2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மஹிந்த அலையைத் தடுக்க அரசாங்கத்தால் முடியுமா?

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2018 மார்ச் 05 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளை அடுத்து, ஏற்பட்ட அரசியல் நெருக்கடி, ஒருவாறு தணிந்து வருகிறது. நல்லாட்சி என்று கூறிக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கூட்டரசாங்கத்திடமிருந்து தொடர்ந்தும் நல்லாட்சி என்பதை எதிர்பார்க்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.   

இந்நிலையில், கூட்டாட்சியை மட்டும் தொடரச் சம்பந்தப்பட்ட இரு பிரதான கட்சிகளும் அதாவது, ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணங்கியுள்ளன.  

தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே, அரசாங்கத்திலுள்ள இரு பிரதான கட்சிகளான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.கவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஸ்ரீ ல.சு.வுக்கும் இடையே சில கருத்து முரண்பாடுகள் எழுந்தன.   

இவை, மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக விசாரிக்க, ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்ததை அடுத்து, முற்றி ஒரு கட்சி, மற்றதை பகிரங்கமாகத் தாக்கும் அளவுக்கு, விரிசல் நிலை ஏற்பட்டது.                                                                                                                                                                                   

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலத்தில், அக்கட்சிகள் ஒன்றோடொன்று போட்டியிட்டதனால், அவற்றுக்கிடையில் மேலும் மோசமான உறவு நிலை ஏற்பட்டது. சில ஐ.தே.க எம்.பிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “நன்றிகெட்டவன்” என்று, பொதுமேடையில் கூறினர்.  

 கடந்த அரசாங்கத்தின் காலத்தில், இடம்பெற்றதைப் போலவே, இந்த அரசாங்கத்தின் காலத்திலும் பாரியளவில் ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாக, ஜனாதிபதி பகிரங்கமாகவே கூறினார்.   

2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம், நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது, தாம் தலைமை தாங்கும் 
ஸ்ரீ ல.சு.கவைத் தோற்கடிக்கும் வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்தார். 
மஹிந்த ராஜபக்ஷ, அதே கட்சியின் கீழ் போட்டியிட்டுப் பிரதமராகும் நிலை அப்போது இருந்ததனால், அதைத் தடுப்பதற்காகவே, அவர் அப்போது, அவ்வாறு நடந்து கொண்டார்.   

அதேபோல், இம்முறை நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது, தமது அரசாங்கத்தின் பங்காளியான ஐ.தே.கவைத் தோற்கடிக்கும் வகையில் அவர் செயற்பட்டார். தமது தலைமையிலான ஸ்ரீ ல.சு.கவை பாதுகாப்பதே அவரது நோக்கமாகியது.  

இதன் எதிரொலியாகவே, தேர்தலின் பின்னர், ஆளும் இரு கட்சிகளும் தனி வழி செல்ல முயற்சித்தன. 
ஸ்ரீ ல.சு.க, மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான குழுவுடன் அதாவது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து, புதிய அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு முயற்சி செய்வதாக அறிவித்தது.   
ஐ.தே.க வெளியில் கூறாவிட்டாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது நம்பிக்கை வைத்து, தாம் தனியாக ஆட்சி அமைக்கப் போவதாகக் கூறியது. 

இறுதியில் இரண்டும் சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்த இரு கட்சிகளும், மீண்டும் தமது கூட்டாட்சியைத் தொடர்வதென அறிவித்தன.  

இப்போது நாட்டில், சிங்கள மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில், மஹிந்த ராஜபக்ஷவின் பக்கமே, அலை திரும்பியிருக்கிறது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின்படி, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள எட்டு மாவட்டங்களைத் தவிர்ந்த, நாட்டில் ஏனைய 17 மாவட்டங்களிலும் பொதுஜன பெரமுனயே பெரும்பான்மை வாக்குகளை பெற்றுள்ளது. அதாவது, மக்கள் இதேபோல் வாக்களித்தால் அடுத்து வரும் மாகாண சபைத் தேர்தல்களிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே உள்ள 17 மாவட்டங்களிலும், மஹிந்தவின் அணி வெற்றி பெறும் நிலை உருவாகியிருக்கிறது.   

அதுவும் நடந்தால், நடுவில் ஊசலாடிக் கொண்டு இருக்கும் வாக்காளர்கள், மென் மேலும் மஹிந்தவின் பக்கமே சாய்வதால், ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல்களிலும் மஹிந்தவின் குழுவை அசைக்க முடியாமல் போய்விடும்.   

அதைத் தடுப்பதே, தற்போது ஆளும் இரண்டு கட்சிகளுக்கும் முன் இருக்கும் பெரும் சவாலாக இருக்கிறது. இந்த இலக்கை, நோக்கமாகக் கொண்டே, அரசாங்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைச்சரவையில் மாற்றங்களைக் கொண்டு வந்தது.   

அப்போது, அமைச்சுப் பொறுப்புகளை மாற்றிக் கொடுக்கப்பட்டவர்கள் அனைவரும் (ஒருவரைத் தவிர) 
ஐ.தே.ககாரர்களே. ஸ்ரீ ல.சு.க அமைச்சர்களுக்கான அமைச்சு மாற்றங்கள், இரண்டு வாரங்களில் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஆனால், இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தைப் பார்க்கும்போது, இந்த மாற்றங்கள் மூலம், ஆளும் கட்சிகளுக்கு, மக்களின் ஆதரவை மீண்டும் பெற்றுக் கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுகிறது.   

ஏனெனில், 2015 ஆம் ஆண்டு, மக்கள் எந்த வாக்குறுதிகளை நம்பி இந்த இரண்டு ஆளும் கட்சிகளுக்கும் வாக்களித்தார்களோ, அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கம் தவறிவிட்டது. இந்த அமைச்சரவை மாற்றத்தினால் மக்களின் அதிருப்திக்குப் பரிகாரம் காணப்பட்டதாகத் தெரியவில்லை.   

கல்வி அறிவுள்ள மக்கள், அரசாங்கம் ஊழல் பேர்வழிகளைத் தண்டிக்கும் என எதிர்பார்த்தனர். ஏனைய பொது மக்கள், பொருளாதார ரீதியாகத் தமக்குச் சலுகைகள் வழங்கப்படும் என எதிர்பார்த்தார்கள்.   

ஐந்தாண்டுகளில், பத்து இலட்சம் தொழில் வாய்ப்புகளை உருவாக்குவோம் என்ற அரசாங்கத்தின் வாக்குறுதியின் காரணமாக, இளைஞர்கள் அரசாங்கத்தை ஆதரித்தனர். 

இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் எனத் தமிழ் மக்கள் நினைத்தனர். இறுதியில் மூன்றாண்டுகளாகியும் எதுவும் நடைபெறாமையால் மக்கள், குறிப்பாக ஐ.தே.கவைக் கைவிட்டனர்.   

தமிழ் மக்களும் தமது விரக்தியை வெளிக்காட்டியுள்ளதை வட மாகாணத் தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது தெளிவாகிறது. 

முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரையில், அரசியல் காரணங்களன்றி, ஒரு சில அரசியல்வாதிகள் மீதான தனிப்பட்ட வெறுப்பும் விருப்பமும்தான், அவர்களை வழிநடத்துகின்றனவா என்று கேள்வி எழுகிறது.   

இந்த நிலையில், அரசாங்கம் மேற்கொண்ட அமைச்சரவை மாற்றம், எவ்வகையிலும் வரப்போகும் மஹிந்த அலையைத் தடுப்பதற்கான பரிகாரமாகக் கொள்ள முடியாது.   

பொருளாதாரத்தை மேம்படுத்தி, மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்க்க, அரசாங்கம் ஒரு திட்டத்தை வகுக்கும் என்றும் கூறுவதற்கில்லை. அவ்வாறு வகுத்தாலும், அதை அமுல் செய்வதற்கு, அரசாங்கத்துக்கு மேலும் இரண்டு வருடங்கள் மட்டுமே இருக்கின்றன.  

ஊழல் தடுப்பு என்ற விடயத்தினால் அரசாங்கத்திடமிருந்து விலகிய படித்த மக்களை மீண்டும் வென்றெடுக்க, அரசாங்கத்துக்குப் பல தடைகள் இருக்கின்றன. முதலாவதாக, அரசாங்கத்தில் உள்ள பல, ஐ.தே.க தலைவர்கள் உண்மையிலேயே ஊழலுக்கு எதிரானவர்கள் அல்ல.   

அதனாலேயே முன்னைய அரசாங்கத்தின், தலைவர்களுக்கு எதிரான பல விசாரணைகளும் வழக்குகளும் இழுத்தடிக்கப்பட்டன. போதாக்குறைக்கு, இலங்கை வரலாற்றில் மிகப் பாரிய ஊழலொன்றான, பிணைமுறி மோசடியில் ஈடுபட்டவர்களின் பக்கமே அவர்கள் இருக்கின்றனர்.   

அதேவேளை, அரசாங்கத்திலுள்ள ஜனாதிபதி தவிர்ந்த ஏனைய 
ஸ்ரீ ல.சு. ககாரர்கள் தாமும் அமைச்சர்களாக இருந்த முன்னைய அரசாங்கத்தின் தலைவர்களைத் தண்டிப்பதை விரும்பவில்லை. 

தமது அந்தத் தனிப்பட்ட எதிர்ப்புக்குப் புறம்பாக, அவ்வாறான விசாரணைகளாலும் வழக்குகளாலும் தாம், ஸ்ரீ ல.சு.க வாக்காளரைப் பகைத்துக் கொள்வதாகவும் அவர்கள் நினைக்கின்றனர்.   

அதேவேளை, மஹிந்தவின் ஆட்சியின் போது, பாரிய ஊழல்கள் சம்பந்தமாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு இலக்கானவர்களும் ஆளும் கட்சியில் இருக்கின்றனர்.   

எனவே, ஊழல் விடயத்தில் அரசாங்கம் இனிமேலும் உருப்படியான எதையும் செய்யும் என எதிர்ப்பார்க்க முடியாது. மறுபுறத்தில், அரசியல் அலை, மஹிந்தவின் பக்கம் அடிக்கும் போது, முன்னைய அரசாங்கத்தின் ஊழல்பேர்வழிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், அரசாங்கத்தையே மேலும் பாதிக்கக்கூடும்.   

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள், மற்றொரு முக்கிய பிரச்சினையையும் எழுப்புகிறது. அதாவது முதன் முறையாக, இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது, நடைமுறைப்படுத்திய கலப்பு தேர்தல் முறையை, நாடாளுமன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தல்களுக்கும், நாடாளுமன்றத் தேர்தலுக்கும் அறிமுகப்படுத்த வேண்டுமா என்பதே அந்தக் கேள்வியாகும்.  

 2003 ஆம் ஆண்டு தான், முதல் முறையாகக் கலப்புத் தேர்தல் முறை தொடர்பாக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றின் மூலம் ஆராயப்படடது. 

அப்போது அது, சகல தேர்தல்களுக்கும் பொதுவான தேர்தல் முறையாக வேண்டும் என்பதே, சகல அரசியல் கட்சிகளினதும் நோக்கமாகியது.  

ஏற்கெனவே, மூன்று மாகாண சபைகளின் பதவிக் காலம் முடிவடைந்துள்ளது. கிழக்கு, வட மத்திய, சப்ரகமுவ ஆகிய மாகாண சபைகளின் பதவிக் காலம், கடந்த ஒக்டோபர் மாதம் முடிவடைந்தது.   

ஆனால், கடந்த செப்டெம்பர் மாதம், அரசாங்கம் சர்ச்சைக்குரிய முறையில் நிறைவேற்றிக் கொண்ட, மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தின் மூலம், அரசாங்கம் அம்மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை ஒத்திப் போட்டது.  

கடந்த செப்டம்பர் மாதம், ஒரே வாரத்தில் அரசாங்கம் மாகாண சபைகள் தொடர்பான இரண்டு சட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள முயற்சித்து. 

ஒன்று, சகல மாகாண சபைகளுக்குமான தேர்தல்களையும் ஒரேநாளில் நடத்துவதற்கான 20 ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலமாகும்.   

மற்றையது, மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்களில், 30 சதவீதம் பெண் வேட்பாளர்கள் இருப்பதையும் அத் தேர்தல்களையும் கலப்பு தேர்தல் முறையின் கீழ் நடத்துவதையும் மாகாண சபைத் தேர்தல்கள் திருத்த சட்ட மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.    

அவற்றில் 20 ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்ட மூலம், அரசமைப்புக்கு முரணானது என உயர் நீதிமன்றம் முடிவு செய்ததனால், அதன் சில வாசகங்களைத் திருத்தி, மீண்டும் சமர்ப்பிக்க வேண்டியதாயிற்று. ஆனால், அரசாங்கம் அவ்வாறு செய்யாது, முழுச் சட்ட மூலத்தையும் கைவிட்டுவிட்டது.   

30 சதவீத பெண் வேட்பாளர்கள் தொடர்பாகவும் மாகாண சபைகள் விடயத்திலும் கலப்புத் தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவது தொடர்பாகவுமான மற்றைய சட்டமூலம், நிறைவேற்றப்பட்ட சர்ச்சைகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது.  

அதன்படியே, மேற்படி மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன. அந்தச் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்ட போதிலும், அது நிறைவேற்றப்பட்ட முறை, தொடர்பாக நீதி மன்றத்தில் வழக்கொன்ற தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது, கலப்புத் தேர்தல் முறையும் அரசாங்கத்தின் நிலையை மேலும் மோசமாக எடுத்துக் காட்டியது. ஆளும் இரண்டு கட்சிகளும் அதாவது ஐ.தே.கவும் ஸ்ரீ ல.சு.கவும் பொதுஜன பெரமுனவைப் பார்க்கிலும் நாடு தழுவிய ரீதியில், வாக்குகளையும் ஆசனங்களையும் பெற்ற போதிலும், அவ்விரண்டு கட்சிகளும் நாட்டில் மொத்தம் 51 சபைகளிலேயே கூடுதல் ஆசனங்களைப் பெற்றுள்ளன. 

ஆனால், பொதுஜன பெரமுன, 239 சபைகளில் ஆகக் கூடுதலான ஆசனங்களைப் பெற்று முன்னணியில் உள்ளது.  

இதே கலப்புத் தேர்தல் முறை மாகாண சபைகள் விடயத்திலும் அமுலாக்கப்பட்டால், அவற்றிலும் இந்த நிலை ஏற்படலாம். எனவே, அரசாங்கம் கலப்பு முறையில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தாமல் இருக்க விரும்பலாம். ஆனால், அதற்கான சட்டம் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ளது.  

இந்தப் புதிய தேர்தல் முறை பொதுஜன பெரமுனவுக்குப் பெரும் பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது. அக்கட்சி தேர்தல் நடைபெற்ற 340 சபைகளில் 239 சபைகளில் முன்னணியில் இருந்த போதிலும், 150க்கும் மேற்பட்ட சபைகளில், தனியாக ஆட்சியை நிறுவ முடியாமல் இருக்கிறது. எனவே, அக்கட்சியும் இந்தத் தேர்தல் முறையை விரும்புவதாகத் தெரியவில்லை.  

கடந்த ஞாயிற்றுக்கிழமை, கண்டியில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்தத் தேர்தல் முறை மாற்றப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார். 

வெற்றி பெற்றாலும், ஆட்சி அமைக்க முடியாத தேர்தல் முறையொன்று என அவர் இந்தத் தேர்தல் முறையை வர்ணித்துள்ளார். 

இந்த நிலைப்பாடு அரசாங்கத்துக்கு ஆறுதலாக அமையலாம். ஆனால், பழைய தேர்தல் முறையினால் மட்டும், அரசாங்கம் மஹிந்த அலையைத் தடுக்கவோ, பிழைத்துக் கொள்ளவோ முடியாது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X