2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புதிய சட்டங்கள் தேவையானவை தானா?

Gopikrishna Kanagalingam   / 2018 மார்ச் 29 , மு.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டியில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பான நேரடியான கவனம் குறைவடையத் தொடங்கியிருக்கிறது. வெவ்வேறு பிரச்சினைகள் பற்றி, இப்போது கவனம் எழத் தொடங்கியிருக்கிறது. இன்னும் சில வாரங்களில், இப்பிரச்சினை முழுமையாக மறக்க, மறைக்கப்படலாம்.  

இது, கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு மாத்திரம் தனியான ஒன்று கிடையாது. கடந்தாண்டில், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மீதும் பள்ளிவாசல்கள் மீதும், தாக்குதல்கள் பல மேற்கொள்ளப்பட்டன. கண்டியைப் போல, குறிப்பிட்ட ஒரு சில நாட்களுக்குள் நடத்தப்படாமல், தொடர்ச்சியாகச் சில வாரங்களுக்கு, ஆங்காங்கே நடத்தப்பட்டன. உடனடியான கோபம் காணப்பட்டது. ஆனால், பின்னர் அவை மறக்கப்பட்டன.   

கண்டி வன்முறைகள் இடம்பெற்ற போது, அவற்றுக்கெதிராகக் குரல் கொடுத்தவர்கள், கடந்தாண்டு இடம்பெற்ற வன்முறைகளை மறந்திருந்தனர். அந்த வன்முறைகளுக்கான நீதி வழங்கப்படாத நிலையில், கண்டி வன்முறைகள் பற்றி மாத்திரம் எவ்வாறு நீதி வழங்கப்பட முடியுமென்ற, யதார்த்தமான கேள்வியை எழுப்பத் தவறியிருந்தனர்.  

அதேபோல் தான், கண்டி வன்முறைகள் தொடர்பிலும் முழுமையான நீதியை எதிர்பார்க்கும் மனநிலை மாற்றமடைந்து, நம்பிக்கையில்லாப் பிரேரணை என்ற நவீன நாடகப் பக்கமாக, கவனம் மாறியிருக்கிறது. நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கிடைக்கப்பெறும் முடிவுகளைப் பொறுத்து, கண்டிச் சம்பவங்கள் முழுமையாக “மறக்கப்படுவதற்கான” வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. 

இந்நிலையில் தான், கண்டி வன்முறைகள் இடம்பெற்ற நாளிலிருந்து, “இன வன்முறைகளைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் வேண்டும்”, “வெறுப்புப் பேச்சுகளைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் வேண்டும்”, “சமூக ஊடக வலையமைப்புகளைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் வேண்டும்” போன்ற குரல்கள் எழத் தொடங்கியிருக்கின்றன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கூட, இதே கருத்தைச் சில நாட்களுக்கு முன்னர் வெளிப்படுத்தியிருந்தார்.  

புதிய சட்டங்கள் மீதான ஆர்வம், சிறிதளவுக்கு விநோதமானது தான். ஏனென்றால், கண்டி வன்முறைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது, இருக்கும் சட்டங்களைக் கொண்டு அவ்வன்முறைகளைக் கட்டுப்படுத்த முயலவில்லை என்பது தான், முக்கியமான குற்றச்சாட்டாக இருக்கிறது. அதிலும், அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்ட பின்னரும் கூட வன்முறைகள் தொடர்ந்திருந்தன. அவசரகால நிலைப் பிரகடனத்தின் பின்னரும் கட்டுப்படுத்தப்பட முடியாமல் போயிருந்த வன்முறைகள், வேறு எச்சட்டத்தின் மூலமாகவும் கட்டுப்படுத்தப்பட முடியாதுதான் என்பதுதான் உண்மையானது.  

