2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பா.ஜ.க - அ.தி.மு.க இணைப்பா?

எம். காசிநாதன்   / 2017 நவம்பர் 06 , மு.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட, விசாரணை ஆணைக்குழு பரபரப்பான திருப்பங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.   

ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி, விசாரணையைத் தொடங்கிய உடனேயே, 50 க்கும் மேற்பட்டோர் இரகசியத் தகவல்கள் என்ற அடிப்படையில், ஜெயலலிதாவின் மரணம் குறித்து, பல்வேறு தகவல்களை விசாரணை ஆணைக்குழுவுக்கு அனுப்பியிருக்கிறார்கள்.   

இந்நிலையில், மதுரை, திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த, தி.மு.க வேட்பாளர் சரவணன், ஒரு கோரிக்கையை விடுத்துப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.  

அவர், விசாரணை ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ள மனுவில், ‘சசிகலா, முன்னாள் பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்களை விசாரணைக்கு அழைக்க வேண்டும்’ எனவும்  கோரிக்கை விடுத்துள்ளார்.   

இந்த மனு, விசாரணை ஆணைக்குழுவுக்கு சிக்கலைத் ஏற்படுத்தும். ஏனென்றால், சசிகலாவைப் பொறுத்தவரை, அவர், கர்நாடகா சிறைச்சாலையில் இருக்கிறார். அவருக்கு நோட்டீஸ் கொடுத்து வரவழைக்க வேண்டும். அதேபோல், முன்னாள் பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் தற்போது மஹாராஷ்டிரா ஆளுநராக இருக்கிறார். அவருக்கு நோட்டீஸ் கொடுத்து வரவழைக்க முடியாது.   

இதுபோன்ற ஆணைக்குழு விசாரணைகளில், பங்கேற்காமல் இருப்பதற்கு, ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டம் பாதுகாப்பை வழங்கியிருக்கிறது. ஆனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் ‘விசாரணை ஆணைக்குழு முன்பு ஆஜராக வேண்டும்’ என்று உத்தரவிடப்பட்டால், அது திருகுவலியாக முடியும்.  

இவர்களைத் தவிர, இலண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே, மத்திய அரசாங்கத்திலிருந்து வந்த ‘எய்ம்ஸ்’ மருத்துவர்கள் போன்றவர்களையும் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது தி.மு.க,. இந்தக் கோரிக்கை, மத்திய- மாநில உறவுகளில் பெரும் நெருடலை ஏற்படுத்தும்.   

இலண்டனில் உள்ள மருத்துவரை விசாரணைக்கு உத்தரவிட, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இருக்கிறதா என்ற கேள்வி எழும். மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ‘எய்ம்ஸ்’ மருத்துவர்களை விசாரணைக்கு அழைக்க முடியுமா என்ற கேள்வியும் பிறகுக்கும்.  

‘எய்ம்ஸ்’ மருத்துவர்களை அழைக்க முடியும் என்ற நிலை உருவானால், மறைந்த ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்த்த மத்திய அமைச்சர்களையும் விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்ற கோரிக்கை முளைக்கும்.   

ஆனால், மத்திய அரசாங்கத்தின் மருத்துவர்களையும் ஆளுநரையும் வெளிநாட்டு மருத்துவரையும் விசாரணைக்கு அழைக்கும் முடிவை இந்த விசாரணை ஆணைக்குழு எடுக்க வேண்டும் என்று இன்றைய சூழ்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரும்ப மாட்டார். ஆகவே, தி.மு.கவின் கோரிக்கை மனு, விசாரணை ஆணைக்குழுவின் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு ஒரு ‘வேகத் தடை’.  

ஏன் இந்த வேகத்தடை? ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்பது மக்கள் அனைவருக்கும் செய்தியாகி விட்டது. அதை வைத்து அரசியல் செய்யவும், ஆட்சிக்கு தலைவலி வரக்கூடாது என்பதற்காகவும் நியமிக்கப்பட்டதுதான் இந்த விசாரணை ஆணைக்குழு.   

அதனால்தான், அ.தி.மு.க உறுப்பினர் ஒருவரே, “இந்த விசாரணை ஆணைக்குழுவுக்கு செல்லாது” என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் விசாரணை ஆணைக்குழுவுக்கு தடை விதிக்க, உயர்நீதிமன்றம் மறுத்து விட்டதால், இப்போது அதன் மீதான மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில்தான், விசாரணை ஆணைக்குழுவின் செயல்பாடுகளில் தி.மு.க இந்த முட்டுக்கட்டையைப் போட்டிருக்கிறது. என்ன பின்னணி என்ன?  

‘ஜெயலலிதா மரணத்துக்கு, சசிகலாவின் கவனக்குறைவு தான் காரணம்’ என்று விசாரணை ஆணைக்குழு அறிக்கை வெளிவந்தால், 
அ.தி.மு.கவின் உட்கட்சி அரசியல் முழுமையாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் கைக்குள் வந்து விடும். அப்படி வருவது இப்போதைக்கு நல்லது என்றே, பா.ஜ.கவும் நினைக்கிறது.   

ஏனென்றால், எக்காரணத்தைக் கொண்டும் மீண்டும் அ.தி.மு.கவை சசிகலாவோ அல்லது தினகரனோ கைப்பற்றி விடக்கூடாது என்பதில் பிரதமர் மோடி மட்டுமல்ல; பா.ஜ.க தலைவர்கள் அனைவருமே உறுதியாக இருக்கிறார்கள். டொக்டர் சுப்ரமணியசுவாமி மட்டுமே “சசிகலாவால்தான் அ.தி.மு.கவை நடத்த முடியும்” என்று ஆதரவு தெரிவிக்கிறார்.   

ஒரு கட்டத்தில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின் முழுக் கட்டுப்பாட்டில் அ.தி.மு.க வந்து விட்டால், அது பா.ஜ.கவுக்கு ஓர் இயற்கை கூட்டணியாகவும் எதிர்காலத்தில் பா.ஜ.கவிலேயே அ.தி.மு.க ஐக்கியமாவதற்கும் ஒரு வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கிறார்கள்.   

ஆகவே, சசிகலா இல்லாத அ.தி.மு.கவை, எந்த நேரத்திலும் பா.ஜ.கவுடனேயே இணைத்துக் கொண்டுவிட முடியும் என்பதை தமிழகத்தில் பா.ஜ.கவை வலுப்படுத்த வேண்டும் என்ற அரசியல் பார்வையாளர்களின் வியூகமாக இருக்கிறது.   

ஒருவேளை, அ.தி.மு.க என்ற கட்சி நாளடைவில் பா.ஜ.கவுடன் இணைந்து விட்டால், தமிழகத்தில் இரு துருவங்களாக இருக்கும் திராவிடக் கட்சிகளின் அரசியல் முடிவுக்கு வரும் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது.   

அடுத்து, தி.மு.க - பா.ஜ.க என்ற அரசியல் களம், தமிழகத்தில் உருவாகலாம். இப்படியொரு சூழ்நிலை திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழா நிறைவு பெறும் இந்த நேரத்தில் நடைபெற்று விடக்கூடாது என்பதில், திராவிட முன்னேற்றக் கழகம் தெளிவாக இருக்கிறது. தமிழகத்தில், தி.மு.க - அ.தி.மு.க அரசியல் தொடருவது மட்டுமே தமிழகத்தைத் திராவிட இயக்கங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளும் என்பது மூத்த தி.மு.க தலைவர்களின் விருப்பம்.  

இதை மனதில் வைத்துத்தான், விசாரணை ஆணைக்குழு ஒரு முடிவுக்கு வந்து விடக்கூடாது என்பதில் திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக இருக்கிறது. அதன் முதல் கட்டம்தான், ஆளுநர், வெளிநாட்டு மருத்துவர், மத்திய அரசாங்கத்தின் மருத்துவர்கள் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என்று விசாரணை ஆணைக்குழுவுக்கு வைத்துள்ள புதிய கோரிக்கை ஆகும்.  

அதுமட்டுமின்றி, ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சைகள் பற்றிய விசாரணை இது என்பதால், வெளிமாநில மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையையும் விசாரணை ஆணைக்குழுவுக்கு தி.மு.க முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.   

தி.மு.கவின் இந்தக் கோரிக்கைகளை விசாரணை ஆணைக்குழு நிராகரித்தால், நீதிமன்றத்துக்கு இந்த விவகாரம் போகும் என்பதில் சந்தேகமில்லை. ஏற்கெனவே, சட்டபூர்வமாக விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நேரத்தில், அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணைக்குழு முறையாக விசாரணையைத் தொடக்கவில்லை என்ற ஒரு வழக்கும் உயர்நீதிமன்றத்துக்குச் சென்றால், விசாரணை ஆணைக்குழு செயல்படுவதில் சிக்கல் ஏற்படும்.   

அது, விசாரணை ஆணைக்குழுவைப் பயன்படுத்தி, சசிகலா இல்லாத அ.தி.மு.கவை உருவாக்கி, அ.தி.மு.க - பா.ஜ.க இணைப்புக்கு, நடக்கும் முயற்சிக்கு தடை போடும் என்று கருதுகிறார்கள்.  

ஆகவே, விசாரணை ஆணைக்குழு அரசியல், தேசிய கட்சியான பா.ஜ.க தமிழகத்துக்குள் தங்கு தடையின்றி, நுழைவதற்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் உள்ள அ.தி.மு.க ஏற்படுத்திக் கொடுக்கும் ‘ஒரு வழிப்பாதை’யாக அமைந்து விடக்கூடாது என்பதில் தி.மு.க உறுதியாக இருக்கிறது.  இதுபற்றிக் கருத்துக் கூறிய தி.மு.க முன்னாள் அமைச்சர் ஒருவர், “ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, முதலமைச்சர் பொறுப்புகளை ஓ பன்னீர்செல்வத்துக்குக் கொடுக்க கையொப்பம் இட்டார் என்று கூறப்பட்டது.  அதன் அடிப்படையில்தான் ஆளுநர், ஜெயலலிதாவின் பொறுப்புகள் அனைத்தையும் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஒப்படைத்தார்.ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக இருக்கும் போதுதான், இலண்டன் டொக்டர் ரிச்சர்ட் பீலே, சென்னை வந்து ஜெயலலிதாவுக்குச் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது” என்று அறிவித்தார்.   

“எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆன பிறகுதான், ஜெயலலிதாவுக்குச் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. எதிர்க்கட்சியினர் கிளப்பும் சந்தேகங்கள் எல்லாம் ஆதாரமற்றது” என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் அறிவித்தார்.   

அதற்கு அவர் ஆதாரமாக எடுத்துக் கொண்டது, மத்திய அரசாங்கத்தின் ‘எய்ம்ஸ்’ டொக்டர்கள் கொடுத்த அறிக்கை. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, விசாரிக்கப்பட வேண்டியவர்கள், இந்த அரசாங்கத்துக்குள்ளேயே இருக்கிறார்கள்.   

ஆனால், விசாரணை ஆணைக்குழு, இதுவரை அவர்களுக்கு அழைப்புமனு அனுப்பியதாகத் தெரியவில்லை. அதனால்தான், இந்த ஆணைக்குழுவின் விசாரணையை, வேறு ஏதோ அரசியலுக்குப் பயன்படுத்த முயற்சிக்கப்படுகிறது என்ற சந்தேகம் தி.மு.கவுக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே, ஆளுநர், ‘எய்ம்ஸ்’ டொக்டர், முதலமைச்சர் உள்ளிட்ட அனைவரையும் விசாரிக்க வேண்டும் என்கிறது. விசாரணை ஆணைக்குழுவைப் பயன்படுத்தி, திராவிடக் கட்சிகளில் ஒன்றை தமிழகத்தில் முடிவுக்கு கொண்டு வர அனுமதிக்க முடியாது என்பது தி.மு.கவின் நிலைப்பாடு ஆகும்.   

இந்நிலையில், “ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோரை விசாரிக்க வேண்டும்” என்ற தி.மு.கவின் கோரிக்கையை ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணைக்குழு எப்படிக் கையாளப் போகிறது என்பதை வைத்தே ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ளதாகக் கருதப்படும் மர்மங்கள் பற்றிய உண்மைகளை வெளிக் கொண்டு வரமுடியும்.  

ஆணைக்குழுவின் இந்தக் கோரிக்கையைக் கையாளுவதில் ஏற்படும் விளைவுகள், புதிய அரசியல்க் களத்தை ஏற்படுத்துமா? விசாரணை ஆணைக்குழு பற்றிய சட்டப் போராட்டத்தை ‘தொடர்கதை’ ஆக்குமா என்பது போகப் போகத் தெரியும்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .