்கைகளுக்கான விசேட தேவைகள் எதுவுமின்றி சிறப்பாக இயங்கும்.

அந்தக் கட்டமைப்பை ஸ்தாபித்து, பலமான ஜனநாயக நிறுவனமயமாக்கலை முன்னெடுப்பவர்கள்தான் உண்மையில் சிறந்த தலைவர்கள்.

இன்னமும் நாம் ஊர் ஊராகச் சென்று, கூட்டம் நடத்தி, மக்களிடம் குறைகளைக் கேட்கும், “இதுவே என் கட்டளை, என் கட்டளையே சாசனம்” என்று அதிரடியாக அரச அதிகாரிகளை அதட்டி, எதேச்சாதிகாரமான முறையில் தன்னுடைய சிற்றறிவுக்கு எட்டுகிற விடயத்தை, உடனடித் தீர்வாகத் தந்து, அதை நிறைவேற்றப் பணிக்கும் தலைவர்களை ‘அதியுத்தமர்களாக’ விளித்து, மக்கள் குறைதீர்க்கும் மன்னர்களாகக் கொண்டாடுகிறோம் என்றால், நாம் இன்னமும் ஜனநாயகத்தை முற்றாகச் சுவீகரிக்காத மக்கள் கூட்டம் என்ற கசப்பான உண்மையைத்தான், அது உணர்த்தி நிற்கிறது. 

ஒரு வகையில் யோசித்தால், மன்னராட்சிக்கால, அல்லது நிலப்பிரபுத்துவக் கால மனநிலையில்தான் பெரும்பாலும் இந்த நாட்டு மக்கள் இன்றும் இருக்கிறார்களோ என்று தோன்றுகிறது. இதற்கு கலாசார, பண்பாட்டு அம்சங்கள் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

 எமது கலாசார, பண்பாட்டு அம்சங்கள் பெரும்பாலும், மன்னராட்சிக்கால, அல்லது நிலப்பிரபுத்துவக் கால விழுமியங்களின் தொடர்ச்சியாகவோ, அதனை அடியொற்றியதாகவோ இருப்பதால், ஜனநாயகம் என்பது இயல்பாக வேரூன்றாத ஒரு விடயமாக இருப்பதுகூட, ஜனநாயகத்தின் தாற்பரிய உணர்வு அல்லது புரிதல் குறைவுக்குக் காரணமாக இருக்கலாம். 

வள்ளுவன் சொல்கின்ற, ‘மன்னர் விழைப விழையாமை மன்னரால் மன்னிய ஆக்கந் தரும்’ என்ற மனநிலை, ஜனநாயகத்துக்கு உவப்பானது அல்ல. ஜனநாயகம் என்பது மாற்றுக்கருத்துகளின் களம். அதுவே, ஜனநாயகத்தின் அடிப்படையும் கூட!

அப்படியானால், தலைவர்கள் மக்களைச் சந்திக்கக் கூடாதா, மக்களின் குறைகளைக் கேட்கக் கூடாதா என்று சிலர் வினவலாம். தலைவர்கள் மக்களைச் சந்திப்பதோ, அவர்களின் குறைகளைக் கேட்பதோ இங்கு குறையாக முன்வைக்கப்படவோ, விமர்ச்சிக்கப்படவோ இல்லை; அது நல்ல விடயம். 

ஆனால், பங்கீட்டுக் கடையின் கடைநிலை ஊழியரின் ஊழலைக் கண்டறிந்து, அவரைப் பணிநீக்குவது முதல், ரௌடிகளைத் தானே துவம்சம் செய்வது வரை, ஓர் அரசாங்கத்தின் எல்லாச் செயற்பாடுகளும், நாட்டின் தலைவர் கட்டளையிட்டால்தான் செயற்படும் என்றால், அந்த ஜனநாயக இயந்திரம் பாழடைந்து கிடக்கிறது என்றுதான் அர்த்தம். 

மறுபறத்தில், மக்களின் குறைகளைக் கேட்டுவிட்டு, அதற்கு தடாலடியாக கட்டளைச் சாசனங்களை அங்கேயே பிறப்பிப்பது எல்லாம், அந்த மக்களுக்கு நன்மை பயக்கினும் கூட, எதேச்சாரிகாரமானதே! ஒரு தலைவன் மக்களைச் சந்தித்துக் குறைகளைக் கேட்பது என்பது, அந்தக் குறைகளைக் களைவதற்கான நீண்டகால கொள்கைத் திட்டமிடலுக்கு வழிவகுக்க வேண்டும். 

அத்தகைய குறைகள், இனி இடம்பெறாதிருக்கும் வகையில் நிறுவனமயமாக்கல் கட்டமைக்கப்பட வேண்டும். ஜனநாயகம் முறையாக நிறுவனமயமாக்கப்படும் போது, அரசியல்வாதிகளின், நாட்டின் தலைவர்களின் நேரடி இடையீடுகளுக்கான அவசியப்பாடு இருக்காது. 

ஆகவேதான், ஒரு சிறந்த ஜனநாயக நாடு கட்டியெழுப்பப்படுவதற்கு, பலமான தலைவர்களைவிட, பலமான நிறுவனக்கட்டமைப்புகள் அவசியமாகின்றன. அத்தகைய பலமான ஜனநாயக நிறுவனங்கள் கட்டியெழுப்பப்படும் போது, அந்த நாட்டின் ஜனநாயகம் என்பது, தலைவர்களின் நல்லெண்ணத்தில் தங்கியதாக அமையாது. 

மேலும், ஒரு பாரதூரமான தலைவன் வந்துபோனாலுங்கூட, அந்த ஜனநாயகம் தன்னைப் பாதுகாத்து தக்கவைத்துக்கொள்ளும் நிலையைப் பலமான ஜனநாயக நிறுவனக்கட்டமைப்புகளால் மட்டுமே வழங்க முடியும்.

 பலமான ஜனநாயக நிறுவனமயமாக்கல் என்பது வறுமைக் குறைப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கு வலுச் சேர்க்கின்றன என்றும், ஜனநாயக நிறுவனக்கட்டமைப்புகள் பலமற்றிருக்கும் நாடுகளில் பிணக்குகளும், வன்முறைகளும் அதிகரிக்கின்றன என்றும் உறுதிப்படுத்தப்படக்கூடிய தரவுகளின் அடிப்படையிலான பல ஆய்வுகளும் குறிப்பிடுகின்றன.

தலைவர்கள் வரலாம், போகலாம். ஆனால், ஜனநாயகம் தொடர வேண்டும். அப்படியானால் ஜனநாயகம் என்பது, தலைவர்களில் தங்கியதாக இருக்கக்கூடாது. ஜனநாயகம் நீண்டு நிலைக்கத்தக்கதாக செழித்திருக்க வேண்டுமென்றால், பலமான ஜனநாயகக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டும் மேம்படுத்தப்பட்டும் ஜனநாயகம் நிறுவனமயமாக்கப்பட வேண்டும்.

 நாட்டின் தலைவரோ, அமைச்சரோ சொன்னாலும் சொல்லாவிட்டாலும் பொலிஸ் தன் கடமையைச் செய்ய வேண்டும்; பொதுச் சேவை தன் கடமையைச் செய்ய வேண்டும்; நீதித்துறை தன் கடமையைச் செய்யவேண்டும். தமது தேவைகளுக்கும் பாதுகாப்புக்கும் மக்கள் நாட்டின் தலைவரிடம் இறைஞ்சுவதும், அவர் உடனே அதைச் செய்து கொடுப்பதும் ஜனநாயகம் என்று நம்பவைக்கும் ‘தேவதைக் கதை’களை இனியேனும் நம்ப மறுத்து, பலமான ஜனநாயகக் கட்டமைப்புக்களின் ஊடாக ஜனநாயகத்தை, நிறுவனமயப்படுத்திப் பாதுகாப்பது பற்றிச் சிந்திப்போம். அதுதான் அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யதக்க அரும்பணி.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .