2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

இந்தியாவுக்கு இப்போது ‘ரூட் கிளியர்‘

A.P.Mathan   / 2013 ஜனவரி 03 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

கடந்த ஆண்டு நடுப்பகுதியில் இந்திய இராணுவத் தளபதியாக ஜெனரல் பிக்ரம் சிங் பதவியேற்ற பின்னர், சுமார் ஆறு மாதங்கள் கழித்து, அண்மையில் அவர் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். கடந்த டிசெம்பர் மூன்றாவது வாரத்தில் கொழும்பு வந்திருந்த அவரது பயணத்தின் நோக்கம், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வதேயாகும்.

பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளது போன்று, இந்தியாவுடனான உறவுகளில் அரசியல் ரீதியான குழப்பநிலை இருந்தாலும், இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளில் அது பெரிதாக எதிரொலித்ததில்லை.

தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க எதிர்ப்புகள் இருந்தாலும் சரி, அல்லது விடுதலைப் புலிகளை பழிதீர்க்க வேண்டிய எதிரியாகவே எப்போதும் பார்த்து வந்த காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சி புதுடெல்லியில் இல்லாத போதும் சரி, இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளில் பெரிய வேறுபாடுகள் இருந்ததில்லை.

பாஜக தலைமையிலான அரசில் அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதிலும் கூட, இந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு வலுவாகவே இருந்தது. இப்போதும் அது வலுவாகவே உள்ளது. முன்னையதை விடவும் இப்போது வலிமையான உறவு உள்ளதை எவரும் மறுக்க முடியாது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்காக இந்தியா, வெளியே தெரிந்தும் தெரியாததுமான பல்வேறு இராணுவ உதவிகளை இலங்கைக்கு வழங்கியிருந்தது. போர் முடிவுக்கு வந்த பின்னரும் இந்தியா, கணிசமான இராணுவ உதவிகளை இலங்கைக்கு வழங்கிக் கொண்டு தான் இருக்கிறது. ஆண்டு தோறும் 800இற்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினருக்கு இந்தியா பயிற்சி அளித்து வருகிறது.

இலங்கைப் படையினருக்கான இந்த இராணுவப் பயிற்சிகளை இந்தியா நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாட்டில் போராட்டங்கள் பல நடத்தப்பட்டன, கடிதங்கள் எழுதப்பட்டன, அனல் பறக்கும் அறிக்கைகள் வெளியிடப்பட்டன. ஆனால், எத்தகைய அழுத்தங்களையும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. அதற்குப் பணிந்து போகவும் இல்லை. மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் அமைச்சர்கள் கூட, இதற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தாலும், மிகச் சாதுரியமாக இந்திய அரசு இதனை நியாயப்படுத்திக் கொண்டது.

இலங்கைப் படையினருக்கு இந்தியா பயிற்சி அளிப்பதை நிறுத்தி விட்டால், சீனாவும் பாகிஸ்தானும் அந்த வாய்ப்பை அளித்து, இந்தியாவுக்கு எதிராக இலங்கையைத் திருப்பி விடும் என்பதே அந்த வாதம்.

அதாவது, இலங்கையுடன் பேணி வரும் பாதுகாப்பு உறவுகளை நியாயப்படுத்திக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக சீனாவையும் பாகிஸ்தானையும் இந்தியா பயன்படுத்திக்கொள்கிறது.

இலங்கைப் படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படுவதற்கு தமிழ்நாட்டில் அண்மையில் கடும் எதிர்ப்புக் கிளம்பியபோது, அங்கிருந்து வெளியாகும் ‘தினமணி‘ நாளிதழில் ஓர் ஆசிரியர் தலையங்கம் எழுதப்பட்டிருந்தது.

இலங்கைப் படையினருக்கு இந்தியா பயிற்சி அளிப்பதை நியாயப்படுத்தும் அந்த ஆசிரியர் கருத்தில், பயிற்சியின்போது இலங்கைப் படையினருக்கு இந்தியா மனிதாபிமானம், கட்டுப்பாடு, மனித உரிமைகள் போன்றவற்றையும் சேர்த்து அளிப்பதால், அது இலங்கைத் தமிழர்களுக்கு பாதுகாப்பாக அமையும் என்றும், சீனா, பாகிஸ்தான் நாடுகள் பயிற்சி அளித்தால் பாதகமாக அமையும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இராணுவப் பயிற்சிகளில் எல்லா நாடுகளுமே ஒழுக்கத்தைப் போதிப்பதே வழக்கம். அது இந்தியாவுக்கு வேறு, இலங்கைக்கு வேறு, பாகிஸ்தானுக்கு வேறு, சீனாவுக்கு வேறானதாக இருப்பதில்லை. எங்கே எத்தகைய ஒழுக்கத்துடன் பயிற்சிகளைப் பெற்றிருந்தாலும் எந்த நாட்டு இராணுவமுமே அதை கடைப்பிடிப்பது கிடையாது. இதுதான் உலகப்போர்களின் வரலாறு.

போர்களின் போதும், படை நடவடிக்கைகளின் போதும், எந்த நாட்டுப் படையினருமே பொதுமக்களை மதிப்பதோ, அவர்களின் மனித உரிமைகளை மதிப்பதோ கிடையாது. இதில் அமெரிக்கப் படை, சீனப் படை, இந்தியப் படை, இலங்கைப்படை என்ற வேறுபாடு இல்லை.

இலங்கையில் வாழும் தமிழர்களைப் பொறுத்தவரையில் இந்தியப்படையினரின் ஒழுக்கம், கட்டுப்பாடு எத்தகையது என்பதையும் அறிவார்கள், இலங்கைப் படையினரின் ஒழுக்கம், கட்டுப்பாடு எத்தகையது என்பதையும் நன்றாகவே அறிவார்கள்.

ஒவ்வொரு நாட்டினருக்கும் தமது நாட்டு இராணுவத்தின் மீது பெருமை, நம்பிக்கை இருக்கலாம். ஆனால், நடைமுறை ரீதியாக அவர்கள் எவ்வாறு செயற்படுகின்றனர் என்று தெரிவதில்லை. அது தினமணி ஆசிரியர் கருத்துக்கும் பொருந்தும்.

தினமணி விவகாரம் இங்கு எடுத்துக் கொள்ளப்பட்டது ஏன் என்றால், இந்திய மத்திய அரசு இவ்வாறு தான், இலங்கைப் படையினருக்குப் பயிற்சி அளிப்பதை நியாயப்படுத்தியுள்ளது என்பதை புரிய வைப்பதற்கே.

ஆண்டு தோறும் 800இற்கும் அதிகமான இலங்கைப் படையினருக்கு இந்தியா பயிற்சி அளித்து வருகிறது. இந்தியா இந்தப் பயிற்சியை நிறுத்தி விட்டால், அதை சீனாவும் பாகிஸ்தானும் ஈடுசெய்து விடும் என்று கூறுப்படுவது கற்பனையே.

ஏனென்றால், ஆண்டுக்கு 800 பேருக்கு பயிற்சி அளிப்பதென்பது ஒன்றும் சுலபமான காரியமில்லை. அந்தளவுக்கு இலங்கை இராணுவத்தின் மூலம் சீனாவினால் பயனடைய முடியாது. போர் நடக்கின்ற காலங்களில் என்றாலும் பரவாயில்லை, அந்தச் செலவினங்களை ஆயுத விற்பனை மூலம் சீனா ஈடுகட்டி விடும்.

எந்தவொரு நாடுமே ஒரு துறையில் உதவிகளை வழங்குகிறது என்றால், அதே துறையில் தனது நலன்களை எவ்வாறு ஈடுகட்டலாம் என்றே கணக்குப் போடும். அந்தப் பிரதிபலன் கணக்கின் அடிப்படையில் தான் உதவிகள் தீர்மானிக்கப்படும்.

சீனா - பொருளாதார ரீதியான கடன்களையும் உதவிகளையும் இலங்கைக்கு அள்ளி வழங்குவது பொருளாதார நலன்களுக்காகவே. அதுபோல, இலங்கையிடம் இருந்து திரும்பவும் இராணுவ நலன்களை சீனா எதிர்பார்க்கக் கூடிய நிலை இப்போது இல்லை.

எனவே, ஆண்டுக்கு 800 படையினரை சீனாவினாலோ அல்லது பாகிஸ்தானாலோ ஒருபோதும் பயிற்சி கொடுக்க முடியாது. ஆனால், இந்தியாவுக்கு பிராந்திய வல்லரசு என்ற பாத்திரம், இலங்கையின் அமைவிட முக்கியத்துவம் என்பனவற்றாலும், பாகிஸ்தான், சீனா போன்றவற்றின் அச்சுறுத்தல்களாலும் இந்தளவு படையினருக்கு பயிற்சி அளிக்க வேண்டிய தேவை உள்ளது.

சீனா, பாகிஸ்தான் போன்றவற்றால், இந்தியா வழங்கும் பயிற்சியை ஈடுசெய்ய முடியாது என்ற போதிலும், அதை உண்மை போன்று தமிழ்நாட்டை நம்ப வைத்துவிட்டது இந்திய மத்திய அரசு. அதனால் தான், தமிழ்நாட்டுக்கு வெளியே பயிற்சி அளிப்பதை கண்டுகொள்வதில்லை என்ற நிலை அங்கு உருவாகிவிட்டது. இலங்கைப் படையினருக்கு இந்தியா பயிற்சி அளிப்பதை தமிழ்நாடு இனிமேல் அவ்வளவாக கண்டுகொள்ளாது.

இந்தச்சூழலில் தான், இருநாட்டு சிறப்புப் படைப்பிரிவினரும் பங்கேற்கும் கூட்டுப் போர்ப் பயிற்சி தென் மாநிலங்களில் இருந்து ஹிமாச்சல பிரதேசத்துக்கு மாற்றப்பட்டது. கடந்த மாதம் 3ஆம் திகதி தொடக்கம், 24ஆம் திகதி வரையிலான மூன்று வாரங்கள் நஹான் சிறப்புப் படைப்பிரிவு நிலையத்தில் நடத்தப்பட்ட இந்தப் போர்ப் பயிற்சி பற்றிய தகவல்கள், பயிற்சிகள் இறுதிக்கட்டத்தை அடைந்தபோது தான் வெளியே கசிய விடப்பட்டது.

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் கொழும்பு வந்தபோது தான் அந்தத் தகவல் வெளியானது.

இந்திய அரசாங்கம் எதிர்பார்த்தது போன்று தமிழ்நாட்டில் இருந்து யாருமே அதற்கு எதிராக வாய் கூடத் திறக்கவில்லை.

கிட்டத்தட்ட, இந்தச் செய்தி கசியவிடப்பட்டது தமிழ்நாட்டின் மனோநிலையை நாடி பிடித்து அறிவதற்கு என்று கூட வைத்துக் கொள்ளலாம். இந்த ஆண்டில் இருநாட்டுக் கடற்படைகளுக்கும் இடையிலான கூட்டுப் பயிற்சியும் நடக்கவுள்ளது. அதை தென்மாநிலங்களுக்கு வெளியே நடத்த ஏற்கனவே இந்திய பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

இப்போதைய நிலையில், இலங்கைப் படையினருக்கு பயிற்சி அளிப்பதற்கான இந்தியாவின் ‘ரூட் கிளியர்‘ ஆகி விட்டது. இனிமேல் இருதரப்பு ஒத்துழைப்பு, உறவுகளை விரிவாக்கிக் கொள்வதில் இந்தியாவுக்கு சிக்கல்கள் ஏதும் வராது.

அவ்வாறான எதிர்ப்புகள் தமிழ்நாட்டில் இருந்து கிளம்பினாலும் அது வலுவானதாக இருக்காது.

எனவே, இந்தப் பாதுகாப்பு ஒத்துழைப்பின் அடுத்த கட்டம், இந்தியப்படையினர் இலங்கையில் பயிற்சி பெறுவதாகவே இருக்கும். அதற்குச் சாதகமான சமிக்ஞையைத் தான் இப்போது இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

இராணுவ ஒத்துழைப்பு விடயத்தில், இருவழிப் பாதையில் நுழைய இந்தியா தயாராக உள்ளது என்றும் தமது உதவி தேவையா என்பதை இந்திய இராணுவத் தளபதி தான் இப்போது முடிவு செய்ய வேண்டும் என்றும் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியிருப்பது இங்கு கவனிக்கத்தக்கது.

ஆனால் ஒன்று, கிளர்ச்சி முறியடிப்புப் போர்முறை தொடர்பாக இலங்கை அளிக்க முன்வந்துள்ள பயிற்சிகளை இந்திய இராணுவத் தளபதி ஏற்றுக்கொள்வாரேயானால், தமிழ்நாட்டில் ஒரு சிக்கல் உருவாகும். போரின்போது மீறல்களை இழைத்ததாக குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள இலங்கை இராணுவத்தின் போர்த் தந்திரங்களை இந்திய இராணுவம் கற்றுக்கொள்வது சரியானதா என்பதே அந்தச் சிக்கல்.

அத்தகைய சூழலை தமிழ்நாடு எவ்வாறு எடுத்துக் கொள்ளப்போகிறது - தினமணி போன்ற ஊடகங்கள் எவ்வாறு கருத்து எழுதப்போகின்றன என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X