2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலங்கை - கென்ய ஜனாதிபதிகள் சந்திப்பு

Editorial   / 2019 மார்ச் 15 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நைரோபி நகரில் இடம்பெறும் ஐ.நா சுற்றாடல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் கென்ய ஜனாதிபதி உஹுரு கென்யாட்டாவுக்கும் இடையிலான சந்திப்பு, நேற்று (14) பிற்பகல் இடம்பெற்றது.
 
இதன்போது, ஜனாதிபதி சிறிசேனவுக்கு, கென்ய ஜனாதிபதியினால், மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து இருநாட்டு தலைவர்களும் சுமுக கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

ஐ.நா சுற்றாடல் மாநாட்டின் நான்காவது அமர்வை மிகவும் வெற்றிகரமான முறையில் ஏற்பாடு செய்திருந்தமை தொடர்பில் மகிழ்ச்சியைத் தெரிவித்த ஜனாதிபதி, மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளைச் செயற்படுத்துவதற்கு, உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கை அரப்பணிப்புடன் செயற்படும் என்றும் தெரிவித்தார்.

இதன்போது, மாநாட்டில் ஜனாதிபதி சிறிசேனவால் ஆற்றப்பட்ட உரையைப் பாராட்டிய கென்ய ஜனாதிபதி, ஜனாதிபதியின் சூழல்நேய செயற்பாடுகளையும் பாராட்டினார்.

கென்ய நாட்டு வெளிவிவகார அமைச்சர் திருமதி மோனிகா ஜுமா (Monica Juma), அண்மையில் இலங்கையில் சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டிருந்ததுடன், அதன்போது, இருநாட்டு வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையிலான கலந்துரையாடலில் ஏற்படுத்திக்கொண்ட ஒத்துழைப்புகளை முன்னெடுத்துச் செல்வது தொடர்பிலும், இருநாட்டு தலைவர்களும் கவனம் செலுத்தினர்.

1970ஆம் ஆண்டில் உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்ட இலங்கைக்கும் கென்யாவுக்குமிடையில் நட்பு ரீதியான தொடர்புகளே இதுவரை காணப்படுகின்றன. பொதுநலவாய அமைப்பு மற்றும் இந்து சமுத்திர வலய நாடுகளின் அமைப்பு (IORA) ஆகியவற்றில் இவ்விரு நாடுகளும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஜனாதிபதி சிறிசேனவின் இந்த அரசமுறை விஜயத்தால், இரு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர ஒத்துழைப்புகள் எதிர்காலத்தில் மேலும் விரிவடையும் என்று கென்ய ஜனாதிபதி உஹுரு கென்யாட்டா நம்பிக்கை தெரிவித்ததுடன், இரு நாடுகளும், சர்வதேச ரீதியாகவும் ஒத்துழைப்புடன் செயற்படுவதாகவும் தலைவர்கள் உறுதியளித்தனர்.

இதனிடையே ருவாண்டா பிரதமர் எடுவர்ட் நேயிரண்டே (Edouard Ngirente) மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்றும் இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .