2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘காணிகளை விடுவிக்க 2 வருடங்கள் தேவை’

Editorial   / 2017 ஒக்டோபர் 12 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சின்னசாமி சிவநிரோஷினி

வடக்கில், இராணுவம் கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகளை இன்னும் இரண்டு வருடங்களில் முழுமையாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(11) இடம்பெற்றது.  

இதில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

“பாதுகாப்பு காரணங்களை ஆராய்ந்ததன் பின்னர் அவை பொது மக்களுக்கு வழங்கப்படும்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.  

“இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவிக்கும் பணிகள் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு, வருகின்றன. அத்துடன் காணிகளை இழந்துள்ளவர்களுக்கு நட்ட ஈடு அல்லது மாற்று காணிகளை வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது” என்றும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன இதன்போது தெரிவித்தார்.  

 “வடக்கில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தமது காணிகளை, வீடுகளை இழந்த பெருமளவானோருக்கு வீடுகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.  

இதன்போது குறிக்கிட்டு, பதிலளித்த அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன, “வடக்கில் பெருமளவிலான காணிகள் அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டுள்ளன” என்றார்.  

“இதுவரை, 62 சதவீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள காணிகளும் விரைவில் விடுவிக்கப்படும். இது குறித்து ஆராயப்பட்டு வருகிறது” எனவும் குறிப்பிட்டார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .