2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வாக்குச்சீட்டால் தலைவிதியை வெல்ல முடியுமா?

காரை துர்க்கா   / 2018 பெப்ரவரி 13 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெரும் எதிர்பார்ப்புடன் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட 2018ம் ஆண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து விட்டன. முடிவுகள் வெளியாகும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட எதிர்வு கூரல்களின் பெரும்பாலானவை, பொய்பிக்கப்பட்டு உள்ளனவென்றே கூறலாம்.

அதிர்ச்சி தரும் முடிவுகள், மகத்தான முடிவுகள், எதிர்பார்க்கப்பட்ட முடிவுகள் என்றவாறான பல்வகையான முடிவுகளை, மக்கள் வழங்கியுள்ளனர். 

தற்போது நடைபெற்ற குட்டித் தேர்தல் முடிவுகள் மூலம், நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தமது மக்களிடம் கொண்டுள்ள செல்வாக்குப் பற்றிய நாடித்துடிப்பை அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது. 

அத்துடன், தமது பலம் மற்றும் பலவீனம் அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. மேலும், புதிதாக அரசியல் மேடைக்கு வரும் இளம் அரசியல்வாதிகளுக்கு பிள்ளையார் சுழிபோடும் களமாகவும் இது அமைகின்றது. 

இனி விடயத்துக்கு வருவோம். இதனை, வடக்கு, கிழக்கு அரசியல் நிலைவரம் அதற்கு வெளியே உள்ள அரசியல் நிலைவரம் என இரண்டு வகுதிகளாகப் பார்க்கலாம். வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களது ஆளுகைக்குள் வரும் சபைகளில், யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு சில சபைகளைத் தவிர அனைத்திலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது.

இருந்தாலும், அவர்களால் அங்கு தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய வாய்ப்புகள் அரிதாகவே உள்ளது. அதாவது, அறுதிப் பெரும்பான்மையை அவர்களால் அனைத்துச் சபைகளிலும் ஈட்ட முடியவில்லை. ஆனாலும் வெற்றி பெற்றுள்ளனர். 

அதேபோலவே, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெற்றி பெற்றுள்ள இடங்களிலும், அவர்களால் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலையே நிலவுகின்றது.

இதனை வெறுமனே, கூட்டமைப்பு வெற்றி பெற்றதாக ஒரே வரியில் கூறிவிட முடியாது. 
ஏனெனில், யாழ்ப்பாண மாவட்டத்தின் சாவகச்சேரி நகர சபையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆறு ஆசனங்களையும் (2779 வாக்குகள்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐந்து ஆசனங்களையும் (2481 வாக்குகள்) பெற்றுள்ள அதேவேளை, பருத்தித்துறை நகர சபையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் கூட்டமைப்பு முறையே ஆறு மற்றும் ஐந்து ஆசனங்களையும் (2199, 1880) வாக்குகளையும் பெற்றுள்ளது. 

யாழ். மாநகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மொத்தமாக பதினாறு (16) ஆசனங்களையும் 14,424 வாக்குகளையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் பதின்மூன்று (13) ஆசனங்களையும் 12,020 வாக்குகளையும் பெற்று, சமன் செய்யும் நிலையை நெருங்கி உள்ளனர். 

ஏனைய பகுதிகளிலும் கனிசமான ஆசனங்களைக் கைப்பற்றி சிறப்பான அரசியல் அறுவடையை செய்துமுடித்து உள்ளனர்.

தமிழ்த் தேசிய முன்னணியினரின் கடந்தகால தேர்தல் பெறுபேறுகளுடன் ஒப்பிடுகையில், அவர்களின் வளர்ச்சிப் போக்கு முன்னேற்றகரமானதாக உள்ளது. 

மறுவளமாக, கூட்டமைப்பு தொடர்பாக தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட ஒருவித சந்தேக உணர்வே அவர்களைத் தமிழ் தேசிய முன்னணி நோக்கிய நகர்வுக்கு வழி வகுத்தது எனலாம். 

கூட்டமைப்பின் தோற்றத்துக்குப் பின்னர், அதன் வீட்டுச் சின்னத்துக்கு தொடர்ச்சியாக வாக்களித்தவர்களில் கனிசமானோர், இம்முறை சைக்கிள் சின்னத்துக்கு வாக்களித்துள்ளனர். 
உதாரணமாக, இறுதி நேரத்தில் சாவகச்சேரி பிரதேசத்துக்கான வேட்பு மனுத்தாக்கல் விடயத்தில் நடைபெற்ற விடயங்கள், மக்களை முகம் சுழிக்க வைத்தது. 

வீட்டுச்சின்னத்தில் தும்புத்தடியை நிறுத்தினாலும் எம்மக்கள் வாக்களிப்பர் என்ற கூட்டமைப்பினரின் கருத்துக் கூட, சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது எனலாம். ஆகவே, இவ்வாறாகக் கூட்டமைப்பில் தமிழ் மக்கள் கண்ட சிறிய வெறுப்பே, தமிழ்த் தேசிய முன்னணியின் பால் விருப்பை ஏற்படுத்தியது. 

அத்துடன், நடந்து முடிந்த தேர்தலில், ஒவ்வொரு பிரதேச சபைக்கும் வேட்பாளர்களை நிறுத்துகையில் கூட்டமைப்பின் பிரதேசப் பொறுப்பாளர்கள், வேட்பாளர்களது தனிப்பட்ட திறமை, மக்களோடு அவர்கள் கொண்டுள்ள உறவு, தமிழ்த் தேசியப்பற்று ஆகியவற்றைக் கருதாமல் குறித்த வட்டாரத்தின் உள்ளேயும் வெளியிலும் தங்களுக்கு விசுவாசமாக நடந்துகொள்பவர்களைப் போட்டியிட நிறுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டும், மக்களிடம் குடிகொண்டுள்ளது. 

அத்துடன், கூட்டமைப்பின் உட்கட்சி முரண்பாடு, தமிழ் மக்களுக்கு முற்றிலும் முரண்பாடான அம்சமாக அமைந்தது. தங்களது உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள் என, நன்கு அறிமுகவானவர்களைப் புறமொதுக்கி, தேசியப்பற்று காரணமாக கூட்டமைப்புக்கும் தமிழ்த் தேசிய முன்னணிக்கும் வாக்களித்த மக்கள் நிறையவே உள்ளனர். 

அடுத்து, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் சிறப்பாக சித்தியடைந்துள்ளது எனக் கூறலாம். தீவகத்தில் இரண்டு சபைகளில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. ஒன்றில் தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய ஆற்றலையும் பெற்றுள்ளது. அத்துடன், வடக்கில் பரவலாகப் பல இடங்களிலும் ஆசனங்களைப் பெற்றுள்ளது. தற்போதைய முடிவுகளின் பிரகாரம், வடக்கு, கிழக்கில் தமிழர்களது சபைகளில் தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய வலுவுடன், கூட்டமைப்பு இல்லை. ஆகவே, கூட்டாட்சிக்கு ஒன்றுகூட வேண்டிய நிலை, கூடி வந்துள்ளது. 

அதனைக் கரம் பிடித்து, அதனுடாக தமிழ் மக்களுக்கு கரம் கொடுக்க வேண்டிய கட்டாய நிலையில் தமிழ்க் கட்சிகள் உள்ளன. இன்னும் வீணான விதண்டாவாதங்கள், குதர்க்கங்கள் பேசும் தருணம் அல்ல. தம் மக்களது அரசியல் விடிவுக்காக ஒன்றுகூடும் தருணம் என இனியாவது தமிழ்க் கட்சிகள் உண்மையாக உணர வேண்டும். இதுவே தமிழ் மக்களதும் அவா.

மேலும், நடப்பு நல்லாட்சி அரசாங்கம் ஆட்டம் காணும் நிலை அண்மித்து விட்டது. அசுர பலத்துடன் மீண்டும் மஹிந்த புதிதாக புதுத்தெம்புடன் களமிறங்கி விட்டார். அதிரடியான முற்றிலும் எதிர்பார்க்காத விடயங்களை நாடு காண (நேர்ந்துள்ளது) உள்ளது. மீண்டும் மஹிந்த உள்ளூர் வெளியூர் ஊடகங்களை அலங்கரித்தார். உள்ளே ஒன்றும் இல்லாத அரசியலமைப்பு, தெற்கில் மஹிந்த அணி வாக்குகளை அள்ள வழி வகுத்தது. ஏனெனில், நல்லாட்சி அரசு தமிழீழம் வழங்க உள்ளதாகவே, மஹிந்தவின் பரப்புரை செய்தி பரப்பியது. 

ஆனால், அவ்வாறான அரசியலமைப்பே தமிழ்க் கூட்டமைப்பின் பரப்புரையிலும் வெளியே பெயர் இல்லாவிட்டாலும் உள்ளே திருப்தியாக தீர்வு இருக்கின்றது என தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறப் பேசும் பெரும் பொருள் ஆனது. 

எது எவ்வாறாக அமைந்தாலும், இனி தமிழ்க் கூட்டமைப்பு அரசியலமைப்பு வரும், அது தீர்வுவைக் கொண்டு வருமெனப் பேச முடியாது. ஆகவே, கடந்த அண்மைக் காலங்களில், தம் கட்சி தவறுதலாகவோ அல்லது தெரிந்தோ ஆற்றிய தவறுகளைக் களைந்து அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். 

தமிழ் மக்களது அரசியல் விடிவுக்காகப் புறப்பட்டவர்கள், பல கூறுகளாகப் பிரிந்து இது வரை தமிழ் மக்களுக்கெனச் சாாதித்தது எதுவுமே இல்லாத சூழலில், இன்னமும் இக்கேவலமான வேற்றுமை நீடிக்க வேண்டுமா? 

தமிழ் மக்கள், இவர்களது ஒற்றுமைக்காக பல முயற்சிகளை எடுத்தும் அரசியல் தலைவர்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளால் அது கானல் நீராகவே தொடர்கின்றது. இந்த அவல நிலை தொடரக் கூடாது. தொடர அனுமதிக்கக் கூடாது. ஒரு பொதுவான தமிழ்க் கூட்டில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியையும் கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும். எனெனில், தெற்கில் மஹிந்த தலைமையில் புதிய அரசியல் தலைமை எற்படின், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் மஹிந்தவுடன் இணைய முயற்சிக்கலாம். 

இவை இவ்வாறு நிற்க, மஹிந்த மீண்டும் இரண்டாம் இன்னிங்ஸ் ஆட விரும்புவதை சில வேளைகளில் சில மேற்குலக நாடுகள் தமது நலன் கருதி விருப்பம் காட்டாது விடலாம். அதற்காக சில இராஜதந்திர நகர்வுகளைச் செய்ய முயற்சிக்கலாம். அதற்காக, தமிழ் மக்களை மீண்டும் அணுகலாம். 

ஆகவே, அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒரு தலைவன் வழியில் பேச வேண்டும். அதனூடாக, சாதகமான அணுகுமுறைகளை அறுவடை செய்ய வேண்டும். அது தமிழ் மக்களது முடிவில்லாப் பிரச்சினைக்கு விடிவு தர வேண்டும்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தமது விடுதலைக்கு அப்பால், அரசியல் தீர்வுக்கு அப்பால், தம் தலைவர்களின் ஒற்றுமை என்பதில் குறியாக உள்ளனர். எழுபது வருடப் பிரச்சினை இன்னும் தள்ளிப்போகலாம்.

ஆனால், ஒற்றுமை எனும் பெரிய பலம் இனியும் தள்ளிப் போகக் கூடாது. இந்தத் தேர்தலை அடுத்து பல தேர்தல்கள் தொடர்ந்து வரவுள்ளன. அவற்றில், தமிழ்க்கட்சி என வடக்கு, கிழக்கில் ஒரு கட்சியே போட்டியிட வேண்டும். அனைத்து ஆசனங்களையும் அள்ளி அணைக்க வேண்டும். அவை தமிழ் மக்களுக்கு விரைவாக தீர்வை வழங்குமாறு சர்வதேசத்தை வலியுறுத்துவதாக அமைய வேண்டும்.

ஒரே அணியில் ஒரே குரலில் ஒரே தீர்வில் குறியாக இருந்தாலே, மஹிந்த என்ற அரசியல் புயலை எதிர்காலத்தில் எதிர்கொள்ள முடியும். இல்லையேல், தூக்கி வீசப்படுவார்கள் சிங்கள ஆட்சியாளர்களால் மட்டுமல்ல தமிழ் மக்களாலும் கூட. 

ஆகவே, விரைவாக அர்த்தமுள்ள ஆக்கபூர்வமான சந்திப்புகள் ஆரம்பிக்கட்டும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .