2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

வதிவிடச் சிக்கலும் மணிவண்ணனும்

புருஜோத்தமன் தங்கமயில்   / 2018 ஓகஸ்ட் 08 , மு.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் யாழ். மாநகர சபை உறுப்பினர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்கும் வாக்களிப்பதற்கும் இடைக்காலத் தடை விதித்து, இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்றம், கடந்த வெள்ளிக்கிழமை (03) உத்தரவிட்டிருக்கின்றது.   

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பிலான சட்டத்தின் பிரகாரம், வேட்பாளர் ஒருவர், தான் போட்டியிடும் உள்ளூராட்சி மன்ற ஆள்புல எல்லைக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும். ஆனால், யாழ். மாநகர சபைக்கு காங்கிரஸால் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) நியமனப்பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்ட மணிவண்ணன், ஆள்புல எல்லைக்குள் (அதாவது, யாழ். மாநகர சபை எல்லைக்குள்) வசிக்கவில்லை என்கிற விடயத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டே, இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்திருக்கின்றது.   

நாடாளுமன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பிலான சட்டத்தில், வேட்பாளர்கள் ஆள்புல எல்லைக்குள் (தேர்தல் மாவட்டத்துக்குள் அல்லது மாகாண எல்லைக்குள்) வசிப்பவராக இருக்க வேண்டும் என்கிற விடயம் சேர்க்கப்படவில்லை. ஆனால், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சட்டத்தில், ‘ஆள்புல எல்லை’ என்கிற விடயம் பிரதானமாகக் குறிப்பிடப்படுகின்றது.   

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ‘தமிழ்த் தேசியப் பேரவை’ என்கிற தேர்தல் நாமத்துடன் போட்டியிட்ட முன்னணியின் தலைமையும் அவர்களின் சட்ட ஆலோசகர்களும் இந்த விடயத்தை,  கவனத்தில் கொள்ளவில்லையா என்கிற கேள்வி எழுகின்றது?  

ஏனெனில், யாழ். மாநகர சபையின் மேயராக, மணிவண்ணனை முன்னிறுத்திக் கொண்டு, தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்த போதே, மணிவண்ணன் மாநகர சபையின் ஆட்புல எல்லைக்குள் வசிக்கின்றாரா? என்கிற கேள்வி எழுப்பப்பட்டது.   

அவர், நல்லூர்ப் பிரதேச சபையின் ஆள்புல எல்லைக்குள் (கொக்குவில்) வசிப்பவராகக் கொள்ளப்பட்டது. வாக்காளர் இடாப்பிலும் அதுவே உறுதிசெய்யப்பட்டிருக்கின்றது. அப்படியான நிலையில், தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று, மாநகர சபையில் ஆட்சியைப் பிடித்திருந்தாலும் இல்லாவிட்டாலும், மணிவண்ணனை மாநகர சபை உறுப்பினராக நியமித்தால், சட்டரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது வெளிப்படையானது. இப்போதும், அதுவே நிகழ்ந்திருக்கின்றது.   

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், முன்னணிக்கு ஆதரவான அலையொன்று யாழ். நகரப்பகுதிகளில் வீசியதாக உணரப்பட்டது. அப்படியான சூழலில், அடுத்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது என்கிற முடிவை எடுத்திருக்கின்ற முன்னணிக்கு, யாழ். மாநகர சபையைக் கைப்பற்றுவது சாதகமானது.   

அதுவும், தமிழரசுக் கட்சிக்குள் எழுந்த மாநகர மேயர் வேட்பாளர் இழுபறி, கூட்டமைப்பின் வேட்பாளர்கள், ஆதரவாளர்களுக்கு இடையில் குழப்பங்களை ஏற்படுத்தியது. எம்.ஏ.சுமந்திரன் தரப்பால், மேயர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்ட இம்மானுவேல் ஆர்னோல்டுக்கு எதிராக, தமிழரசுக் கட்சியின் இன்னோர் அணியொன்று, எதிர்ப்பிரசாரங்களை மேற்கொண்டது.  கூட்டமைப்புக்குள் நீடித்த, இவ்வாறான குழப்பகரமான நிலைகள், முன்னணிக்குச் சாதகமான கட்டங்களை அதிகரிக்கச் செய்தன.   

அப்படியான தருணமொன்றில்தான், முன்னணியின் முதல் மூன்று முக்கியஸ்தர்களில் ஒருவரான மணிவண்ணனை, மேயர் வேட்பாளராகக் களமிறக்குவது என்கிற விடயம் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால், நல்லூர்ப் பிரதேசசபை எல்லைக்குள் வதியும் மணிவண்ணனை, யாழ். மாநகர சபை மேயர் வேட்பாளராக முன்னிறுத்துவதிலுள்ள சட்டச் சிக்கல்கள், பெரியளவில் உணர்ந்து கொள்ளப்படவில்லை. அல்லது, தேர்தலில் வெற்றிபெற்றதும், சட்டச் சிக்கல்களை எதிர்கொள்ளலாம் என்று விட்டுவிட்டார்கள்.   

‘தூய நகரம்’ திட்ட அறிக்கையோடு, தேர்தல் பரப்புரைகளை முன்னெடுத்த மணிவண்ணன், ‘ஏன் நேரடியாக, வட்டாரமொன்றில் போட்டியிடவில்லை’ என்ற கேள்வி எழுந்தபோது, அவரின் வதிவிடப் பிரச்சினை வெளிக்கிளம்பியது. 

இதுதொடர்பில், மணிவண்ணனுக்காக பிரசாரப் பணிகளில் ஈடுபட்டிருந்த வைத்தியர் ஒருவரிடம் கேட்டபோது, “மேயர் வேட்பாளர், அனைவருக்கும் பொதுவானவராவார். அதனால்தான், அவர் வட்டாரமொன்றில் நேரடியாகப் போட்டியிடவில்லை” என்றார்.   

மணிவண்ணன், வட்டாரமொன்றில் நேரடியாகப் போட்டியிடுவதிலிருந்து தவிர்த்தமைக்கு, தேர்தலில் வாக்களிப்பின் அளவு, வட்டாரம் என்கிற அளவில் சுருங்கும்போது, கூட்டமைப்பு வேட்பாளரிடம் தோற்றுப்போகும் வாய்ப்பு அதிகமாக இருக்கலாம் என்கிற நிலையும் காணப்பட்டது. அதனால், அவர் அனைத்து வட்டாரங்களுக்கும் பொதுவானவராக, நியமனப்பட்டியல் ஊடாக வருகிறார் என்கிற விடயம் காட்டப்பட்டது.   

அத்தோடு, இன்னோர் உண்மை எதுவென்றால், அவர் வதிவிடம் தொடர்பில் காணப்பட்ட பிரச்சினையே, அவரை நியமனப்பட்டியல் வழியில் செல்லவைத்தது. மாறாக, மணிவண்ணன் வட்டாரமொன்றில் நேரடியாகப் போட்டியிடுவதற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்து, அது சிலவேளை ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால், அவர், தேர்தல் காலத்திலேயே நீதிமன்றத்தில் வழக்குகளைச் சந்திக்கும் சூழலை ஏற்படுத்தியிருக்கும்.    

அவ்வாறான சூழலில்தான், முன்னணியின் சட்ட ஆலோசகர்கள் நியமனப்பட்டியல் விடயத்தை முன்வைத்து, மணிவண்ணன் பின்னாலுள்ள வதிவிடச் சிக்கலைக் கடக்க நினைத்திருக்கலாம். மாநகர சபைத் தேர்தலில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக முன்னணியால் நம்பப்பட்டபோது, இவ்வாறான விடயங்களைப் பின்னர் எதிர்கொள்ளலாம் ஒத்திவைக்கப்பட்டிருக்கலாம்.   

முன்னணியில் போட்டியிட்ட வேட்பாளர்களில், மணிவண்ணனே குறிப்பிட்டளவு அறிமுகமான முகம். மற்றவர்கள் அனைவரும், தேர்தல் அரசியலுக்குப் புதியவர்கள். ஆனால், கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டவர்கள் அப்படியல்ல.   

குறிப்பிட்டளவானவர்கள் தேர்தல் அரசியலில் ஏற்கெனவே பயணித்தவர்கள். அப்படியான கட்டத்தில், மணிவண்ணனின் முகம், முன்னணிக்கு முக்கியமானதுதான். தேர்தலில் வென்ற பின்னர் வரும் சட்டச் சிக்கல்களை வென்றாலும், தோற்றாலும் மாநகர சபை, முன்னணியிடம் இருக்கும். அதனூடாகத் தங்களின் பலத்தை இன்னும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்பது, முன்னணி முக்கியஸ்தர்களின் எதிர்பார்ப்பு.   

ஆனால், எதிர்பார்த்த மாதிரியான வெற்றியை, முன்னணியால் பெற முடியவில்லை; ஆட்சியை அமைக்கவும் முடியவில்லை. அப்படியான சூழலில், மேயர் வேட்பாளர் என்ற விடயம் ஏற்கெனவே முன்வைக்கப்பட்டது என்பதற்காக, மணிவண்ணனை நியமனப்பட்டியல் உறுப்பினராக, முன்னணி பதவியேற்க வைத்தது.   

இந்த இடத்தில், மணிவண்ணன் மேயர் வேட்பாளர் என்கிற அறிவிப்பு வெளியானதுமே, வதிவிடப்பிரச்சினை இருப்பதை, தமிழரசுக் கட்சி மோப்பம் பிடித்துவிட்டது. மணிவண்ணன் வட்டாரமொன்றில் நேரடியாகப் போட்டியிட்டால், அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவும் தயாராக இருந்தது.   

ஆனால், அவர் நியமனப்பட்டியல் ஊடாகத் தேர்தல் களம் காணும்போது, அவர் நியமனப்பட்டியல் உறுப்பினராகப் பதவியேற்கும் வரை பொறுத்திருக்க வேண்டியநிலை ஏற்பட்டது. அதுதான், மணிவண்ணனுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கும், இடைக்காலத் தடை வாங்குவதற்கும் இவ்வளவு காலம் எடுத்திருக்கின்றது.   

யாழ். மாநகர எல்லைக்குள், தான் வசிப்பதாக மணிவண்ணனால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் (உறுதி, குத்தகைப் பத்திரம்) இரண்டும் போலியான ஆவணங்கள் என்கிற அடிப்படையிலேயே, நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கின்றது.   

உறுதி, குத்தகைப் பத்திரத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் திகதியைக் கருத்தில் கொண்டு, மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாகவும், அவை சட்டரீதியாகப் பதிவு செய்யப்படவில்லை என்றும், வாதிக்காக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டி இருக்கின்றார்.   

அந்த வாதத்தை, மணிவண்ணனுக்காக ஆஜரான இன்னொரு ஜனாதிபதி சட்டத்தரணியான வி.புவிதரனால் மறுக்க முடியவில்லை. இவ்வாறான கட்டத்திலேயே, மணிவண்ணன் மீதான இடைக்காலத் தடையை நீதிமன்றம் விதித்திருக்கின்றது.   

 இயற்கை நீதி, அறம் என்கிற உரையாடல் மொழிகளினூடு, மணிவண்ணனின் வதிவிடப் பிரச்சினையைக் கடக்கலாம் என்று முன்னணியின் ஆதரவாளர்களும், சட்ட ஆலோசகர்களும் உரையாடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.   

ஆனால், தேர்தல் சட்டங்களின் பிரகாரம், தன்னுடைய வதிவிடத்தை மறைத்துக் கொண்டு, மோசடியான நடவடிக்கைகளின் வழி, தேர்தலை வெற்றி கொள்ள நினைப்பது இயற்கை நீதிக்கும், அறத்துக்கும் உட்பட்டதா என்பதை, அவர்கள் வெளிப்படுத்த வேண்டும்.  ஏனெனில், தமிழ்த் தேசிய அரசியலில் வளர்ந்து வரும், முன்னணிக்கும் மணிவண்ணனுக்கும், இவ்வாறான மோசடி நடவடிக்கைகள் என்றைக்கும் நன்மை தராது.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X