இலங்கையில் ஏற்கெனவே காணப்படும் சட்டங்களின் அடிப்படையில், வெறுப்புப் பேச்சு என்பது வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளதுடன், அது குற்றமாகும். வன்முறைகளும் குற்றமாகும். இவற்றை வைத்துப் பார்க்கும் போது, சாதாரணமாக ஒரு வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்கான அத்தனை அடிப்படைச் சட்டங்களும் இலங்கையில் உள்ளன. ஆனால், இச்சட்டங்கள் பிரயோகிக்கப்பட்டனவா என்பதுதான் இருக்கின்ற கேள்வியாகும்.  

எனவே, புதிதாகச் சட்டம் கொண்டு வருவதானால், வன்முறைகளின் போதும் இனரீதியான முறுகல்களின் போதும், சட்டத்தைப் பாகுபாடின்றி நடைமுறைப்படுத்தாத சட்ட அமுலாக்கப் பிரிவினர் மீது அதிகமான நடவடிக்கை என்ற சட்டமொன்றைக் கொண்டு வருவதுதான் பொருத்தமாக இருக்கும். அதைவிடுத்து விட்டு, இருக்கும் சட்டங்களை அமுல்படுத்தாமல், அவற்றைக் கொண்டு வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியாது என்ற முடிவுக்கு, எவ்வாறு வர முடியும்?  

மக்களின் அடிப்படை வாழ்க்கையை முழுவதுமாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடிய சட்டங்களையும் அதிகாரங்களையும் கொண்டுவருவது தான், அரசாங்கத்தினதும் ஆளுவோரினதும் நோக்கமாக இருக்கிறது. நியாயமாக ஆள்வதில் அவர்களுக்கு விருப்பம், ஆர்வம் இருக்கிறதா என்றால், அது கேள்விக்குரியது தான். இதனால்தான், அவசரகால நிலை என்பது, ஜனாதிபதி ஒருவரால் 14 நாட்களுக்கு மாத்திரமே பிரகடனப்படுத்தப்பட முடியும், அதைத் தாண்டி நாடாளுமன்றத்தின் அங்கிகாரம் தேவை என்பதையும் மறந்து/மறைத்து விட்டு, “ஜனாதிபதி விரும்பும்வரை அமுலில் இருக்கும்” என்ற வகையிலான கருத்துகள், ஆளுவோரால் தெரிவிக்கப்பட்டு வந்தன.  

அவசரகால நிலை இருக்குமாயின், தொழிற்சங்கப் போராட்டங்களை எதிர்கொள்ளத் தேவையில்லை, போராட்டங்கள் நடத்த முடியாது, வேண்டியவர்களை வேண்டிய நேரத்தில் கைது செய்ய முடியும். இவையெல்லாம் தான், அனைத்து ஆளுவோரும் எதிர்பார்க்கும் அதிகாரங்கள்.  

துயரமான நிகழ்வுகளைப் பயன்படுத்தி, மோசமான சட்ட ஏற்பாடுகளைக் கொண்டு வருவதொன்றும் புதிதானது கிடையாது. செப்டெம்பர் 11 தாக்குதல்களைத் தொடர்ந்து, ஐக்கிய அமெரிக்காவில் கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்குமளவுக்கு அவை அமைந்திருந்தன. ஆனால், அந்த மோசமான தாக்குதலின் பாதிப்பிலிருந்து வெளிவராத மக்கள், “உரிமைகளைச் சிறிதளவுக்கு விட்டுக் கொ டுத்தாவது, எதிர்காலத் தாக்குதல்களைத் தடுக்க வேண்டும்” என்ற மனநிலையில் அப்போது இருந்தனர். அதனால், போதுமானளவு எதிர்ப்புகள் எழுந்திருக்கவில்லை.  

அதேபோன்ற நிலைமை தான், சமூக ஊடகங்களின் அணுக்கத்தை இலங்கை அரசாங்கம் கட்டுப்படுத்திய போதும் காணப்பட்டது. பல்வேறு வகையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், “மக்களின் அடிப்படை உரிமை, நியாயமற்ற ரீதியில் மறுக்கப்படுகிறது” என்ற விமர்சனம், மிகக்குறைவான அளவிலேயே முன்வைக்கப்பட்டது. அரசாங்கத்துக்குப் பணிந்து போகின்ற அல்லது அரசாங்கத்தை நம்பிச் செயற்படுகின்ற இந்நிலைமை மாற்றமடைய வேண்டும்.  

இருக்கின்ற சட்டங்களை, முறையாக அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை, அரசாங்கம் மேற்கொள்வதற்கான அழுத்தங்கள் வழங்கப்பட வேண்டும். இருக்கின்ற சட்டங்கள் முழுமையாக அமுல்படுத்தப்படும் போது, வன்முறைகளையும் இனவெறுப்புகளையும் எந்தளவுக்குக் கட்டுப்படுத்த முடிகிறது என்பதைப் பார்க்க வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்கு, இந்நிலை நீடிக்க வேண்டும். அதன் பின்னரும் கூட நிலைமையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால், சட்டத் திருத்தங்கள் பற்றி யோசிக்க முடியும். அதுவே உண்மையான ஜனநாயகமும் ஆகும்.  

நல்லாட்சி அரசாங்கம் என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்கின்ற இந்த அரசாங்கம், உண்மையிலேயே நல்ல நோக்கத்துடன் தான், புதிய சட்டங்களைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை எடுக்கக்கூடும். கடந்த கால அனுபவங்கள், வேறு விடயத்தைச் சொன்னாலும், அரசாங்கத்தின் பக்கமிருந்து, அவர்கள் பக்க நியாயத்தையும் பார்த்து, உண்மையிலேயே அவர்களுக்குத் தீய நோக்கங்கள் இல்லை என்றே வைத்துக் கொள்வோம். ஆனால், அடுத்ததாக வரும் அரசாங்கம், இவ்வாறான சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தாது என்பதற்கு என்ன உறுதிப்பாடு இருக்கிறது?  

தன்னால் வரையப்பட்ட அரசமைப்பு, யாராலும் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று தெரிந்தால், அதை எரிக்கும் முதலாவது ஆளாக, தான் இருப்பார் என்று கூறிய அம்பேத்கரின் உறுதிப்பாடு, இலங்கையின் சட்டவாக்க நிபுணர்களுக்கு இருக்கிறதா?  

ஏனென்றால், போலிச் செய்திகள் எவ்வளவுக்கு மோசமானவையோ, அவ்வளவுக்கு அவ்வளவு, போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்துவதற்காகக் கொண்டுவரும் சட்டங்களும் மோசமானவை. மலேஷியாவில், கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வரும் நஜீப் ரஸாக்கின் அரசாங்கம், திடீரென்று, போலிச் செய்திகளுக்கு எதிரான சட்டமொன்றை இய‌ற்றி, அதிகளவு அபராதமும் 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் வழங்கப்படக்கூடிய ஏற்பாட்டைச் செய்துள்ளது. தங்கள் மீதான அழுத்தங்கள் அதிகரிக்கும் போது, தமக்கெதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் நபர்கள் மீது, இச்சட்டத்தை அவ்வரசாங்கம் பயன்படுத்தப் போவது உறுதி. அதனால் தான், சர்வதேச ரீதியாக, அச்சட்டத்துக்கு எதிர்ப்பு எழுந்திருக்கிறது.  

எனவேதான், இலங்கையிலும் இவ்வாறான சட்ட ஏற்பாடுகள் கொண்டு வரப்படும் முயற்சிகள், முழுமையாக எதிர்க்கப்பட வேண்டும்.  

மாறாக, ஊடகங்களால் பொய்யான, போலியான செய்திகள் வெளியிடப்படுமாயின், அவற்றை எதிர்கொள்வதற்காக, சுயாதீனமான அமைப்புகள் பலப்படுத்தப்பட வேண்டும். உதாரணமாக, இலங்கையின் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு, இன்னமும் பலப்படுத்தப்பட முடியும். இப்படியான, சமுதாய ரீதியான செயற்பாடுகள் தான் இலங்கைக்குத் தேவைப்படுகின்றனவே, இன்னமும் புதிய சட்டங்கள் இல்லை.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .