2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும்’

Editorial   / 2017 ஒக்டோபர் 12 , மு.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சின்னசாமி சிவநிரோஷினி

“சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் கைதிகள் விரைவாக விடுதலை செய்யப்படவேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு” என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

“தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டிய கைதிகள் தவிர்ந்த ஏனையோரை உடனடியாக விடுவிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு, அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. ஆனால் அங்கு நிலவும் பணிகளில் இடம்பெற்றுவரும் தாமதம் காரணமாகவே இவர்களின் விடுதலையில் தாமதம் நிலவுகின்றது” என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.  

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(11) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட, ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.  

அங்கு அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்,  

 “ அரசியல் கைதிகளில் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படவேண்டியவர்களுக்கு எதிராக வழக்குகளைத் தொடருமாறும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது” என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.  

 “சிறையில் உள்ள தமிழ் கைதிகள் தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் அமைச்சரவையில் கவனத்துக்கு கொண்டுவந்தாரா?” என என்பது தொடர்பில் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு, அமைச்சர் ராஜித பதிலளிக்கையில்,  

 “தமிழ் அரசியல் கைதிகள், 15 வருடங்களுக்கு, மேலாக வெறுமனே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் வாழ்க்கையின் அரைவாசி காலப்பகுதி வீண்விரயமாக்கப்படுகின்றது. இவர்களை விடுவிக்கவேண்டுமென்று நானும் பலமுறை தெரிவித்துள்ளேன்” என்றார்.  

“குற்றமற்றவர்களை தடுத்துவைத்தல் நியாயமற்றதாகும். எனினும், வழக்கு தொடரப்பட்டு, விடுதலையானவர்களில் பலர், கடந்தகாலங்களில் வன்முறைகளில் ஈடுபட்டமையை காணமுடிந்தது. உதாரணமாக, ஜே.வி.பி வன்முறை தொடர்பாக, கைதுசெய்யப்பட்டு வழக்கின் மூலம் விடுதலையானவர்கள் பலர் வன்முறைகளில் ஈடுபட்டிருந்ததை நாம் கண்டோம்” என்றார்.  

“புனர்வாழ்வளிக்கப்பட்ட, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டதாக தகவல் இல்லை” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.  

தொடர்ந்து பல்வேறு விடயங்கள் குறித்த கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளிக்கையில்,

கேள்வி: ஹம்பாந்தோட்டையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விடயத்தில் ஏ.எஸ்.பீ துஸார தலுவத்த கைது செய்யப்பட வில்லையே?

பதில்: அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கேள்வி:  விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றே தொடர்ச்சியாக கூறுகிறீர்கள். ​ஆனால் எந்த உண்மையும் வெளிவருவதில்லையே?

பதில்: உங்களுக்கு முடியும் அல்லவா? பொலிஸ் ஆணைக்குழுவில் சென்று முறையிடுங்கள்

கேள்வி:  தாக்குதலுக்குள்ளானவர் ஓர் ஊடகவியலாளர். ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் குறித்து என்ன கூறுகிறீர்கள்? ஊடக சுதந்திரம் என்பது எங்கே?

பதில்: சரி தாக்குதல் நடத்தப்பட்டதென்றே கூறுவோம். ஊடகவியலாளர் எதற்கு சுவரொட்டிகளை ஒட்டச் சென்றார்?

கேள்வி: இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டமை சரியா?

பதில்: நான் வைத்தியராக இருந்த போது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றேன். அன்று என்மீது சிலர் தாக்குதல் நடத்தினர். அப்போது நான் கூறினேனா - வைத்தியர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதென்று வைத்திய சங்கம் கூறவில்லை. நான், அவ்விடத்துக்கு, அரசியல்வாதியாகவே சென்றிருந்தேன். அவ்வாறு தான். மோதல் ஏற்படுகின்ற போது பொலிஸார் தாக்குதல் நடத்துவதுண்டு. என்னையும் அடித்துள்ளார்கள், பொலிஸாரிடம் நானும் அடிவாங்கியுள்ளேன் .

கேள்வி: அரச வைத்தியர்களுக்கு எதிராக எத்தனை முறைப்பாடுகள் இதுவரை சுகாதார அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன?

பதில்:எத்தனை என்று எனக்கு கூறமுடியாது. முறைப்பாடுகள் சுகாதார அமைச்சுக்கும் மருத்துவச் சபைக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. இது தொடர்பான பரிசீலனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கேள்வி: கொழும்பு- கண்டி அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்படுமா, அதற்கான வேலைத்திட்டங்கள் இடம்பெறுகின்றவா?

பதில்: விரைவில் மலைநாட்டுக்கான அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகள் ஆரம்பமாகும். கொழும்பில் இருந்து கலகெதர வரை அதிவேக வீதி அமைக்கப்பட்டு அங்கிருந்து நான்குவழி வீதி அமைக்கப்படவுள்ளது . ஏனெனில் அதற்கு அப்பால் அதிவேக வீதி அமைக்கப்படும் பட்சத்தில் கூடுதல் செவீனம் ஏற்படும் என கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை 2002 ஆம் ஆண்டே மேற்கொள்ளுமாறு நான் கூறினேன். ஆனால், அப்போதிருந்த அரசாங்கம் அதனை புறக்கணித்தது. அப்போது மேற்கொள்ளப்பட்டிருந்தால் தற்போது அது நிறைவு பெற்றிருக்கும்.

தற்போது ஒரு கிலோ மீற்றர் தூரத்துக்கு சுமார் 5 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது.

கேள்வி:  பொறுப்பு வாய்ந்த அரச நிறுவனங்களின் தலைவர்களை தெரிவு செய்யும் போது அரச தரப்பினர் ஆராய்ந்து பார்ப்பதில்லையா? லிற்றோ காஸ் நிறுவனத் தலைவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளாரே?

பதில்: முதலில் அவர் மீது என்ன குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதென்று பார்க்க வேண்டும். அவருடைய வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்ட நிதியை அவர் எடுத்துள்ளார்.

உண்மையில் என்ன நடந்துள்ளதென்று என்னால் கூற முடியாது. இருப்பினும் இவரது கணக்கை வேறொருவர் பயன்படுத்தியுள்ளாரா? அல்லது இவர் அந்த விடயத்தில் தொடர்புபட்டுள்ளாரா? என கூறமுயாது. விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த வகையில் தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .