2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ரணிலுக்கும் சஜித்துக்கும் இடையிலான சாணக்கிய போட்டி

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2020 பெப்ரவரி 19 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சி, இரண்டாக பிளவு பட்டுள்ளமையே தற்போதைய யதார்த்தம்.   
பிளவுபட்ட இரு குழுக்களும் இப்போதும் ஒன்றாய்க் கூடி, ஐக்கிய தேசியக் கட்சியாகச் சில முடிவுகள் எடுத்த போதிலும், அக் கட்சிக்குள், தேர்தல் ஆணையகத்தால் அங்கிகரிக்கப்பட்ட இரண்டு கட்சிகளின் தலைவர்களும் உறுப்பினர்களும் இருக்கிறார்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாது.  

ஐக்கிய தேசியக் கட்சியானது, பழைமையான கட்சி ஆகும். இலங்கையில் தேர்தல் ஆணையகத்தில் பதிவு செய்யப்பட்டு, அவ்வாணையகத்தால் அங்கிகரிக்கப்பட்ட 70 கட்சிகளில், ஐ.தே.கவை விடப் பழைய கட்சிகள் இரண்டு தான் இருக்கின்றன. இதன் தலைவராகத் தற்போது ரணில் விக்கிரமசிங்க கடமையாற்றுகிறார்.   

அதேவேளை, ஐ.தே.கவின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையிலான கட்சியொன்றும் தற்போது தேர்தல் ஆணையகத்தால் அங்கிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதுவும் பல வருடங்களுக்கு முன்னர், தேர்தல் ஆணையகத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியாகும். Our National Front என்ற பெயரில், தேர்தல் ஆணையகத்தின் அரசியல் கட்சிகளின் பட்டியலில் இருக்கும் அக்கட்சியின் முக்கியஸ்தர்கள், சஜித் பிரேமதாஸவைக் கட்சியின் தலைவராக நியமித்து, அதைத் தேர்தல்  ஆணையகத்துக்கு அறிவித்துள்ளனர். ஆணையகம் அதனை ஏற்றுக் கொண்டுள்ளது.   

அதன் பின்னர், அக்கட்சியின் பெயரை, ‘சமகி ஜாதிக்க பலவேகய’ என்று மாற்றுமாறு, சஜித் பிரேமதாஸ தேர்தல் ஆணையகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதையும் ஆணையகம் ஏற்றுக் கொண்டுள்ளது. 

அதன் பிரகாரம், தற்போது ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்கும் ஐ.தே.கவைப் போலவே, சஜித் பிரேமதாஸ தலைமை தாங்கும் ‘சமகி ஜாதிக்க பலவேகய’ என்றொரு கட்சியும் இருக்கிறது.  ஐ.தே.கவை ஆதரித்தவர்களில் ஒரு சிலர், ரணிலின் தலைமையிலான கட்சியையும் வேறு சிலர், சஜித்தின் கட்சியையும் ஆதரிக்கிறார்கள். எனவே தான், ஐ.தே.க பிளவுபட்டுள்ளது என்பது யதார்த்தம் என்கிறோம்.   

எனினும், சஜித்தும் அவரது ஆதரவாளர்களும் இன்னமும் ஐ.தே.கவின் உறுப்பினர்களாகவே இருக்கிறார்கள். 

சஜித் இன்னமும் ஐ.தே.கவின் பிரதித் தலைவராக இருக்கிறார். அவர் உள்ளிட்ட அவரது குழுவில் பலர், ஐ.தே.கவின் அதிஉயர் பீடமான செயற்குழுவிலும் அங்கம் வகிக்கிறார்கள். ஆயினும் எந்த நேரத்திலும், இரு சாராரும் இரண்டு கட்சிகளாகத் தேர்தல் களத்தில் குதிக்கும் நிலையில் இருக்கின்றனர்.   

எனவே, நடைமுறையில் இப்போது ஐ.தே.கவானது, தமக்குள்ளேயே மற்றொரு கட்சியை உள்ளடக்கிக் கொண்டிருக்கும் கூட்டணியாக இருக்கிறது. அதேவேளை, ஐ.தே.கவும் சிறு கட்சிகளும் இணைந்து அமைக்கும் கூட்டணியின் தலைவராக, சஜித்தே பதவிவகிக்கிறார் என, ஐ.தே.க தலைவர்கள் கடந்த மாதம் அறிவித்திருந்தனர்.   

சமகி ஜாதிக்க பலவேகயவே, ஐ.தே.கவும் சிறு கட்சிகளும் இணைந்து அமைக்கும் கூட்டணியாகும் என சஜித் இப்போது அறிவித்துள்ளார். 

ஆரம்பத்தில், “சமகி ஜாதிக்க பலவேகய என்ற கட்சியை, அங்கிகரிக்க வேண்டாம்” என, தேர்தல் ஆணையகத்திடம் கோரிய ஐ.தே.க தலைவர்களும், இறுதியில் அது தான் ஐ.தே.க தலைமையிலான கூட்டணி என்று ஏற்றுக் கொண்டுள்ளனர்.   

அந்தவகையில், சமகி ஜாதிக்க பலவேகயயானதும் தமக்குள்ளேயே ஐ.தே.க உள்ளிட்ட பல கட்சிகளைக் கொண்ட கூட்டணியாக இருக்கிறது.   

அதாவது பிரிந்து செல்லும் உரிமையுடன் (சுய நியர்ணய உரிமையுடன்) சமகி ஜாதிக் பலவேகய, ஐ.தே.கவுக்குள்ளும் அதே உரிமையுடன் ஐ.தே.க, சமகி ஜாதிக பலவேகயவுக்கு உள்ளும் இருக்கிறது. இது விசித்திரமாக இல்லையா?   

‘சமகி ஜாதிக்க பலவேகய’ என்ற சிங்களப் பெயருக்கான தமிழ் மொழிபெயர்ப்பு, ‘ஒற்றுமை தேசிய சக்தி’ என்பதாகும். ஆனால், அக்கட்சியைச் சேர்ந்தவர்கள், அதனை அவ்வாறுதான் அழைப்பார்களோ தெரியாது. எனவே அவர்கள், தமிழில் தமது பெயரை வெளியிடும் வரை, நாமும் அக்கட்சியை அதன் சிங்களப் பெயரிலேயே அழைக்க வேண்டியிருக்கிறது.   

ஐ.தே.கவுக்குள் தோன்றியிருக்கும் தலைமைத்துவப் போராட்டத்துக்குத் தீர்வாக, ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த மாத இறுதியில் ஒரு திட்டத்தை முன்வைத்தார்.அதன்படி, ஐ.தே.க தலைவராகத் தாமே இருப்பதாகவும் ஆனால், சஜித் பிரேமதாஸ, ஐ.தே.க தலைமையிலான கூட்டமைப்பின் தலைவராவார் என்றும் அவர் அறிவித்தார்.   

அத்தோடு, கூட்டணியின் வேட்பு மனுக் குழுவின் தலைவராகவும் சஜித் கடமையாற்றுவார் என்றும் அறிவித்த ரணில், சஜித்துக்குக் கூட்டணியின் பொதுச் செயலாளரை தெரிவு செய்யும் அதிகாரத்தையும் வழங்கினார்.   

ஆனால், சில நிபந்தனைகளும் அத்தோடு விதிக்கப்பட்டன. அதாவது, சஜித்தால் தேர்ந்தெடுக்கப்படும் கூட்டணியின் பொதுச் செயலாளரின் பெயரையும் வேட்பு மனுக் குழுவால் தெரிவு செய்யப்படும் ஐ.தே.க வேட்பாளர்களினது பெயர்களையும் ஐ.தே.க செயற்குழு அங்கிகரித்தால் மட்டுமே, அவை செல்லுபடியாகும் என்பதேயாகும்.   

ஐ.தே.கவின் செயற்குழுவை, அதன் தலைவரே எப்போதும் நியமிப்பார். அதன்படி அதன் பெரும்பான்மை பலம், ரணிலிடமே இருக்கிறது. அதன் பிரகாரம், கூட்டணித் தலைவராக சஜித்தின் அதிகாரம், ரணிலின் ஆட்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஐ.தே.க செயற்குழுவின் அங்கிகாரத்துக்கு உட்பட்டதாகும்.   

அதேவேளை, சஜித் தலைமையிலான கூட்டணிக்கு, சட்ட அங்கிகாரமும் இல்லை; ஐ.தே.க கைவிட்டால் சஜித்தின் கதி, அதோகதி தான். இந்தநிலை தான், கடந்த மாத இறுதியில் இருந்தது.   
சஜித், இதையாவது விளங்கிக் கொள்ள முடியாதவர் அல்ல. ஆனால், அவரும் அவரது குழுவினரும் இதை ஏற்றுக் கொண்டனர். இதைப் பற்றிக் கருத்துத் தெரிவித்த சில பத்திரிகைகளின் பத்தி எழுத்தாளர்கள், ‘ரணில், தமது சாணக்கியத்தால் சஜித்தை மடக்கினார்’ என்று குறிப்பிட்டிருந்தனர்.   

அந்த நிலையிலேயே, திடீரென ‘டெய்லி மிரர்’ பத்திரிகை, கடந்த 11 ஆம் திகதி, தேர்தல் ஆணையகம் சஜித்தை Our National Front கட்சியின் தலைவராக அங்கிகரித்துள்ளதாகவும் அக்கட்சியின் பெயரையும் ‘சமகி ஜாதிக்க பலவேகய’ என்று மாற்றுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையையும் தேர்தல் ஆணையகம் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அறிவித்தது.   

இப்போது, சஜித்திடம் சட்ட ரீதியாக அங்கிகரிக்கப்பட்ட கட்சியொன்று இருக்கிறது. ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் அவரையே ஆதரிக்கின்றனர். கட்சியின் சாதாரண உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மத்தியிலும் அவருக்குப் பெரும் செல்வாக்கும் இருக்கிறது.   

அவர் ‘இதயம்’ சின்னத்தின் கீழ், சமகி ஜாதிக்க பலவேகயவின் தலைவராக, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட சிறு கட்சிகளின் ஆதரவுடன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதாக அவரது நெருங்கிய ஆதரவாளர்கள் அறிவித்தனர். அச் சிறு கட்சிகளும் சஜித்துக்குத் தமது ஆதரவை தெரிவித்தனர். எனவே, சஜித் தனது சாணக்கியத்தால், ரணிலை மடக்கியிருக்கிறார் என்றதொரு நிலைமை, அதனை அடுத்துக் கடந்த வாரம் உருவாகியது.   

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை ரணில் பிரிவினருக்கும் சஜித் பிரிவினருக்கும் இடையே மீண்டும் ‘சமாதானப் பேச்சுவார்த்தை’ ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், அன்று எவ்வித இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை.   

கடந்த வெள்ளிக்கிழமை (14) மீண்டும் இரு சாராரும் கூடிக் கலந்துரையாடினர். அப்போது இரு சாராரும், சமகி ஜாதிக்க பலவேகயவின் கீழ் ஒரே சின்னத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது, போட்டியிடுவதாக முடிவு எடுத்தனர். அந்தச் சின்னத்தைப் பற்றி, பின்னர் தீர்மானிப்பதாக இரு சாராரும் முடிவுக்கு வந்தனர்.   

ஆனால், இது இறுதி முடிவா, ஒரு குழு மற்றக் குழுவை ஏமாற்றுவதற்காகத் எடுத்த நிலைப்பாடா என்பது தெளிவாகவில்லை. 

தற்போதைய நிலையில், பொதுத் தேர்தலின் போது, ஐ.தே.க இரண்டாகப் பிரிந்த ஐ.தே.கவாகவும் சமகி ஜாதிக்க பலவேகயவாகவும் போட்டியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.   

ஆனால், ஐ.தே.கவின் சாதாரண ஆதரவாளர்கள் எப்பக்கம் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே, இரு குழுக்களின் இருப்பைப் பற்றிய உறுதியான மதிப்பீடொன்றை எடுக்க முடியும்.   

ஓரிரு மாதங்களில், பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அப்போது இரு சாராரும் பிரிந்து போட்டியிட்டால் சாதாரண, ஐ.தே.க ஆதரவாளர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது தெரிய வரும்.

 ஐ.தே.க பிளவுபடாது என்ற உத்தரவாதமில்லை

 சஜித் பிரேமதாஸ, சமகி ஜாதிக்க பலவேகய என்ற கட்சியின் தலைவர் எனத் தெரியவந்தவுடன் கருத்துத்  தெரிவித்த ஐ.தே.க பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அகில விராஜ் காரியவசம், “ஐ.தே.கவிலிருந்து பிரிந்து சென்ற எக்குழுவும் அரசியல் ரீதியாக நிலைத்திருக்கவில்லை” என்று கூறியிருந்தார்.   

தமது வாதத்தை நிரூபிப்பதற்காக அவர், 1991ஆம் ஆண்டு, அப்போதைய அமைச்சர்களான லலித் அத்துலத்முதலி, காமினி திஸாநாயக்க ஆகியோர், ஐ.தே.கவிலிருந்து பிரிந்து சென்று உருவாக்கிய ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி என்ற கட்சி, பிற்காலத்தில் சின்னாபின்னமாகி, இறுதியில் பெயர் பலகை மட்டும் எஞ்சிய கதையைச் சுட்டிக் காட்டியிருந்தார்.   

ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியைப் பற்றிய அவரது குறிப்பு சரியானது தான். லலித், காமினி ஆகியோர் ஆரம்பித்த அக்கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவுடன், 1994ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் சற்றுத் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

ஆனால், பின்னர் லலித், 1993 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ, தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் அதேஆண்டு கொல்லப்பட்டார். அதையடுத்து, காமினி ஐ.தே.கவில் மீண்டும் இணைந்து கொண்டார். அவரும் 1994 ஆம் ஆண்டு, தற்கொலை குண்டுத் தாக்குதலில்  கொல்லப்பட்டார். காமினி, லலித் ஆகியோரின் இழைப்பை அடுத்து, ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி படிப்படியாகத் தேய்ந்து மறைந்துவிட்டது.   

ஆனால், அகிலவின் வாதம் முழு வரலாற்றுக்கும் பொருந்தியதாக அமையவில்லை. ஒரு வாதமாக அதை எடுத்துக் கொண்டால், பிழையானது. 1991 ஆம் ஆண்டுக்கு முன்னரும், இரண்டு முறை ஐ.தே.கவுக்குள் தலைமைத்துவப் பிரச்சினை உருவாகியிருக்கிறது.  

 அவ்விரு சந்தர்ப்பங்களில் முதலாவது சந்தர்ப்பத்தில் கட்சி பிளவுபட்டது. அதுமட்டுமல்லாது, அதனால் உருவான கட்சியொன்று, பிரதான கட்சியொன்றாக இன்னமும் இலங்கை அரசியலில் நிலைத்திருக்கிறது. அதுதான், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி.   

1951 ஆம் ஆண்டிலேயே அந்தப் பிளவு ஏற்பட்டது. ஐ.தே.கவின் ஸ்தாபகத் தலைவராக இருந்த டி.எஸ். சேனாநாயக்கவுக்குப் பின்னர், பிரதமராகக் காத்திருந்த எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க, தமது அந்தக் கனவு நனவாகாததை அறிந்து கொண்டார்.  

 டி.எஸ்ஸூக்குப் பின்னர், அவரது மகன் டட்லி சேனாநாயக்கவே பிரதமராக வருவார் என்பதை, ஊகத்தின் மூலம் உணர்ந்த பண்டாரநாயக்க வேறு காரணங்களைக் காட்டி, ஐ.தே.கவிலிருந்து வெளியேறினார். ஐ.தே.கவின் கொள்கைகளை விரும்பாத தேசியவாதக் குழுக்கள், அப்போது நாட்டில் உருவாகியிருப்பதை அவர் கண்டமையும் அவரது இந்த முடிவுக்குக் காரணமாகும்.   

ஐ.தே.கவிலிருந்து பிரிந்த அவர், 1951 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைத் தோற்றுவித்தார். ஐந்தாண்டுகளில் அதாவது, 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், சில இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டு, நாடாளுமன்றத்தில் 95 ஆசனங்களில் 51 ஆசனங்களை வென்றார். ஸ்ரீ ல.சு.கவின் தாய்க் கட்சியான ஐ.தே.க, வெறும் எட்டு ஆசனங்களையே கைப்பற்றியது.   

அதையடுத்து, 2015 ஆண்டு வரையும் ஐ.தே.கவின் பிரதான போட்டியாளராக ஸ்ரீ சு.கவே இருந்து வந்துள்ளது. அது மட்டுமல்லாது. 1960, 1970 ஆண்டுகளில் ஸ்ரீ ல.சு.க என்ற பெயரிலும் 1994, 2000, 2005 ஆண்டுகளில் வேறு கட்சிகளுடனான கூட்டணிகளின் தலைமைக் கட்சியாகவும் ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றிக் கொண்டது. 

2015ஆம் ஆண்டு, ஸ்ரீ ல.சு.க பிளவுபட்ட போது, அதன் பிரதான பிரிவான மஹிந்த அணியே, பின்னர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவாகப் பரிணமித்தது.   

1994 ஆம் ஆண்டு முதல், கடந்த 26 ஆண்டுகளில் ஐ.தே.க இரண்டு முறையாக ஆறு ஆண்டுகள் ஆட்சி நடத்தியிருக்கிறது. அந்த அரசாங்கங்களும் நிலையற்ற அரசாங்கங்களாகவே இருந்தன.   

ஏனைய 20 ஆண்டுகளிலும் பல்வேறு கூட்டணிகளின் பெயரில் ஸ்ரீ ல.சு.கவே நாட்டை ஆட்சி புரிந்துள்ளது. இன்னமும் புரிகிறது. அடுத்த தேர்தலின் பின்னரும், அனேகமாகப் பொதுஜன பெரமுன பதவிக்கு வரும் சாத்தியமே அதிகமாகத் தெரிகிறது.  

 எனவே, ஐ.தே.கவில் இருந்து பிரிந்தவர்கள், பிழைக்கவில்லை என்று ஐ.தே.க பொதுச் செயலாளர் கூறுவது சரியான வாதமல்ல.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X