2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

முஸ்லிம் எதிர்ப்பு அரசியலின் இழிநிலை

Johnsan Bastiampillai   / 2021 ஜனவரி 19 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹமட் பாதுஷா

முஸ்லிம் சமூகம் ஒன்றிணைந்த செயற்பாட்டையும் காத்திரமான அரசியல் நகர்வுகளையும் வேண்டி நிற்கின்ற ஒரு கால கட்டத்தில், முஸ்லிம் கட்சிகளுக்கு இடையிலான எதிர்ப்பு அரசியல் மிகவும் சிறுபிள்ளைத்தனமான வழித்தடத்தில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. 

பெரிய புத்திசாலிகள் என்று நினைத்துக் கொண்டு அறிவிலித்தனமான, பக்குவப்படாத வேலைகளை மேற்கொள்கின்ற அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள், தொண்டர்கள், கட்சி ஆதரவாளர்களின்  செயற்பாடுகளால் முஸ்லிம் அரசியலானது ஓர் அடிகூட முன்நகராமல் இன்னும் ஆரம்பித்த இடத்திலேயே நிற்கின்றது. அத்துடன், முஸ்லிம் மக்களுக்கான அரசியலாக அது தம்மைப் புடம்போட்டுக் கொள்ளவும் இல்லை. 

முஸ்லிம்கள் இணக்க அரசியலுக்குப் பழக்கப்பட்டவர்கள். பெருந்தேசியம், தமிழ்த் தேசியத்தோடு இணைந்து அரசியலில் பயணித்த வரலாறு உள்ளது. அதேபோன்று தேவையான சந்தர்ப்பங்களில் பெருந்தேசியத்தையும் தமிழ் அரசியல்வாதிகளையும் விமர்சிக்கின்ற, எதிர்த்தாடுகின்ற பாங்கிலான அரசியலையும் கையிலெடுப்பதுண்டு. 

அந்த வகையில், முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சினை என்று வரும்போது, நீதி நியாயம், சமத்துவம், பாரடபட்சம் இன்மை, ஒற்றுமை பற்றியெல்லாம் முஸ்லிம்கள் தரப்பில் பேசப்படுகின்றது. சிங்கள ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் முஸ்லிம்கள் விடயத்தில் பாரபட்சமின்றியும் நியாயபூர்வமாகவும் செயற்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம். தமிழர்கள், முஸ்லிம்களின் நியாயங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்கின்றோம். 

முஸ்லிம்களின் இன, மத உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்றோம். பாரபட்சமும் பாகுபாடும் இன்றி இவ்வுரிமைகளை வழங்குமாறு குரல் கொடுக்கின்றோம். இதனை மறுதலிப்போரையும் இனவெறுப்பு பேச்சுகளைப் பேசுபவர்களையும் பெரும்பாலும் இனவாதிகளின் பட்டியலுக்குள் சேர்த்து விடுகின்றோம். இவையொன்றும் தவறான செயற்பாடுகள் அல்ல.

இரண்டாவது சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழும் நாட்டில், நீண்டகாலமாகவே இச் சமூகம் பெரும் இனத்துவ நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றது. இது மதம்சார்ந்த ஒடுக்குமுறையாக, இப்போது பரிணாமம் எடுக்கத் தொடங்கியிருக்கின்றது. இதற்கு சமாந்திரமாக, அரசியல் ரீதியாக முஸ்லிம்களை அடக்கி, ஒடுக்கி வைத்திருப்பதற்கான நெருக்குதல்கள் தொடர்ச்சியாகவே இருந்து வருகின்றன. 

இவ்வாறான சூழ்நிலைகளில் மேற்குறிப்பிட்ட விதத்தில் முஸ்லிம்கள் சமவுரிமைக்காக பாடுபடுவதும் இனப் பாகுபாடற்ற ஆளுகைக்காக குரல்கொடுப்பதும் தவிர்க்க முடியாதது. முஸ்லிம்களுக்கு உரிய கௌரவத்தை, பங்கை, அந்தஸ்தை வழங்குமாறு போராடுவது சமூகக் கடமை என்பதையும் மறுப்பதற்கில்லை. 

ஆனால், ஆட்சியாளர்களிடமிருந்தும் சிங்கள, தமிழ் தேசியங்களிடம் இருந்தும் நீதியையும் நேர்மையையும் இனவெறுப்பற்ற போக்குகளையும் எதிர்பார்க்கின்ற முஸ்லிம் அரசியலானது, தமக்குள் உள்ளகமாக எப்படி இருக்கின்றது என்பதே, இங்கு எழுகின்ற கேள்வியாகும். 

இரு கட்சிகளுக்கு இடையிலும், ஏன் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு உள்ளகமாகக் கூட இங்கிதமான அரசியல் கலாசாரம் இருக்கின்றதா என்ற வினாவுக்கு, விடை தேட வேண்டியுள்ளது. 

உண்மையைச் சொன்னால், இது விடயத்தில முஸ்லிம் அரசியல் மிகவும் கெட்டுச் சீரழிந்துள்ளது. போட்டி அரசியலையோ மாற்று அரசியலையோ எப்படி நாகரிகமாகச் செய்வது என்று, அநேகமான முஸ்லிம் அரசியல்வாதிகளுக்குத் தெரியாது. அவர்கள் தங்களது தீவிர ஆதரவாளர்களுக்கும் கட்சிப் போராளிகளுக்கும் சொல்லிக் கொடுக்கவில்லை என்பது பல சந்தர்ப்பங்களில் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றது. 

முஸ்லிம் அரசியலைக்காத்திரமான வழிமுறைகளில் நாகரிகமாகக் கொண்டு செல்ல வேண்டிய தேவையுள்ளது. அதைச் செய்யாமல், பெருந்தேசியத்திடம் இவ்வாறான பண்புகளை எதிர்பார்க்க முடியாது. ஆனாலும் நிஜம் வேறு மாதிரியாகத்தான் இருக்கக் காண்கின்றோம். 

முஸ்லிம் கட்சிகளுக்கு இடையிலான போட்டி அரசியல் என்பது மிகவும் மட்டரகமான ஒன்றாக மாறியிருக்கின்றது. உண்மையில் மக்களுக்குப் போட்டி போட்டுக் கொண்டு சேவையாற்றுவதன் மூலம், முஸ்லிம்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம், கனதியான அரசியல் நகர்வுகளை ஆளுக்காள் போட்டாபோட்டி அடிப்படையில் மேற்கொள்வதன் மூலம் எதிர்ப்பு அரசியல் மேற்கொள்ளப்பட வேண்டும். 

ஆனால், துரதிர்ஷ்டவசமாக இன்று கீழ்த்தரமான பிரசாரத்தாலும் பக்குவமற்ற எதிர் நடவடிக்கைகளாலும் எதிரணியினரை எதிர்த்தாடுகின்ற ஓர் இழிநிலைக்கு வந்திருக்கின்றது. இதில் முஸ்லிம் காங்கிரஸோ, மக்கள் காங்கிரஸோ, தேசிய காங்கிரஸோ ஏனைய முஸ்லிம் கட்சிகளோ, பிரபல அரசியல்வாதிகளோ.... யாரும் விதிவிலக்கல்லர். முஸ்லிம் அரசியல் கட்சிகள், வேறு வேறு அணுமுறைகளைக் கையாண்டாலும் எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். 

மக்களுக்குச் சேவையாற்றுவதற்கும் மக்களை தமக்குப் பின்னால் அணிதிரள வைப்பதற்கும் ஆயிரம் உபாயங்கள் உள்ளன. மாறாக, மாற்று முஸ்லிம் அணியை மாற்றாந்தாய் மனப்பாங்குடன் பார்த்தல் நல்லதல்ல. ஒரு முஸ்லிம் கட்சியையே இன்னும் ஒரு கட்சியினர் எதிரிகள் போல பார்த்தால், சிங்கள ஆட்சியாளர்கள் எம்மை அரவணைக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியுமா?

பிரதான முஸ்லிம் கட்சித் தலைவர்களான ஹக்கீம், ரிஷாட், அதாவுல்லா மட்டுமன்றி தெற்கிலும் கிழக்கிலும் வடக்கிலும் இருக்கின்ற பெரிய, சிறிய முஸ்லிம் அரசியல்வாதிகளும் பரஸ்பரம் தமக்கிடையில் இவ்விதமான அரசியலை முன்னெடுத்துச் செல்கின்றனர். 

தேசிய அரசியலில் ஒரு முஸ்லிம் கட்சியை ஆளும் கட்சியுடன் இணைக்கும் போது, இடம்பெறும் பேரம் பேசல்களில் இடம்பெறும் குழிபறிப்பு போன்ற பெரிய நகர்வுகள் தொடக்கம், பொத்துவிலில் அண்மையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் வரை, இப்பட்டியல் நீண்டு செல்கின்றது. 

முஸ்லிம் அரசியல்வாதிகள்தான் இப்படி இருக்கின்றார்கள் என்றால், அவர்களது ஆதரவாளர்கள், பேஸ்புக் சண்டியர்கள் படுகின்றபாடு இதைவிடக் கேவலமாக உள்ளது. தமது தலைமையை, தாம் ஆதரிக்கும் அரசியல்வாதியை உயரத்தில் தூக்கிப் பிடிப்பதும், எதிரணியில் உள்ளவர்களைத் தூற்றுவதும், நையாண்டி செய்வதும் பரவலாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. ஒரே கட்சிக்குள்ளும் இவ்வாறான உள்குத்துகள் தலைதூக்குகின்றன. 

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் எம்.பி. விளக்கமறியலில் இருந்தார். அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் அது குறித்து பெரும்பாலான முஸ்லிம்கள் கவலை கொண்டனர். தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா எம்.பி.க்கு அமைச்சுப் பதவி வழங்க வேண்டும் என்பதும் அவருக்கு உரிய கௌரவம் தரப்பட வேண்டும் என்ற எண்ணமும் பரவலாக இருந்தது. 

அதுபோல மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கின்றது என்பது பொதுவாக முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் ஒரு கவலையான செய்தியாகும். அவர் குணமடைய  வேண்டும் என்று மாற்றுக் கட்சியில் உள்ள பலரும் எண்ணுகின்றார்கள். 

ஆனால், அதையும் தாண்டி, மேற்சொன்ன சந்தர்ப்பங்களில் சமூக வலைத்தளங்களில் ‘மகிழ்ச்சியை’ வெளிப்படுத்தியவர்களும் அதனை ‘நையாண்டி’ செய்த குறுகிய மனப்பாங்கு கொண்டவர்களும் கூட முஸ்லிம் சமூகத்துக்குள் இருக்கின்றார்கள். இவையெல்லாம் ஆகப் பிந்திய உதாரணங்கள் மட்டுமே. 

அரசியலில் காத்திரமான, கனதியான விமர்சனங்கள் முக்கியமானவை. எதிர் அணியில் உள்ள அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை மட்டுமன்றி தாம் ஆதரிக்கின்ற அரசியல் தலைவர்களின் போக்குகள் குறித்தும் மீளாய்வு செய்வது தவிர்க்க முடியாதது. ஆனால் அவையெல்லாம் ஆக்கபூர்வமானதாக அமைய வேண்டும். 

அதுபோல முஸ்லிம் கட்சிகளுக்கு இடையிலான ஏட்டிக்குப் போட்டியான அரசியலும் பக்குவமான, முதிர்ச்சியடைந்த தன்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. அதைவிடுத்து, முஸ்லிம் கட்சிகள் தங்களுக்கு இடையில் ஆளுக்காள் குழிபறித்துக் கொள்வதும், கட்சி ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களின் மறுதரப்பை தூசித்தும், அவமதித்தும் நையாண்டி செய்வதும் தவிர்க்கப்பட வேண்டும். நமக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, எதிரணியில் உள்ளவனுக்கு இரண்டு கண்ணும் கெட வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் விடிவைத்தராது. 

முதலில் முஸ்லிம்கள், அரசியல் ரீதியாகவும் சிவில் சமூக ரீதியாகவும் தமக்குள் ஒற்றுமைப்பட வேண்டும். எதிர்ப்பு அரசியலை நாகரிகமாகவும் இங்கிதமாகவும் மேற்கொள்ள வேண்டும். அதனை அரசியல்வாதிகள் கற்றுக் கொள்வது மட்டுமன்றி தமது அடிவருடிகளுக்கும் பழக்க வேண்டும். தமக்குள் எல்லா விடயங்களிலும் நீதியையும் பாகுபாடற்ற தன்மையையும் கடைப்பிடிக்க வேண்டும். 

முஸ்லிம் அரசியல் தலைமைகள், முஸ்லிம்களுக்கு நடக்கின்ற அநியாயங்கள்,  பாரபட்சங்கள் தொடர்பில் நியாயத்தை நிலைநாட்டுமாறு, சிங்கள தேசியத்திடமும் தமிழ் அரசியல்வாதிகளிடமும் கோரிக்கை விடுப்பதற்கான ஓர் அடிப்படைத் தகுதியாகவே இது அமையும். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X