2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மஹிந்த இருந்த இடத்திலேயே; ​​ஐ.தே.க தான் சரிந்தது

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2018 பெப்ரவரி 14 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சனிக்கிழமை, நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி பெற்ற வெற்றி, மாபெரும் வெற்றியாகக் கருதலாமா?   

தேர்தல் நடைபெற்ற 340 உள்ளூராட்சி சபைகளில், பொதுஜன பெரமுன 239 சபைகளில் பெரும்பாலான ஆசனங்களைக் கைப்பற்றி இருக்கிறது. ஆனால், அவற்றிலும் பெரும்பாலானவை, கடந்த முறை அவற்றின் பதவிக் காலம் முடியும் வரை மஹிந்தவின் தலைமையிலேயே இயங்கி வந்தன.  

 அந்த வகையில், மஹிந்த, ஏறத்தாழ தம்மிடம் இருந்ததையே கைப்பற்றிக் கொண்டு இருக்கிறார். எனவே, இது மா பெரும் வெற்றியாகக் கருதலாமா என்ற கேள்வி எழுகிறது.  

வழமையாக, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் போன்றவற்றுக்கான குட்டித் தேர்தல்களின்போது, மத்திய அரசாங்கத்தின் ஆளும் கட்சியே அவற்றின் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வது வழக்கம்.   

ஆனால், மத்திய அரசாங்கத்தில், அதிகாரத்தில் உள்ள கட்சி பெற்றதை விட, சுமார் ஆறு மடங்கு அதிகமான, உள்ளூராட்சி மன்றங்களை வென்றதால், பொதுஜன முன்னணி பெற்றது மாபெரும் வெற்றி எனவும் கொள்ளலாம்.  

புதியதோர் கட்சி ஆரம்பிக்கப்பட்டு, ஒரு வருடமும் மூன்று மாதங்களில் இவ்வாறானதோர் வெற்றியைப் பெற்றதனால், இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாகும் எனவும் சிலர் கூறுகின்றனர்.   

உண்மையில், பொதுஜன முன்னணி என்ற பெயர்தான் புதிதாக இருக்கிறது. அந்தப் பெயரில் இயங்குபவர்கள் புதியவர்களல்லர்; அவர்கள் 1951 ஆம் ஆண்டிலிருந்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்ற பெயரில் இயங்கி வந்தவர்களே.   

2014 ஆம் ஆண்டு, மைத்திரிபால சிறிசேன தலைமையில் சிறியதோர் குழுவினர் அக்கட்சியிலிருந்து பிரிந்து சென்றனர். அவர்கள்தான், உண்மையிலேயே புதிதாகத் தனிக் கட்சியாக இயங்கி வருகின்றனர்.   

2015 ஆண்டு, மஹிந்த தலைமையிலான குழுவினர் மைத்திரிபாலவுக்கு ஸ்ரீ ல.சு.கவின் தலைமைப் பொறுப்பை வழங்கிய போதிலும், அதன் பின்னரும், இரு சாராரும் தனித் தனியாகவே இயங்கி வந்தனர்.  
 பின்னர், மஹிந்த தலைமையிலான குழுவினர், ஸ்ரீ ல.சு.க என்ற பெயரை மைத்திபால குழுவினரிடம் விட்டுவிட்டு, பொதுஜன முன்னணி என்ற பெயரைத் தமக்குச் சூட்டிக் கொண்டனர்.   

எனவே, ஒன்றரை வருடங்களில் அவர்கள் பெரிய சாதனையைப் படைத்து விட்டார்களே என்று ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை.  

“இம்முறை, பொதுஜன முன்னணி பெற்ற வெற்றி, இலங்கை வரலாற்றில் மிகப் பெரும் வெற்றி” என பெதுஜன முன்னணியின், பெயரளவிலான தலைவர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கூறியிருக்கிறார்.  

இம்முறை, அம்முன்னணி 340 சபைகளில் சுமார் 240 சபைகளில் ஆகக் கூடுதலான ஆசனங்களை கைப்பற்றியிருக்கிறது. ஆயினும், அவற்றில் சிலவற்றில் ஏனைய கட்சிகள் பெற்ற மொத்த ஆசனங்களின் எண்ணிக்கை, பொதுஜன முன்னணி பெற்ற ஆசனங்களை விட அதிகமாக இருக்கிறது. அந்த விடயத்தை விட்டு விட்டாலும் 240 சபைகளைத் தான், அம் முன்னணி கைப்பற்றியிருக்கிறது.  

1956ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது, ஸ்ரீ ல.சு.க அதன் ஸ்தாபகத் தலைவர் எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்கவின் தலைமையில், மக்கள் ஐக்கிய முன்னணி என்ற கூட்டமைப்பை நிறுவி, வெற்றி பெற்றது.   

அப்போது நாடாளுமன்றத்தில், 101 ஆசனங்களில் எட்டு ஆசனங்களை மட்டுமே ஐக்கிய தேசியக் கட்சி வென்றது.   

ஆறு நியமன எம்.பிக்கள் அக்காலத்தில் இருந்ததனால், ஸ்ரீ ல.சு.க 87 ஆசனங்களை வென்றிருந்தது. அன்று, ஸ்ரீ ல.சு.க தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி, 101 ஆசனங்களில் 87 ஆசனங்களை வென்றமை, இம்முறை பொதுஜன முன்னணி பெற்ற வெற்றியை விட குறைந்த வெற்றியா?  

 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், தனித்துப் போட்டியிட்டு, நாடாளுமன்றத்தில் 168 ஆசனங்களில் 140 ஆசனங்களை ​ஐ.தே.க வென்றது. ஸ்ரீ ல.சு.க எட்டு ஆசனங்களை மட்டுமே பெற்றது.   

விகிதாசாரமாகப் பார்த்தால், ​​ஐ.தே.க அத்தேர்தலின் போது, ஆறில் ஐந்து பெரும்பான்மையைப் பெற்றது. அதுவே, இலங்கை வரலாற்றில் மிகவும் அதிக ஆசன வித்தியாசத்திலும் வாக்கு வித்தியாசத்திலும் விகிதாசாரத்திலும் ஒரு கட்சி பெற்ற வெற்றியாகும்.   

1994 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி 105 ஆசனங்களை வென்றது. பின்னர், முஸ்லிம் காங்கிரஸினதும் மலையக மக்கள் முன்னணியினதும் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது.   

அந்தத் தேர்தல், விகிதாசார முறையில் நடைபெற்றாலும், தொகுதி வாரியாகப் பார்த்தால், அந்தத் தேர்தலில், நாட்டில் 160 தேர்தல் தொகுதிகளில், ​​ மஹியங்கனை தொகுதியில் மட்டுமே, ஐ.தே.கவெற்றி பெற்றது.  

எனவே, இதுதான் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி எனக் பேராசிரியர் பீரிஸ் கூறுவது, சரியான வாதமல்ல.   
ஆயினும், சிங்கள மக்களில் பெரும்பாலானவர்கள் இன்னமும் அரசியல் தலைவர்களில் மஹிந்த ராஜபக்ஷவையே அதிகமாக விரும்புகிறார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.   

சிங்களக் கிராமங்களில் மஹிந்த இன்னமும் ஏறத்தாழ வணங்கப்படுகிறார். இந்த, உள்ளூராட்சி சபைத் தேர்தல்களும் அதையே நிரூபிக்கின்றன. அதை எவரும் மறுக்க முற்படுவாரேயானால், அது மடமையாகும்.   

​​ஐ.தே.க, இம்முறை பொதுஜன முன்னணிக்குக் கடும் சவாலாக அமையும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட போதிலும், நகரப்புறங்களில் மட்டுமே அந்த நிலைமையைக் காணக்கூடியதாக இருந்தது.   

மொத்தமாக ​​ஐ.தே.க 41 சபைகளையே வென்றுள்ளது. அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தலைமையிலான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர் ரிஷாட் பதியுத்தீனின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் மனோ கணேசனின் தலைமையிலான தமிழ் முற்போக்கு முன்னணி ஆகியவை ​​ஐ.தே.கவுடன் இணைந்து ​​ஐ.தே.கவின் யானைச் சின்னத்தின் கீழ் போட்டியிட்டதன் காரணமாகவும் ​​ஐ.தே.க சில சபைகளைக் கைப்பற்றியிருக்கிறது.   

இல்லாவிட்டால், ​​ஐ.தே.க வெற்றி பெற்ற சபைகளின் எண்ணிக்கை மேலும் குறைந்திருக்கும்.  
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஸ்ரீ ல.சு.கவின் நிலைமையைப் பற்றி, ஆச்சரியப்படத் தேவையில்லை. அவர் 2014 ஆம் ஆண்டு, மஹிந்தவின் அரசாங்கத்தை விட்டு விலகி, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போது, அவரோடு சில எம்.பிக்கள், அரசாங்கத்திலிருந்து வெளியேறினர். ஆனால், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் வெளியேறவில்லை.   

அரசாங்கத்தில் இருந்து விலகிய உடன், அவர் ஸ்ரீ ல.சு.கவின் பிரதான போட்டியாளரான ​​
ஐ.தே.கவுடன் இணைந்ததன் காரணமாக, அவரோடு கட்சி ஆதரவாளர்கள் குறிப்பிடத்தக்க அளவில் சேரவில்லை. எனவே, தனிப்பட்ட முறையில் அவரது பலம் இவ்வளவு தான். 

பஸ்களில் ஆட்களை அழைத்து வந்து, நடத்தப்பட்ட அவரது மே தினக் கூட்டங்கள், மாநாடுகள் போன்றவற்றில், மக்கள் கூட்டம் இருந்த போதிலும், பொதுவாக ஸ்ரீ ல.சு.க வாக்காளர்களில் மிகச் சிலரே அவருடன் இணைந்திருந்தனர்.   

அரசியல் கட்சிகள் இடையிலான பல சமநிலை, 2015 ஆண்டில் இருந்தது போலவே, இன்னமும் மாறாமல் இருக்கிறது என்றும் சில அரசியல் விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.   

அன்று, மஹிந்தவுக்கு 58 இலட்சம் மக்கள் வாக்களித்து இருந்தனர். மைத்திரிபால சிறிசேனவுக்கு 62 இலட்சம் மக்கள் வாக்களித்து இருந்தனர். இப்போது மஹிந்தவின் ஆதரவாளர்களுக்கு சுமார் 50 இலட்சம் மக்கள் வாக்களித்து இருக்கின்றனர்.  

 மஹிந்தவுக்கு எதிரான கட்சிகளுக்கு 61 இலட்சம் மக்கள் வாக்களித்து இருக்கின்றனர். எனவே, அன்றைய நிலை இன்னமும் மாறவில்லை என அவர்கள் வாதிடுகின்றனர்.  

ஆனால், கடந்த பொதுத் தேர்தலோடு ஒப்பிட்டுப் பார்த்தால், மஹிந்த ஆதரவாளர்கள் சற்று முன்னேறியும் ​​ஐ.தே.க வெகுவாகப் பின்னடைந்தும் இருப்பதை அவதானிக்கலாம்.   

அந்தப் பொதுத் தேர்தலின் போது, மஹிந்த ஆதரவாளர்கள் 47 இலட்சம் வாக்குகளைப் பெற்றனர். அவர்களது வாக்குகள் இம்முறை 49 இலட்சமாக அதிகரித்து இருக்கிறது. ஆனால், அதைவிட, அன்று 51 இலட்சம் வாக்குகளை பெற்ற ​​ஐ.தே.க இம்முறை, 36 இலட்சம் வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.   

அதாவது, மஹிந்தவின் வாக்கு வங்கி அதிகரிக்கவில்லை. ஆனால், ​​ஐ.தே.கவின் வாக்குகள் குறைந்தமையே இந்தத் தேர்தல் முடிவுக்கான காரணமாகும்.   

அதாவது, ​​ஐ.தே.கவுக்கு அதன் வாக்காளர்களில் ஒரு சாரார் வாக்களிக்கவில்லை. அவர்கள் மஹிந்தவின் ஆதரவாளர்களுக்கு ஆதரவளித்ததாகவும் தெரியவில்லை.   

முதன் முறையாக, மைத்திரியின் ஆதரவாளர்கள் தனித்துப் போட்டியிட்டு இருக்கிறார்கள். அவர்கள் தமது முதலாவது தேர்தலின் போது, மொத்தம் 15 இலட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளமை சாதாரண விடயமல்ல.

அவருக்கு, போதியளவில் ஆசனங்கள் கிடைக்காததால் அவரது, 15 இலட்சம் வாக்குகள் எவரது கண்ணிலும் படுவதில்லை.  

மஹிந்தவின் ஆதரவாளர்கள் 44 சதவீத வாக்குகளையே பெற்றுள்ளனர். இதில் பெரும்பாலான வாக்குகள் மஹிந்தவுக்கு வழங்குகிறோம் என நினைத்து, அவரது ஆதரவாளர்கள் வழங்கிய வாக்குகளாகும்.   

சட்டப்படி, மஹிந்தவுக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது. சட்டத்தில் இடமிருந்து, மஹிந்தவே அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டாலும் தற்போதைய நிலையில், அவருக்கு வெற்றி பெறுவதற்கு தேவையான 50 சதவீதமும் ஒரு வாக்கு என்ற இலக்கை அடைய முடியாமல் போய்விடும். கடந்த முறை போல், மஹிந்த விரோதிகள் ஒன்றிணைந்தால், அவர்கள் 60 சதவீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெற முடியும். இதுதான் மலை போல் தெரியும் மஹிந்தவின், இம்முறை வெற்றியின் இலட்சணமாகும்.   

அதேபோல், அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் சிறுபான்மை மக்களை மறந்து, பிரதான கட்சிகள் நடந்து கொள்ள முடியாது என்பதும் இந்தத் தேர்தல், மீண்டும் வழங்கும் ஒரு செய்தியாகும்.   

அதேவேளை, மஹிந்தவுக்கோ அவரது பெயரில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கோ இன்னமும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வாக்களிக்கத் தயாராக இல்லை என்பதும் தெளிவாகிறது.   

தமிழரசுக் கட்சிதான் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களின் கட்சி என்பதை இந்தத் தேர்தலும் நிரூபித்த போதிலும், அக்கட்சிக்கு எதேச்சாதிகாரமாக முடிவுகளை எடுக்க முடியாது என்பதையும் இந்தத் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டும் உண்மையாகும்.   

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் மீண்டும் தலைதூக்கியமையே, அதற்குக் காரணமாகும். அதேவேளை, ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பை விட, தமிழ்க் காங்கிரஸ் முன்னணியில் இருப்பதும் கவனத்தில் கொள்ளத் தக்க விடயமாகும்.   

தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியலில் பலமான எதிர்க்கட்சியொன்று உருவாவதில் நன்மையும் இருக்கிறது; தீமையும் இருக்கிறது. அச்சமூகங்களின் பிரதான கட்சி எதேச்சாதிகாரமாக நடந்து கொள்வதை அது தடுக்கிறது. சமூகத்தைக் காட்டி அரசாங்கங்களிடம் பட்டம் பதவிகளைப் பெறுவதற்கு, இந்த நிலைமை தடையாகவும் அமையலாம்.   

அதேவேளை, போட்டியின் காரணமாக மக்களைத் தம்பக்கம் வளைத்துக் கொள்வதற்காக அக்கட்சிகள், தீவிரவாதப் போக்கை மென்மேலும் கடைபிடிக்கும் அபாயமும் அதனால் ஏற்படுகிறது.   

இது நல்லிணக்கத்துக்கு பாதகமான நிலைமையாகும். முஸ்லிம் கட்சிகளைப் பொறுத்தவரையில், அரசாங்கங்களின் நற்பெயரைப் பெற்றுக் கொள்வதற்காக, அக்கட்சிகள் போட்டிபோட்டுக் கொண்டு, அரசாங்கங்களுக்கு வால்பிடிக்கும் நிலைமையையும் அது தோற்றுவிக்கலாம்.   

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மஹிந்தவின் ஆதரவாளர்களுடன் இணைந்து செயற்படப் போவதாக கூறப்படுகிறது. தற்போதைக்கு, இதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. ஆனால், எதிர் வரும் இரண்டு ஆண்டுகளில், இ.தொ.கா, மலையக மக்களின் மனதை, மஹிந்த அணியின் பக்கமாகத் திருப்பிவிட்டால், அது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளுக்கு முரணாக அமையலாம்.   

அரசாங்கம், ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சர் பதவியொன்றை வழங்கியிருந்தால், இ.தொ.கா, பொதுஜன முன்னணியுடன் இணையப் போவதில்லை.

ஏனெனில், பொதுஜன முன்னணியுடன் இணைவதற்கு எந்தவித கொள்கையும் காரணம் அல்ல. ஆனால், அவ்வாறு அமைச்சர் பதவி வழங்கினால், இந்த அரசாங்கத்தை ஆட்சி பீடத்தில் அமர்த்துவதில் பாடுபட்ட அமைச்சர் திகாம்பரம் போன்றோர்கள், அதனை விரும்ப மாட்டார்கள்.   

தேர்தல் மேடைகளில் பேசப்பட்ட கொள்கைகளை, தத்துவங்களை காற்றில் பறக்கவிட்டு, பல அரசியல்வாதிகள் எதிர் வரும் நாட்களில் முடிவுகளை எடுக்கலாம்; கூட்டணிகளை அமைக்கலாம். அது வரை அரசியல் நிலைமை நிச்சயமற்றதாகவே இருக்கும்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .