2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

பெண்ணுரிமை: இந்திய உச்சநீதிமன்றம் ஏற்படுத்தியுள்ள புதுமைப் புரட்சி

எம். காசிநாதன்   / 2018 ஒக்டோபர் 01 , மு.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய உச்சநீதிமன்றம் அதிரடிகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.  

வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கி, ஒக்டோபர் இரண்டாம் திகதியன்று விடைபெறும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா,‘தலைமை நீதிபதி’கள் வரிசையில், மிக உயர்ந்த இடத்துக்குச் சென்றிருக்கிறார்.   

பெண்ணுரிமை, பெண்களின் சுதந்திரம் போன்றவற்றுக்குப் பெருமதிப்பு அளித்த தலைமை நீதிபதியாக, நீதித்துறை வரலாற்றில், நீதிபதி தீபக் மிஸ்ரா இடம்பெறுகிறார்.   

அரசியல் சட்டத்தில் உள்ள, ‘சட்டத்துக்கு முன்பு அனைவரும் சமம்’ என்ற 14 ஆவது பிரிவும், ‘வாழும் உரிமை’ வழங்கும் 21 ஆவது பிரிவும் வியத்தகு வகையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பதவிக் காலத்தில், விரிவடைந்து நிற்கிறது.  

இதுவரை இருந்த நீதிபதிகள், அளித்த தீர்ப்புகளின் அடுத்த கட்டமாக, ‘சம உரிமை’, ‘வாழ்வுரிமை’ என்பதைப் பெண்களுக்கு அதிமுக்கியத்துவம் அளித்து, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் தலைமையில் உள்ள அரசியல் சாசன அமர்வால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புகள், பழைமை வாய்ந்த இந்தியக் கலாசாரத்தைத் திருப்பிப் போடும் வகையில் அமைந்திருக்கின்றன.  

கலாசாரம் என்ற ஒற்றைக் காரணத்தை வைத்துக் கொண்டு, பெண்களின் சுதந்திரத்தில் குறுக்கிடும் மனப்பான்மைக்கு, அதிர்ச்சியளிக்கும் வைத்தியம் அளிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு உரிமை, பெண்களுக்கு சுதந்திரம் என்ற வகையில், புதியதோர் அத்தியாயத்தை, இந்தியாவில் நிலைநாட்டப்பட்டிருக்கிறது.   

முதலில், ‘முத்தலாக்’கை இரத்துச் செய்த இந்திய உச்சநீதிமன்றம், இஸ்லாமிய சமுதாயப் பெண்களின் உரிமைகளை நிலைநாட்டியது. அந்தத் தீர்ப்பு, தற்போது அவசரச் சட்டமாகவே பிறப்பிக்கப்பட்டு, மூன்று முறை தலாக் சொல்லி, திருமண பந்தத்தை முறிக்கும் முறை, அடியோடு ஒழிக்கப்பட்டுள்ளது.   

அதுமட்டுமல்ல, அப்படிச் சொல்லி விவாகரத்து வழங்குவது, தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்துக்கு எதிர்ப்புகள் வந்தாலும், காங்கிரஸ் போன்ற மதச்சார்பற்ற கட்சியால்க் கூட, முழுக்க முழுக்க இந்தச் சட்டத்தை எதிர்த்து விட முடியவில்லை. ஏனென்றால், இஸ்லாமியப் பெண்கள் மத்தியில், ‘முத்தலாக்’ சட்டத்துக்குக் கிடைத்துள்ள வரவேற்பு; அந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்று விட்டது.   

அதன் பிறகு, ‘தனிநபர் சுதந்திரம்’ என்ற அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டத்தில், ஓரினச் சேர்க்கைக்கு எதிராக உள்ள பிரிவு, 377ஐ உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, இரத்துச் செய்தது.   

இதுவும், இந்திய வரலாற்றில் சிறப்பான தீர்ப்பு என்று பெண்கள் நலன் காக்கப் போராடும் அமைப்புகளால் வரவேற்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளைப் பொறுத்தமட்டில், இதற்கான வரவேற்பு, ‘முத்தலாக்’ பிரச்சினை போலவே, ஐம்பதுக்கு ஐம்பதாகவே இருந்தது.   

ஆனால், உச்சநீதிமன்றத்தைப் பொறுத்தமட்டில், இதில் தனிநபர் குறித்த விவாதமும், அந்தத் தனிநபருக்கு உள்ள சுதந்திரமும் மிக விரிவாக விவாதிக்கப்பட்டு, அரசியல் சட்டம் அந்தச் சுதந்திரத்தை வழங்குகிறது என்பதும் தெளிவாக விவாதிக்கப்பட்டு, தீர்ப்பளிக்கப்பட்டது.   

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதியரசர் நரிமன், 377 ஆவது பிரிவை இரத்து செய்வதற்கு, இங்கிலாந்து மன்னர் ஹென்றி-Viii கொண்டு வந்த சட்டத்தை மேற்கோள் காட்டி, அங்கு ஓரினச் சேர்க்கைக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டி, இறுதியில் இந்தியத் தண்டனைச் சட்டத்தை உருவாக்கிய லோர்ட் மேக்லேயின் வரைவு, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவையே ஆதாரமாக எடுத்துக்கொண்டு “சம்மதத்துடன் நடக்கும் ஓரின சேர்க்கை, தண்டனைக்குரிய குற்றமல்ல” என்று முடிவு செய்தார்.   

இந்தத் தீர்ப்பின் தாக்கம் ஓய்வதற்குள், அடுத்ததாக இந்தியத் தண்டனைச் சட்டப்பிரிவு 497ஐ உச்சநீதிமன்றம் இரத்து செய்து, பெண்களுக்கு அரிய சுதந்திரத்தை அளித்திருக்கிறது.  

தகாத உறவு வைத்துக் கொள்ளும் கணவனை சிறைக்கு அனுப்பும் இந்தப் பிரிவு, இரத்து செய்யப்பட்ட நிலையில், தனது தீர்ப்பிலும் உச்சநீதிமன்ற நீதிபதி நரிமன், சில சுவாரஷ்யமான தகவல்களைப் பதிவு செய்துள்ளார்.

அவர் தனது தீர்ப்பில், “இந்தியத் தண்டனைச் சட்டத்தில் இந்த 497க்கான ‘வரைவு பிரிவு’ கொடுக்கும் போது, அதைத் தண்டனைக்குரிய குற்றமாக்க வேண்டும் என்று லோர்ட் மேக்லே குறிப்பிடவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.   

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவோ, “கணவன்மார், மனைவிமார்களுக்குத் தலைவர்கள் அல்ல” (Husbands are not the masters of wife) என்ற வாதத்துக்கு அழுத்தம் கொடுத்து, ‘அனைவரும் சட்டத்தின் முன்பு சமம்’, ‘வாழும் உரிமை’ உள்ளிட்ட பிரிவுகளுக்கு, இந்தப் பிரிவு அரசியல் சட்டம் எதிரானது என்று கூறி, இரத்து செய்திருக்கிறார்.   

பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்தில், (PRIVACY)ஆணொருவரைத் திருமணம் செய்து விட்ட ஒரே காரணத்துக்காக, கணவர் குறுக்கிட முடியாது என்பதுதான் இந்தத் தீர்ப்பின் மிக முக்கிய சாராம்சம்.  

“திருமணம் என்பது புனிதமானது. அந்தப் புனிதம் நிறைந்த குடும்பத்துக்குள் பெண்ணுக்குத் தனிப்பட்ட சுதந்திரம் இருக்கிறது என்று கூறி, குடும்பத்தின் புனிதத்தன்மையை பறி கொடுக்க முடியாது” என்று முன்பு வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்புகள், இந்தத் தீர்ப்பின் மூலம் இரத்து செய்யப்பட்டு, திருமணமான பெண்களின், தனிநபர் சுதந்திரத்தில், ஒரு மறுமலர்ச்சி அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறது.   

குறிப்பாக, இந்த 497ஆவது பிரிவில், ‘கணவனின் சம்மதத்துடன், தகாத உறவு வைத்துக் கொண்டால் குற்றமல்ல’ என்று குறிப்பிடப்பட்டிருப்பது, அரசியல் சட்டத்தின் பிரிவுகளுக்கு, எதிரானது என்பதைக் கடுமையாகப் பதிவு செய்துள்ள நீதிபதிகள், பெண்ணின் சுதந்திரத்துக்குச் சவாலான இந்தப் பிரிவை இரத்து செய்திருக்கிறார்கள்.   

இந்தியத் தண்டனைச் சட்டத்தில் உள்ள 377, 497 பிரிவுகளுக்கு எதிராக, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, இந்திய நீதித்துறை வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது.  

இப்படிப்பட்ட பரபரப்பான சூழ்நிலையில்தான், கேரளாவில் உள்ள சபரிமலை கோயில் விவகாரத்தில் தீர்ப்பு வெளிவந்திருக்கிறது. பத்து வயதுக்கு மேல், 50 வயதுக்குள் உள்ள பெண்கள், சபரிமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.   

இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட போதே, எதிர்ப்பும் ஆதரவும் கலந்தே வந்தது. குறிப்பாக, கேரள பெருவெள்ளச் சேதங்களுக்கு, “ஐய்யப்பக் கடவுளின் கோபமும் ஒரு காரணம்” என்றெல்லாம், சமூக வலைத் தளங்களில் கருத்துகள் பரப்பப்பட்டன.   

இது போன்ற சூழ்நிலையில், ஐயப்பன் கோவிலுக்குப் பெண்கள் செல்வதற்கு, வயதின் அடிப்படையில் கேரள அரசாங்கம் விதித்திருந்த தடையை, நீக்கியுள்ளது உச்சநீதிமன்றம். “சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம்” என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சட்ட அமர்வு தீர்ப்பளித்து, வழிபாட்டு உரிமையில், ஆணுக்கும், பெண்ணுக்கும் எந்த வேறுபாடும் இல்லை; கடவுளைக் கும்பிடுவதில் இரு பாலருக்கும் சம உரிமை என்பதை அறுதியிட்டுக் கூறியிருக்கிறது.   

ஐந்து நீதிபதிகளில் ஒரு நீதிபதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருந்தாலும், நான்கு நீதிபதிகளின் தீர்ப்பு, வயது வித்தியாசம் இன்றி, வழிபடும் உரிமையைப் பெண்களுக்கு வழங்கியிருக்கிறது.   

“சடங்குகளோ, சம்பிரதாயங்களோ அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிராக இருக்குமானால், அவை இரத்து செய்யப்பட வேண்டும்” என்று கூறி, நீதிபதி சந்திரசூட் அனைத்து வயதுள்ள பெண்களும் சபரிமலைக்குப் போகலாம் என்று தீர்ப்பளித்துள்ளார்.  

ஆகவே, இதுவரை அரசியல் கட்சிகள், பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தன. நீதித்துறையும் இதுவரை பல வழக்குகளில் குரல் எழுப்பியிருந்தாலும், இந்த முறை உச்சநீதிமன்றமே எழுப்பியுள்ள குரல், சுதந்திர இந்தியாவில் போற்றுதலுக்குரியது.   

குறிப்பாக, கணவன் மனைவி உறவு, பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரம், பெண்களுக்கு வழிபாட்டு உரிமை போன்றவை தொடர்பாக வழங்கியுள்ள தீர்ப்புகளால், நாடாளுமன்றமும், சட்டமன்றங்களும் செய்ய வேண்டியதை உச்சநீதிமன்றம் செய்திருக்கிறது.   

இப்படியான வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புகள், பெண்ணிய முன்னேற்றத்தில், பெண்களுக்கான சுதந்திரத்தில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள புதுமை புரட்சி என்றே சொல்லலாம்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .