2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

6 வயது இந்திய சிறுமி தீவிரவாதியா? பெயரை நீக்க அமெரிக்க அரசு மறுப்பு

Super User   / 2010 ஜூன் 28 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரின் 6 வயது மகளை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளது அமெரிக்கா. இந்நிலையில் குறித்த சிறுமி விமானங்களில் பயணிக்கவும் அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

அமெரிக்காவின் ஓகியோ மாகாணம், வெஸ்ட்லேக் பகுதியைச் சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் சந்தோஷ் தாமசின் மகள் அலிஷா (வயது 6). இவரது பெயரை தீவிரவாதிகள் கண்காணிப்புப் பட்டியலில் சேர்த்துள்ள அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை, அவர் விமானத்தில் பயணிக்க தடை விதித்துள்ளது.

சமீபத்தில் க்ளீவ்லேண்டில் இருந்து மினியபொலிஸ் நகருக்கு விமானத்தில் செல்ல டிக்கெட் பெற்றுக்கொள்ள முயன்றபோது, எயார்ர்லைன்ஸ் நிறுவனத்தின் முகவர் இந்தத் தகவலை சிறுமியின் தந்தையிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும், விமானத்தில் பயணிக்க அனுமதி அளித்த விமான நிலைய அதிகாரிகள், இது குறித்து உள்நாட்டு பாதுகாப்புத்துறையிடம் பேசி, சிறுமியின் பெயரை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினர்.

இதையடுத்து, பாதுகாப்புத்துறைக்கு டாக்டர் சந்தோஷ் கடிதம் எழுதினார். ஆனால், அவர்களிடமிருந்து வந்த பதில் அதிர்ச்சியைத் தந்துள்ளது. சிறுமியின் பெயருக்கு அனுப்பப்பட்ட அந்த பதிலில், உங்களது கோப்பில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த விவகாரத்தை "பாக்ஸ் நியூஸ்" தொலைக்காட்சி ஆய்வு செய்ததுடன், இது குறித்து விமானப் பாதுகாப்பு துறையிடம் கேள்வியும் எழுப்பியது.

இதன்போது குறித்த தொலைக்காட்சிக்கு பதிலளித்த விமானப் பாதுகாப்பு துறை, "தம்மிடமுள்ள பட்டியலின் அடிப்படையில் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளவர்களை விமானத்தில் பயணிக்காமல் தடுப்பது உண்மை" என்று தெரிவித்தது. "ஆனால், அதில் யாருடைய பெயர்கள் உள்ளன என்பது இரகசியம். மேலும் அந்தப் பட்டியலில் உள்ள நபர்கள் தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளவர்கள் என்பதால் அது குறித்து யாருக்கும் எந்த விளக்கமும் தரப்படாது" என்றும் பதிலளித்துள்ளது.

இத்தனைக்கும் அலிஷா பிறந்து 2 மாதத்தில் இருந்து பலமுறை விமானப் பயணம் செய்துள்ளார். கடந்த பெப்ரவரியில் மெக்சிகோவுக்கும் தங்களுடன் சென்று வந்துள்ளது இந்தக் குழந்தை. அப்போதெல்லாம் எந்தப் பிரச்சனையும் வரவில்லை. திடீரென இப்போது தான் அவரது பெயரை தீவிரவாதிகள் கண்காணிப்புப் பட்டியலில் சேர்த்துள்ளனர் அதிகாரிகள் என்று அவரது பெற்றோர் கூறுகின்றனர்.

முன்பு வெளிநாட்டுப் பயணிகளி்ல் சந்தேகப்படும்படி உள்ளோரின் பெயர்களை இந்தப் பட்டியலில் சேர்த்து வந்தனர். இப்போது உள்நாட்டினரையும் அதில் சேர்க்க ஆரம்பித்துள்ளது அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த விவகாரத்தை நேரடியாக அமெரிக்க உள்துறையிடம் கொண்டு செல்லும் நடவடிக்கைகளில் மருத்துவர் சந்தோஷ் ஈடுபட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0

  • sheen Monday, 28 June 2010 09:47 PM

    சிறுபிள்ளைகளுக்கு பயப்படும் வல்லரசு! அணுகுண்டு என்ன செய்யும், இரத்து அதிகாரம் (veto) என்ன செய்யும்?

    Reply : 0       0

    Abu Yahya Tuesday, 29 June 2010 05:04 AM

    அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாயம் எல்லாம் பேய்.

    Reply : 0       0

    s k gunarasa Tuesday, 29 June 2010 09:03 PM

    ஏன் இந்தக் கொடுமை ? ..........................

    Reply : 0       0

    raam Tuesday, 29 June 2010 10:14 PM

    என்ன கொடுமை சார் இது?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X