2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மாடறுப்பு விவகாரம்: ஜீவகாருண்யம்?

மொஹமட் பாதுஷா   / 2018 ஓகஸ்ட் 10 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒவ்வொரு வருடத்திலும் ஒரு குறிப்பிட்ட பருவகாலத்தில் மாடறுப்பு தொடர்பான பிரச்சினை பெரும் பேசுபொருளாகி விடுகின்றது.  

குறிப்பாக, முஸ்லிம்கள் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாட எத்தனிக்கின்ற காலப்பகுதியில், மாடுகள் சார்ந்த அரசியலொன்று சூடு பிடிக்கத் தொடங்கி விடுவதைக் காண்கின்றோம்.   

மாடறுப்பு தொடர்பாக, முஸ்லிம்களின் பக்கத்தில் சில தவறுகள் இருப்பதை மறுப்பதற்கில்லை. என்றாலும், மாடறுப்பு தொடர்பாகக் குரல் எழுப்புகின்ற செயற்பாட்டாளர்களும் அமைப்புகளும் வேறு ஒரு நிகழ்ச்சிநிரலின் ஊடாகத் தமக்கு அளிக்கப்பட்ட வேலையைச் செய்வதாகவே எண்ணத் தோன்றுகின்றது.   

இலங்கையில் மாடுகளுக்காகவும் நாய் போன்ற ஏனைய மிருகங்களுக்காகவும் குரல்கொடுப்பவர்கள், உயரிய உயிரினமான மனிதர்கள் தொடர்பான மனிதாபிமானத்தில், எவ்விடத்தில் நிற்கின்றார்கள் என்ற கேள்வியே, பல சந்தேகங்களைக் கொண்டு வருகின்றது.   

பொதுபல சேனா மட்டுமன்றி, வேறு சில பௌத்த, இந்து அமைப்புகளும் முஸ்லிம்கள் மாடறுப்பது தொடர்பாக, அவ்வப்போது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.   

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், மறவன்புலவு சச்சிதானந்தம் என்பவரின் பங்குபற்றுதலுடனும், சில அரசியல்வாதிகளின் ஆசிர்வாதத்தோடும் மாடறுப்புக்கு எதிரான போராட்டங்கள், வடக்கில் முன்னெடுக்கப்பட்டன.   

இப்போது, ஹஜ்ஜுப் பெருநாள் நெருங்கிவரும் நிலையில், மீண்டும் ‘மாட்டு அரசியல்’ ஒன்று, உயிர்ப்படைந்திருக்கின்றது எனலாம்.   

“முஸ்லிம்கள் தமது சமயக் கடமைகளுக்காக, மாடுகளை அறுக்கும் போது, நாட்டில் அமுலில் உள்ள சட்டத்தை மீறக் கூடாது; வீடுகளில் மாடுகளைப் பலியிடாது, அரசாங்கம் அனுமதித்துள்ள மடுவங்களிலேயே அதை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு நடைபெறாவிட்டால், சிங்கள ராவய உட்பட்ட அமைப்புகள் போராட்டம் நடத்தும்” என்று, அவ்வமைப்பின் செயலாளர் மாகல்கந்த சுதத்த தேரர் தெரிவித்திருக்கின்றார். இது குறித்து விரிவாகப் பேச வேண்டியிருக்கின்றது.   

இலங்கையில் மாடுகள் அறுப்பதற்காக, ஒரு சட்ட விதிமுறை இருக்கின்றது என்பதும், அதை முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும் என்பதும் நியாயமான கோரிக்கையே.   

முஸ்லிம்கள் தமது கடமையை நிறைவேற்றுகின்ற முயற்சியில், சட்டத்தைப் பொருட்படுத்தாமல் நடந்து கொள்வதுமுண்டு என்ற அடிப்படையிலும், ஒரு பல்லின நாட்டில், அரபு நாடுகள் போல, நாம் செயற்பட முடியாது என்ற அடிப்படையிலும், மாடுகளின் தரம், மாடுகளைக் கொண்டு வருதல், அவற்றை உரிய இடத்தில், சரியான முறையில் அறுத்தல் போன்ற விடயங்களில், கவனம் செலுத்த வேண்டியிருக்கின்றது.   

மாடறுப்பு தொடர்பாக, நடைமுறையில் இருக்கின்ற சட்டங்களை, சமயக் காரணங்களுக்காக மீறுவது, இஸ்லாமிய மதம் பற்றிய தவறான புரிதலை, ஏனைய சமூகங்களுக்கு ஏற்படுத்தும் என்பதும் கவனிப்புக்குரியது. அந்த வகையில், மேற்படி பௌத்த அமைப்பின் கருத்தைக் கருத்தில் எடுக்கத்தான் வேண்டும்.   

சில மாதங்களுக்கு முன்னர், சச்சிதானந்தம் என்பவர் தலைமையிலான குழுவினர், வடபுலத்தில் மாடறுப்புக்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். “சைவர்களும் பௌத்தர்களும் வாழும் நாட்டில், மாடுகளை ஏன் அறுக்க வேண்டும்” என்ற பதாகைகளோடு இடம்பெற்ற கவனயீர்ப்பு நடவடிக்கைகள், இரண்டு தினங்களுக்குள் முடிவுக்கு வந்துவிட்டன. சச்சிதானந்தம் என்ற செயற்பாட்டாளரையும் பிறகு களத்தில் காணக் கிடைக்கவில்லை.   

இதுபோல, கடந்த பல வருடங்களாக, ஒவ்வொரு காலகட்டத்திலும் பொது பலசேனா போன்ற அமைப்புகள், முஸ்லிம்கள் மாடுகளை அறுப்பதைத் தடை செய்யுமாறு கோரி வருவதுடன், சிலநேரங்களில் இறைச்சிக் கடைகளுக்கும் சென்று பார்வையிட்டிருந்தமை நினைவிருக்கும்.  

மாடுகளை, முஸ்லிம்கள் இன்று நேற்று அறுக்கத் தொடங்கவில்லை. பல நூறு வருடங்களாக மேற்கொண்டு வருகின்றனர். மாடறுப்புத் தொடர்பான சட்டமும் நீண்டகாலமாக நடைமுறையில் உள்ளது.   

அத்துடன், இலங்கையில் மாடுகளை அறுப்பவர்களும் உண்பவர்களும் பெரும்பான்மையாக முஸ்லிம்கள் என்றாலும், முஸ்லிம்கள் மட்டுமே மாடுகளை உண்பதில்லை. மாறாக, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சிங்களவர்கள் (பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள்), தமிழர்கள் (இந்துக்கள்,மற்றுமுள்ள மத நம்பிக்கையாளர்கள்) போன்ற பிரிவினரும் மாட்டிறைச்சியை அவ்வப்போது உண்கின்றனர்.   

அதேபோல், மாடுகளைக் கொள்வனவு செய்வதும் அறுப்பதும், முஸ்லிம்களாக இருக்கின்ற போதிலும் கூட, மாடு வளர்ப்பவர்களில் பெரும்பாலானவர்கள் சிங்களவர்கள் என்பதும், அதற்கடுத்த இடம் தமிழர்களுக்கு உள்ளது என்பதும் பலருக்குத் தெரியாத உண்மையாகும்.   

குறிப்பாக, இலங்கையில் சிங்களப் பண்ணையாளர்களே வடமத்திய மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்தின் மேற்குப் புறமாகவும் தெற்கு உள்ளிட்ட வேறு சில இடங்களிலும் பெரிய மாட்டுப் பண்ணைகளை நடாத்தி வருகின்றனர். அவர்களே, முஸ்லிம்களுக்கு மாடுகளை விற்பனை செய்கின்றனர்.  

எனவே, இலங்கையில் மாடறுப்பு, தடை செய்யப்படுமாயின் அல்லது முஸ்லிம்கள் ஏதாவது ஒரு காரணத்துக்காக மாட்டிறைச்சி சாப்பிடுவதை நிறுத்த, கணிசமாகக் குறைத்துக் கொள்ள முடிவெடுப்பார்களாயின், அதனால் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படப் போவது சிங்கள, தமிழ் பண்ணையாளர்களே என்பதை, யாரும் மறந்து விடக் கூடாது.   

அத்துடன், மாட்டிறைச்சிக் கடைகளில் இருந்து கிடைக்கின்ற வருமானம் இல்லாது போவதால், அரச வருமானமும் குறிப்பிடத்தக்க அளவுக்கு வீழ்ச்சியடையும்.   

மாடறுப்புத் தடை, அமுலுக்கு வருவது சாத்தியமில்லை என்றாலும், அதையும் தாண்டி ஒரு தடை அல்லது இறுக்கமான கட்டுப்பாடு, நடைமுறைப்படுத்தப்படுமாக இருந்தால், சிங்கள சமூகத்தைச் சேர்ந்த மாடு வளர்ப்பாளர்கள், இடைத் தரகர்களுக்கு, வருடாந்தம் கிடைக்கின்ற மில்லியன் கணக்கான ரூபாய் வருமானம் இழக்கப்படுவது மட்டுமன்றி, இலட்சக்கணக்கான மாடுகள், சரியான பராமரிப்பு இன்றியும் இடவசதியின்றியும் வீதிகளில் உலாவித் திரியும்.   

குறிப்பாக, அறுப்பதற்காக வளர்க்கப்படும் மாடுகளை, முஸ்லிம்கள் கொள்வனவு செய்து, உணவுக்காகப் பயன்படுத்தாது விட்டால், தண்ணீர்த் தட்டுப்பாடு, புல்லுக்கான கேள்வி அதிகரித்தல், மாட்டின் விலை வீழ்ச்சி போன்ற சிக்கலான நிலைகள் ஏற்படுவதுடன், எதிர்காலத்தில் இந்நிலைமையின் பக்கவிளைவாக, மாட்டினம் அழிவடையவும் வாய்ப்புகளும் உள்ளதாகக் கூறுப்படுகின்றது.   

அதேநேரம், மாடறுப்புத் தடையை அமுல்படுத்தி விட்டு, வெளிநாட்டில் இருந்து இறைச்சியை இறக்குமதி செய்து தருவதாக, ஒரு கதை உலாவுகின்றது. இப்படியான திட்டமொன்று உண்மையில் இருக்குமாயின், அதன்போது இறைச்சியை இறக்குமதி செய்யும் ‘கோட்டா’, முக்கிய புள்ளி ஒருவருக்கே கிடைக்கும். இவ்வாறான கடந்தகாலத் திட்டங்கள் பலவற்றின் உள்ளரங்கமும், அதுவாகவே இருந்திருக்கின்றது.   

அவ்வாறு இறக்குமதி செய்யப்படுமாக இருந்தால், அந்த இறைச்சியை முஸ்லிம்கள் கொள்வனவு செய்ய மாட்டார்கள் என்பது ஒருபுறமிருக்க, உள்நாட்டில் ‘மாடறுப்பது பாவம்’ என்று சொல்பவர்கள், கண்ணுக்குத் தெரியாத இடத்தில், எந்த அடிப்படையில் மாடுகளை அறுத்து, நமக்கு இறைச்சியாக வந்தால், பாவம் இல்லை என்றா நினைக்கின்றார்கள் என்ற கேள்விக்கு, முதலில் விடை தர வேண்டும்.   

முஸ்லிம்கள், உணவுப் பழக்க வழக்க ரீதியாகவும் மருத்துவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையிலும், மாட்டிறைச்சி சாப்பிடுவதைக் கட்டுப்படுத்த வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது. அதேபோல், நாட்டின் பொதுவான சட்டத்துக்கு மதிப்பளித்தும் சிங்கள, தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டும், அன்றாட மாட்டிறைச்சி வியாபாரத்தையும் உழ்ஹிய்யா போன்ற சமயக் கடமைகளுக்கான மாடறுப்பையும் மேற்கொள்ள வேண்டும்.   

ஆனால், இன்று புற்றீசல்கள் போல் கிளம்பியிருக்கும் மாடறுப்புக்கு எதிரான பிரசாரக்காரர்களும் அமைப்புகளும் நாட்டில் வேறு பல சட்ட விரோத நடவடிக்கைகள், மனிதாபிமானத்துக்கு எதிரான நடவடிக்கைகள் நடந்த, நடந்து கொண்டிருக்கின்ற வேளைகளில், எங்கு உறங்கிக் கொண்டிருந்தார்கள் என்று கேட்காமல் விட முடியாது.   

இலங்கையில் தொடர்ச்சியாகக் கலவரங்கள் இடம்பெற்று வருகின்றன. முப்பது வருடங்கள் ஆயுத மோதல் இடம்பெற்றது. 1915, 2013, 2017 கலவரங்களில், முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுடன் அவர்களது சொத்துகளும் அழிக்கப்பட்டன.   

 ஜூலைக் கலவரத்தில் தமிழர்களின் சொத்துகளும் உயிர்களும் எரியூட்டப்பட்டன. யுத்த காலத்தில், தமிழ் மக்கள் பெருமளவில் உயிர் இழப்புகளைச் சந்தித்தனர். முள்ளிவாய்க்காலில் யுத்தத்தின் பெயரால், புலிகள் கொல்லப்பட்டதற்கு மேலதிகமாக அப்பாவிகளும் கொல்லப்பட்டதான குற்றச்சாட்டு ஐ.நா வரை சென்றுள்ளது.   

அதுமட்டுமன்றி, வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர்; கிழக்கில் பள்ளிவாசல்களுக்குள், பாதையில், வயல்நிலத்தில், படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. மேலும் பிக்குகள், அப்பாவிச் சிங்கள மக்கள், குண்டுத் தாக்குதல்களில் அநியாயமாக உயிர்ப்பலி எடுக்கப்பட்டனர். புத்திஜீவிகள் எல்லா சமூகத்திலும் களையெடுக்கப்பட்டனர்.   

இவ்வாறு மனிதர்களின் உயிர்கள் பலியாக்கப்பட்ட போது, மனிதாபிமானம் பேசாதவர்கள், வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்யாத செயற்பாட்டாளர்கள், அதற்காகக் குரல் கொடுக்காத பிக்குகள் எல்லோரும், இப்போது மாடுகளுக்குக் ஜீவகாருண்யம் காட்டுவது பெரும் ஆச்சரியமாக இருக்கின்றது. அதுமட்டுமன்றி, இலங்கையில் மாடறுப்பில் மட்டுமா சட்டம் மீறப்படுகின்றது?  

சிறுபிள்ளைகளும் வயதான பெண்களும் வன்புணரப்படுகிறார்கள். தந்தையை, மகன் கொலை செய்கின்றான்; மருமகளை, மாமனார் கழுத்தறுக்கின்றார்; போதைப்பொருள் வர்த்தகம் பரவலாக மேற்கொள்ளப்படுகின்றது; வீதிப் போக்குவரத்துப் பொலிஸாரிலிருந்து ஆரம்பித்து, பெரிய அரசியல்வாதிகள் வரை, இலஞ்சமும் ஊழலும் மலிந்து கிடக்கின்றன. ஆசிரியரே, மாணவியைக் காமத்துக்குத் தீனியாக்குகின்றார். பெற்றோரைச் சில பிள்ளைகள் கூண்டில் அடைத்து வைக்கின்றனர். போதை ஒழிப்பை பிரசாரம் செய்து கொண்டே, சிகரெட், மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. இப்படி இன்னும் எத்தனையோ....  

இவையெல்லாம் சட்டமீறல்கள் இல்லையா? இவற்றால் சமூக வாழ்வும் நல்லொழுக்கமும் சீர்கெடவில்லையா? இந்தப் படுகொலைகளாலும் பாதகச் செயல்களாலும் நாம் பின்னடைவைச் சந்திக்கவில்லையா? அப்படியென்றால் இந்தத் தேரர்களும் சச்சிதானந்தம்களும் மற்றுமுள்ள அமைப்புகளும் செயற்பாட்டாளர்களும் இத்தகைய விடயங்களில் சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் மனிதாபிமானம் பேணப்பட வேண்டும் என்றும் ஏன் பத்திரிகையாளர் மாநாடுகளையோ ஆர்ப்பாட்டங்களையோ நடத்துவதில்லை.....?  

மாடறுப்பு போன்ற முஸ்லிம்களுடன் தொடர்புடைய விவகாரங்களுக்காக மட்டும், போர்க்கொடி தூக்குவது ஏன் என்பதை, அறியாத அளவுக்கு முஸ்லிம்கள் முட்டாள்கள் அல்லர்.   

இதற்குப் பின்னால், இனவாத, மதவாத, பொருளாதார, அரசியல் சார்ந்த உள்நாட்டு, சர்வதேச நிகழ்ச்சி நிரல்களும் உள்நோக்கங்களும் நன்கு திட்டமிடப்பட்ட செயற்பாடுகளுடன் பெரியளவில் அரங்கேறுகின்றன.   

தமிழர்கள் மாடுகளை தெய்வமாக வணங்குகின்றனர்; இது அவர்களுடைய மத நம்பிக்கை. அதேபோன்று பௌத்த மதம் ஜீவகாருண்யத்தைப் பற்றிப் பேசுகின்றது. இவ்விடயங்களை முஸ்லிம்கள் மனதில் கொண்டு செயற்பட வேண்டும்.   

மறுபுறத்தில், முஸ்லிம்கள் பக்கத்தில் இருக்கின்ற நியாயங்களை, ஏனைய இன மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாத்தில் மாடு சாப்பிடுவது கட்டாயமல்ல; ஆனால், தென்னாசிய நாடுகளிலேயே மாட்டிறைச்சிப் பாவனை அதிகமுள்ளது. எவ்வாறிருப்பினும், முஸ்லிம்களுக்கு உண்பதற்கு ஆகுமாக்கப்பட்ட விலங்குகளில், மாடுகளும் உள்ளடங்குகின்றன. அவர்களது மார்க்கத்தின் படி, அது தவறல்ல.   

அதேநேரம், தமிழ் மக்கள் நேர்த்திக் கடனுக்காகவும் பலிப்பூஜைகளுக்காகவும் சில நேரங்களில் விலங்குகளை அறுக்கின்றனர். அது, அந்தக் கடமைக்காக, அவர்களுக்கு தமது மார்க்கத்தால் ஆகுமாக்கப்பட்டதாக இருப்பதைப் போலவே, முஸ்லிம்கள் எவ்வேளையிலும் மாடுகளையோ ஆடுகளையோ உரிய முறைப்படி அறுத்துச் சாப்பிடுவதற்கு அனுமதியுண்டு. அதன்படியே மாட்டிறைச்சியை முஸ்லிம்கள் உண்கின்றனர்.   

தமிழ், சிங்கள சமூகங்களைச் சேர்ந்த ஒருசிலர், மாட்டிறைச்சியை சாப்பிடும்போது, முஸ்லிம்கள் அதைச் சாப்பிடுவதை யாரும் பிழை எனக்கூற முடியாது.   

மாடுகளை முறைப்படி அறுக்க வேண்டும் என்பதும், சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதும் சரி. ஆனால், மாடுகள் அறுக்கப்படுவது வதை என்றும், அதைத் தடை செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகின்ற யதார்த்தத்துக்கு மாறான கருத்தை, ஏற்றுக் கொள்ள முடியாது.   

உண்மையில், மாடுகள் அறுப்பது பாவம், ஜீவகாருண்யத்தை மீறும் செயல் என்றால், எந்த இன மக்களும் எதையும் அறுக்கவோ சாப்பிடவோ முடியாது என்ற உண்மையை ஏற்க வேண்டியிருக்கும்.  
அதாவது ஆடு, மாடு, கோழிகள் மட்டும் உயிரினங்கள் அல்ல; அவற்றுக்கு மட்டுமே உயிரும், உயிர் போகும் வலியும் இருக்கின்றன என எந்த விஞ்ஞானியும் சொல்லவில்லை.   

மாறாக, மரங்கள், தாவரங்கள், மீன்கள், இறால், இலைகறிகள் என அனைத்தும் சுவாசிக்கின்றன; அவற்றுக்கும் உயிர் இருக்கின்றது. ஆகவே, உயிர்களை வதைக்கக் கூடாது என்றால், நாம் ஒரு பூவைக் கூடப் பறிக்க முடியாது; ஒரு மரக்கறியையும் சாப்பிடக் கூடாது. மீன்கள் கூட அறுக்கப்பட முடியாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.   

எனவே, இலங்கையில் மாட்டு வியாபாரமும் மாடறுப்பும் முறைமைப்படுத்தப்பட வேண்டும் என்பது ஒருபுறமிருக்க, மாடறுப்புக்கு எதிராகக் குரல் கொடுப்போர், யதார்த்தங்களைப் பேச முன்வர வேண்டும்.  ஜீவகாருண்யத்தை முஸ்லிம்களுடன் தொடர்புபட்ட விடயங்களில் மாத்திரம் வெளிக்காட்டாமல், பொதுவாக எல்லா விடயங்களிலும், மனிதநேயத்தையும் ஜீவகாருண்யத்தையும் வெளிப்படுத்த வேண்டும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .